லுயீஸ் டி மரிலாக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புனித லுயீஸ் டி மரிலாக்
பிறப்பு(1591-08-12)ஆகத்து 12, 1591
பாரிஸ், பிரான்சு
இறப்புமார்ச்சு 15, 1660(1660-03-15) (அகவை 68)
பாரிஸ், பிரான்சு
ஏற்கும் சபை/சமயங்கள்கத்தோலிக்கம்
அருளாளர் பட்டம்மே 9, 1920, ரோம் by திருத்தந்தை 15ம் பெனடிக்ட்
புனிதர் பட்டம்மார்ச் 11, 1934, ரோம் by திருத்தந்தை 11ம் பயஸ்
முக்கிய திருத்தலங்கள்அற்புத பதக்க சிற்றாலயம், ரியூ டு பக், பாரிஸ், பிரான்சு
திருவிழாமார்ச் 15
சித்தரிக்கப்படும் வகைகைம்பெண் உடை
பாதுகாவல்பெற்றோரை இழந்தோர், நோயாளிகள், சமூக சேவகர்கள், கைம்பெண்கள்

புனித லுயீஸ் டி மரிலாக் (Saint Louise de Marillac, ஆகஸ்ட் 12, 1591மார்ச் 15, 1660), புனித வின்சென்ட் தே பவுலோடு இணைந்து பிறரன்பின் புதல்வியர் துறவற சபையை நிறுவியவரும் கத்தோலிக்க திருச்சபையின் புனிதரும் ஆவார்.

தொடக்க காலம்[தொகு]

லுயீஸ் டி மரிலாக், பிரான்சு நாட்டின் பாரிஸ் நகரில் 1591 ஆகஸ்ட் 12ந்தேதி பிறந்தார். சிறு வயதிலேயே, இவர் பெற்றோரை இழந்தார். இருந்தாலும் நல்ல முறையில் வளர்க்கப்பட்டார். பெரிய துறவற மடம் ஒன்றில் கல்வி பயின்றார். இதனால் இவருக்கு துறவற வாழ்வில் ஆர்வம் ஏற்பட்டது. திருப்பாடுகளின் புதல்விகள் என்ற துறவற சபையில் சேர இவர் விண்ணப்பித்தார். இவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. எனவே, இல்லற வாழ்வில் ஈடுபடுமாறு குடும்பத்தினர் இவரை அறிவுறுத்தினர்.

1617 பிப்ரவரி 5ந்தேதி, ஆன்டனி லீ க்ராஸ் என்பவரை மரிலாக் திருமணம் செய்து, மகிழ்ச்சியுடன் குடும்பம் நடத்தி வந்தார். இவர்களுக்கு மைக்கேல் என்ற குழந்தையும் பிறந்தது. இந்த நிலையில் இவரது கணவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டார். மரிலாக், தனது கணவரை அன்புடன் கவனித்துக் கொண்டார். ஆனாலும் கடவுளுக்காக துறவறம் மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இவரது மனதில் தொடர்ந்து நீடித்தது. 2 ஆண்டுகள் வேதனைக்கு பின்பு இவரது கணவர் மரணம் அடைந்தார்.

துறவற சபை[தொகு]

அந்த வேளையில் லுயீஸ் டி மரிலாக், புனித வின்சென்ட் தெ பவுலை சந்திக்க நேரிட்டது. அதன்பின் ஏழைகளுக்கும் தேவையில் இருப்பவர்களுக்கும் உதவி செய்யும் விதத்தில், இவர் துறவற வாழ்வை மேற்கொண்டார். புனித வின்சென்ட் தெ பவுலுடன் இணைந்து, பிறரன்பின் புதல்வியர் என்ற துறவற சபையைத் தோற்றுவித்தார்.

இவருடன் சேர்ந்து உழைத்த துறவற சபை அருட்கன்னியர்கள், பாவிகளை மனந்திருப்புவதிலும், ஏழைகளுக்கு உதவி செய்வதிலும் ஆர்வமுடன் உழைத்தனர். நோயாளிகளை கவனிக்க மருத்துவ மனைகளும், ஆதரவற்றோரை கவனிக்க முதியோர் இல்லங்களும் இச்சபை சார்பில் அமைக்கப்பட்டன.

மரிலாக் மக்களுக்கு செய்த சேவையை, இயேசு கிறிஸ்துவுக்கு செய்த சேவையாக எண்ணினார். ஏழைகளிலும், கைவிடப்பட்டோரிலும் கடவுளைக் கண்டார். சிறப்பாக இவரது சபையினர் ஏழைப் பெண்களுக்கு உறைவிடம் அளித்து, உணவு கொடுத்து பாதுகாத்து வந்தனர். போரில் காயம் அடைந்த வீரர்களுக்கும் மருத்துவ சேவை செய்தனர்.

புனித லுயீஸ் டி மரிலாக்கின் அழியாத உடல், ரியூ டு பக், பாரிஸ்

புனிதர் பட்டம்[தொகு]

இயேசு கிறிஸ்துவின் பெயரால், மக்களுக்கு சேவைகள் செய்து வந்த லுயீஸ் டி மரிலாக் 1660 மார்ச் 15ந்தேதி மரணம் அடைந்தார். 1920 மே 9ந்தேதி, திருத்தந்தை 15ம் பெனடிக்ட் இவருக்கு அருளாளர் பட்டம் வழங்கினார். 1934 மார்ச் 11ஆம் நாள், திருத்தந்தை 11ம் பயஸ் இவருக்கு புனிதர் பட்டம் வழங்கினார்.

1960ஆம் ஆண்டு, திருத்தந்தை 23ம் ஜான் இவரை கிறிஸ்தவ சமூக சேவகர்களின் பாதுகாவலராக அறிவித்தார். புனித லுயீஸ் டி மரிலாக்கின் அழியாத உடல், பாரிஸ் நகரில் இவர் வாழ்ந்த துறவற சபையின் சிற்றாலயத்தில் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Saint Louise de Marillac
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லுயீஸ்_டி_மரிலாக்&oldid=3352070" இலிருந்து மீள்விக்கப்பட்டது