உள்ளடக்கத்துக்குச் செல்

வடக்கு கீலிங்

ஆள்கூறுகள்: 11°50′S 96°49′E / 11.833°S 96.817°E / -11.833; 96.817
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொக்கோசு (கீலிங்) தீவுகள்

வடக்கு கீலிங் (North Keeling) என்பது ஆஸ்திரேலியாவின் ஆட்சிப் பகுதியான கொக்கோசு (கீலிங்) தீவுகளில் வடக்கு முனையில் அமைந்துள்ள ஒரு முருகைத் தீவாகும். ஹோர்ஸ்பரோ தீவில் இருந்து வடக்கே 25 கிமீ தூரத்தே உள்ள இத்தீவில் எவரும் வசிப்பதில்லை. வடக்கு கீலிங் தீவும் அதன் கரையில் இருந்து 1.5கிமீ தூரக் கடற்பரப்பும் சேர்ந்து பூலு கீலிங் தேசியப் பூங்கா என அழைக்கப்படுகிறது.

மிகவும் அரிதான கொக்கோசு மினுக்கும் பட்டை ரெயில் மற்றும் பல கடற்பறவைகள் இங்கு பெருமளவு வாழ்கின்றன.

வரலாறு

[தொகு]

1609 ஆம் ஆண்டில் ஜாவாவில் இருந்து டச்சு கிழக்கிந்தியாவுக்கு சென்ற கிழக்கிந்தியக் கம்பனியைச் சேர்ந்த ஐரோப்பியரான கப்டன் வில்லியம் கீலிங் என்பவர் கொக்கோசு (கீலிங்) தீவுகளை முதன் முதலில் கண்டார். அவரது பெயர் இத்தீவுக்கு வழங்கப்பட்டது. 1749 ஆம் ஆண்டில் சுவீடன் நாட்டைச் சேர்ந்த கப்டன் எக்கெபேர்க் என்பவர் வடக்கு கீலிங் தீவின் வரைபடத்தை முதன் முதலில் வரைந்தார். தென்னை மரங்கள் அதில் வரையப்பட்டிருந்தன. பிரித்தானிய நீரியலாளர் அலெக்சாண்டர் டால்ரிம்பில் என்பவர் 1789 ஆம் ஆண்டில் வரைந்த வரைபடத்திலும் வடக்கு கீலிங் காட்டப்பட்டுள்ளது[1].

1836 ஆம் ஆண்டில் கப்டன் ராபர்ட் ஃபிட்ஸ்ரோய் என்பவரும் சார்ல்ஸ் டார்வினும் இங்கு சென்றிருந்தாலும் அங்கு அவர்களால் தரையிறங்க முடியவில்லை. 19ம் நூற்றாண்டில் பெரிபெரி நோயினால் பீடிக்கப்பட்ட பலர் இங்கு அனுப்பப்பட்டனர். இவர்களது பலரினதும், கப்பல் சிதைவுகள், மற்றும் முதலாம் உலகப் போர்க் கால செருமனியக் கப்பலான எம்டனின் மாலுமிகளினதும் சவக்குழிகள் இங்கு காணப்படுகின்றன.

எம்டன்

[தொகு]
எம்டன் போர்க்கப்பலின் சிதைவுகள், 1925

1914, நவம்பர் 9 இல், செருமனியின் எஸ். எம். எஸ் எம்டன் (1906) என்ற கப்பல் ஆத்திரேலியாவின் எச்மாசு சிட்னி (1912) கப்பலினால் தாக்கப்பட்டுப் பாதிப்புக்குள்ளான நிலையில் அதன் தலைவர் கார்ல் வோன் முல்லர் இக்கப்பலை வடக்கு கீலிங் கரையில் கரை ஒதுக்கி சரணடைந்தார். இக்கப்பலின் மாலுமிகள் சிலர் இத்தீவில் சில காலம் ஒளித்திருந்தனர். இவர்களின் இறந்த உடல் பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டு இத்தீவிலேயே புதைக்கப்பட்டன. இக்கப்பலின் சிதைவுகள் இன்னமும் இங்கு காணப்படுகிறது. 1950 ஆம் ஆண்டில் சப்பானியர்கள் இக்கப்பலின் பாவிக்கப்படக்கூடிய உலோகப்பகுதிகளை எடுத்துச் சென்றனர்.

கடற்பறவைகள் வேட்டை

[தொகு]

முதலாம், இரண்டாம் உலகப்போர்க் கால இடைவெளிகளில் கொக்கோசு மலாய் மக்கள் 20 பேர் மட்டில் இங்கு சுமார் இரு வாரகாலம் தங்கியிருந்து மரம், தென்னை மற்றும் பறவைகளை தமது ஹோம் தீவுக்கு எடுத்துச் சென்றுள்ளனர். 1970கள், 1980களில் இங்கு கடற்பரைவைகளை வேட்டையாடுதல் அதிகரித்துக் காணப்பட்டன.

பூலு கீலிங் தேசியப் பூங்கா

[தொகு]

1986 ஆம் ஆண்டில் ஆத்திரேலியாவின் தேசியப் பூங்கா மற்றும் வனத்துறையினருக்கும் கொக்கோசு மலாய் இனத்தவருக்கும் இடையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட உடன்பாட்டின் படி, வடக்கு கீலிங் தீவில் வேட்டையாடுதல் மட்டுப்படுத்தப்பட்டது. 1989 இல் ஏற்பட்ட ஜோன் சூறாவளியை அடுத்து வடக்கு கீலிங் தீவில் செங்கால் பூபி எனப்படும் கடற்பறவை இனம் பெருமளவு அழித்ததை அடுத்து இங்கு வேட்டையாடுதல் சட்டபூர்வமாகத் தடை செய்யப்பட்டது[1].

பூலு கீலிங் தேசியப் பூங்கா (Pulu Keeling National Park) 1995 ஆம் ஆண்டு திசம்பர் 12 இல் நிறுவப்பட்டது. இப்பகுதியை இயற்கை நிலப்பரப்பாகப் பாதுகாக்கவும், பொது மக்களால் இதனை தகுந்த முறையில் பயன்படுத்தவும் என இப்பூங்கா அமைக்கப்பட்டது. கடற்பறவைகளினதும், கடல் ஆமைகளினதும் இனப்பெருக்கத்துக்கு இது இன்றியமையாததாக இருந்தது. கொக்கோசு மினுக்கும்-பட்டை ரெயில் (Cocos Buff-banded Rail, Gallirallus philippensis andrewsi) எனப்படும் பறவையினம், மற்றும் கொக்கோசு ஏஞ்சல்மீன் போன்றவை இங்கு மட்டுமே வாழ்கின்றன. இப்பூங்காவுக்கு முன் அனுமதி பெற்றே செல்ல வேண்டும்.

கொக்கோசு தீவில் இருந்து வடக்கு கீலிங் செல்லுவதற்கு ஏறத்தாழ 1.5 மணி நேரம் எடுக்கும். வடக்கு கீலிங் கடற்கரைக்குக் கிட்டவாக மட்டுமே உப்பக்கூடிய படகுகளில் சுற்றுலாப் பயணிகள் கொண்டு செல்லப்படுவர். அதன் பின்னர் அவர்கள் நீந்திச் சென்றே கரையை எட்ட வேண்டும். சில மோசமான காலநிலைகளில் இப்பயணம் தடை செய்யப்பட்டிருக்கும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Anon. (2004). Pulu Keeling National Park Management Plan. Australian Government. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-642-54964-8

வெளி இணைப்புகள்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=வடக்கு_கீலிங்&oldid=3227811" இலிருந்து மீள்விக்கப்பட்டது