உள்ளடக்கத்துக்குச் செல்

வயலா வாசுதேவன் பிள்ளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வயலா வாசுதேவன் பிள்ளை (Vayala Vasudevan Pillai, 22 ஏப்ரல் 1945-29 ஆகத்து 2011) என்பவர் கேரளத்தைச் சேர்ந்த ஒரு மலையாள நாடகாசிரியர் ஆவார்.[1] இவர் புகழ்பெற்ற நாடக ஆசிரியர் ஜி. சங்கர பிள்ளையின் சீடர். 40க்கும் மேற்பட்ட நாடகங்களை இயக்கியுள்ளார். விஸ்வதர்சனம் (1977) துளசீவரம் (1979) அக்னி (1982) ரங்கபாஷா (1984) வரவேல்பு (1985) குசேலகதா (1988) த டெத் ஆப் ஸ்ட்லிங் (1992) சுத்ரதாரா, எத்திலே...ஒழுக்கமா? (1993) குஞ்சி சிராகுகல் (1994), ஸ்வர்ணகோக்குகல் (1999) ஆகியவை இவரது பிரபலமான நாடகங்களில் சிலவாகும்.

இவரது படைப்பான அக்னி 1981 ஆம் ஆண்டில் கேரள சாகித்ய அகாதமி விருதைப் பெற்றது. மலையாளத்தில் நாடகம் எழுதிய இவரது பங்களிப்புகளுக்காக 2002 ஆம் ஆண்டில் கேரள சங்கீத நாடக அகாதமி விருதையும், 2009 ஆம் ஆண்டில் மத்திய சங்கீத நாடக அகாதமி விருதையும் பெற்றார்.[2][3] திருச்சூரில் உள்ள நாடகப் பள்ளியின் இயக்குநராக இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தார்.

வாழ்க்கை வரலாறு

[தொகு]

இவர் 1945-ஆம் ஆண்டு ஏப்ரல் 22-அன்று கேரளத்தின் கொல்லம் மாவட்டத்தின் அஞ்சல் அருகில் உள்ள வயலாவில், நீலகண்ட பிள்ளை, கல்யாணி அம்மா இணையருக்கு மகனாகப் பிறந்தார். வயலாவில் உள்ள நாராயண விலாசம் மேல் தொடக்கப் பள்ளியில் தனது துவக்கக் கல்வியைப் பயின்றார். மார் இவானியோஸ் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலை, முதுகலைப் பட்டங்களைப் பெற்றார். முதுகலைப் படிப்பை முடித்த பிறகு, அதே கல்லூரியில் ஆசிரியராகப் பணியைத் தொடங்கிய இவர், பின்னர் நாடகம் மற்றும் அரங்கியல் துறையில் முனைவர் பட்டத்திற்கான ஆய்வை மேற்கொண்டார். பல்வேறு நாடுகளின் நாடகவியல் ஆய்வுக்கான உதவித்தொகைகளைப் (fellowships) பெற்ற இவர் உரோம் பல்கலைக்கழகம் (1980–81) மற்றும் நியூயார்க் பல்கலைக்கழகம் (1989–90) போன்ற புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் நாடகவியல் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டார். மேலும், தோக்கியோவில் பல்கலைக்கழகத்தில் நாடகவியல் துறையின் வருகைதரு பேராசிரியராகவும் பணியாற்றினார்.[4] 2001-இல் பாரிஸ் பல்கலைக்கழகத்தில் 'பெக்கெட்டின் நாடகங்களின் குறியீட்டியல்' குறித்தும், 2008-இல் ஏதென்ஸ் பல்கலைக்கழகத்தில் 'கிரேக்கச் செவ்வியல் நாடகங்களில் வெளி' குறித்தும் ஆய்வு செய்தார். அயர்லாந்து நாடக ஆசிரியர் ஜே. எம். சிங்கின் படைப்புகள் குறித்தும் இவர் ஆழ்ந்த புலமை பெற்றிருந்தார். 2012-ஆம் ஆண்டில், இவருக்கு கேரள சங்கீத நாடக அகாதமி கூட்டாளர் விருது வழங்கப்பட்டது.[5]

புகழ்பெற்ற நாடக ஆசிரியரான ஜி. சங்கர பிள்ளையின் சீடரான வயலா, சங்கர பிள்ளையால் தொடங்கப்பட்ட களரி நாடக இயக்கத்தின் மூலம் செதுக்கபட்டார். 1984-இல் திருச்சூரில் உள்ள நாடகப் பள்ளியில் உதவி இயக்குநராகவும் துறைத் தலைவராகவும் இவர் இணைந்தார். பின்னர், சங்கர பிள்ளைக்குப் பிறகு அப்பள்ளியின் இயக்குநராகப் பொறுப்பேற்ற இவர், 2005-இல் அப்பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்.[4]

திருவனந்தபுரத்தில் இருந்த காலத்தில், வயலா 'சுவர்ணரேகா' என்ற பெயரில் ஒரு முற்போக்கு நாடகக் குழுவை அமைத்தார். இக்குழு, இவரது சொந்தப் படைப்புகள் மற்றும் நவீன ஐரோப்பிய நாடகங்கள் உட்பட 30-இக்கும் மேற்பட்ட நாடகங்களை மேடையேற்றியது.[சான்று தேவை] .[சான்று தேவை]

வயலா வாசுதேவன் பிள்ளை 2011 ஆகத்து 29 அன்று கேரளத்தின் கொச்சி உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் காலமானார். புற்றுநோய்க்கான சிகிச்சை பெற்றுவந்தார். இவருக்கு வல்சாலா என்ற மனைவி உண்டு, இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.[6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ P. K. Ajith Kumar (27 March 2014). "Tributes to an inspiring theatre personality". The Hindu. Retrieved 31 March 2014.
  2. ↑ "Kerala Sangeetha Nataka Akademi Award: Drama". Department of Cultural Affairs, Government of Kerala. Retrieved 26 February 2023.
  3. ↑ "Honour for Vayala Vasudevan Pillai". The Hindu. 17 February 2010. Retrieved 8 July 2013.
  4. 1 2 K. K. Gopalakrishnan (8 April 2005). "Theatre, his forte". The Hindu. Retrieved 8 July 2013.
  5. ↑ "Kerala Sangeetha Nataka Akademi Fellowship: Drama". Department of Cultural Affairs, Government of Kerala. Retrieved 25 February 2023.
  6. ↑ "Vayala Vasudevan Pillai passes away". The Hindu. 29 August 2011. Retrieved 8 July 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வயலா_வாசுதேவன்_பிள்ளை&oldid=4654061" இலிருந்து மீள்விக்கப்பட்டது