வண்ணார்பண்ணை வைத்தீசுவரர் ஆலயம்
இக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் ஆலயம் கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்) |
யாழ்ப்பாணத்து வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரர் ஆலயம் 18 ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் வைத்திலிங்கம் செட்டியார் என்பவரால் கட்டுவிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்துத் தமிழரசர் காலத்துக்குப் பின், இந்துக் கோயில்கள் அனைத்தும் போத்துக்கீசரால் இடித்துத் தள்ளப்பட்டபின்னர், சுமார் 160 ஆண்டுகள் கழித்துக் கட்டப்பட்ட முதல் கோயில்களில் இதுவும் ஒன்று. இது வண்ணார்பண்ணைச் சிவன் கோயில் எனவும் பரவலாக அறியப்படுகின்றது.
இக்கோயில், காங்கேசந்துறை வீதியில், தற்கால யாழ்ப்பாண நகரின் மத்தியிலிருந்து சுமார் ஒரு கி.மீ. தூரத்துக்குள்ளேயே அமைந்துள்ளது.
தோற்றம்
[தொகு]யாழ்ப்பாணத்தை ஒல்லாந்தர் ஆண்ட காலத்தில், சோழ நாட்டிலிருந்து யாழ்ப்பாணம் வந்தவர் கோபாலச் செட்டியார். இவர் அங்கே வியாபாரம் செய்து வந்தார். இவ்வியாபாரம் மூலம் அக்காலத்தில் யாழ்ப்பாணத்திலிருந்த ஒல்லாந்த தேசாதிபதியின் தொடர்பு இவருக்குக் கிடைத்தது. இவருடைய மகன் வைத்திலிங்கன். இவர் சிறுவனாக இருந்தபோது இவரைக்கண்ட தேசாதிபதியின் மனைவி அவரை வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அவர்களுக்குப் பிள்ளைகள் இல்லாமையால் தேசாதிபதியின் மனைவி அவரைத் தம் மாளிகையிலேயே வளர்த்து வந்தார். வளர்ந்து பெரியவனான பின்னர், தேசாதிபதியின் பரிந்துரையின்படி மூன்று முறைகள் முத்துக்குளிக்கும் குத்தகையைப் பெற்றுத் திறம்பட நடத்தி நல்ல இலாபம் பெற்றார்.
இவ்வாறு சம்பாதித்த செல்வத்தின் ஒரு பகுதியை, இவருடைய நண்பராயிருந்த கூழங்கைத் தம்பிரான் என்பவரின் ஆலோசனைப்படி, சிவபெருமானுக்குக் கோயிலமைப்பதில் செலவிட எண்ணினார். 1787 ல் இக்கோயில் அமைந்திருக்கும் நிலத்தை வாங்கி கோயில் திருப்பணியைத் தொடங்கினார். 1790 ஆம் ஆண்டில் கோயில் கட்டிடப்பணி நிறைவேற்றப்பட்டு வைத்தீஸ்வரப் பெருமானையும், தையல்நாயகி அம்மனையும் பிரதிட்டை செய்து வைத்தார்.
யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் கோவிலிலேயே ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் அவர்கள் தமது முதலாவது பிரசங்கத்தை 31 டிசம்பர் 1847 ஆம் ஆண்டு நிகழ்த்தினார்.
பரிவாரக் கோயில்கள்
[தொகு]ஈழத்துச் சைவ சமய வரலாற்றில் சிறப்புக்குரிய ஆலயமாக இருந்து வரும் வண்ணை வைத்தீஸ்வரன் கோவில் தனக்கே உரிய பல சிறப்பம்சங்களை கொண்டமைந்திருக்கும் பெருமை வாய்ந்ததாகும். இக்கோவில் ஏனைய கோவில்களைப் போலல்லாது தனது பரிவாரக்கோவில்களை யாழ்ப்பாணத்தின் வெவ்வேறு இடங்களில் கொண்டமைந்திருக்கும் சிறப்பு வாய்ந்ததாகும். வண்ணை வைத்தீஸ்வரன் கோவிலின் பரிவாரக் கோவில்களாக வேம்படிப்பிள்ளையார் கோவில், வண்ணை மேற்கில் உள்ள ஐயனார் கோவில், காளி கோவில், கற்கட்டு வைரவர் கோவில், பண்ணை முத்துமாரி அம்மன் கோவில் ஆகியன ஆகம முறைப்படி கட்டப்பட்ட சிறப்பு வாய்ந்தவையாக அமைந்திருக்கின்றது. இக் கோவில்களுள் வேம்படிபிள்ளையார் கோவில் தவிர்ந்த ஏனைய கோவில்கள் யாவும் எல்லைக் கோவில்களாகவும், காவல் தெய்வங்களாகவும் கருதப்படுகிறது.
வேம்படிப் பிள்ளையார் கோவில்
[தொகு]வைத்தீஸ்வரன் கோவில் ஆரம்ப கர்த்தாவான ஸ்ரீமான் வைத்திலிங்கச்செட்டியாரின் தந்தையாரான கோபாலச் செட்டியார் சோழ நாட்டிலிருந்து யாழ்ப்பாணம் வந்த காலந்தொட்டே (ஒல்லாந்த காலம்) பூசித்து வந்த விநாயகப் பெருமான் குடி கொண்டிருக்கும் இடமே வேம்பேடிப் பிள்ளையார் கோவிலென தற்போது எல்லோராலும் வழங்கப்பட்டு வருகின்றது. இதற்கு கோவிலமைத்த பெருமை வைத்திலிங்கச்செடியாரையே சாரும். அது மட்டுமின்றி இக் கோவிலமைந்திருக்கும் இடம் வியாபாரத் தாபனங்கள் பல அமைந்து இருப்பதனால் அதனைக் கடைத்தெருப்பிள்ளையார் கோவிலெனவும் அழைப்பர். வைத்தீஸ்வரன் கோவில் உற்சவங்கள் நடைபெறும் விசேட காலங்களில் எல்லாம் முதலில் பரிவாரக் கடவுளான விநாயகருக்கு அபிஷேகம் செய்த பின்பு ஏனைய கிரியைகள் ஆரம்பமாவது வழக்கம்.
காளி கோவில்
[தொகு]பிடாரி அல்லது பத்திரகாளி என்று அழைக்கப்படுகின்ற மற்றுமொரு பரிவாரக் கோவிலான காளிகோவில் வண்ணை மேற்கில் ஐயனார் கோவிலுக்கு அருகாமையில் அமைந்துள்ளது. சிவன் மகோற்சவத்தின் முன்னர் வரும் மாசிப் பருவத்திற்கு சிவன் கோவிலில் இருக்கும் காளி அம்பாள் எழுந்தருளி, பரிவாரக் கோவிலான காளி கோவிலுக்கு இடப வாகனத்தில் ஊர்வலமாக சென்று காப்புக்கட்டி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அது மட்டுமன்றி நவராத்திரி திருவிழாவின் கடைசி நாளான விஜயதசமி அன்று சிவன் கோவிலின் சந்திரசேகரமூர்த்தம் குதிரை வாகனத்தில் பரிவாரக் கோவிலான காளிகோவிலுக்கு வந்து வாழை வெட்டி திரும்பும் நிகழ்ச்சியும் இங்கு நடைபெறுகின்றது.
ஐயனார் கோவில்
[தொகு]வண்ணார்பண்ணை மேற்கில் அமைந்துள்ள ஐயனார் கோவில் ஸ்ரீ பூரணை புட்கலை சமேத ஸ்ரீ அரிகரபுத்திர ஐயனார் அல்லது அரிகர புத்திர ஐயனார் என்றும் அழைக்கப்படுகிறது. வைத்தீஸ்வரன் கோவிலின் சிவன் மகோற்சவத்தின் பொது பூர்வாங்கமாக சில கிரியைகள் பரிவாரக் கோவில்களில் இடம்பெறுவது இக் கோவிலின் பரம்பரியமாகும். மாசி மாதத்தில் கொடியேற்றம் ஆரம்பமாகும் முன்னர் வரும் தைப்பருவத்திற்கு வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள பூரணை புட்கலை சமேதராய் எழுந்தருளும் அரிகரபுத்திர ஐயனார் சுவாமி, யானை வாகனத்தில் ஐயனார் கோவிலுக்கு சென்று காப்புக் கட்டும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.
முத்துமாரியம்மன் கோயில்
[தொகு]பண்ணையில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில் வைத்தீஸ்வரன் கோவிலின் எல்லைக் கோவிலாக மட்டுமன்றி அங்கிருந்து, மக்கள் அனைவரையும் காக்கும் காவல் தெய்வமாகவும் வழிபடப்படுகின்றது. இதனை மீனாட்சி அம்மன் கோவிலெனவும் அழைக்கும் வழக்கம் உண்டு. எனினும் அங்கு குடிகொண்டிருக்கும் தெய்வம் மாரியம்மன் ஆகும். இதனாலேயே இது பண்ணை முத்துமாரியம்மன் கோவிலென எல்லோராலும் அழைக்கப்படுகிறது. சுவாமி கொடியேற்றத்துக்கு முதல் வரும் செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமைகளில் பண்ணை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் விஷேட அபிஷேகம், பூசை வழிபாடுகள் இடம்பெறுவதுடன் இங்கு எழுந்தருளியுள்ள முத்துமாரியம்மனுக்கு விஷேட உற்சவமும் நடைபெறும். இவை யாவும் இவ்வாலய பரிபாலன தெய்வங்களாக இருந்து இக் கிராமத்தைக் காக்கும் தெய்வங்கள், மகோற்சவ காலத்திலும் எவ்வித இடையூறுகளும் இன்றி காக்க வேண்டும் என்பதற்கான வழிபாடுகள் ஆகும்.
உசாத்துணைகள்
[தொகு]- உதயன் 2002.01.27.