லூர்து சேவியர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இறை ஊழியர்
லூர்து சேவியர்
பூண்டி தந்தை
பிறப்புலூர்துசாமி
(1910-05-18)மே 18, 1910
கோவண்டா குறிச்சி, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு, இந்தியா
இறப்பு(1972-04-15)ஏப்ரல் 15, 1972
திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு, இந்தியா
ஏற்கும் சபை/சமயங்கள்கத்தோலிக்க திருச்சபை

இறை ஊழியர் லூர்து சேவியர் (Servant of God Lourdu Xavier) தமிழகத்தின் புகழ்பெற்ற பூண்டி மாதா பேராலயத்தில் பணியாற்றிய கத்தோலிக்க அருட்தந்தை ஆவார். திருக்காட்டுப்பள்ளியை அடுத்த அலமேலுபுரம் பூண்டியில் வாழும் கிறிஸ்தவர்களின் நல்வாழ்வுக்காக உழைத்த இவர், அங்குள்ள மக்களால் புனிதராகப் போற்றப்படுகிறார்.


இளமைப் பருவம்[தொகு]

தமிழகத்தின் திருச்சிராப்பள்ளி மாவட்டம் லால்குடி வட்டத்தில் இருந்த கோவண்டா குறிச்சியில் சவரிராயன் - சவரியம்மாள் தம்பதியருக்கு 2வது மகனாக 1910 மே 18ந்தேதி லூர்து சேவியர் பிறந்தார்.[1] சிறிது நாட்களிலேயே இவரது தாய் இறந்தார். இதையடுத்து சவரியம்மாளின் தங்கை சவுந்தரியம்மாள், குழந்தையை வளர்க்கும் பொறுப்பை ஏற்றார். அதே ஆண்டு ஆகஸ்ட் 18ந்தேதி, வடுகர்பேட்டை பங்கு ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் இவருக்கு லூர்துசாமி என்ற பெயருடன் திருமுழுக்கு வழங்கப்பட்டது. இவரது தந்தை சவரிராயன், வேலை காரணமாக இலங்கை சென்று விட்டார். வறிய சூழ்நிலையில் சித்தியின் பராமரிப்பில் வளர்ந்த சிறுவன் லூர்துசாமி, ஆடுகளை மேய்க்கிறவராக வலம் வந்தார். இவரது உறவினரான அருட்தந்தை சேவியர், இவர் பள்ளிப்படிப்பை மேற்கொள்ள உதவி செய்தார். 1923 முதல் 1930 வரை கடலூர் புனித வளனார் உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்ற லூர்துசாமி, இறை பக்தியிலும் வளர்ச்சி அடைந்தார்.

இளம் குருவாக[தொகு]

உயர்க்கல்வியை முடித்த லூர்துசாமி, கத்தோலிக்க குருவாக விரும்பி, கேரளாவின் ஆலுவை பகுதியில் உள்ள செயின்ட் ஜோசப் பாப்பிறை குருத்துவக் கல்லூரியில் 1932ஆம் ஆண்டு சேர்ந்தார். 1938 டிசம்பர் 20ல் வெரப்போலி பேராயர் ஜோசப் அத்திபெட்டி, இவரை குருவாக திருநிலைப்படுத்தினார். குருப்பட்டம் பெற்ற வேளையில், இவர் தமது பெயரை வி.எஸ். லூர்து சேவியர் என்று மாற்றிக் கொண்டார். வடுகர்பேட்டை பங்கு சரவரிராயன் மகன் என்பதே வி.எஸ். என்பதன் பொருள். சேவியர் என்பது அவரது உறவினரும் வழிகாட்டியுமான அருட்தந்தையின் பெயர். அன்னை மரியா மீதும், இயேசு கிறிஸ்து மீதும் லூர்து சேவியர் மிகுந்த பக்தி கொண்டவராகத் திகழ்ந்தார். 1938ல் கூவத்தூர் ஆலயத்தின் பங்குத்தந்தையாக கும்பகோணம் ஆயரால் நியமிக்கப்பட்ட இவர், 1948 வரை அங்கு பணியாற்றினார்.[1] பின்னர் தொழூர்பட்டி பங்குக்கு மாற்றலாகிச் சென்ற இவர், அங்கு தொழுநோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மருத்துவமனை ஒன்றைக் கட்டினார். 1955 வரை தொழூர்பட்டியில் பணியாற்றிய லூர்து சேவியர் அங்கிருந்த மக்களுக்கு சிறந்த ஆன்மிக வழிகாட்டியாக விளங்கினார்.

பூண்டி தந்தை[தொகு]

அருள்தந்தை லூர்து சேவியர், 1955ல் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள அலமேலுபுரம் பூண்டியில் பங்குத்தந்தையாக பொறுப்பேற்றார். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஐம்பது கிறிஸ்தவ குடும்பங்கள் மட்டுமே வசித்த இந்த பங்கு, லூர்து சேவியரின் பொறுப்புணர்வை அதிகரித்தது. பொருளாதாரத்தில் பின்தங்கியிருந்த மக்களின் வாழ்வை மேம்படுத்த ஆலோசனைகளையும் உதவிகளையும் வழங்கினார். மக்களை மரியன்னை பக்தியில் வளர்த்தார். பழுதுபட்டிருந்த ஆலயத்தின் மேற்கூரையை இடித்துக்கட்ட வழியின்றி தவித்த லூர்து சேவியர், அன்னை மரியாவின் உதவியை நாடினார். 1956 நவம்பர் 23ந்தேதி, பூண்டி ஆலய பீடத்துக்கும் சுவர்களுக்கும் எந்த சேதமும் ஏற்படாமல் மேற்கூரை மட்டும் இடிந்து விழுந்தது. இது மாபெரும் அற்புதமாக கருதப்படுகிறது. இதையடுத்து, அந்த ஆலயத்தை சீரமைத்துக் கட்டியெழுப்பினார்.

அருள்தந்தை லூர்து சேவியரின் வேண்டுதல்களால் நிகழ்ந்த அனைத்தையும் பூண்டி மக்கள் அற்புதச் செயல்களாகவே பார்த்தனர். பல நோயாளிகள் இவரால் நலமடைந்தனர், பலரது பொருளாதார சிக்கல்கள் தீர்ந்தன, துன்பங்களால் சோர்ந்திருந்த பலரும் இவரது செபங்களால் புதுவாழ்வு பெற்றனர். ஆகவே, இவர் வாழ்ந்த காலத்திலேயே புனிதராக மதிக்கப்பட்டார்.[1]

இறுதி நாட்கள்[தொகு]

பூண்டி திருத்தலத்தில் பதினேழு ஆண்டுகள் ஆன்மிகப் பணி செய்த அருள்தந்தை லூர்து சேவியர், நீரிழிவு நோயின் தீவிரத்தால் திருச்சிராப்பள்ளி குழந்தை இயேசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். சிகிச்சையில் இருந்தபோதும், தம்மைப் பார்க்க வந்தவர்கள் ஆன்மிக வாழ்வில் வளர அறிவுரை வழங்கி வந்தார். இறுதியாக 1972 ஏப்ரல் 15ந்தேதி, தமது 62ஆம் வயதில் லூர்து சேவியர் இறப்பைத் தழுவினார். மறுநாள் பூண்டி மாதா ஆலயத்தில் இவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இறை ஊழியர்[தொகு]

பூண்டி மாதா ஆலயத்தின் புகழோடு இணைந்து, அருள்தந்தை லூர்து சேவியரின் புகழும் பரவியது. பூண்டி ஆலயத்திற்கு சென்ற பக்தர்கள், லூர்து சேவியர் கல்லறையிலும் செபித்து பல நன்மைகளைப் பெற்றதாக சாட்சி கூறினர். இதையடுத்து, அவருக்கு புனிதர் பட்டம் கொடுக்கும் முயற்சிகள் தொடங்கப்பட்டன. அவற்றை ஏற்று 2016 ஏப்ரல் 4ந்தேதி, லூர்து சேவியரை இறை ஊழியர் என்று கத்தோலிக்க திருச்சபை அறிவித்துள்ளது.[2]

ஆதாரங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லூர்து_சேவியர்&oldid=2519843" இலிருந்து மீள்விக்கப்பட்டது