லோக்பால் மசோதா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

லோக்பால் மசோதா 2011 அல்லது லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா மசோதா 2011 என்பது இந்தியாவில் ஊழலுக்கு எதிரான சட்டத்தைக் கொண்டுவர ஏற்படுத்தப்பட்ட மசோதா ஆகும். ஊழல், பொதுமக்கள் பணம் கையாடல் முதலிய தவறிழைக்கும் அரசியல்வாதிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் மக்களால் நேரடியாக தண்டிக்கப்படவேண்டும் என்ற அடிப்படை சித்தாந்ததில் இம்மசோதா முன்மொழியப்பட்டதாகும்.

இம்மசோதா டிசம்பர் 22, 2011 ல் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது, பின்பு 27 டிசம்பர் 2011 ல் லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா மசோதா 2011 நிறைவேற்றப்பட்டது. எனினும் மாநிலங்களவையில் இம்மசோதா டிசம்பர் 29, 2011 ல் நிராகரிக்கப்பட்டது. பின்பு 21 மே 2012 ல் மாநிலங்களவையின் தேர்வுக் குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டது. அக்குழு சில திருத்தங்களைச் செய்த பின் மாநிலங்களவையில் இம்மசோதா 17 டிசம்பர் 2013 ல் நிறைவேற்றப்பட்டது. பின்னர் 18 டிசம்பர் 2013 ல் மக்களவையில் வாக்கெடுப்பின் மூலம் இம்மசோதா நிறைவேறியது.[1]

லோக்பால் பின்னணி[தொகு]

'லோக்பால்' என்னும் சொல், லஷ்மி மால் சிங்வி, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரால் உருவாக்கப்பட்டது. 'லோக்' என்றால் மக்கள் என்றும் 'பலா' என்றால் மக்களை காப்பவர்கள் என்றும் சமசுகிருதத்தில் அர்த்தமாகும மொராஜி தேசாய் தலைமையிலான நிர்வாக சீர்திருத்த கமிஷன் 1966 ல் தன் 'Problems of Redressal of Citizen's Grievances' எனும் அறிக்கையில் லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா என்னும் சிறப்பு அதிகாரமிக்க அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளது.

லோக்பால் மசோதா மக்களவையில் 1968 ஆம் ஆண்டு முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. மக்களவையின் 4 வது அமர்வு முடிவடைந்ததால் லோக்பால் மசோதா காலாவதியானது. 1968, 1971, 1977, 1985, 1989, 1996, 1998, 2001, 2011,2011 ஆகிய ஆண்டுகளில் இம்மசோதா தாக்கல் செய்யப்பட்டாலும் நிறைவேற்றப்படவில்லை. 28 Oct 2011 43 வருடம் கழித்து மீண்டும் 2011 ல் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு 2013 டிசம்பர் 17,18 ல் இரு அவைகளிலும் நிறைவேறியது. மசோதா: நாடாளுமன்றம் ஒப்புதல், தமிழ் தி இந்து நாளிதழ், டிசம்பர் 19,2013 ] </ref>

தனியார் நிறுவனங்கள் குறித்த திருத்தங்கள்[தொகு]

நாடாளுமன்ற மாநிலங்களவையில் லோக்பால் சட்டமுன்வடிவு இறுதியாக நிறை வேற்றப்படுவதற்கு முன்பாக அதன் மீது நடைபெற்ற விவாதத்தின்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் லோக்பால் புலனாய்வின் வரையறைக்குள், தனியார் நிறுவனங்கள் அதிலும் குறிப்பாக பொது-தனி யார்-ஒத்துழைப்பு என்னும் பெயரில் மேற் கொள்ளப்படும் திட்டங்கள் அனைத்தும் பொதுச் சொத்துக்களை அல்லது அரசு மற்றும் பொதுத் துறை நிதி நிறுவனங்களிடமிருந்து நிதிபெறும் ஏற்பாடுகளைக் கொண்டுவரக்கூடிய விதத்தில் திருத்தங்களைக் கொண்டு வந்தது. அந்தத் திருத்தம் தொடர்பாக வாக்கெடுப்பு நடந்தபோது இடதுசாரிக் கட்சி உறுப்பினர்கள் 11 பேர் அவையில் இருந்தபோதிலும், இதற்கு 19 வாக்குகள் கிடைத்தன. இதன் பொருள் இடதுசாரி அல்லாத வேறுசில மாநிலங் களவை உறுப்பினர்களும் இதனை வரவேற்றிருக்கிறார்கள் என்பதாகும். ஆயினும் இந்தத் திருத்தம் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டது. தனியார் கம்பெனிகள் மீதான சோதனைகள் எதையும் காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூட்டணியோ, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியோ விரும்பவில்லை என்பதையே இது சுட்டிக் காட்டியது.[2]

லோக்பால் மசோதாவின் முக்கிய கூறுகள்[தொகு]

டிசம்பர் 18 2013 அன்று நிறைவேற்றப்பட்ட லோக்பால், லோக் ஆயுக்தா மசோதாவின் முக்கிய கூறுகள் கீழே வருமாறு:[3]

 1. மத்தியில் லோக்பால், மாநி லங்கள் நிலையில் லோக் ஆயுக்தா அமைப்பு
 2. தலைவர் மற்றும் அதிக பட்சமாக 8 உறுப்பினர்களை கொண்டது லோக்பால் அமைப்பு. இதன் உறுப்பினர்களில் பாதிப்பேர் நீதித்துறை சார்ந்தவர்கள்.
 3. லோக்பால் உறுப்பினர்களில் 50 சதவீதம் பேர் எஸ்.சி., எஸ்.டி., பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மகளிராக இருக்கவேண்டும்.
 4. பிரதமர், மக்களவைத் தலைவர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், இந்திய தலைமை நீதிபதி அல்லது இந்திய தலைமை நீதிபதி நியமனம் செய்யும் உச்சநீதிமன்ற நீதிபதி, மற்றும் (தேர்வுக் குழுவில் இடம்பெற்றுள்ள முதல் 4 பேர் பரிந்துரையின்பேரில்) குடியரசுத் தலைவர் நியமனம் செய்யும் சட்ட வல்லுநர் ஆகியோர் இடம்பெற்ற தேர்வுக்குழு வாயிலாக லோக்பால் தலைவர், உறுப்பினர்கள் நியமிப்பு.
 5. லோக்பால் விசாரணை வரம்பில் பிரதமர்.
 6. விசாரணை வரம்புக்குள் அரசு ஊழியர்களில் அனைத்துப் பிரிவினரும் வருவார்கள்.
 7. ஒரு ஆண்டுக்கு ரூ. 10 லட்சத்துக்கு மேல் அந்நிய நாட்டில் உள்ளவர்கள் மூலமாக நன்கொடை பெறும் எல்லோரும் லோக்பால் விசாரணை வரம்புக்குள் கொண்டு வரப்படு வர்.
 8. நேர்மை, நாணயம் மிக்க ஊழி யர்களுக்கு உரிய பாதுகாப்பு
 9. லோக்பால் பரிந்துரைக்கும் வழக்குகளை சிபிஐ,உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகள் விசாரிக்கும்போது அதைக் கண்காணிக்க, மேற்பார்வையிட லோக்பாலுக்கு அதிகாரம்.
 10. சிபிஐ இயக்குநரை பிரதமர் தலைமையிலான உயர் அதிகார குழு பரிந்துரைக்கும்.
 11. மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் பரிந்துரை பேரில் சிபிஐ வழக்கு தொடுக்கும் பிரிவின் இயக்குநர் நியமிப்பு
 12. லோக்பால் பரிந்துரைக்கும் வழக்குகளை விசாரிக்கும் சிபிஐ அதிகாரிகள் லோக்பால் ஒப்புதல் தந்தால் மட்டுமே பணியிடமாற்றம்.
 13. ஊழல் வழியில் சேர்த்த சொத்துக் களை, வழக்கு நிலுவையில் இருக்கும்போதே பறிமுதல் செய்ய அதிகாரம் தரும் விதிமுறை கள் உள்ளடங்கும்.
 14. ஆரம்ப நிலை விசாரணை, புலனாய்வு, வழக்கு விசாரணைக்கு கால நிர்ணயம், அதற்காக சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கவும் அதிகாரம்.
 15. லோக்பால் சட்டமாக அறிவிக்கை செய்யப்பட்டதிலிருந்து 365 தினங்களுக்குள் மாநில சட்டப் பேரவையில் சட்டம் இயற்றி லோக் ஆயுக்தாக்களை அமைப்பது கட்டாயம்.

மேற்கோள்கள்[தொகு]

 1. லோக்பால் மசோதா: நாடாளுமன்றம் ஒப்புதல், தமிழ் தி இந்து நாளிதழ், டிசம்பர் 19,2013
 2. "ஏற்கப்படாத திருத்தமும், இன்றைய கொள்ளையும்! பீப்பிள்ஸ் டெமாக்கரசி தலையங்கம்". தீக்கதிர். 13 சனவரி 2014. p. 5. Archived from the original on 2014-01-18. பார்க்கப்பட்ட நாள் 13 சனவரி 2014.
 3. லோக்பால் மசோதாவின் முக்கிய அம்சங்கள்,தமிழ் தி இந்து நாளிதழ், டிசம்பர் 19,2013

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லோக்பால்_மசோதா&oldid=3588098" இலிருந்து மீள்விக்கப்பட்டது