உள்ளடக்கத்துக்குச் செல்

வலைப்பின்னல் மையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
4-துளைவாய் ஈத்தர்நெட் மையம்

வலைப்பின்னல் மையம் (network hub) அல்லது மீள்கருவி மையம் (repeater hub) என்பது பல சுருளிணைகள் (twisted pair) அல்லது ஒளியிழை (fiber optic) ஈத்தர்நெட் (Ethernet) கருவிகளை ஒன்றாக இணைத்து அவற்றை ஒற்றை வலைப்பின்னல் கூறாகச் (network segment) செயல்பட உதவும் கருவியாகும். மையங்கள், ஓஎஸ்ஐ (OSI) மாதிரியின் (OSI model) இயற்பியல் அடுக்கில் (physical layer) (முதலடுக்கில்) இயங்குகின்றன. இதனால் இக்கருவியை பல்துளைவாய் மீள்கருவி (multiport repeater) வடிவமானது எனலாம். மீள்கருவி மையங்கள் மோதல்களைக் கண்டறிவதில் பங்கேற்று, ஒரு மோதலைக் (collision) கண்டவுடன், நெருக்கடி சமிக்ஞையை (jam signal) எல்லா துளைவாய்களுக்கும் அனுப்புகின்றன.

10பேஸ்இ2 (10BASE2) அல்லது 10பேஸ்இ5 (10BASE5) விருப்புரிமை (legacy) கொண்ட வலைப்பின்னல் கூறுகளுடனான (network segments) இணைப்பை ஏற்படுத்த உதவும் வகையில் மையங்கள் பெரும்பாலும் பிஎன்சி (BNC) மற்றும்/அல்லது ஏயூஐ (AUI) இணைப்பானைக் (connector) கொண்டுள்ளன. குறைந்த விலையில் வலைப்பின்னல் மாற்றுக் குமிழ்கள் (network switches) கிடைப்பதால், மையங்கள் பெரும்பாலும் வழக்கொழிந்துவிட்டாலும், பழைய அமைவுகளிலும் (installations) தனிச்சிறப்பு வாய்ந்த பயனீடுகளிலும் இன்றளவும் காணப்படுகின்றன.

தொழில்நுட்பத் தகவல்

[தொகு]

ஒரு வலைப்பின்னல் மையமானது பெரும்பாலும் எளிமையான ஒளிபரப்புக் கருவியாகச் செயல்படுகிறது. மையங்கள் அவற்றினூடாக வரும் போக்குவரத்து எதையும் கட்டுப்படுத்துவதில்லை. எந்தத் துளைவாயில் நுழையும் எந்தச் சிப்பமும் (packet) மற்ற எல்லா துளைவாய்களுக்கும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. ஒவ்வொரு சிப்பமும் எல்லாத் துளைவாய்களின் வழியாகவும் வெளியே அனுப்பப்படுவதால் சிப்ப மோதல்கள் (packet collisions) நிகழ்கின்றன. இதனால் போக்குவரத்தின் சீரான ஒழுக்கு பாதிக்கப்படுகிறது.

மோதல்களைக் கண்டுணரவேண்டிய தன்மை இணையத்திற்குத் தேவை என்பதால், மையங்களின் எண்ணிக்கையும் வலைப்பின்னலின் மொத்த அளவும் கட்டுப்படுத்தப்படுகின்றது. 10 மெகாபிட்/வினாடி (Mbit/s) அளவிலான வலைப்பின்னல்களில், ஏதேனும் இரண்டு எல்லை நிலையங்களுக்கு (end stations) இடையே ஐந்து கூறுகள் (நான்கு மையங்கள்) அனுமதிக்கப்படுகின்றன. 100 மெகாபிட்/வினாடி (Mbit/s) அளவிலான வலைப்பின்னல்களில், ஏதேனும் இரு எல்லை நிலையங்களுக்கு இடையே இது மூன்று கூறுகளாக (2 மையங்கள்) குறைக்கப்படுகின்றன. அதுவும் குறைந்த தாமத வகையைச் சார்ந்தவையாக இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. சில மையங்கள் சிறப்பு (பொதுவாக குறிப்பிட்ட தயாரிப்பாளர்களுக்குப் பொருந்தும் வகையில்) குவித் துளைவாய்களைக் (stack ports) கொண்டிருக்கின்றன. இதனால் ஈத்தர்நெட் கம்பிகள் மூலமாக எளிய சங்கிலிப் பிணைப்புகளை ஏற்படுத்துவதைக் காட்டிலும் அதிகமான மையங்களை அனுமதிக்கக் கூடிய இணைப்புகளை ஏற்படுத்த முடியும். ஆயினும், ஒரு பெரிய விரைவு ஈத்தர்நெட் வலைப்பின்னலின் மையங்களின் பிணைப்புக் கட்டுப்பாடுகளை விலக்க வேண்டுமாயின் மாற்றுக் குமிழ்கள் தேவைப்படுகின்றன.

பெரும்பாலான மையங்கள் (அறிவாற்றல் மையங்கள்) தனிப்பட்ட துளைவாய்களின் மீதான கூடுதல் மோதல்கள் போன்ற பொதுவான சிக்கல்களைக் கண்டறிந்து, துளைவாயைப் பகுத்து, பின்னர் அதனைப் பிற பகிர்வு ஊடகங்களிலிருந்து துண்டிக்கின்றன. எனவே மைய அடிப்படையிலான ஈத்தர்நெட்டானது, மோதல் நிகழும் தளம் முழுவதையும் பிறழ் நடத்தையுள்ள ஒரு கருவி செயலிழக்கச் செய்துவிடக்கூடிய, தந்திவட இணைவு அடிப்படையிலான ஈத்தர்நெட்டை விட உறுதிமிக்கதாக உள்ளது. தானாகவே பகுக்கும் திறன் இல்லாவிடினும், ஒரு அறிவாற்றல் மையமானது சரிசெய்யும் முறைமையை எளிமையாக்குகிறது. ஏனெனில், தகுநிலை விளக்குகள் சிக்கல் எங்கிருந்து வருகிறது என்பதைக் காட்டிக் கொடுக்கின்றன. வேறு வழி இல்லையெனில், ஒவ்வொரு கருவியாக மையத்திலிருந்து துண்டிக்கப்படலாம். தந்திவட இணைவைக் காட்டிலும் இது மிக எளிதானது. பல குழாய்கள் கொண்ட பெரிய கம்பிவடங்களில் சரிசெய்யும் முறைமைக்கான தேவையையும் அவை நீக்குகின்றன.

ஓஎஸ்ஐ (OSI) மாதிரியில், மையங்கள் முதலடுக்குக் கருவிகளாக வகைப்படுத்தப்படுகின்றன. இயற்பியல் அடுக்கில், மையங்கள் சிக்கலான வலைப்பின்னல்களுக்கு அவ்வளவாகப் பயன்படுவதில்லை. மையங்கள் அவற்றினூடாகச் செல்லும் தரவுகளைப் படிப்பதில்லை. அவை எங்கிருந்து வருகின்றன என்பதையும் அறிவதில்லை. அடிப்படையில், ஒரு மையம் உள்ளே வரும் சிப்பங்களைப் பெறுவதுடன், மின் சமிக்ஞைகளைப் பெருக்குகிறது. அத்துடன் இச்சிப்பங்களை வலைப்பின்னலில் உள்ள (சிப்பத்தை அனுப்பிய கருவி உட்பட) அனைத்துக் கருவிகளுக்கும் ஒளிபரப்பு செய்கிறது.

தொழில்நுட்ப அடிப்படையில், மூன்று வகையான மையங்கள் உள்ளன:

1. செயல்திறனற்ற மையம் - வெளியிலிருந்து சக்தி தேவைப்படாத மையம். ஏனெனில், இது சமிக்ஞையை மீண்டும் உருவாக்குவதில்லை. அதனால், அதிகபட்ச கம்பியின் நீளத்தின் அடிப்படையில் நோக்கினால், இம்மையம் கம்பியின் பகுதியாகவே கருதப்படுகிறது.
2. செயல்திறனுடைய மையம் - சமிக்ஞையை மீண்டும் உருவாக்குவதால் இவற்றிற்கு வெளியிலிருந்து சக்தி தேவைப்படுகிறது.
3. அறிவாற்றல் மையம் - இவை அதிக மோதல்கள் உள்ளிட்ட பிழைகளைக் கண்டறிவதுடன், செயல்திறனுடைய மையத்தைப் போலச் செயல்படுகிறது.

செயல்திறனற்ற மையங்கள், உள்வரும் சிப்பங்களின் மின் சமிக்ஞைகளை வலைப்பின்னலுக்கு ஒளிபரப்புவதற்கு முன்பாக, அவற்றை பெருக்குவதில்லை. ஆனால், செயல்திறனுடைய மையங்கள், மீள்கருவி எனப்படும் நேர்ந்தளிக்கப்பட்ட வலைப்பின்னல் கருவியைப் போல, மின் சமிக்ஞைகளைப் பெருக்குகின்றன. பொதுமையக் கருவி என்பது செயல்திறனற்ற மையத்தைக் குறிப்பதுடன், மிகவும் அறியப்படாத பெயருமாகும். செயல்திறனுடைய மையம் பல்துளைவாய் மீள்கருவி என்றும் அழைக்கப்படும்.

அறிவாற்றல் மையங்கள் செயல்திறனுடைய மையங்களின் தொழில்களுக்குப் பொருத்தமான சிறப்புக் கூறுகளைச் சேர்க்கின்றன. அறிவாற்றல் மையத்தின் சிறப்பு மாதிரியானது குவிக்கக் கூடிய வகையில் இருக்கின்றது (பல அலகுகளை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி, இடத்தைப் பேணும் வகையில் கட்டப்பட்டிருக்கும்). எளிய வலைப்பின்னல் மேலாண் நெறிமுறை (Simple Network Management Protocol - SNMP) மற்றும் தோற்றநிலை உட்பரப்பு வலைப்பின்னல் (virtual LAN-VLAN) போன்றவற்றின் மூலம் நிகழ்த்தக்கூடிய சேய்மை மேலாண் திறத்தை இத்தகைய மையங்கள் பெற்றிருக்கின்றன.

பயன்கள்

[தொகு]

பல காலமாக மாற்றுக் குமிழ்களுக்குப் பதிலாக, மையங்களை வாங்குவதற்குக் காரணம் அவற்றின் விலையேற்றமே ஆகும். மாற்றுக் குமிழ்களின் விலை குறைந்த பின்னர் இந்நிலை பெரும்பாலும் மாறிவிட்டது. ஆனாலும் சிறப்புச் சூழல்களில் இன்றும் மையங்கள் பயன்படுகின்றன. எடுத்துக்காட்டாக,

  • வலைப்பின்னல் இணைப்பு ஒன்றனுள் ஒரு மரபுப் பகுப்பாய்வுக் கருவியை நுழைப்பதற்கு, வலைப்பின்னல் குழாய் (network tap) அல்லது துளைவாய் உருக்காட்டலுக்கு (port mirroring) மாற்றாக ஒரு மையம் செயல்படுகிறது.
  • கணினித் தொகுதிகள் சிலவற்றில் உறுப்புக் கணினி ஒவ்வொன்றும் தொகுதிக்குள் வரும் போக்குவரத்து அனைத்தையும் உள்வாங்கிக் கொள்ளத்தக்கதாக இருக்க வேண்டும்.[மேற்கோள் தேவை] மையம் இவ்வேலையை இயல்பாகச் செய்யும். மாற்றுக் குமிழைப் பயன்படுத்த வேண்டுமானால் மையமானது சிறப்பு ஒழுங்கமைப்பு செய்யப்பட வேண்டும்.
  • இறுதிப் பயனீட்டாளர்கள் இணைப்புகளை ஏற்படுத்த, அவர்கள் அணுகும் வகையில் மாற்றுக்குமிழ்கள் இருந்தால், ஒரு கூட்டமான அறையில் உள்ள அனுபவமும் கவனமும் இல்லாத ஒரு பயனர், இரண்டு துளைவாய்களை இணைத்து ஒரு கண்ணியை (loop) ஏற்படுத்திவிடக்கூடும். இதனால், வலைப்பின்னல் செயலிழக்கக் கூடிய அபாயம் உள்ளது. மையத்தைப் பயன்படுத்துவதன் மூலம் இதைத் தவிர்க்கலாம். ஏனெனில், மையத்தில் உள்ள ஒரு கண்ணி மையத்தின் பிற பயனர்களைத் துண்டிக்குமே ஒழிய, பிற வலைப்பின்னல்களைத் துண்டிக்காது. கண்ணிகளைக் கண்டறிந்து அவற்றை சமாளிக்கும் மாற்றுக்குமிழ்களை வாங்குவதன் மூலமும் இதைத் தடுக்கலாம் (எடுத்துக்காட்டாக, வீச்சு முறையிலான நெறிமுறையை நிறுவுவதன் மூலம்).
  • 10பேஸ்இ2 (10BASE2) துளைவாய் ஒன்றைக் கொண்ட மையத்தை, 10பேஸ்இ2 (10BASE2) ஐ மட்டும் ஆதரிக்கும் கருவிகளை இணக்கி வலைப்பின்னலுடன் இணைக்கப் பயன்படுத்தலாம். அதேபோல, ஒரு மையத்தின் ஏயூஐ (AUI) துளைவாயைப் பயன்படுத்தி பழைய அடர் வலைப்பின்னல் பகுதியை இணைக்கவும் முடியும் (அடர் வலைகளுக்கென அமைக்கப்பட்ட தனிக் கருவிகளை, ஏயூஐ-10பேஸ்-டி (AUI-10BASE-T) இருதிசைக் கருவியைப் பயன்படுத்தி இணக்கி ஈத்தர்நெட்டுடன் இணைக்கவும் முடியும்).

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வலைப்பின்னல்_மையம்&oldid=3635828" இலிருந்து மீள்விக்கப்பட்டது