லெஷென் மாபெரும் புத்தர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
லெஷென் மாபெரும் புத்தர்
யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
Leshan giant buddha.jpg
லெஷென் மாபெரும் புத்தர்
அலுவல்முறைப் பெயர்லெஷென் மாபெரும் புத்தர் காட்சிப் பகுதி
அமைவிடம்சிச்சுவான், சீன மக்கள் குடியரசு
பகுதிலெஷென் மாபெரும் புத்தர் காட்சிப்பகுதியை உள்ளடக்கிய உமை மலை காட்சிப்பகுதி
உசாத்துணை779
பதிவு1996 (20-ஆம் அமர்வு)
ஆள்கூறுகள்29°32′41″N 103°46′24″E / 29.54472°N 103.77333°E / 29.54472; 103.77333ஆள்கூறுகள்: 29°32′41″N 103°46′24″E / 29.54472°N 103.77333°E / 29.54472; 103.77333

லெஷென் மாபெரும் புத்தர் (எளிய சீனம்: 乐山 大佛, Leshan Giant Buddha) என்பது மைத்ரேய புத்தரைச் சித்தரிக்கும் வண்ணம் தாங் அரசமரபு காலத்தில் 713 மற்றும் 803 ஆண்டுகளுக்கு இடையில் கட்டப்பட்ட ஒரு உயரமான கற்சிலை.[1] இது சீனாவின் சிச்சுவான் மாகாணத்தின் தெற்கு பகுதியில், லெஷென் நகரத்திற்கு அருகில், மின்ஜியாங், சிங்யீ மற்றும் தாது ஆறுகள் கூடுமிடத்தில், லிங்யுன் மலையிலுள்ள சுண்ணாம்பு காலச் செம்மண் படிம மணற்கற்களின் முகப்புப்பகுதியில் செதுக்கப்பட்டுள்ளது. இச்சிற்பம் அதன் பாதங்களுக்கு கீழே ஆறுகள் பாயும்வகையில் உமை மலையை நோக்கியவாறு அமைந்துள்ளது.

இது உலகின் மிகப்பெரிய மற்றும் மிக உயரமான கல் புத்தர் சிலை. உலகில் தற்போது இருப்பனவற்றில் நவீனகாலத்திற்கு முந்தைய மிக உயரமான சிலை இதுவேயாகும்.

லெஷென் மாபெரும் புத்தர் காட்சிப்பகுதியும் அதனை உள்ளடக்கிய உமை மலை காட்சிப்பகுதியும் 1996 முதல் யுனெஸ்கோ உலகப் பாரம்பரியக் களம் எனப் பட்டியலிடப்பட்டுள்ளது.[2]

வரலாறு[தொகு]

பயணிக்கும் பல கப்பல்களைப் பாதித்து பலர் உயிரிழக்கக் காரணமான ஆர்ப்பரிக்கும் ஆற்றைப் புத்தர் அமைதிப்படுத்துவார் என்ற நம்பிக்கையில் ஹை டோங் என்ற சீனத்துறவி கி.பி 713 இல் இச்சிலையின் கட்டுமானப் பணிகளைத் தொடங்கினார். இந்த திட்டத்திற்கான நிதிவரத்து அப்பகுதி வட்டார அலுவலர்களால் தடைபடவிருந்த நிலையில், அவர் தனது பற்றையும் நேர்மையையும் வெளிக்காட்ட தனது கண்களைத் தோண்டி எடுத்துகொண்டார் எனக் கூறப்படுகிறது. இருந்தபோதிலும், பாதியளவே முடிந்த சிலையின் கட்டுமானம் அவரது இறப்பிற்குப் பிறகு, போதிய நிதி இல்லாததால் தடைபட்டது. எழுபது ஆண்டுகளுக்குப் பிறகு, தாங் அரசமரபின் மண்டல இராணுவ ஆளுநரான வீ காவ் இந்த திட்டத்திற்கு அளித்த நிதியுதவியுடன் 803 ஆம் ஆண்டில் ஹை டோங்கின் சீடர்களால் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தன.

பாரிய கட்டுமானத்தின் விளைவாக குன்றின் முகப்புப்பகுதியிலிருந்து அகற்றப்பட்ட கற்கள் கீழே உள்ள ஆற்றில் கொட்டப்பட்டதின் விளைவாக ஆற்றின் நீரோட்டப்பாதை சற்று மாற்றமடைந்து கப்பல்கள் கடந்து செல்வதற்கு பாதுகாப்பாக அமைந்ததென கருதப்படுகிறது.

கட்டமைப்பு[தொகு]

லெஷென் மாபெரும் புத்தர் சிலை காதுகளை விடுத்து முழுவதும் கல்லால் கட்டப்பட்டுள்ளது. காதுகள் மட்டும் மரத்தால் செதுக்கப்பட்டு களிமண் பூச்சுடன் சிலையில் பொருத்தப்பட்டுள்ளது. 71 மீ உயரம் கொண்ட இச்சிலை தனது கைகளை தன் முழங்கால்கள் மேலிட்டு அமர்ந்தவாறு இருக்கும் மைத்ரேய புத்தரைச் சித்தரிக்கிறது. 15 மீட்டர் உயரமுள்ள தலை, 28 மீட்டர் அகலம் கொண்ட தோள்கள், 6 மீட்டர் நீளம் கொண்ட மூக்கு, 7 மீட்டர் நீளம் கொண்ட காதுகள் என்ற அளவில் அமைக்கப்பட்டுள்ளது. அவரது மிகச்சிறிய கால் விரல் நகம், எளிதாக ஒரு நபர் அமர்ந்துகொள்ளும் அளவு பெரியதாகவுள்ளது.

இச்சிலை ஒரு மேம்பட்ட நுட்பமிக்க வடிகால் அமைப்புடன் ஒருங்கே அமைத்துக்கட்டப்பட்டுள்ளது. வானிலையால் ஏற்படும் தேய்மானத்தைக் குறைக்கும் நோக்கில், பொழிந்த மழைநீரை எடுத்துச் செல்லவும் சிலையின் உட்புறம் உலர்வாக இருக்கவும் சிலையின் பல்வேறு இடங்களில் செதுக்கப்பட்ட வடிகாற்குழாய்கள் இன்றும் செயல்பாட்டில் உள்ளன.

மாபெரும் புத்தர் சிலை செதுக்கப்பட்டபோது, மழை மற்றும் சூரிய ஒளியில் இருந்து காக்கும் வண்ணம், ரோங் வட்டத்திலுள்ள மாபெரும் புத்தர் சிலையில் உள்ளதைப் போன்ற, ஒரு பெரிய, பதின்மூன்று மாடி உயர மரக்கட்டமைப்பு அமைக்கப்பட்டது. யுவான் அரசமரபின் இறுதிக்காலத்தில் நிகழ்ந்த போர்களில் இந்த மரக்கட்டமைப்பு மங்கோலியர்களால் அழிக்கப்பட்டு அகற்றப்பட்டது. அப்போதிருந்து, இச்சிலை இயற்கையின் தாக்கத்திற்கு உள்ளாகும் வண்ணம் திறந்தவெளியில் அமைந்துள்ளது.

லெஷென் மாபெரும் புத்தர் அமைந்துள்ள லிங்யுன் மலைத்தொடர், ஆற்றில் இருந்து பார்க்கும்போது, அந்த புத்தர் சிலையைத் தன் நெஞ்சமாகக் கொண்ட ஒரு ஓய்வெடுக்கும் புத்தரின் வடிவத்தைப் போன்று இருப்பதாக உள்ளூர் மக்களால் கருதப்படுகிறது. அதற்கேற்ப அப்பகுதியின் வழக்காற்றின் படி மலையே புத்தர், புத்தரே மலை.

சீரமைப்பு[தொகு]

லெஷென் புத்தர் சிலை இருக்கும் நிலப்பரப்பில் நிகழும் கட்டற்ற வளர்ச்சியின் விளைவாக வெளிப்படும் மாசுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளது. சின்ஹுவா செய்தி நிறுவனத்தின்படி இந்தப்பகுதியிலுள்ள லெஷென் மாபெரும் புத்தர் மற்றும் பல சீன இயற்கை மற்றும் பண்பாட்டுப் பாரம்பரியத் தளங்கள் வானிலை, காற்று மாசுபாடு மற்றும் சுற்றுலாப் பயணிகளின் திரள் ஆகியவற்றால் சீரழிவுகளைக் கண்டுள்ளன. மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதாக சீனஅரசு உறுதியளித்துள்ளது.[3] [4]

சான்றுகள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]