உள்ளடக்கத்துக்குச் செல்

வடகொரிய வரலாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வடகொரியா கிழக்கு ஆசியாவில் உள்ள கொரியத் தீபகற்பத்தின் வட பகுதியில் அமைந்த ஒரு நாடாகும். 1948-ல் கொரியா நாட்டில் இருந்து பிரிந்து இந்நாடு உருவானது. வடகொரியாவின் தொன்ம வரலாறு கொரிய வரலாற்றோடு பிணைந்தது. வடகொரியாவின் அண்மைக்கால வரலாற்றையே இந்தக் கட்டுரை விபரக்கின்றது.

வடகொரியாவின் உருவாக்கம்

[தொகு]

5000 ஆண்டுகளுக்கு முன்னர் சீனாவின் வட பகுதியிலிருந்து கொரிய தீபகற்பத்திற்குச் சீனர்கள் குடியேறியதிலிருந்து கொரியாவின் ஏடறிந்த கொரிய வரலாறு தொடங்குகிறது. பல்வேறு சாம்ராஜ்யங்களின் எழுச்சிக்கும் வீழ்ச்சிக்கும் பிறகு 1910இல் ஜப்பானிய ஏகாதிபத்தியம் கொரியாவைக் கைப்பற்றியது. ஜப்பானின் பிடி, 1945இல் இரண்டாம் உலகப் போரில் அது தோல்வியுறும் வரை நீடித்தது. போரில் வெற்றி ஈட்டிய 'நேச நாடுக'ளான அமெரிக்காவும் சோவியத் யூனியனும் கொரியாவைத் தத்தமது செல்வாக்குப் பகுதிகளாகப் பிரித்துக்கொண்டன. 38ஆம் அட்சக் கோட்டின் வடபுறம் சோவியத் யூனியனின் ஆதரவுடன் கிம் இல் சுங்-இன் தலைமையில் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியும் தென்புறம் அமெரிக்க ஆதரவு முதலாளித்துவ ஆட்சியும் அமைந்தன. வடபுறம் வடகொரியா என்றும் தென்புறம் தென்கொரியா என்று இரு நாடுகளாக ஆனது.

கொரிய யுத்தம்

[தொகு]

1950இல் தென்கொரியாவை முற்றிலும் எதிர்பாராத ஒரு தருணத்தில் தாக்கியது வடகொரியா. தென்கொரியத் துருப்புகளாலும் ஜப்பானியத் தளங்களிலிருந்து விரைந்த அமெரிக்கத் துருப்புகளாலும் தாக்குதலைச் சமாளிக்க முடியவில்லை. இந்தத் தாக்குதலுக்கு எதிராக ஐ.நா.வின் பாதுகாப்பு மன்றத்தில் தீர்மானம் கொணர்ந்தது அமெரிக்கா. அப்போது பாதுகாப்பு மன்றத்தில் சீனாவின் இடத்தைத் தைவான் வகித்துவந்தது. இதை எதிர்த்து சோவியத் யூனியன் மன்றத்தைப் புறக்கணித்துவந்தது. அமெரிக்காவின் தீர்மானம் எதிர்ப்பின்றி நிறைவேறியது. 3 லட்சம் பேரைக் கொண்ட ஐ.நா.வின் பன்னாட்டுப் படை உருவானது. இதில் 2.60 லட்சம் பேர் அமெரிக்கர்கள்தாம். இந்தப் படை 1950 செப்டம்பரில்தான் கொரியாவை அடைந்தது. அதன் தாக்குதலில் வடகொரியப் படை வேகமாய்ப் பின்வாங்கியது. செப்டம்பர் இறுதியிலேயே தென்கொரியப் பகுதிகள் மீட்கப்பட்டன.

போர் இங்கே முடிந்திருந்தால், ஒருவேளை வரலாறு வேறு விதமாக இருந்திருக்கலாம். ஆனால் அமெரிக்க ஜனாதிபதி ஹாரி ட்ரூமன் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, தீபகற்பம் முழுவதையும் மேற்குலகின் செல்வாக்குப் பகுதியாக மாற்ற விரும்பினார். ஐ.நா.வின் படை 38ஆம் அட்சக் கோட்டைக் கடந்து, வடகொரியாவுக்குள்ளும் புகுந்தது. சீன-வடகொரிய எல்லையில் நீண்டு கிடக்கும் யாலு ஆற்றின் கரைகளை நோக்கி முன்னேறியது. அப்போது, மலைகளுக்குப் பின்னாலிருந்து வெளியேறிய சீனாவின் 'தொண்டர் படை'யை எதிர்கொள்ள வேண்டிவரும் என்று ட்ரூமன் எதிர்பார்க்கவில்லை. 1950இன் டிசம்பர்க் கடுங்குளிரில் ஐ.நா.வின் படை பின்வாங்க நேர்ந்தது. போர் மேலும் இரண்டாண்டுகள் நீண்டது. வரலாற்றாளர்களின் கணிப்பில் மாண்டவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்திற்கும் மேல். 1953இல் போர் நிறுத்தம் கையெழுத்தானது. எனினும் இதுவரை சமாதான உடன்படிக்கை ஏற்படவில்லை. அமெரிக்க-தென்கொரியப் படைகள் ஒருபுறமும் வடகொரியப்படைகள் மறுபுறமும் 241 கி.மீ. நீளமுள்ள எல்லையை ராப்பகலாய்ப் பாதுகாத்துவருகின்றன. 38ஆம் அட்சக்கோடு உலகின் அதிகப் பாதுகாப்பு மிக்க எல்லைக் கோடாய்த் தொடர்கிறது.

வடகொரியாவின் வறுமை

[தொகு]

வடகொரியாவில் கிம் இல் சுங்-இன் ஆட்சி, 1994இல் அவர் மரணம்வரை நீடித்தது. தொடர்ந்து அவரது மகன், இப்போதைய தலைவர் கிம் ஜாங் இல் பதவியேற்றார். தந்தை 'பெருந்தலைவர்' என்றும் மகன் 'அன்புத் தலைவர்' என்றும் அரசின் முழுக்கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்களால் அழைக்கப்படுகின்றனர். தலைவர்களால் மக்களுக்கு அவசியமான உணவுப் பொருட்கள் கிடைக்க வகைசெய்ய முடியவில்லை. 1950களில் விவசாயத்தில் அமல்படுத்தப்பட்ட கூட்டு கம்யூன் முறையும் ரேஷன் பங்கீடும் எதிர்பார்த்த பலனைத் தரவில்லை என்கிறார் அரசியல் விமர்சகர் சாரா பக்லி. மிகுதியும் மலைப்பாங்கான நாட்டில் 18% நிலமே விவசாயத்திற்கு ஏற்றதாக இருப்பதும் ஒரு காரணம். மின்சக்தி மற்றும் உரப் பற்றாக்குறைப் பிரச்சினைகள் வேறு. தவிர, வறட்சியும் வெள்ளமும் மாறி மாறித் தாக்குகின்றன. 1990இல் நாடு கடும் பஞ்சத்திற்கு உள்ளானது. பட்டினியால் மாண்டவர்களின் எண்ணிக்கை 20 லட்சம் வரை இருக்கும் என்கிறார் 'டைம்' செய்தியாளர் டொனால்ட் மெக்கின்டயர்.

வடகொரியாவின் 2 கோடியே 30 லட்சம் மக்களுக்கு 50 லட்சம் டன் அரிசியும் தானியங்களும் தேவைப்படுகின்றன. விளைச்சல், தேவையைக் காட்டிலும் பலபடிகள் பின்தங்கியிருக்கிறது. இவ்வாண்டு ஜூலை மாதம் பெருகிய வெள்ளத்தில், ஒரு லட்சம் டன் அரிசியாக விளைந்திருக்கக்கூடிய பயிர்கள் மூழ்கிப்போயின. அதே மாதம் வடகொரியா ஏவுகணைச் சோதனைகள் நிகழ்த்தியது. இதனால், முன்னதாக ஐந்து லட்சம் டன் உணவுப் பொருளை வழங்க முன்வந்திருந்த தென் கொரியா அதை நிறுத்திவைத்தது.

1995இலிருந்து வடகொரியாவில் ஐ.நா.வின் உலக உணவுச் செயல் திட்டம் (World Food Programme - WFP) பணியாற்றிவருகிறது. இப்போது 13 ஆட்சிப் பகுதிகளில் (counties) 19 லட்சம் பேருக்கு உணவு வழங்கிவருகிறது கீதிறி. யூனிசெஃப் 2004இல் மேற்கொண்ட ஆய்வொன்று சுமார் 40% குழந்தைகளும் 30% தாய்மார்களும் கடுமையான ஊட்டச் சத்துக் குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கிறது. வார்விக் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஹேஸல் ஸ்மித், வடகொரியாவின் அணு ஆயுத அரசியலால் அதன் உணவுப் பிரச்சினை உலக நாடுகளின் கண்களில் படுவதேயில்லை என்கிறார்.

அணு ஆயுதம்

[தொகு]

1985இலேயே அணு ஆயுதப் பரவல் தடை உடன்படிக்கையில் (Nuclear Non-Proliferation Treaty - NPT) ஒப்பிட்டது வடகொரியா. ஆனால் சர்வதேச அணு ஆற்றல் நிறுவனத்தின் ஆய்வுகளுக்கு 1992இல்தான் இணங்கியது. காரணம், அதுவரை அமெரிக்காவின் அணு ஆயுதங்கள் தென்கொரியாவில் இருந்தன. அமெரிக்கா-வடகொரியா இடையே பரஸ்பர அவநம்பிக்கை தொடர்ந்தது. 1999இல் கிளின்டனின் அரசு ஒரு இணக்கமான சூழலுக்கு முயற்சித்தது. பொருளாதாரத் தடைகள் சிலவற்றை விலக்கிக்கொண்டது; மின் உற்பத்திக்கு வழிவகுக்கும் மென்னீர் அணு உலைகள் அமைத்துத் தரவும் முன்வந்தது. எனினும் இன்றுவரை இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.

2001இல் ஜார்ஜ் புஷ் பதவியேற்றதும் அணுகுமுறை மாறியது. ஜனவரி 2002இல், வடகொரியா, ஈரான், ஈராக் ஆகியவை 'தீமையின் அச்சில் சுழலும்' நாடுகள் என்று சாடினார் புஷ். வடகொரியாவுடனான எல்லா நேரடிப் பேச்சுவார்த்தைகளும் நிறுத்தப்பட்டன. அவ்வாண்டு இறுதியில் போங்பியான் என்னுமிடத்திலுள்ள அணு உலையில் உற்பத்தி நடப்பது தெரியவந்தது. வடகொரியாவிற்கு எதிரான குற்றச்சாட்டுகள் அதிகரித்தபோது, அது சர்வதேச அணு ஆற்றல் நிறுவனத்தின் ஆய்வாளர்களை வெளியேற்றியது. அடுத்த கட்டமாக 2003இல் NPTயிலிருந்தும் வெளியேறியது. இதே ஆண்டு தென்கொரியாவிற்கும் ஜப்பானுக்கும் இடையிலான கடற்பரப்பில் இரண்டு ஏவுகணைகளைச் செலுத்தியது. இந்தச் சூழலில்தான் சீனாவின் முன் முயற்சியில் 2003 ஆகஸ்டில் ஆறு நாடுகளின் முதல் சுற்றுப் பேச்சு வார்த்தை பெய்ஜிங்கில் நடந்தது. இடைவெளிகள் நீடித்தபோதும் இது புதிய தொடக்கத்தைக் குறித்தது. 2004 பிப்ரவரியில் இரண்டாம் சுற்றும் ஜூனில் மூன்றாம் சுற்றும் 2005 ஜூலையில் நான்காம் சுற்றும் செப்டம்பரில் ஐந்தாம் சுற்றும் தொடர்ந்தன. ஐந்தாம் சுற்றின் முடிவில் அணு ஆயுதங்களைக் கைவிட வட கொரியா ஒப்புக்கொண்டது. ஆனால் அடுத்த சில தினங்களிலேயே கிளின்டன் அரசு வாக்களித்த மென்னீர் உலைகள் நிறுவப்பட வேண்டும் என்பதை ஒரு நிபந்தனை யாக வைத்தது. 2005 நவம்பரில் வடகொரியாவின் சில வெளிநாட்டு வங்கிக் கணக்குகளை அமெரிக்கா முடக்கியபோது பேச்சுவார்த்தைகள் முறிந்தன.

அக்டோபர் 9 அன்று அணு ஆயுதச் சோதனையை 'வெற்றிகரமாக' நடத்தியது வடகொரியா. இப்போது சோதித்ததைப் போன்ற அணுகுண்டுகள் வடகொரியாவிடம் இன்னும் சில இருக்கலாம் என்று கருதுகின்றனர் ஆய்வாளர்கள். எனினும் அவற்றைச் செலுத்த வல்ல ஏவுகணைகள் அதனிடம் இல்லை. விமானங்களைப் பயன்படுத்தலாம். ஆனால் அவற்றை ஓரளவிற்கு முன்னதாகக் கண்டறிந்துவிட முடியும். ஆனால் இந்தத் தொழில் நுட்பத்தையும் ஆயுதங்களையும் வடகொரியா யாருக்கும் வழங்கலாம் என்னும் அச்சம் பல நாடுகளுக்கும் இருக்கிறது. அதுவே ஐ.நா.வின் தண்டனைத் தடைகளுக்குக் காரணம் எனலாம். ஆனால் பொருளாதார வீழ்ச்சியின் விளிம்பில் இருக்கும் ஒரு தேசத்தை மேலும் நெருக்குவது மேலும் வீழ்ச்சியடையவே வழிவகுக்கும். இந்தத் தடைகள் வடகொரியா எதிர்பாராதவை அல்ல. இவை அதிக காலம் நீடிக்காது என்பது அதன் கணிப்பாக இருந்திருக்கலாம். முன்நிபந்தனையின்றி ஆறு நாடுகளின் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டிருப்பதையும் அது எதிர்பார்த்திருக்கலாம். இனி ஊக்கச் சலுகைகள் தாமே வரும் என்பதும் அதன் எதிர்பார்ப்பாக இருக்கலாம்.

இவற்றையும் பார்க்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வடகொரிய_வரலாறு&oldid=3257056" இலிருந்து மீள்விக்கப்பட்டது