லூர்து நகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லூர்து
Lourdes
லூர்து Lourdes-இன் சின்னம்
சின்னம்
லூர்து
Lourdes-இன் அமைவிடம்
Map
நாடுபிரான்சு
Regionஒக்சித்தானியா
திணைக்களம்Hautes-Pyrénées
Area136.94 km2 (14.26 sq mi)
மக்கள்தொகை (2009)15,254
 • அடர்த்தி410/km2 (1,100/sq mi)
இனங்கள்லூர்தியர்
நேர வலயம்ம.ஐ.நே (ஒசநே+01:00)
 • கோடை (பசேநே)ம.ஐ.கோ.நே (ஒசநே+02:00)
INSEE/அஞ்சற்குறியீடு65286 /
ஏற்றம்343–960 m (1,125–3,150 அடி)
1 பிரெஞ்சு நிலப்பதிவுத் தரவுகள்: ஆறுகள், குளங்கள், பனியாறுகள் > 1 km2 (0.386 ச. மைல் அல்லது 247 ஏக்கர்கள்), மற்றும் ஆற்றுக் கயவாய்கள் தவிர்த்து.

லூர்து (Lourdes) என்பது பிரனீசு மலைத்தொடர்களின் அடிவாரத்தில் அமைந்துள்ள ஒரு சிறு நகரமாகும். இந்நகரம் ஹோத்-பிரெனே மாநிலத்தில், தெற்கு-பிரனீசு மாவட்டத்தில் பிரான்சின் தென் மேற்குப் பகுதியில் பிரான்சு தலைநகர் பாரீசில் இருந்து தெற்கே 850 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது. இந்நகரத்தின் நடுவே செங்குத்தானப் பகுதியில் கட்டப்பட்டுள்ள கற்கோட்டையானது இந்நகரின் சிறப்பாகும். இது 1858 ஆம் ஆண்டு லூர்து அன்னைத் திருத்தலம் அமைவதற்கு முன்னமே உருவாக்கப்பட்டதாகும். லூர்து நகரம் மலைகளால் சூழப்பட்ட குளிரான பச்சைப் பசேல் எனக் காட்சியளிக்கும் அழகிய நகரமாகும். மலையின் மறுபக்கம் ஸ்பெயின் நாடு அமைந்துள்ளது.

1858 ஆம் ஆண்டு பெர்னதெத் எனும் ஆடு மேய்க்கும் பெண்ணிற்கு மரியாள் காட்சி கொடுத்ததிற்கு பின்னர் இந்நகர் பிரான்சிலும், உலகம் முழுமைக்கும் பிரபலமானது. அவ்விடத்தில் லூர்து அன்னை திருத்தலம் கட்டப்பட்டுள்ளது. இத்திருத்தலம் இயற்கை சூழலும் அமைதியும் கொண்ட இடமாகும். நிம்மதியாக செபிக்க, தங்க அனைத்து வசதிகளும் கொண்ட அழகிய புனித பயணத் தலமாகும்[1]. மேலும், உலகின் முதன்மையான புனிதப் பயணம் மற்றும் கிறித்துவ மத சுற்றுலாத் தலமானது.

ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுமையிலிருந்தும் வருகைத் தரும் அறுபது இலட்சம் வருகையாளர்களின் மூலம், லூர்து நகர் பிரான்சு நாட்டின் சுற்றுலாத் தலங்களில் பாரீசிற்கு அடுத்து இரண்டாமிடத்திலும், அகில உலக கத்தோலிக்க புனித பயணத்தலங்களில் ரோமிற்கும், புனித பூமிக்கும் அடுத்ததாக மூன்றாமிடத்திலும் அமைந்துள்ளது.

காட்சிகளும், புனிதப்பயணங்களும்[தொகு]

1858 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பதினோராம் தேதி மாலைப்பொழுதில் பெர்னதெத் தன் சகோதரியுடனும் இன்னொரு தோழியுடனும் மசபிள் க்ரொத்தோ (Massabielle) என்ற மலைப்பாங்கான பகுதிக்கு விறகு பொறுக்கச் சென்றார். அவ்விடத்தில் லெ கேவ் (LE GAVE)  என்ற ஆறு ஓடிக்கொண்டிருந்தது. அங்கு அவள் முன் ஒரு அழகான பெண் தோன்றினாள்[2]. முதன் முறை தோன்றியபோது அவள் பெயரை சொல்லாத அப்பெண், அடுத்தடுத்த சந்திப்புகளில் பெர்னதெத்திடம் தன்னை அமலோற்பவ அன்னை ('நாமே அமல உற்பவம்') என்று வெளிப்படுத்தினாள்[3]. இதற்கு பாவம் எதுவுமின்றி பிறந்தவர் என்பது அர்த்தம்.

1858 ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 11 ஆம் தேதி முதல் யூலை மாதம் 16 ஆம் தேதி வரை கன்னி மரியாள் பெர்னதத்துக்கு மொத்தம் பதினெட்டு முறை காட்சி கொடுத்தார்[4]. மரியன்னை பெர்னதெத்திற்கு காட்சி கொடுத்ததன் அடிப்படையில் அவர் ' தூய லூர்து அன்னை ' என்று அழைக்கப்படுகிறார்[5]. கத்தோலிக்கம் பற்றி அதிகமறியாத பெர்னதெத் பங்குத் தந்தை அருட்திரு.பெர்மல் என்பவரிடம் தான் கண்ட காட்சி குறித்து தெரிவித்தாள். ஒரு காட்சியில் மரியன்னை தனக்கு அங்கு ஓர் ஆலயம் கட்டப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.  திருத்தந்தை 9ம் பயஸ், லூர்து அன்னையின் வணக்கத்திற்கு அனுமதி வழங்கினார். அதன் பிறகு அன்னை மரியா காட்சி அளித்த மசபியேல் குகையின் அருகே, மரியாவின் பெயரில் பெரிய ஆலயம் ஒன்று கட்டி எழுப்பப்பட்டது.

புனித நீரூற்று[தொகு]

பிப்ரவரி 25 ந்தேதி காட்சியின்போது மரியன்னை கூறிய இடத்தில் நிலத்தைத் தோண்டியபோது அங்கு சிறிய நீரூற்று தோன்றியது [6]. அது பின்பு ஓடையாக மாறி, திருப்பயணிகளை கவர்ந்திழுக்கும் அற்புத இடமாக இன்றும் திகழ்கிறது. அந்நீருற்றின் நீரைப் பருகியதும் பலர் குணம் பெற்றதாக கூறப்பட்டது. தற்போது நாள்தோறும் ஆயிரக்கணக்கான கேலன் நீர் அந்நீருற்றிலிருந்து வெளிவருகிறது[6]. அதை புனிதப்பயணிகள் பயன்படுத்த நீர் வழங்கிகளும், குளிக்க சிறப்பு குளியல் அறைகளும் ஆலயப் பொறுப்பாளர்களால் உருவாக்கப்பட்டுள்ளது[1]. பெர்னதெத்துக்கு மரியாள் காட்சி கொடுத்தப் பிறகு லூர்து நகர் குணமளிக்கும் புனித நகராகவும், புனிதப் பயணத் தலமாகவும் மாறியது.

வரலாறு[தொகு]

பழங்காலம்[தொகு]

வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்தில் யாரும் வசிக்காத பகுதியாயிருந்தது லூர்து. பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுவில் கண்டெடுக்கப்பட்ட மதிற்சுவர்களின் குவியல்கள், கல்லறை மற்றும் சிலைகளின் மீதங்களை வைத்து அவ்விடத்தில் கி.மு. முதலாம் நூற்றாண்டிற்குப் பிறகு மனிதர்களின் வருகைத் துவங்கியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. செயின்ட் பியர் பங்கு (பிரெஞ்சு ஒலிப்பு: சான் பியர்) அழிக்கப்பட்டப்பின், நீர் கடவுளுக்கு ஒப்புவிக்கப்பட்ட பாகன் கோவில் அங்கு கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

நடுவண் காலம்[தொகு]

பதினான்காம் நூற்றாண்டில் முதன் முதலில் லூர்து நகரானது நான்காம் பிலிப் என்பவரது கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. பிறகு, நில பிரபுக்கள் பியர் அர்ணோ பியர்ன் மற்றும் அவரது சகோதரர் பியர்ன் ழான் மூலம் ஆங்கிலேயர்கள் கிட்டத்தட்ட ஐம்பதாண்டுகள் வரை (1360-1407) தங்கள் கைவசம் வைத்திருந்தனர்.

சமகாலம்[தொகு]

கி.பி.778 ஆம் ஆண்டு வரை, சுமார் 46 ஆண்டுகள் அல்-அந்தலூஸ் இசுலாமியர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. எட்டாம் நூற்றாண்டில் லூர்தும், கற்கோட்டையும் மீரட் என்ற உள்ளூர் இசுலாமியத் தலைவர் மற்றும் ப்ராங்க் அரசர் சார்லமேன் ஆகியோரின் தாக்குதலுக்கு இலக்கானது. இருவருக்குமிடையே நடைபெற்ற போரின்போது, கோட்டையிலிருந்த மீரட் மனக்குழப்பத்தினால் மனம் மாறி, கோட்டையை ஒப்புவித்துவிட்டு 'லோரஸ்' எனும் பெயரில் திருமுழுக்குப் பெற்று கிறித்துவத்திற்கு மதம் மாறினார். அப்பெயராலேயே, தற்போது இந்நகர் 'லூர்து' என்று அழைக்கப்படுகிறது.

நூற்றாண்டு போரின்போது 1360 ஆம் ஆண்டு 'லூர்து நகர்' இங்கிலாந்திற்கு ப்ரெதெனி சமாதான உடன்படிக்கை மூலம் கொடுக்கப்பட்டது. 45 ஆண்டுகள் கழித்து, 1405 ஆம் ஆண்டு, ஆறாம் சார்லஸ் மன்னர் பதினெட்டு மாத காலம் கோட்டையை முற்றுகையிட்டு மீண்டும் பிரான்சின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார். பதினாறாம் நூற்றாண்டில், லூர்து நகர் கத்தோலிக்கர்களுக்கும், பிரெஞ்சு சீர்திருத்த திருச்சபையைச் சார்ந்தவர்களுக்கும் இடையே நடைபெற்ற பிரெஞ்சு மதப் போரினால் கடுமையாக சேதமடைந்தது. 1568 ஆம் ஆண்டு பிரெஞ்சு சீர்திருத்த திருச்சபையின் தலைவரான கபிரியேல், அருகாமை நகரான டார்ப்சை தாக்கினார். அதன்பின் 1592 ஆம் கத்தோலிக்க கூட்டுப்போர்ப்படைகளின் மூலம் கத்தோலிக்க கொள்கை லூர்தில் மீண்டும் நிறுவப்பட்டது. இறுதியில், 1607 ஆம் ஆண்டு லூர்து பிரெஞ்சு பேரரசின் கீழ் வந்தது.

1858 ஆம் ஆண்டு வரை லூர்து நகர் சுமார் 4000 மக்கள் கொண்ட ஒரு அமைதியான நகராகவும், அப்ரெஷெஸ், காடெரெட்ஸ், லு சான் சவேர் மற்றும் பக்னெரெ தெ பிகோர் ஆகிய நீர் நிலைகளுக்கு செல்லும் வழிப்பாதையாகவும் இருந்தது.

புனித லூர்து அன்னை ஆலயம்[தொகு]

ஆண்டின் மார்ச் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை ஐரோப்பா மற்றும் உலகின் பல பகுதிகளிலிருந்து புனிதப் பயணம் மேற்கொள்வோரின் சிறப்பிடமாக லூர்து அன்னை திருத்தலம் விளங்குகிறது. குகையிலிருந்து வெளிவரும் நீருற்று குணமளிக்கும் சிறப்புகள் கொண்டதாக பெரும்பாலான மக்களால் நம்பப்படுகிறது. அதில் 69 குணமளிப்பு சாட்சியங்கள் அதிசயங்களாக திருச்சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றன. 1860 ஆம் ஆண்டிலிருந்து சுமார் 20 கோடி பேர் இதுவரை ஆலயத்திற்கு வருகை தந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலுமிருந்து இத்திருத்தலத்திற்கு வரவும், க்ரொட்டோ புனித நீரூற்றில் திருமுழுக்கு குளியலுக்கும் பயண ஏற்பாடுகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன. மரியாள் பெர்னதெத்துக்கு காட்சி கொடுத்த இடம் க்ரொட்டா என்றும் கெபி என்றும் அழைக்கப்படுகின்றது. அவ்விடம் 9.50 மீ.ஆழமும், 9.85 மீ. அகலமும்,3.80 மீ உயரமும் கொண்டது[7].

உலகில் அதிகப்படியான புனிதப் பயணிகளும் பார்வையாளரும் தரிசிக்கும் இடம் இந்தக் 'கெபி' ஆகும். ஒரு வருடத்திற்கு 6 மில்லியன் மக்கள் இங்கு வந்துபோகின்றனர்[8].

குணமளிக்கும் சாட்சியங்கள்[தொகு]

இத்தலத்தில் நரம்புப் பிரச்சனைகள், புற்று நோய் உட்பட பார்வையின்மை மற்றும் பக்கவாதம் வரையில் ஏராளமான குணமளிக்கும் அதிசயங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ' கடந்த ஐம்பது ஆண்டுகளில் நான்காயிரம் குணம் பெற்ற சாட்சியங்கள் பதிவு செய்யப்படுள்ளதாக கூறப்படுகிறது '.[9]

இவற்றில் ஒவ்வொன்றையும் தேசிய மருத்துவ ஆணைக்குழு பரிசீலித்து, மிக நுட்பமாக ஆராய்ந்து அவற்றில் 67 மட்டும் தங்கள் சக்திக்கு அப்பாற்பட்டது என்றும் அது அன்னையின் அருளால்தான் நடந்தது என்றும் அறிவித்து உறுதிப்படுத்தி உள்ளனர். இந்த 67 பேரின் விபரங்கள், புகைப்படங்களுடன் லூர்து பேராலயக் காப்பகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்த 67 பேர்களில், 1) 80 வீதமானவர்கள் பெண்கள் 2) இவர்களில் 55 பேர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள். மேலும், பெரும்பாலானவர்கள் சாதாரண நடுத்தர தொழில் புரியும் பொதுநிலையினர், அருட்பணியாளர், அருட்சகோதரிகள், அருட்சகோதரர்கள், துறவிகள் போன்றோரும் அடங்குவர் [8].

150 ஆம் ஆண்டு யூப்ளி கொண்டாட்டம்[தொகு]

மரியாள் முதல் காட்சிக் கொடுத்ததன் 150 ஆம் ஆண்டு யூப்ளி கொண்டாட்டம்[8] பதினொன்றாம் தேதி பிப்ரவரி மாதம் 2008 ஆம் ஆண்டு, 45,000 புனிதப்பயணிகள் குழும நடைபெற்றது. இம்முதல் காட்சி கொடுத்த 150 ஆவது வருட நிறைவு யூபிலி விழாவை ஒரு வருட காலத்திற்குக் கொண்டாடுவதென பிரான்ஸ் ஆயர் மன்றம் தீர்மானித்துச் செயற்பட்டது. 08.12.2007 துவங்கி 08.12.2008 வரை சிறப்பான முறையில் மரியன்னையின் புகழை, அவர் வாழ்ந்த வாழ்க்கை நெறிகளை அனைத்து மக்களும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், 'மரியாளின் வழியில் கிறிஸ்துவிடம்' அனைவரும் செல்ல வேண்டும் என்றும் பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன[8]. இந்தக் கொண்டாட்டத்தை உரோமில் இருக்கும் இந்தியக் கர்தினால் பேரருட் பெருந்தகை இவான் டையஸ் (Ivan Cardinal Dias) ஆண்டகை துவக்கிவைத்தார்[10]. திருத்தந்தை பாப்பரசர் 16 ஆம் ஆசீர்வாதப்பர், இவரைத் தம் திருத்தூதராக அனுப்பி வைத்தார் [11].

கோட்டையின் பழைமையும், வரலாறும்[தொகு]

லூர்து நகரில் அமைந்திருக்கும் கோட்டை

லூர்து நகரின் மையத்தில் உயரே அமைந்திருக்கும் கோட்டையானது உரோமையர் காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மன்னர் இருபத்தைந்தாம் லூயினால் சிறைக்கூடமாக பயன்படுத்தப்பட்டு வந்தது. 1789 ஆம் ஆண்டு பொதுக் குழு சிறைக்கைதிகளை விடுதலை செய்ய ஆணையிட்டது. பின் நெப்போலியனின் எழுச்சியின்போது, 1803 ஆம் ஆண்டு அக்கோட்டை மீண்டும் சிறைச்சாலையாக செயல்படத்துவங்கியது.

778 ஆண்டு சார்லமேன் முற்றுகைக்குப் பிறகு, அக்கோட்டை பதினொன்றாம் மற்றும் பன்னிரெண்டாம் நூற்றாண்டு வரை பிஷோர் பிரபுக்களின் உறைவிடமாக பயன்படுத்தப்பட்டது. பதிமூன்றாம் நூற்றாண்டில் பிலிப்பின் அரசாட்சியின் கீழ் வருவதற்கு முன் அவ்விடம் ஷாம்ப்பைன் பிரபுக்களின் கைவசம் வந்தது. 1360 ஆம் ஆண்டு ப்ரெதெனி சமாதான உடன்படிக்கையினால் ஆங்கிலேயரிடம் பறிபோனது. பதினைந்தாம் நூற்றாண்டில் இரண்டு முறை முற்றுகைக்குள்ளானது. பதினேழாம் நூற்றாண்டில் அரச சிறைச்சாலையாகவும், பிரெஞ்சு புரட்சிக்குப் பிறகு மாநிலச் சிறைச்சாலையாகவும் பயன்படுத்தப்பட்டு, இருபதாம் நூற்றாண்டில் 1921 ஆம் ஆண்டு முதல் பிரனே அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது.

இராணுவ பொறியியல் பணியினால் பழமையான மதிற்சுவர்கள் அழிந்தப்போதும், பழங்கால சிலைகள், காணிக்கைகள், மதிற்சுவர்களின் அடித்தளங்கள் ஆகியன வெளிவந்துள்ளன. அவை அருங்காட்சியகத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.

சுற்றுலா[தொகு]

லூர்து அன்னை திருத்தலத்திற்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகளின் வருகையால் நிறைய தங்குமிடங்களும், நகருக்கருகில் சுற்றுலாத்தலங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. 1858 ஆம் ஆண்டு வரை நான்காயிரமாக இருந்த லூர்து மக்கள் தொகையின் அண்மைக் கால எண்ணிக்கை பதினைந்தாயிரமாகும். ஆனாலும் இந்நகர் ஐம்பது இலட்சம் புனிதப் பயணிகளையும், சுற்றுலாப் பயணிகளையும் ஏற்றுக்கொள்ள வல்லது. ஒரு சதுர கிலோமீட்டரில் அதிக தங்கு விடுதிகள் கொண்டஇடங்களின் பட்டியலில் 270 தங்கு விடுதிகளுடன் லூர்து நகர் பாரீசிற்கு அடுத்த இடத்திலிருக்கிறது.

சான்றுகள்[தொகு]

 1. 1.0 1.1 http://www.lourdhu.net/Messagebathtm.htm
 2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-07-14. பார்க்கப்பட்ட நாள் 2016-07-28.
 3. https://annunciations.wordpress.com/2008/10/08/que-soy-era-immaculada-conceptiou/
 4. http://www.marypages.com/bernadetteEng.htm
 5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2005-04-12. பார்க்கப்பட்ட நாள் 2016-07-28.
 6. 6.0 6.1 http://www.catholicnewsagency.com/resources/mary/popular-marian-devotions/our-lady-of-lourdes/
 7. http://www.perfettaletizia.it/archivio/servizi/madonna_lourdes/english_massabielle.html
 8. 8.0 8.1 8.2 8.3 http://jesutamil.ch/news_2008v2/details.php?ID=91[தொடர்பிழந்த இணைப்பு]
 9. The Catholic Encyclopedia: An International Work of Reference on ..., Volume 9 edited by Charles George Herbermann
 10. நிலாச்சாரல்
 11. லூர்து நகர் திருத்தலம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=லூர்து_நகர்&oldid=3570300" இலிருந்து மீள்விக்கப்பட்டது