வங்காளதேசத்தில் அணுக்கரு ஆற்றல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வங்காளதேசத்தில் அணுக்கரு ஆற்றல் (Nuclear Energy in Bangladesh) உற்பத்திக்காக முதன்முதலில் 1961 ஆம் ஆண்டு ஒரு அணு மின் நிலையம் கட்டப்பட்டது. 1973-ல் சுதந்திரம் பெற்ற பின்னர் இங்கு வங்காளதேச அணு ஆற்றல் ஆணையம் நிறுவப்பட்டது. நாட்டில் தற்போது சாவார் உள்மாவட்டத்தில் உள்ள அணுசக்தி ஆராய்ச்சி நிறுவனத்தில் ஒரு சிறிய ஆராய்ச்சி அணுக்கரு உலை செயல்பட்டு வருகிறது. பயிற்சி ஆராய்ச்சி ஓரிடத்தனிமங்கள் பொது அணுவியல் (ப.ஆ.ஓ.பொ.அ) என்ற பெயரில் அமெரிக்கப் பொது அணுவியல் நிறுவனம் அமைக்கும் ஒரு சிறிய வகை அணுக்கரு ஆராய்ச்சி உலையாகும்[1]

மேலும் சமீபத்தில், 2001 ஆம் ஆண்டில் வங்காளதேசம் ஒரு தேசிய அணுசக்தி அதிரடி திட்டத்தை ஏற்றுக்கொண்டது[2]. நாட்டின் மின்சாரப் பற்றாக்குறையைச் சமாளிக்க வங்காள அரசு 24 சூன் 2007 அன்று, அணு மின் நிலையம் கட்டும் திட்டங்களை அறிவித்தது[3]. மே 2010 ல், வங்காள நாடும் உருசியக் கூட்டமைப்புடன் ஒரு குடிமைசார் அணு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அமெரிக்கா, பிரான்சு, சீனா நாடுகளுடன் அமைதியான அணு ஆற்றல் பயன்பாடுகளுக்கான கட்டமைப்பு ஒப்பந்தங்களையும் மேற்கொண்டது.

உருப்பூர் அணுக்கரு மின்நிலையத் திட்டத்திற்கு உருசியாவுடன் ஒரு ஒப்பந்தத்தில் பிப்ரவரி 2011 ஆம் ஆண்டு கையெழுத்திட்டது. ஒவ்வொன்றும் 1200 மெகாவாட் திறன் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய இரண்டு அணுக்கரு உலைகள் அமைப்பது இத்திட்டத்தின் நோக்கமாகும். பப்னாவின் துணைமாவட்டமான இசுவார்டியில் பாயும் பத்மா ஆற்றின் கரையிலுள்ள உருப்பூரில் இந்த அணுமின் நிலையம் கட்டப்படும் என்று அத்திட்டத்தில் திட்டமிடப்பட்டது. நாட்டின் வடமேற்குப் பகுதியில் இம்மாவட்டம் உள்ளது. இத்திட்டத்திற்காக 2 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கின[4]. 2021 இல் உருப்பூர் அணுமின் நிலையம் செயற்படத் தொடங்கும் என திட்டமிடப்பட்டுள்ளது. இரண்டு நாடுகளுக்கு இடையேயான் அலுவல்பூர்வமான உடன்படிக்கை நவம்பர் மாதம் 2011 இல் கையெழுத்தானது[4].

நாட்டின் தென் பகுதியில் ஒரு உள்நாட்டு நதித் தீவில் இரண்டாவது அணு மின் நிலையம் நிர்மாணிக்கப்படும் என்று 29 மே 2013 அன்று வங்காளப் பிரதமர் அறிவித்துள்ளார்[5]

பின்புலம்[தொகு]

ஒரு விவசாய நாடு என்ற வரலாற்றுப் பின்னணியைக் கொண்டிருந்த வங்காள தேசம், 1980 களில் 30 சதவீதமாக இருந்த விவசாயத்துறை அடுத்த பத்தாண்டுகளில் 20 சதவீதமாகக் குறைந்து போனது. மறுபுறத்தில் 20 சதவீதமாக இருந்த தொழிற்துறை 1980 களுக்குப் பின்னர் 30 சதவீதமாக உயர்ந்தது. உயர் தொழிற்சாலை சார்ந்த வங்காளத்தின் தேசியப் பொருளாதாரமும் மின்சார உற்பத்தியும் தேசிய மொத்த உற்பத்தியுடன் நேர்கோட்டுத் தொடர்பை கொண்டுள்ள நிலை உருவானது. குறைந்த விவசாயம் அதிக தொழிற்சாலைகள் என்ற பொருளாதாரத்தை நோக்கி நாடு நகர்ந்தது. தொழிற்சாலைகளில் இருந்து அதிக அளவில் வாயுக்கள் உமிழப்படுவதோடு தாவரங்கள் மற்றும் விலங்குகளும் குறையத்தொடங்கின[6].

அபிவிருத்தி குன்றிய மற்றும் தவறான நிர்வகிக்கப்பட்ட எரிபொருள் உள்கட்டமைப்பு போன்ற காரணங்கள் வங்காளதேசத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு தடையாக இருந்தன.6000 மெகாவாட் மின் உற்பத்திக்கென கட்டமைப்புகள் நிறுவப்பட்டிருந்தும் உண்மையில் 4000 மெகாவாட்டு மின்சாரமே கிடைக்கிறது. 2010 இன் இடைப்பகுதியில் அதிகபட்சமாக 4500 மெகாவாட்டும் பின்னைய 2010 இல் 4700 மெகாவாட்டும் உற்பத்தி செய்யப்பட்டது. மொத்தத்தில் மக்கள் தொகையில் 40 முதல் 48 சதவீத மக்கள் மின்வசதியைப் பெற்றனர். உலகில் வளர்ந்து வரும் நாடுகளின் மத்தியில், 218-230 கிலோவாட்டுமணி என்ற தலா மின் நுகர்வு ஒரு குறைவான அளவாகும்[6]

நடப்பு ஆற்றல் மூலங்கள்[தொகு]

வங்காள தேசத்தில் பயன்பாட்டில் உள்ள ஆற்றலுக்கு முக்கிய ஆதாரமாக இருப்பது நாட்டின் இயற்கை எரிவாயு கையிருப்பே ஆகும். இதில் 55% மின்னுற்பத்தித் துறைக்கும், 27% தொழில் மற்றும் தொழிற்சாலைத் துறை, 10% வீட்டு உபயோகத்திற்கும், 5% போக்குவரத்திற்குமாக பயன்படுத்தப்படுகிறது. மேலும், வங்கதேச அரசு 2010 முதல் 2021 வரையிலான ஆறு ஐந்தாண்டு திட்டங்களுக்கு இலக்கு நிர்ணயித்து செயல்படுகிறது. இதன்படி 2013 ஆம் ஆண்டில் 8500 மெகாவாட்டும், 2015 இல் 11500 மெகாவாட்டும், 2021 இல் 20000 மெகாவாட்டு மின்சாரமும் உற்பத்தி செய்வதற்கான வழிமுறைகள் திட்டமிடப்பட்டிருந்தன. இத்தொலைநோக்குத் திட்டங்கள் யாவும் ’எண்மிய வங்காளதேசம்’ என்ற தொலைநோக்குத் திட்டத்தின் ஒரு பகுதியாகும். நாடுமுழுவதும் மின்மயமாக்கபட வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் அரசு இத்திட்டங்களைச் செயற்படுத்துகிறது. மேலும், உள்நாட்டிலுள்ள நிலக்கரி அடிப்படையிலான மின்னுற்பத்தித் திட்டங்களை அதிகரிக்கவும், கடற்கரையிலும், கடல் அண்மைப் பகுதிகளில் எரிவாயுத் திட்டங்களைக் கண்டறியவுமான திட்டங்கள் இதில் இடம்பெற்றிருந்தன. 9000 மெகாவாட்டு கூடுதல் மின்னுற்பத்தி திட்டமாக உரூப்பர் அணுமின்நிலையத் திட்டத்தை செயற்படுத்துவதும் இத்திட்டத்தின் ஒரு முக்கியப் பகுதியாகும்[6].

இயற்கை எரிவாயுவில் கிடைக்கும் ஆற்றல் 88%, நிலக்கரியில் கிடைக்கும் ஆற்றலில் 4%, எண்ணெயில் கிடைக்கும் ஆற்றலில் 6% மற்றும் சிட்டகாங்க் நீர்மின் திட்டத்தில் கிடைக்கும் ஆற்றலில் 2% ஆகியவை மின் உற்பத்திக்கே பயன்படுத்தப்படுகின்றன. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்கள் அவ்வளவாக இங்கு கணக்கில் கொள்ளப்படவில்லை. 2021 ஆம் ஆண்டிற்குள் நிலக்கரியின் பங்களிப்பை 53% உயர்த்தவும் எரிவாயு இறக்குமதியை 30% குறைக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2030 ஆம் ஆண்டிற்குள் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களை மேலும் 6% அளவிற்கும், அணுக்கரு ஆற்றல் 30% அளவிற்கு உயர்த்தவுமான தொலை நோக்குத் திட்டங்கள் வழக்கில் உள்ளன[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-11-21. பார்க்கப்பட்ட நாள் 2016-11-12.
  2. "Emerging Nuclear Energy Countries". World Nuclear Association. April 2009. Archived from the original on 2019-10-29. பார்க்கப்பட்ட நாள் 2009-04-22.
  3. "Bangladesh To Build Nuclear Power Plant". Energy Daily. 2007-06-24. பார்க்கப்பட்ட நாள் 2007-07-15.
  4. 4.0 4.1 Chowdhury, Syed Tashfin (16 March 2011). "Bangladesh signs up for nuclear power". Asia Times. Archived from the original on 11 ஜூலை 2011. பார்க்கப்பட்ட நாள் 16 August 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. <http://www.kalerkantho.com/?view=details&type=gold&data=news&pub_no=1258&cat_id=1&menu_id=43&news_type_id=1&index=3>
  6. 6.0 6.1 6.2 6.3 Sunny, Sanwar (December 2011). Green Buildings, Clean Transport and the Low Carbon Economy. Germany: Lap Lambert Academic Publishing. பக். 145–147. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-3-8465-9333-2. https://books.google.com/books?id=HlecpwAACAAJ. 

புற இணைப்புகள்[தொகு]