வலங்கைமான் சங்கரநாராயண சீனிவாச சாஸ்திரி
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
வலங்கைமான் சங்கரநாராயண சீனிவாச சாஸ்திரி | |
---|---|
![]() | |
1940களில் வலங்கைமான் சங்கரநாராயண ஸ்ரீநிவாஸ சாஸ்திரி | |
தென்னாப்பிரிக்காவுக்கான இந்தியத் தூதர் | |
பதவியில் சூன் 1927 – சனவரி 1929 | |
அரசர் | ஐக்கிய இராச்சியத்தின் ஐந்தாம் ஜோர்ஜ் |
தலைமை ஆளுநர் | இர்வின் பிரபு |
முன்னவர் | எவருமில்லை |
பின்வந்தவர் | கூர்ம வெங்கட ரெட்டி நாயுடு |
இந்திய அரசுப் பேரவை உறுப்பினர் | |
பதவியில் 1920–1925 | |
அரசர் | ஐக்கிய இராச்சியத்தின் ஐந்தாம் ஜோர்ஜ் |
தலைமை ஆளுநர் | ரூஃபுசு ஐசாக்சு |
இந்திய அரசமைப்புப் பேரவை உறுப்பினர் | |
பதவியில் 1916–1919 | |
அரசர் | ஐந்தாம் ஜோர்ஜ் |
தலைமை ஆளுநர் | பிரடெரிக் தேசிகெர் |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | செப்டம்பர் 22, 1869 வலங்கைமான், தஞ்சாவூர் மாவட்டம் |
இறப்பு | 17 ஏப்ரல் 1946 மயிலாப்பூர், சென்னை | (அகவை 76)
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு (1908–1922), இந்திய லிபரல் கட்சி (1922–1946) |
வாழ்க்கை துணைவர்(கள்) | பார்வதி |
படித்த கல்வி நிறுவனங்கள் | கும்பகோணம் உயர்நிலைப் பள்ளி கும்பகோணம் அரசுக் கல்லூரி |
தொழில் | கல்வியாளர், பேச்சாளர், எழுத்தாளர், அரசியல்வாதி, தூதுவர் |
சமயம் | இந்து |
வலங்கைமான் சங்கரநாராயண சீனிவாச சாஸ்திரி (V. S. Srinivasa Sastri, 22 செப்டெம்பர் 1869 – 17 ஏப்ரல் 1946). இவர் இந்திய அரசியல்வாதியாகவும், நிர்வாகியாகவும், கல்வியாளராகவும் இருந்தார். ஆங்கில மொழி மீது உள்ள புலமைக்காகவும் மற்றும் சொற்பொழிவுகளுக்காகவும் மிகவும் பாராட்டப்பட்டார்.[1] பிரிட்டனில் 1916 – 1919ல் ஐந்தாம் ஜார்ஜ் சக்கரவர்த்தியால் பாராட்டப்பட்ட பெருமைக்குரிய சாஸ்திரிக்கு , "ரைட் ஹானரபில்" என்ற பட்டத்தை ஆங்கிலேயர்கள் வழங்கினர்.தமிழர்கள் கொண்டாட வேண்டிய ஆளுமைகளில் ஒருவர் சாஸ்திரி.
பொருளடக்கம்
வரலாறு[தொகு]
இவர் பிரிட்டிஷ் இந்தியாவின் ஆளுமைகளில் ஒருவர். காந்தி பிறப்பதற்குப் பத்து நாட்கள் முன்பு பிறந்தவர் சாஸ்திரி. பிற்காலத்தில் காந்தியார் இவரை அண்ணன் என்று அழைத்த வரலாறும் உண்டு.
ஒரு பள்ளி ஆசிரியராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கிய சாஸ்திரி, பின்னாட்களில் பிரிட்டிஷ் பிரதமருடன் நேருக்குநேர் விவாதிக்கும் ஆளுமையாக உயர்ந்தவர். காந்தி இந்தியா வருவதற்கு முன்பே ரானடே, கோகலே போன்ற பெரும் தலைவர்களுடன் இணைந்து சுதந்திரத்துக்காகப் போராடியவர் சாஸ்திரி. நாடு பூரண சுதந்திரம் பெற வேண்டும் என்று அயராது பாடுபட்ட அறிவுஜீவிகளில் இவரும் ஒருவர்.
வெள்ளி நாக்கு சாஸ்திரி
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இவரை ‘சில்வர் டங் சாஸ்திரி’ (வெள்ளி நாக்கு சாஸ்திரி) என்று அழைத்தனர். சாஸ்திரியின் ஆங்கிலப் புலமை பற்றி வின்ஸ்டன் சர்ச்சில் வியந்து பேசியிருக்கிறார். 1935 முதல் 1940 வரை ஐந்து ஆண்டுகள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராகப் பணியாற்றியவர். அப்போது தமிழகத்தின் முதல் இந்தி எதிர்ப்பின்போது மாணவர்களை லகுவாகக் கையாண்டவர் சாஸ்திரி. இந்தியா மத அடிப்படையில் பிரிக்கப்படுவதைக் கடுமையாக எதிர்த்தார்.
முதல் உலகப் போருக்குப் பிறகு உருவான சர்வதேச அமைப்பான லீக் ஆஃப் நேஷன்ஸ் இப்போதைய ஐக்கிய நாடுகள் சபையைப் போன்றது. அதில் சாஸ்திரியார் இந்தியப் பிரதிநிதியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தென்ஆப்பிரிக்காவின் பிரதிநிதியாகவும் இருந்திருக்கிறார். திருவல்லிக்கேணி அர்பன் கோ-ஆபரேடிவ் சொசைட்டி எனப்படும் டியுசிஎஸ் அமைப்பு 1904-ல் இவரது முயற்சியால்தான் உருவானது. சாஸ்திரி தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம் அருகிலுள்ள வலங்கைமான் எனும் சிற்றூரில் மிகச் சாதாரண புரோகிதத் தந்தைக்கு 1869 செப்டம்பர் 22-ல் மூத்த மகனாகப் பிறந்தார். இவருடன் பிறந்தவர்கள் மொத்தம் ஆறு பேர். வலங்கைமானில் ஆரம்பக் கல்வியைக் கற்ற சாஸ்திரி பின்னர் கும்பகோணம் நேட்டிவ் உயர்நிலைப் பள்ளியிலும், தொடர்ந்து கல்லூரிப் படிப்பைக் கும்பகோணம் அரசுக் கல்லூரியிலும் பயின்று 1888-ல் பட்டம் பெற்றார். ஆங்கிலத்திலும் சம்ஸ்கிருதத்திலும் இவர் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். இவரது தனித் திறமையால் பள்ளி, கல்லூரிப் படிப்பை ஆங்கிலேயே அரசின் கல்வி உதவி மூலம் பெற்றார்.
ஆசிரியர் பணிகள்
பிறகு, சாஸ்திரி இன்றைய மயிலாடுதுறை என்று அழைக்கப்படும் மாயவரத்திலுள்ள முனிசிபல் உயர்நிலைப் பள்ளியில் மாத ஊதியமாக ரூ.50-க்கு ஆசிரியர் பணியில் சேர்ந்தார். மூன்றாண்டுக்குப் பிறகு 1891-ல் அவர் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரசு ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து ஆசிரியர் பயிற்சியைப் பெற்றார். அப்போது ஒரு நிகழ்வு நடந்தது. ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியின் தலைவர் ஒருநாள் வகுப்பில் பாடம் நடத்தும்போது, அவர் ஆங்கில உச்சரிப்பில் பிழை உள்ளது என்று சாஸ்திரி கூறியிருக்கிறார். அந்தக் கல்லூரித் தலைவரோ அதை மறுத்தார். மேலும், “தன் தாய்மொழி ஆங்கிலம். ஆகையால் தான் சொல்லுவதுதான் சரியான உச்சரிப்பு” என்றிருக்கிறார். இதை சாஸ்திரி ஏற்கவில்லை. அகராதியில் பார்த்த பிறகு சாஸ்திரி கூறியதே சரியான உச்சரிப்பு என்பது புரிந்திருக்கிறது. அந்த ஆசிரியர் வியந்துபோய் சாஸ்திரியின் ஆங்கிலப் புலமையைப் பாராட்டினாராம். சாஸ்திரி பிரபல ஆங்கில அகராதி வெப்ஸ்டர் முழுவதையும் நன்கு கற்று அறிந்திருந்தார் என்று பல பேர் பின்னாட்களில் கூறியுள்ளார்கள்.
1893-ல் சாஸ்திரி சேலம் முனிசிபல் கல்லூரியில் முதல்நிலை உதவி ஆசிரியர் பணியில் சேர்ந்தார். ஒன்பது ஆண்டுகள் அங்கு ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றினார். இந்தக் காலகட்டத்தில் அப்போது சேலம் கதாநாயகன் என்று அழைக்கப்பட்ட சி.விஜயராகவாச்சாரியாரை அறிந்த பிறகு, பொது விஷயங்களில் ஈடுபட அவர் ஆர்வம் கொண்டார். அந்தச் சமயத்தில் ‘தி இந்து’ பத்திரிகையில் மக்களின் துயரங்களைப் பற்றி பல கட்டுரைகள் எழுதி பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அதற்கு அவர் மேல் ஆங்கிலேயே அரசு துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மிரட்டியது.
பிறகு, சென்னையில் உள்ள பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். 1902-ல் சாஸ்திரி திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி, அந்தப் பள்ளியை மெட்ராஸ் மாகாணத்திலேயே மிகச் சிறந்த பள்ளியாக உயர்த்தினார் என்பது வரலாறு.
ஸ்ரீனிவாச சாஸ்திரி 17 ஆண்டுகளாக ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியராகப் பணியாற்றிய பிறகு, தனது 37-வது வயதில் 1907-ல் பொது வாழ்க்கைக்கு வந்தார். அப்போது பூனாவில் சர்வெண்ட்ஸ் ஆஃப் இந்தியா சொசைட்டி என்ற இயக்கத்தை நடத்திவந்த கோபால கிருஷ்ண கோகலேயுடன் இணைந்தார். கோகலேவால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர் சாஸ்திரி. அவரையே தனது அரசியல் குருவாக ஏற்றுக்கொண்டார்.
பொதுவாழ்க்கைப் பயணம்
1919-ல் முதன்முதலில் காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்தது. அப்போது நேஷனல் லிபரல் ஃபெடரேசன் ஆஃப் இந்தியா என்ற கட்சியை சாஸ்திரி தொடங்கினார். 1915-ல் கோகலே இறந்தபோது, சர்வெண்ட்ஸ் ஆஃப் இந்தியா சொசைட்டியின் தலைவராக சாஸ்திரி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் தொடர்ந்து 12 ஆண்டுகள் பணியாற்றினார். சாஸ்திரி மெட்ராஸ் லெஜிஸ்லேடிவ் கவுன்சிலில் 1913 முதல் 1916 வரை உறுப்பினராக இருந்தார். 1916 முதல் 1919 வரை இம்பீரியல் லெஜிஸ்லேடிவ் கவுன்சிலிலும் உறுப்பினராக இருந்தார். 1920 முதல் 1925 வரை கவுன்சில் ஆஃப் ஸ்டேட்ஸ் எனும் அமைப்பிலும் பணியாற்றினார். மேலும், இந்தியாவில் நடக்கும் வழக்குகள் இந்திய உயர் நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு மேல் முறையீடு செய்ய வேண்டுமானால், இங்கிலாந்தில் இருந்த பிரிவி கவுன்சிலுக்குப் போக வேன்டும். அந்த பிரிவி கவுன்சிலில் இவர் உறுப்பினராக இருந்தார்.
பிரிட்டிஷ் இந்திய அரசு பிறப்பித்த ரவுலட் சட்டத்தைத் தீவிரமாக எதிர்த்தார் சாஸ்திரி. இந்தச் சட்டத்தின்படி அரசு யாரை வேண்டுமானாலும் விசாரணையின்றிச் சிறையில் அடைக்க முடியும். இம்பீரியல் லெஜிஸ்லேடிவ் கவுன்சிலில் சாஸ்திரி இந்தச் சட்டத்தை எதிர்த்து ஆற்றிய உரை வரலாற்றில் போற்றப்பட்ட உரைகளில் ஒன்று. அவரின் விவாதத்தை நேரில் பார்க்க காந்தி பார்வையாளராக கவுன்சிலுக்குச் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நாடு சுதந்திரம் அடைவதற்கு 16 மாதங்களுக்கு முன்பு சாஸ்திரி தனது 76-வது வயதில் சென்னையில் ஏப்ரல் 17, 1946 அன்று இறந்துபோனார்.
படைப்புக்கள்[தொகு]
- Speeches and writings of the Right Honourable V. S. Srinivasa Sastri
- Letters of Right Honourable V.S. Srinivasa Sastri: With Some Letters of Rt. Hon. E.S. Montagu and Gandhi-Sastri
- My Master Gokhale: A Selection from the Speeches and Writings of V. S. Srinivasa Sastri
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "He did the English language proud". The Hindu. பார்த்த நாள் 30 நவம்பர் 2013.