உள்ளடக்கத்துக்குச் செல்

வயாவிளான் மத்திய கல்லூரி

ஆள்கூறுகள்: 9°46′32.20″N 80°04′23.70″E / 9.7756111°N 80.0732500°E / 9.7756111; 80.0732500
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வயாவிளான் மத்திய கல்லூரி
Vayavilan Central College
முகவரி
பலாலி வீதி, வயாவிளான்
வயாவிளான், யாழ்ப்பாண மாவட்டம், வட மாகாணம்
இலங்கை
அமைவிடம்9°46′32.20″N 80°04′23.70″E / 9.7756111°N 80.0732500°E / 9.7756111; 80.0732500
தகவல்
வகைபொது, மாகாணப் பாடசாலை 1AB
குறிக்கோள்செம்மை நெறி நில்
நிறுவல்1946 January 16
பள்ளி மாவட்டம்வலிகாமம் கல்வி வலயம்
ஆணையம்வட மாகாண சபை
பள்ளி இலக்கம்1013040
அதிபர்வி. ரி. ஜெயந்தன்
ஆசிரியர் குழு84
தரங்கள்1-13
பால்கலவன்
வயது வீச்சு5-18
மொழிதமிழ்
School roll1,176

வயாவிளான் மத்திய கல்லூரி (Vayavilan Central College) வார்ப்புரு:Vayavilan central collegeஇலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் வயாவிளான் கிராமத்தில் உள்ள மாகாணப் பாடசாலை ஆகும். இது பலாலி வீதியில் யாழ்ப்பாணத்தில் இருந்து 15 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ளது.[1][2]

வரலாறு

[தொகு]

1945 அக்டோபர் 10 ஆம் நாள் வயாவிளான்-பலாலி தெற்கு வேலுப்பிள்ளை வித்தியாலயத்தில் நடைபெற்ற வயாவிளான், குரும்பசிட்டி, பலாலி மற்றும் அயல் கிராமங்களிலுள்ள முன்னணிப் பிரமுகர்கள் ஒன்றுகூடலில் வயாவிளான் மத்திய கல்லுாரியின் தோற்றம் பற்றிய ஆரம்ப முடிவு எடுக்கப்பட்டது. இதன்போது பலாலியில் பயன்படுத்தப்படாமல் வெற்றிடமாக இருந்த இராணுவத்திற்குரிய கட்டிடங்களைப் புதுப்பித்து பாடசாலைக்கெனப் பயன்படுத்துவதெனவும், இத் தீர்மானத்தை செயல்படுத்துவதற்கென ஒரு குழுவும் தெரிவுசெய்யப்பட்டது. மயிலிட்டி கிராமசபைத் தலைவராக இருந்த ஈழகேசரி நா. பொன்னையா தலைவராகவும், வழக்கறிஞர் திரு.வீ. இராசநாயகம் செயலாளராகவும், ஆசிரியர் ரீ. சின்னத்துரை பொருளாளராகவும் செயற்குழுவில் அங்கம் பெற்றனர். நாடாளுமன்ற உறுப்பினர் சு. நடேசன் காப்பாளராக நியமிக்கப்பட்டார்.

இராணுவ கட்டிடங்களைப் பெற்றுக் கொள்வதில் நெருக்கடிகள் உணரப்பட்டதால், நா. பொன்னையாவினால் நடாத்தப்பட்டு வந்த காந்திக்கிராம மாதிரியை ஒத்த அமைப்பில் பாடசாலையை அமைக்க குழு விரும்பியது. அரச அனுமதியுடன் அந்த மாதிரிப் பண்ணையைப் பாடசாலைக்கென பெற்றுக் கொள்வதில் உடன்பாடு ஏற்பட்டு, அங்கிருந்த கட்டிடங்களை வகுப்பறைகளாக மாற்றினர்.

1946 சனவரி 16 புதன்கிழமை அன்று 115 மாணவர்களுடன் நா. பொன்னையாவிற்குச் சொந்தமான மீனாட்சி பண்ணையில் அமைச்சர் சி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கரா பாடசாலையைத் திறந்து வைத்தார். மீனாட்சி பண்ணை அப்போது குரும்பசிட்டியில் அமைந்திருந்ததால் குரும்பசிட்டி மத்திய கல்லுாரி என ஆரம்பத்தில் பெயரிடப்பட்டது. காலப் போக்கில் அப்பகுதி வயாவிளானுடன் இணைக்கப்பட்டதனால் வயாவிளான் மத்திய கல்லுாரி எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டது. இப்பாடசாலையின் முதலாவது அதிபராக கே. காராளசிங்கம் நியமிக்கப்பட்டார். இவருடன் மூன்று ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டனர். நா. பொன்னையாவிற்குச் சொந்தமான இரண்டு இரு கட்டிடங்கள் கற்பித்தலுக்ககப் பயன்படுத்தப்பட்டன. காரளசிங்கத்தின் காலத்தில் இப்பாடசாலை அரசாங்கத்தினால் மாதிரிப் பாடசாலையாக தெரிவுசெய்யப்பட்டது. பெண்கள், ஆண்களுக்கென தனித்தனியான மாணவர் விடுதிகளும் அமைக்கப்பட்டன. பின்னர் விவசாயம் கற்பித்தலுக்குரிய வசதிகள் ஆரம்பிக்கப்பட்டதுடன், உயர்தர வகுப்புக்களும் ஆரம்பிக்கப்பட்டன.

வயாவிளான் மத்திய கல்லூரியில் அறிவியல் மற்றும் கலை பாடங்கள், விவசாயம், உலோக வேலை, மர வேலை, நெசவு, தையல், மனையியல், கணக்கியல், பொருளியல், சுருக்கெழுத்து, தட்டச்சு, சுகாதாரவியல், இசை, கலை, நடனம் என்பவற்றுக்கும் வசதிசெய்து கொடுக்கப்பட்டது. 1978 ஆம் ஆண்டளவில் திரைஅரங்கு மற்றும் நாடக வகுப்புக்களும் உயர்தர மாணவர்களுக்கு பயிற்றுவிக்கப்பட்டன.

இடப்பெயர்வு

[தொகு]

ஈழப்போர் காரணமாக 1990 ஆம் ஆண்டில் கட்டாய இடப்பெயர்வு நடந்தது. 1990 முதல் 1991 வரை புன்னாலைக்கட்டுவன் அரசினர் தமிழ்க் கலைவன் பாடசாலையிலும் பின்னர் உரும்பிராய் இந்துக் கல்லூரியிலும் இயங்கி வந்தது. 1995 ஆண்டு இடப்பெயர்வின் பின்னர் 1996 முதல் உரும்பிராயில் உள்ள தனியார் காணி ஒன்றில் 12 பரப்புக் காணியில் 1352 மாணவர்களுடன் பல ஆண்டுகளாக இயங்கி வந்தது.

2010 செப்டம்பர் 28 இல் உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்து பாடசாலை விடுவிக்கப்பட்டிருந்தது. ஆயினும் கற்பித்தல் செயற்பாடுகள் உடனடியாக ஆரம்பிக்கப்படவில்லை. 2010 அக்டோபர் 11 இல் தரம் 10, க.பொ.த சாதாரண தரம், உயர்தர வகுப்புக்கள் உள்ளடங்கலாக சுமார் 450 மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. 10 ஆம் ஆண்டுக்கு கீழ்ப்பட்ட மாணவர்களுக்கான கல்விச் செயற்பாடுகள் தொடர்ச்சியாக உரும்பிராயிலேயே இடம்பெற்று வந்தது.

தற்போதைய நிலை

[தொகு]

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்து விடுவிக்கப்பட்ட வயாவிளான் மத்திய கல்லுாரியின் கல்விச் செயற்பாடுகள் 20 ஆண்டுகளின் பின்னர் 2014 அக்டோபர் 11 இல் மீள ஆரம்பிக்கப்பட்டது. 240 பரப்புக் காணியைக் கொண்ட வயாவிளான் மத்திய கல்லுாரி யாழ்ப்பாண மாவட்டத்திலேயே அதிக பரப்பளவைக் கொண்டதாகவும் பெரிய விளையாட்டுத் திடலைக் கொண்ட பாடசாலையாகவும் திகழ்கிறது.

பெயர் மாற்றம்

[தொகு]

ஆரம்பத்தில் ”வயாவிளான் மத்திய கல்லுாரி” என்ற பெயருடனே ஆரம்பிக்கப்பட்டாலும், கன்னங்கரா கல்வி அமைச்சராக இருந்த காலத்தில் ”வயாவிளான் மத்திய மகா வித்தியாலயம்” என பெயர் மாற்றப்பட்டது. இது மீண்டும் 2014 நவம்பர் 2 இல் ”வயாவிளான் மத்திய கல்லுாரி” என்று மீண்டும் மாற்றம் பெற்றது.

அதிபர்கள்-கால வரிசைப்படி

[தொகு]
தொடர் பெயர் தொடக்கம் முடிவு
1. கே. காராளசிங்கம் 1946 1952
2. கே. நவரத்தினராசர 1952 1956
3. ஈ. வீ. ஜே. கென்ஸ்மன் 1956 1958
4. கே. காராளசிங்கம் 1958 1962
5. எஸ். ஆறுமுகம் 1962 1971
6. பீ. சபாரத்தினம் 1971 1976
7. ஆர். இராமசாமி 1976 1985
8. என். கணேசபிள்ளை 1985 1988
9. ஏ. எஸ். நடராசர 1988 2001
10. கே. கனகராசர 2001 2013
11. வி. ரி. ஜெயந்தன் 2013 நடப்பு

வெளி இணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Schools Basic Data as at 01.10.2010. Northern Provincial Council. 2010. Archived from the original on 2013-12-03. பார்க்கப்பட்ட நாள் 2011-02-27.
  2. "Vayavilan Central College on Northern Provincial Council Sri Lanka".