லுபாங் புவாயா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

லுபாங் புவாயா (Lubang Buaya) ஜகார்த்தாவின் புறநகரில், ஜகார்த்தாவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள ஹலிம் பெர்தானகுசுமா விமானப்படை தளத்திற்கு அருகில் அமைந்துள்ளது. இதனை முதலைக்குழி என்றும் கூறுவர். செப்டம்பர் 30 இயக்கத்தின் அக்டோபர் 1 ஆட்சி கவிழ்ப்பு முயற்சியின் போது ஏழு இந்தோனேசிய இராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்ட இடமாகவும் இது விளங்குகிறது.

வரலாறு[தொகு]

மே 31, 1965 ஆம் நாளன்று, ஜனாதிபதி சுகர்னோ, அப்போது இருந்த மூன்று ஆயுதப்படைகள் (இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை) மற்றும் காவல்துறையினரைத் தவிர, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளைக் கொண்டு அமைந்த மற்றொரு படையான "ஐந்தாவது படை" ஒன்றை நிறுவ வேண்டும் என்று விரும்பி அதற்கான அழைப்பினை விடுத்தார். அவருடைய இந்தத் திட்டத்திற்கு அப்போதைய இராணுவத் தளபதியாக இருந்த அஹ்மத் யானியிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது,[1] இருந்தபோதிலும் லுபாங் புவாயா என்றும் இடத்திற்கு அருகில் உள்ள ஹலிம் என்னும் இடத்தில் பயிற்சி தருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ள ஆரம்பிக்கப்பட்டன. அப்போது அந்தப் பகுதி மேஜர் சுஜோனா என்பவரின் கட்டுப்பாட்டில் இருந்தது. அவர் ஹலிம் தளத்தின் கமாண்டராக செயலாற்றி வந்தார்.[2] அப்போது மேற்கொள்ளப்பட்ட பயிற்சியில் கலந்து கொண்டவர்களில் பங்கேற்றவர்களில் பி.கே.ஐ-உடன் இணைந்த பெமுடா ரக்யாட் என்ற பெயரிலான இளைஞர் குழுவின் உறுப்பினர்கள் இடம் பெற்றிருந்தனர். .[3]

ஜெனரல்களின் உடல்கள் கொட்டப்பட்ட கிணறு, 2013

அக்டோபர் 1, 1965 ஆம் நாள் அதிகாலையில், செப்டம்பர் 30 இயக்கத்தின் உறுப்பினர்கள், ஏழு தளபதிகளை கடத்திச் செல்லும் நோக்கில், லுபாங் புவாயாவில் தங்கள் தளத்தை விட்டு வெளியேறினர். அவர்கள் கடத்த நினைத்த ஏழு தளபதிகளும் இராணுவ பொதுப் பணியாளர்கள் என்ற நிலையில் இருந்தவர்கள் ஆவர்.[3] அந்த இரவின் பிற்பகுதியில், அவர்கள் கடத்தல் முயற்சிகளில் ஈடுபட்டபோது கொல்லப்பட்ட மூன்று தளபதிகள் உடல்களைக் கொண்டு வந்தனர். அந்த மூன்று உடல்களுடன், மேலும் நான்கு உயிருள்ள கைதிகளையும் அவர்கள் கொண்டு வந்தனர். அவ்வாறாக உயிருடன் பிடித்துக் கொண்டு வரப்பட்டவர்கள் பின்னர் கொல்லப்பட்டனர், இந்த நான்கு உடல்களுடன் முந்தைய மூன்று உடல்களையும் சேர்த்து மொத்தமாக ஏழு பேரின் உடல்களும் அங்கு பயன்படுத்தப்படாமல் இருந்த ஒரு கிணற்றில் வீசி எறியப்பட்டன.

அக்டோபர் 4 ஆம் நாளன்று சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி அங்கி முன்னர் வீசி எறியப்பட்ட சடலங்கள் மீட்டு எடுக்கப்பட்டன. சுகார்த்தோ தனிப்பட்ட முறையில் இந்த நடவடிக்கையை மேற்பார்வையிட்டு, மேற்கொண்டார்.[4]

புதிய ஒழுங்கு எனப்படுகின்ற நியூ ஆர்டர் ஆட்சியின் போது, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1 ஆம் நாளன்று ஜனாதிபதி மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொள்ளும் விழா நடைபெற்றது.[3] நியூ ஆர்டர் என்பது இந்தோனேசியாவின் இரண்டாவது ஜனாதிபதியான சுகார்த்தாவால் உருவாக்கப்பட்ட ஒரு சொல்லாகும். அவர் 1966ஆம் ஆண்டில் பதவிக்கு வந்தபோது இந்தச் சொல்லைப் பயன்படுத்த ஆரம்பித்தார். தனக்கு முன்பு ஆட்சி செய்தவரிடமிருந்து தன்னை வேறுபடுத்திக் காண்பதற்காக இந்தச் சொல்லை அவர்ம பயன்படுத்தினார். இவருக்கு முன்பு இருந்தவர் சுகர்னோ ஆவார். அவருடைய ஆட்சி அப்போது ஓல்டு ஆர்டர் அல்லது பழைய ஒழுங்கு எனப்பட்டது. நியூ ஆர்டர் என்ற சொல்லாடலானது சுகார்த்தாவின் ஆட்சிக் காலத்தைக் குறிப்பிட்டுச் சொல்வதற்காக அண்மைக் காலமாக பயன்படுத்தப் படுகின்ற சொல்லாக மாற்றம் பெற ஆரம்பித்தது.

நினைவுச்சின்னம் மற்றும் அருங்காட்சியகங்கள்[தொகு]

புதிய ஒழுங்கு ஆட்சியானது ஒரு பெரிய நினைவுச்சின்னத்தை கட்டியது. அதனை 1969 ஆம் ஆண்டில் திறந்து வைத்தது. அதற்கு "புனித பஞ்சசிலா நினைவுச்சின்னம்" என்று பெயர் சூட்டப்பட்டது. இது முழு அளவிலான வெண்கல சிலைகளைக் கொண்டு அமைந்திருந்தது. அதில் காணப்படுவோரும் அவர்களின் பதவியின் பெயரும் பின்வருமாறு அமையும்: (இடமிருந்து வலம்)

பணி நிலை பெயர்
பிரிகேடியர் ஜெனரல் சுடோயோ சிஸ்வோமிஹார்ஜோ
பிரிகேடியர் ஜெனரல் டொனால்ட் இசாகஸ் பஞ்சைதான்
மேஜர் ஜெனரல் ஆர். சுப்ராப்டோ
இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் அஹ்மத் யானி (கிணறுக்கு நேராக நின்றபடி கிணற்றைக் காண்பித்த நிலை)
மேஜர் ஜெனரல் எம்.டி ஹரியோனோ
மேஜர் ஜெனரல் சிஸ்வாண்டோ பர்மன்
முதல் லெப்டினன்ட் பியர் டான்டியன் (மேடையில் நின்ற நிலை)

அவர்களுக்குப் பின்னால் ஒரு பெரிய வெண்கல ஒரு 17 மீ உயரமுள்ள கருடன் உருவம் அமைக்கப்பட்டுள்ளது. இது இந்தோனேஷியாவின் தேசத்தின் சின்னமாகும்.[5] மேடையின் முன்புறம் ஒரு வெண்கலத் தகட்டால் மூடப்பட்டுள்ளது. அதில்இந்தோனேசிய சுதந்திரக் காலம் முதற்கொண்டு இந்தோனேசிய கம்யூனிஸ்ட் கட்சியின் (பி.கே.ஐ) நடவடிக்கைகளைப் பற்றிய அலுவல்பூர்வ கருத்து அதில் பதியப்பட்டுள்ளது.[3]

அவ்விடத்திற்கு அருகிலேயே "பி.கே.ஐ தேசத்துரோக அருங்காட்சியகம்" எனப்படுகின்ற அருங்காட்சியகம் உள்ளது, இது 1990 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட அருங்காட்சியகம் ஆகும்.[3] பி.கே.ஐ. செய்ததாகக் கூறப்படும் செயல்களை சித்தரிக்கின்ற 34 டியோராமாக்கள் அந்த அருங்காட்சியகத்தில் உள்ளன. 1981 அக்டோபர் 1 ஆம் நாளன்று அப்போதைய ஜனாதிபதி சுஹார்ட்டோ அவர்களால் திறக்கப்பட்ட ஒரு "புனித பஞ்சசிலா அருங்காட்சியகம்" அங்கு உள்ளது, ஆட்சி கவிழ்ப்பு முயற்சிக்கு முன்னும் பின்னும் நிகழ்வுகளின் 9 டியோராமாக்கள் அங்கு உள்ளன., கிணற்றிலிருந்து உடல்களை மீட்டெடுக்கும் போது பயன்படுத்தப்பட்டப் பொருள்கள் அங்கு உள்ளன. மேலும் ஒரு தியேட்டர் மற்றும் புகைப்படங்களின் கண்காட்சி ஆகியவை அங்கு காணப்படுகின்றன.

உடல்கள் வீசப்பட்ட கிணறு தற்போது ஒரு பெவிலியன் மூலம் பாதுகாக்கப்படுகிறது. ஒரு சிறிய தகடு பின்வருமாறு: " பஞ்சசிலாவின் தூய்மையை நிலைநிறுத்துவதற்கான எங்கள் போராட்டத்தின் அபிலாஷைகளை வெறுமனே இந்த கிணற்றில் புதைப்பதன் மூலம் தோற்றுவிடபட முடியாது " லுபாங் புவாயா 1 அக்டோபர் 1965 ".[5]

குறிப்புகள்[தொகு]

  1. Sundhaussen (1982)
  2. Hughes (2002)
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 Roosa (2007)
  4. Sekretariat Negara Republik Indonesia (1975)
  5. 5.0 5.1 "Guidebook (undated)
"https://ta.wikipedia.org/w/index.php?title=லுபாங்_புவாயா&oldid=3765937" இலிருந்து மீள்விக்கப்பட்டது