லெனார்ட் வூல்ஃப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லெனார்ட் வூல்ஃப்
லெனார்ட் வூல்ஃபின் மார்பளவு சிலை
பிறப்புலெனார்ட் சிட்னி வூல்ஃப்
(1880-11-25)25 நவம்பர் 1880
கென்சிங்டன், இலண்டன், இங்கிலாந்து, ஐக்கிய இராச்சியம்
இறப்பு14 ஆகத்து 1969(1969-08-14) (அகவை 88)
ரொட்மெல், கிழக்கு சசெக்சு,இங்கிலாந்து, ஐக்கிய இராச்சியம்
பணிஅரசியல் கோட்பாட்டாளர், எழுத்தாளர், பதிப்பாளர், குடிசார் சேவையாளர்
துணைவர்டிரெக்கி பார்சன்சு
வாழ்க்கைத்
துணை
வெர்சீனியா வூல்ஃப்
(m. 1912–41) (அவரது இறப்பு)

லெனார்ட் சிட்னி வூல்ஃப் (25 நவம்பர் 1880 - 14 ஆகத்து 1969) ஒரு அரசியல் கோட்பாட்டாளரும், எழுத்தாளரும், பதிப்பாளரும், குடிசார் சேவையாளரும் ஆவார். இவர் எழுத்தாளர் வெர்சீனியா வூல்ஃபின் கணவர். இலங்கையைப் பிரித்தானியர் ஆண்ட காலத்தில் யாழ்ப்பாணம், கண்டி, அம்பாந்தோட்டை ஆகிய இடங்களில் இவர் பணியாற்றியுள்ளார். இலங்கையைக் களமாகக் கொண்டு இவர் பல கதைகளையும், தன்வரலாற்று நூல்களையும் எழுதியுள்ளார்.

இளமைக் காலம்[தொகு]

லெனார்ட் வூல்ஃப் 1880ல் இலண்டனில் பிறந்தார். குடும்பத்தின் பத்துப் பிள்ளைகளில் இவர் மூன்றாமவர். இவரது தந்தையார் சொலமன் ரீசு சிட்னி வூல்ஃப், இவர் ஒரு இராணியின் வழக்கறிஞர். தாயார் மேரி வூல்ஃப் (முன்னர் டி ஜொங்). இவர்கள் யூதக் குடும்பத்தினர். 1892ல் இவரது தந்தையார் இறந்த பின்னர், சசெக்சில் பிரைட்டனுக்கு அருகில் இருந்த ஆர்லிங்டன் இல்லப் பள்ளியில் தங்கிப் படிக்க அனுப்பப்பட்டார். 1894 முதல் 1899 வரை புனித போல் பள்ளியில் படித்தார். 1899ல் உபகாரச் சம்பளம் பெற்று கேம்பிரிட்ச், டிரினிட்டி கல்லூரியில் சேர்ந்தார்.[1] 1902ல் இளமாணிப் பட்டம் பெற்ற லெனார்ட் மேலும் ஓராண்டு அங்கே குடிசார் சேவைத் தேர்வுக்காகப் படித்தார்.

1904 அக்டோபரில் இலங்கைக்கு வந்த லெனார்ட் வூல்ஃப், முதலில் யாழ்ப்பாணத்தில் குடிசார் சேவையில் பயிற்சியாளராக (cadet) இணைந்தார். பின்னர் கண்டிக்கு மாற்றப்பட்டார்.[2] 1908ல் தென் மாகாணத்தில் உதவி அரசாங்க அதிபராகப் பணியேற்ற வூல்ஃப், அம்பாந்தோட்டை மாவட்ட நிர்வாகத்துக்குப் பொறுப்பாக இருந்தார். 1911 மே மாதத்தில் ஓராண்டு விடுப்புப் பெற்றுக்கொண்டு இங்கிலாந்துக்குத் திரும்பிய வூல்ஃப் 1912ல் பணியை விட்டு விலகினார். அதே ஆண்டில், வெர்சீனியா இசுட்டீபனைத் திருமணம் செய்துகொண்டார். லெனார்ட், வெர்சீனியா இருவரும் புளூம்சுபெரி குழுவில் செல்வாக்குப்பெற்று விளங்கினர்.

எழுத்துப் பணி[தொகு]

திருமணத்துக்குப் பின்னர் வூல்ஃப் எழுத்துத் துறையில் ஆர்வம் கொண்டார். 1913ல் அவர் தனது முதலாவது புதினமான த வில்லேஜ் இன் த ஜங்கிள் (காட்டில் உள்ள ஊர்) என்னும் புதினத்தை வெளியிட்டார். இது வூல்ஃப் இலங்கையில் வாழ்ந்த காலத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. இதன் பின்னர் ஏறத்தாழ ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு நூலை அவர் வெளியிட்டார்.

1916ல் முதலாம் உலகப் போர்க் காலத்தில் இராணுவத்துக்குக் கட்டாய ஆட்சேர்ப்பு இடம்பெற்றபோது, உடல்நிலை ஏற்றதாக இல்லாததால் இவர் சேவையில் சேர்க்கப்படவில்லை. தொடர்ந்து இவர் அரசியலிலும் சமூகவியலிலும் ஈடுபடத் தொடங்கினார். இவர் தொழிற் கட்சியிலும், சமூகவிய இயக்கமான பேபியக் கழகத்திலும் (Fabian Society) இணைந்ததுடன், நியூ இசுட்டேட்சுமன் (New Statesman) என்னும் சஞ்சிகையிலும் ஒழுங்காக எழுதிவரலானார். 1916ல் அமைதியை நிலைநாட்டுவதற்கு அனைத்துலக அமைப்பு ஒன்றின் அவசியத்தை முன்மொழிந்து அனைத்துலக அரசு (International Government) என்னும் கட்டுரையொன்றை எழுதினார்.

இவரது மனைவியின் மனநிலை பாதிக்கப்பட்டபோது மனைவியைக் கவனித்துக் கொள்வதற்காகவே தனது நேரத்தில் பெரும்பகுதியை அவர் செலவு செய்தார். 1917ல் லெனார்டும் அவரது மனைவியும் கையால் இயக்கப்படு ஒரு சிறிய அச்சியந்திரம் ஒன்றை வாங்கி ஓகார்த் அச்சகத்தை நிறுவினர். முதலில் அவர்கள் ஒரு கையேடு ஒன்றை அச்சிட்டுத் தாமே கட்டி வெளியிட்டனர். பத்து ஆண்டுகளுக்குள் இது ஒரு முழு அளவிலான பதிப்பகமாக வளர்ந்தது. வெர்சீனி மேல் காதயாவின் புதினங்களும், லெனார்டின் நூல்களும் வெளியிடப்பட்டன. டி. எசு. எலியட்டின் த வேஸ்ட் லான்ட் இன் முதற்பதிப்பு உட்படப் பல பிற நூல்களும் இங்கிருந்து வெளியாயின. வூல்ஃப் இறக்கும் வரை இப்பதிப்பகத்தின் இயக்குனராக இருந்தார். தொடர்ந்து மோசமான மனநிலையால் பாதிக்கப்பட்ட இவரது மனைவி வெர்சீனியா 1941ல் நீரில் மூழ்கித் தற்கொலை செய்துகொண்டார். இதன் பின்னர் ஏற்கெனவே மணமான ஓவியரான டிரெக்கி பார்சன்சு என்பவர் மேல் காதல் கொண்டிருந்தார்.

1919ல் இன்டர்நஷனல் ரிவியூவின் ஆசிரியர் ஆனார். அத்துடன் 1920 தொடக்கம் 1922 வரை கொன்டெம்பொரரி ரிவியூவின் அனைத்துலகப் பகுதியின் ஆசிரியராகவும் பணியாற்றினார். 1923 - 1930 காலப் பகுதியில் த நேஷன் என்னும் வாரமொருமுறை அரசியல் செய்தியிதழின் இலக்கிய ஆசிரியராகவும் விளங்கியதுடன், 1931 முதல் 1959 வரை த பொலிட்டிக்கல் குவாட்டர்லி என்னும் காலாண்டிதழின் இணை நிறுவனராகவும், ஆசிரியராகவும் பணிபுரிந்தார். சில காலம், தொழிற் கட்சியின் அனைத்துலக மற்றும் குடியேறவாத விடயங்கள் சம்பந்தமாக ஆலோசனைக் குழுக்களின் செயலாளராகவும் இருந்துள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Woolf, Leonard Sidney (WLF899LS)". A Cambridge Alumni Database. University of Cambridge. 
  2. "Letter", Daily News, LK, 2 October 2002, archived from the original on 14 ஜனவரி 2011, பார்க்கப்பட்ட நாள் 22 டிசம்பர் 2016 {{citation}}: Check date values in: |accessdate= and |archive-date= (help).
"https://ta.wikipedia.org/w/index.php?title=லெனார்ட்_வூல்ஃப்&oldid=3227559" இலிருந்து மீள்விக்கப்பட்டது