வணங்காமுடி (எழுத்தாளர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

'வணங்காமுடி' என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். திருநெல்வேலி மாவட்டம் செட்டிகுளம் (பண்ணையூர் ) எனும் ஊரில் பிறந்த இவரது இயற்பெயர் சு.ராமகிருஷ்ணன். 'ராணி' வார இதழில் இவர் தொடராக எழுதி, 'கண்ணதாசன் பதிப்பகம்' வெளியிட்டுள்ள  'கவியரசு கண்ணதாசன் கதை' எனும் இவருடைய முதல் நூல், தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில்  தமிழ் வளர்ச்சிக்கான 2006-ம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் 'வாழ்க்கை வரலாறு' எனும் வகைப்பாட்டில் முதல் பரிசு  பெற்றது. அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி பரிசு வழங்கினார்.

பெரியார், காமராஜர்,  நடிகர் சிவகுமார் வரலாறுகளையும் தொடராக இவர் எழுதி உள்ளார். இதில் காமராஜர் தொடர், அவரது உதவியாளர் வைரவன் சொல்லச் சொல்ல எழுதியது. இதை 'காமராஜ்' பட இயக்குநர் அ.பாலகிருஷ்ணன் புத்தகமாக வெளியிட்டுள்ளார். சிவகுமார் தொடர், அவருடனான நேரடி பதிவு. பவளவிழா கண்ட 'தினத்தந்தி' தன் பதிப்பகம் சார்பில் சிவகுமாரின் 75-வது பவள விழா நேரத்தில் நூலாக வெளியிட்டுள்ளது. இது 544 பக்கங்கள் கொண்டது. சிவகுமாரின் ஓவியம், நடிப்பு, மேடைப்பேச்சு சார்ந்த முப்பரிமாண வாழ்க்கை மற்றும் அப்துல் கலாம், கருணாநிதியிடம் அவர் கண்ட நேரடி பேட்டிகள்- பிரபலங்களுடனான மறக்க முடியாத அனுபவங்கள்- பெரியார், ராஜாஜி, காமராஜர், சிவாஜி கணேசன் என எண்ணற்ற அவரது உயிரோட்டமான அதிஅற்புத ஓவியங்கள்- அரிய புகைப்படங்களுடன் 'ஓவியர்-நடிகர்-பேச்சாளர் சிவகுமார்' என்ற தலைப்பில் முழு வண்ணத்தில் வெளியாகி உள்ளது. ''நான் இருவேறு நூல்களை எழுதி இருந்தாலும், என்னளவில் இதுவே முழுமையான பதிவு' ' என்று மனம் திறந்து சிவகுமாரே கூறியது இதற்கு கிடைத்த பெருமை. 

'வணங்காமுடி' என்பது கவியரசு கண்ணதாசனின் புனைபெயர்களில் ஒன்று. கண்ணதாசன் மீதான பற்று காரணமாக  அதையே தனது புனைபெயராகக் கொண்டு எழுதி வருகிறார். 

30 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிகையாளராக இருக்கிறார்.

ஆதாரம்[தொகு]