வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (Non Banking Financial Company (NBFC)[1] இந்திய கம்பெனிகள் சட்டம் 2013-கீழ் பதிவு செய்யப்பட்ட நிறுவனம் ஆகும். இந்நிறுவனங்கள் பொதுமக்களுக்கு கடன் வழங்குதல், பங்குச்சந்தையில் பங்குபத்திரங்கள் மற்றும் அரசுப் பத்திரங்கள் வாங்குதல், மகிழுந்துகள், போக்குவரத்து வாகனங்கள் மற்றும் தளவாடக் கருவிகளை வாங்க நிதியுதவி செய்தல், தங்க நகைகள் மீது கடன் வழங்குதல், வீடு போன்ற அசையாச் சொத்துகள் மீது அடமானக் கடன் வழங்குதல், புதிய வீடுகள் கட்டவும், பழைய வீட்டை மராமத்து செய்யவும், வீட்டுமனைகள் மற்றும் அடுக்கு மாடி வீடுகள் வாங்க கடன் கொடுத்தல் மற்றும் சீட்டு நிறுவனம் நடத்துதல் போன்ற சேவைகளைச் செய்கிறது.[2]

வங்கி அல்லாத நிதிநிறுவனங்கள் மீதான கண்காணிப்பு[தொகு]

இந்திய ரிசர்வ் வங்கியின் சட்டம், 1934, (அத்தியாயம் III-B) கீழ் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் செயல்பாடுகளை இந்திய ரிசர்வ் வங்கி கண்காணிக்கிறது. வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் வேளாண்மை, தொழிற்சாலை பணிகள் மேற்கொள்ளவோ, அசையாச் சொத்துகளை வாங்குவதோ, விற்பதோ அல்லது கட்டுமானத் துறையில் நேரடியாக ஈடுபடவோ முடியாது. வங்கியல்லாத நிதி நிறுவனங்கள் பொதுமக்களிடமிருந்தும், மற்றவர்களிடமிருந்தும் எத்தகைய வைப்புத் தொகைகளைப் பெறக் கூடாது. இருப்பினும் இந்திய ரிசர்வ் வங்கி 81 வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கு பொதுமக்களிடமிருந்து நிரந்தர வைப்புத்தொகை பெற அனுமதி வழங்கியுள்ளது.[3]

மேலும் வேளாண்மை, தொழில்துறை செயல்பாடுகள், எந்தவொரு பொருட்களையும் வாங்குவது அல்லது விற்பனை செய்வது (பத்திரங்களைத் தவிர) அல்லது எந்தவொரு சேவைகளையும் வழங்குதல் மற்றும் அசையாச் சொத்தின் விற்பனை / கொள்முதல் / கட்டுமானம் ஆகியதுறைகளில் வங்கி அல்லாத நிறுவனங்கள் ஈடுபடக்கூடாது.[4]

9 நவம்பர் 2017 அன்று, இந்திய ரிசர்வ் வங்கி, வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் செயல்பாடுகள் / சேவைகளை வேலையை வெளியில் கொடுத்து (அவுட்சோர்சிங்) செய்வதற்கான விதிமுறைகளை கோடிட்டுக் காட்டும் அறிவிப்பை வெளியிட்டது. புதிய விதிமுறைகளின்படி, உள் தணிக்கை, முதலீட்டுத் துறையை நிர்வகித்தல், உங்கள் வாடிக்கையாளர் (KYC) அறிந்து கொள்வதற்கான மூலோபாய மற்றும் இணக்கச் செயல்பாடுகள் மற்றும் கடன்களை அனுமதித்தல் & வசூலித்தல் போன்ற முக்கிய மேலாண்மைச் செயல்பாடுகளை வங்கியல்லாத நிதிநிறுவனங்கள் வெளிநபர்களுக்கு (அவுட்சோர்சிங்) வழங்க முடியாது.

வங்கியல்லாத நிதிநிறுவனப் பணியாளர்கள் அவுட்சோர்சிங் செயல்பாட்டைச் செய்ய வேண்டிய அளவிற்கு மட்டுமே வாடிக்கையாளர்களின் தகவல்களை அணுகிப் பெற வேண்டும்.

நேரடி நிதி உதவி மற்றும் கடன் மீட்பு முகவர்களுக்கான நடத்தை விதிகளை வங்கியல்லாத நிறுவனங்களின் கண்காணிப்பு வாரியங்கள் அங்கீகரிக்க வேண்டும். கடன் வசூலைப் பொறுத்தவரை, வங்கியல்லாத நிதிநிறுவனங்களும் அவற்றின் வெளி முகவர்களும் எந்த விதமான அச்சுறுத்தலையும் துன்புறுத்தலையும் நாடக்கூடாது. அனைத்து வங்கியல்லாத நிதிநிறுவனங்கள், தங்கள் சேவை தொடர்பான குறைபாடுகளை வாடிக்கையாளர்கள் கேட்டறியவும், வாடிக்கையாளர்களின் குறைகளை தீர்க்கவும் தனி அமைப்பை நிறுவிக்கொள்ள வெளி நிறுவனங்களை அவுட்சோர்சிங் மூலம் அமர்த்திக் கொள்ள வேண்டும். வேண்டும்.

வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் வகைகள்[தொகு]

சொத்து நிதி நிறுவனம் (Asset Finance Company)[தொகு]

சொத்து நிதி நிறுவனங்கள் தனது மொத்த சொத்து மதிப்பில் அல்லது மொத்த வருவாயில் 60% வரை உற்பத்தி, பொருளாதார வளர்ச்சிக்காக தானியங்கி மோட்டார் வாகனங்கள், டிராக்டர்கள், கடைசல் இயந்திரங்கள், பளுதூக்கிகள், ஆழ்குழாய் துளையிடும் இயந்திரங்கள், தொழிலக உற்பத்தி இயந்திரங்கள், மின்சார உற்பத்தி இயந்திரங்கள், பொக்லைன் மற்றும் பிற கனரக இயந்திரங்களை வாங்க நிதியுதவி செய்யலாம்.=== முதலீட்டு நிறுவனங்கள் (Investment Company) === முதலீட்டு நிறுவனங்கள் எந்தவொரு நிறுவனத்தின் பங்குப் பத்திரங்களையோ அல்லது அரசு பங்குப் பத்திரங்களையோ கையகப்படுத்துவதே முதன்மைப் பணியாகும்.

உள்கட்டமைப்பு நிதி நிறுவனங்கள் (Infrastructure Finance Company)[தொகு]

உள்கட்டமைப்பு நிதி நிறுவனங்கள் தங்களின் சொத்தில் நான்கில் மூன்று பங்கு வரை உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு நிதியுதவி வழங்கும்.

குறு நிதி நிறுவனங்கள் (Micro finance Institutions)[தொகு]

குறு நிதி நிறுவனம் என்பது குறைந்த வருமானம் உடையவர்களுக்கு நிதிச் சேவைகளை வழங்கும் ஒரு அமைப்பாகும். இந்நிறுவன உறுப்பினர்களுக்கு கடன் வழங்குவதுடன் காப்பீடு, வைப்புத்தொகை மற்றும் பிற சேவைகளை வழங்குகிறார்கள். இவைகள் ஏழை மக்களின் நிதியை பாதுக்காப்பதுடன், நிதி சேவைகளையும் வழங்குகின்றன.[5][6]

எஞ்சியுள்ள வங்கியல்லாத நிறுவனம் (Residuary Non-banking Companies)[தொகு]

முதலீடு, குத்தகை, தவணைத்திட்டம், கடன் என்ற வகை நிறுவனமல்லாத, ஏதாவது ஒரு திட்டத்தின் அல்லது ஏற்பாட்டின் அல்லது ஏதாவது ஒருவகையின் கீழ் வைப்புத்தொகையை ஏற்றுக்கொள்வதை தனது முதன்மை வியாபாரமாகவுடைய, ஒருவகை வங்கிசாரா நிதி நிறுவனத்தை (NBFC), எஞ்சியுள்ள வங்கிசாரா நிதி நிறுவனம் என்பர். இந்த நிறுவனங்கள் இந்திய ரிசர்வ் வங்கியின் உத்தரவின் படி, ரொக்கச் சொத்துக்களைத் தவிர முதலீடுகளையும் வைத்திருக்க வேண்டும். இந்த வகை நிறுவனங்கள் முதலீட்டை பெறும் வழிமுறைகள், முதலீட்டாளர்களின் தொகையை பயன்படுத்துவது குறித்த விதிமுறைகள் ஆகிய செயல்பாடுகள், வங்கி சாரா நிதி நிறுவனங்களிலிருந்து மாறுபடுகின்றன. இந்த நிறுவனங்கள் உச்ச வரம்பில்லாமல் வைப்புத் தொகையை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் ஒவ்வொரு எஞ்சியுள்ள வங்கியல்லாத நிதி நிறுவனமும் தன்னால் ஏற்படுத்தப்பட்ட வைப்புத்தொகை மற்றும் செய்யப்பட்ட முதலீடுகளின் தொகை, வைப்பாளர்களுக்குத் தர வேண்டிய மொத்த கடன் தொகைகளை விட குறைவாய் இல்லாததை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். மேலும் வைப்பாளர்களின் நலனை பாதுகாக்க, இந்த நிறுவனங்கள், பாதுகாப்பானவையும், ரொக்கத்தன்மையுள்ளவையுமான கடன் பத்திரங்களை உள்ளடக்கிய, மத்திய / மாநில அரசாங்கக்கடன் பத்திரங்கள், பட்டியலிடப்பட்ட வணிக வங்கியில் (SCB) நிலை வைப்புத்தொகைகள், வைப்புத்தொகைச் சான்றிதழ்கள், பரஸ்பர நிதி நிறுவனங்களின் பங்குகள் ஆகியவற்றில் முதலீடு செய்ய வேண்டும்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]