உள்ளடக்கத்துக்குச் செல்

லீ மெங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லீ மெங்
Lee Meng
1951-இல் லீ மெங்
பிறப்பு1926; லீ தென் தாய் (Lee Ten Tai)
குவாங்சௌ, சீனா
இறப்பு2012; குவாங்சௌ குவாங்டொங், சீனா
அரசியல் கட்சிமலாயா பொதுவுடைமை கட்சி
அரசியல் இயக்கம்மலாயா மக்களின் சப்பானிய எதிர்ப்பு இராணுவம்
(1942–1945)
மலாயா தேசிய விடுதலை இராணுவம்
(1948–1952)
குற்றச்செயல்சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருத்தல்
Criminal penaltyமரண தண்டனை, பின்னர் ஆயுள் தண்டனை
Criminal status1964-இல் சீனாவிற்கு அனுப்பப்ட்டார்
வாழ்க்கைத்
துணை
சென் தியென்
(தி. 1965; இற. 1990)

லீ மெங் (மலாய்; ஆங்கிலம்: Lee Meng சீனம்: 李明) (1926–2012); என்பவர் மலேசிய பொதுவுடைமை புரட்சியாளர்; மலாயா பொதுவுடைமை கட்சியின் (Communist Party of Malaya) (CPM) முன்னணி உறுப்பினர்;[1] மலாயா மக்களின் சப்பானிய எதிர்ப்பு இராணுவத்தில் (Malayan People's Anti-Japanese Army) (MPAJA), மலாயாவில் சப்பானிய ஆக்கிரமிப்பிற்கு எதிராக கொரில்லா போர்களில்[2] பங்கேற்றவர் ஆவார்.[3]

1948-ஆம் ஆண்டு மலாயா அவசரகாலத்தின் போது, பிரித்தானிய மலாயா ஆட்சிக்கு எதிராகப் போராடுவதற்காக மலாயா தேசிய விடுதலை இராணுவப் படையில் இணைந்த இவர்; உள்ளூர்ப் பொதுவுடைமை இயக்கத்தில் மிகவும் திறமையான உறுப்பினர்களில் ஒருவராக அறியப்பட்டார்; பேராக் மாநிலத்தில் கெப்பாயாங் கும்பல் (Kepayang Gang) எனும் இரகசியக் கும்பலின் தலைவராகவும் செயல்பட்டார்.[4][3]

இரக்கமற்ற பொதுவுடைமைத் தலைவர்களில் ஒருவராக அறிப்படும் லீ மெங்கை பிரித்தானிய மலாயா அதிகாரிகள் கைது செய்து மரணதண்டனை விதித்தனர். இருப்பினும் பேராக் சுல்தான் அவர்களின் தலையீட்டினால், மரணதண்டனை நிறுத்தப்பட்டு; 11 ஆண்டுகள் சிறைத் தண்டனைக்குப் பின்னர், அவர் சீனாவிற்கு நாடுகடத்தப்பட்டார்.[4][2]

மலேசியப் பெண்களின் வரலாற்றில் தனி ஓர் இடத்தைப் பெற்ற இவர், தம்முடைய 86-ஆவது வயதில் சீனா, குவாங்டொங், குவாங்சௌ நகரில் காலமானார். லீ மெங் ஓர் அர்ப்பணிப்பாளர், சுறுசுறுப்பானவர் மற்றும் துணிச்சலான பெண்மணி; இருப்பினும் செயல்பாட்டுப் பாணியில் பொறுப்பற்றவர் என்று மலேசிய பொதுவுடைமை கட்சியின் தலைவர் சின் பெங், கருத்து தெரிவித்துள்ளார்.[4]

வாழ்க்கை வரலாறு

[தொகு]
ஜொகூர் பாருவில், 1945-ஆம் ஆண்டில் மலாயா மக்களின் சப்பானிய எதிர்ப்பு இராணுவத்தின் 4-ஆவது படைப்பிரிவு
1945-ஆம் ஆண்டு மலாயா மக்களின் சப்பானிய எதிர்ப்பு இராணுவத்தின் 4-ஆவது படைப்பிரிவை பிரித்தானிய தளபதி மெக் குலி பார்வையிடுகிறார்.

இவர் 1926-ஆம் ஆண்டு சீனாவின் குவாங்சௌ நகரில், லீ தென் தாய் ஆங்கிலம்: Lee Ten Tai; சீனம்: 李天泰) என்ற பெயரில் பிறந்தார். ஐந்து வயதில் தன்னுடைய குடும்பத்துடன் பேராக், ஈப்போவுக்கு குடிபெயர்ந்தார்.[5]

1945 செப்டம்பர் 12-ஆம் தேதி, மலாயாவில் சப்பானியர்கள் சரணடைந்தனர்; இதன் தொடர்ச்சியாக பிரித்தானிய மலாயாவில் இராணுவ நிருவாகம் நிறுவப்பட்டது. அந்த வேளையில் லீ மெங்; பேராக், அன்சன் விரிகுடாவில் (இன்றைய தெலுக் இந்தான்) நகரில் உள்ள ஒரு சீனப் பள்ளியில் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார்.[5][2] 1942-ஆம் ஆண்டு, அவருடைய ​​16-ஆவது வயதில், ஒரு பள்ளி ஆசிரியரின் மூலமாக மலாயா பொதுவுடைமை கட்சியில் (CPM) சேர்ந்தார்.

அந்தக் கட்டத்தில் லீ மெங்கின் தந்தையார் வேலை இல்லாமல் இருந்தார். மேலும் அவர், லீ மெங்கின் மாமா மற்றும் அத்தையுடன் வசித்து வந்தார். பின்னர் 1950-ஆம் ஆண்டு, லீ மெங்கின் தாயார், பொதுவுடைமை நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காகக் கைது செய்யப்பட்டு பிரித்தானிய காலனிய அதிகாரிகளால் சீனாவிற்கு நாடு கடத்தப்பட்டார்.[5][4]

ஈப்போ இரகசிய நடவடிக்கைகள்

[தொகு]

சப்பானியர்கள் பிரித்தானிய மலாயாவை ஆட்சி செய்த போது, ​​ஈப்போவில் மலாயா பொதுவுடைமை கட்சியின் இரகசிய குழுவிற்கு லீ மெங் தலைமை தாங்கினார். அந்த நேரத்தில் அவர் ஒரு சூழ்ச்சித் திறன் கொண்ட போராளி என்றும்; சதித்திட்ட அமைப்பாளர் என்றும் சிறப்புப் பெயர்களைக் கொண்டிருந்தார். மேலும் ஈப்போவில் மலாயா பொதுவுடைமை கட்சியின் மிகவும் கொடூரமான உறுப்பினர்களில் ஒருவராகவும் அறியப்பட்டார்.[6]

அவர் பொறுப்பு வகித்த காலத்தில், மலாயா பொதுவுடைமை கட்சியின் மத்திய குழு தகவல் தொடர்பு பதவிகளை, உயர் இரகசியப் பொதுவுடைமைத் தகவல் தொடர்பு வலையமைப்புகளுடன் ஒருங்கிணைத்தார். இந்த வலையமைப்புகள் பகாங், சிலாங்கூர், பினாங்கு போன்ற மாநிலங்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டன. இதையும் தாண்டிய நிலையில், தொலைவில் இருந்த சிங்கப்பூருடனும் தொடர்புகளைக் கொண்டிருந்தன.[6]

லீ மெங்கின் ஆதரவாளர்களில் பெரும்பாலோர் இளம் மற்றும் வயதான பெண்கள் ஆவார்கள். லீ மெங் இரக்கமற்றவராகக் கருதப்பட்டாலும், பேராக்கில் உயர் பதவியில் இருந்த பொதுவுடைமை உறுப்பினர்களின் கர்ப்பிணி மனைவிகளுக்கு உதவிகள் செய்துள்ளார். தேர்ந்தெடுக்கப்பட்ட மலாயா பொதுவுடைமை கட்சியின் உறவினர்கள் வீடுகளில் தங்குமிடங்க்ளை வழங்கி உதவிகள் செய்துள்ளார்.[4][6]

இரகசிய நடவடிக்கைகள்

[தொகு]

மலாயா அவசரகாலத்தின் போது, ​​மலாயா நகரங்களின் பல முக்கிய பொதுவுடைமை இராணுவப் பிரிவுகள் லீ மெங்கின் கட்டுப்பாட்டில் இருந்தன. அத்துடன் கெப்பாயாங் கும்பல் மற்றும் சிறப்பு நடமாடும் பிரிவு (Special Mobile Squad) போன்ற இராணுவப் பிரிவுகளும் அவருடைய கட்டுப்பாட்டில்தான் இருந்தன. 1948 முதல் 1951 வரை நடத்தப்பட்ட பல படுகொலைகள் மற்றும் கையெறி குண்டுத் தாக்குதல்களுக்கு சிறப்பு நடமாடும் பிரிவுதான் மூலகாரணமாக இருந்தது.[4][2]

மலாயா அவசரகாலத்தின் போது நடந்த எந்தவொரு தாக்குதல்களிலும் லீயின் ஈடுபாட்டை மலேசிய காவல்துறையின் சிறப்புப் பிரிவால் (Malaysian Special Branch) உறுதிபடுத்த முடியவில்லை. இருந்தாலும் கூட பெரும்பாலான இராணுவப் பிரிவுகள் அவருடைய கட்டுப்பாட்டில் இருந்தன; மேலும் அவர் முக்கியமான பொறுப்புகளையும் வகித்தார்.[7][3] பிரித்தானிய மலாயா அரசாங்கத்துடன் ஒத்துழைத்த பொதுமக்களுக்கு எதிராக மரணதண்டனைகளை நிறைவேற்ற லீ மெங் உத்தரவிட்டார் என்று சிறைபிடிக்கப்பட்ட அல்லது சரணடைந்த பொதுவுடைமை கெரில்லாக்கள் பலர், லீ மெங்கை அடையாளம் காட்டி உள்ளனர். அந்த மரணதண்டனைகள் பொதுவுடைமை சிறப்பு சேவைப் படைகளால் நிறைவேற்றப்பட்டன.[3]

மரணதண்டனை

[தொகு]

சூலை 1952-இல், பேராக், ஈப்போவில் மலேசிய காவல்துறையின் சிறப்புப் பிரிவால் லீ மெங் கைது செய்யப்பட்டார். கைக்குண்டு வைத்திருந்ததற்காக அவர் மீது வழக்கு தொடரப்பட்டு, பல கொலைகளுக்கு கட்டளை பிறப்பித்ததற்காக அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது.[8][9][7] பெப்ரவரி 1953-இல், லீக்கு மன்னிப்பு வழங்குமாறு பேராக் சுல்தானுக்கு, 60 பேர் கொண்ட மலாயா நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு கோரிக்கை மனுவில் கையெழுத்திட்டனர்.[10] அதே ஆண்டில், அங்கேரிய மக்கள் குடியரசு அரசாங்கம், பிரித்தானியரான எட்கர் சாண்டர்ஸ் (Edgar Sanders) என்பவரை லீ மெங்கிற்குப் பதிலாக மாற்ற முன்வந்தது. சந்தேகத்திற்குரிய உளவு பார்த்ததாக எட்கர் சாண்டர்ஸ் மீது புடாபெஸ்டில் ஏற்கனவே குற்றம் சாட்டப்பட்டு இருந்தது.[1][3][7][11]


அந்தக் கட்டத்தில் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமராகப் பதவி வகித்த வின்ஸ்டன் சர்ச்சில் தொடக்கத்தில் மறுத்துவிட்டார். ஆனால், பேராக் சுல்தான் அவர்களின் வேண்டுகோளைப்ப் பின்பற்றி, வின்ஸ்டன் சர்ச்சில் மன்னிப்பு வழங்க ஒப்புக்கொண்டார்.[7] பிரித்தானிய வம்சாவளியைச் சேர்ந்த மலாயா நாட்டுப் பெண் வழக்கறிஞரும்; அரசியல் தூதுவருமான லிம் பைக் கான் (P. G. Lim) என்பவர் அந்த மன்னிப்புச் செயல்பாட்டில் முக்கிய பங்கு வகித்தார்.[12] லீ மெங்கின் தண்டனை குறைக்கப்பட்டது. பின்னர் அவர் 1964-ஆம் ஆண்டில் சீன மக்கள் குடியரசிற்கு நாடுகடத்தப்பட்டார். அதற்கு முன்பு அவர் தைப்பிங் சிறையில் 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்தார்.[13][14]

இறப்பு

[தொகு]

சீனாவுக்கு நாடுகடத்தப்பட்ட பிறகு, லீ மெங் தன்னுடைய தாயாருடன் மீண்டும் இணைந்தார். அவரின் தாயார் இறக்கும் வரையிலும் அங்கேயே இருந்தார்.[15] 1965-ஆம் ஆண்டு, லீ மெங்கிற்கு முன்னர் நாடுகடத்தப்பட்ட மலாயா பொதுவுடைமை கட்சியின் தலைவர்களின் ஒருவரான சென் தியென் (Chen Tien) என்பவரை மணந்தார். சின் பெங்கின் மிகவும் நம்பகமான உதவியாளர்களில் ஒருவராக சென் தியென் பதவி வகித்தவர் ஆவார்.[3]

திருமணத்திற்குப் பின்னர் இருவரும் தெற்கு தாய்லாந்திற்குச் செல்லத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் செப்டம்பர் 3, 1990 அன்று, சென் தியென் நுரையீரல் புற்றுநோயால் இறந்தார்.[2] ஆகத்து 2007-இல், லீ மெங் தன்னுடைய விசாரணை வழக்கறிஞர்களில் ஒருவரான லிம் பைக் கான் என்பவரைச் சந்திக்க மலேசியாவிற்குப் பயணம் செய்தார்.[4][5] சீனாவின் குவாங்சௌ நாகரில், சூன் 2, 2012-இல் தன் 86-ஆவது வயதில் காலமானார்.[4][2]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "COMMUNISTS: Cold War Barter". Time (magazine)]]. 9 March 1953. Retrieved 3 October 2019.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 "Lee Meng: The Malayan Mata Hari - The fascinating story of Lee Meng, the Malayan Communist Party female agent who headed its courier network for a brief period in 1952". Rejected Princesses. Retrieved 22 November 2025.
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 Comber, Leon (2008). Malaya's Secret Police 1945-60: The Role of the Special Branch in the Malayan Emergency. Institute of Southeast Asian Studies. pp. 226–234. ISBN 978-981-230-829-0.
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 4.6 4.7 Salma Nasution, Khoo; Lubis, Abdur-Razzaq (2005). Kinta Valley: Pioneering Malaysia's Modern Development. Areca Books. p. 313. ISBN 978-983-42113-0-1.
  5. 5.0 5.1 5.2 5.3 "Lee Meng was born in Guangzhou, China, in 1926 and moved to Ipoh at the age of five. She was believed to have worked as a Chinese school teacher in Teluk Anson (now known as Teluk Intan), Perak, during the British Military Administration period" (in ஆங்கிலம்). Retrieved 22 November 2025.
  6. 6.0 6.1 6.2 "Lee Meng had a reputation as a cunning fighter; organiser; also "one of the most ruthless and capable members of the Min Yuen" in Ipoh". National Library Board, Singapore. Retrieved 22 November 2025.
  7. 7.0 7.1 7.2 7.3 Burleigh, Michael (11 April 2013). Small Wars, Far Away Places: The Genesis of the Modern World 1945–65. Pan Macmillan. p. 193. ISBN 978-0-230-77150-5.
  8. "Pretty Girl Gave Murder Orders Court Told". The Straits Times. 28 August 1952. p. 1. Retrieved 3 October 2019 – via National Library Board, Singapore.
  9. "Representations about the sentence of death passed on Lee Ten Tai, or Lee Meng, by a Malayan court for unlawful possession of arms: report of commuting of death sentence (CO 1022/6)". The National Archives (United Kingdom). 1953. Retrieved 3 October 2019.
  10. "COMET Will Bring Mercy Appeal". The Straits Times. 20 February 1953. p. 1. Retrieved 3 October 2019 – via National Library Board, Singapore.
  11. Bátonyi, Gábor (2015). "Diplomacy by Show Trial: The Espionage Case of Edgar Sanders and British-Hungarian Relations, 1949–53". The Slavonic and East European Review 93 (4): 692–731. doi:10.5699/slaveasteurorev2.93.4.0692. 
  12. Rosenblum, Mort (22 July 1971). "Malaysia names woman envoy to United Nations". Eugene Register-Guard. Retrieved 3 October 2019.
  13. "Lee Ten Tai (Trial)". Hansard. 19 November 1952. Retrieved 3 October 2019.
  14. Ascherson, Neal (23 July 2009). "Wedgism". London Review of Books 31 (14). https://www.lrb.co.uk/v31/n14/neal-ascherson/wedgism. பார்த்த நாள்: 3 October 2019. 
  15. Peng, Chin (2003). My Side of History. Media Masters. p. 502. ISBN 978-981-04-8693-8.

நூல்கள்

[தொகு]
  • O'Ballance, Edgar (1966). Malaya: The Communist Insurgent War, 1948–1960. Hamden, Connecticut: Archon Books.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=லீ_மெங்&oldid=4422152" இலிருந்து மீள்விக்கப்பட்டது