லிவிங் ஸ்மைல் வித்யா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லிவிங் ஸ்மைல் வித்யா
பிறப்பு1982
திருச்சி
இருப்பிடம்சென்னை, தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியர்
மற்ற பெயர்கள்வித்யா
கல்விமுதுகலைப் பட்டம் (மொழியியல்)
பணிதிரைத்துறை
வலைத்தளம்
livingsmile.blogspot.in

லிவிங் ஸ்மைல் வித்யா (Living Smile Vidhya) ஒரு திருநங்கை ஆவார். தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர், திருநங்கைகளின் மேம்பாட்டிற்கான பணிகளில் ஈடுபட்டு வருபவர். கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் திருநங்கைகளுக்கு மூன்று சதவீதம் இடஒதுக்கீடு வேண்டும் என வழக்குப் பதிவுசெய்த திருநங்கைகளுள் இவரும் ஒருவர்[1]. தனது வாழ்க்கை அனுபவங்களை நான், வித்யா எனும் தனது நூலில் பதிவு செய்துள்ளார். இவர் திருநங்கைகளின் வாழ்க்கை பற்றிய ’கருவறைப் பூக்கள்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

1982 ஆம் ஆண்டு திருச்சியில் தன் பெற்றோருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தார். இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் சரவணன். ஆண்பிள்ளை என்பதால் இரு சகோதரிகளுக்கும் கிடைக்காத கல்வியானது தனக்குப் பெற்றோரால் கண்டிப்புடன் அளிக்கப்பட்டதயும், சிறுவயதிலேயே தனது தாய், மற்றும் சகோதரிகள் போல இருப்பதில் தனக்கு விருப்பம் இருந்ததையும் நான், வித்யா எனும் தனது நூலில் கூறியுள்ளார். தனது நிலை குறித்த மனக் குழப்பங்களுக்கும் போராட்டங்களுக்கும் இடையே தஞ்சாவூர் பல்கலைக்கழகத்தில் மொழியியலில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.

தனது மனப் போராட்டங்களுக்குத் தீர்வுகாணும் பொருட்டு, வீட்டைவிட்டு வெளியேறி சென்னைக்கும், பின் அங்கிருந்து புனேக்கும் சென்றார். அங்கு வித்யா என்ற பெயரில் தன்னை ஒத்தவர்களுடன் சேர்ந்து வாழ்ந்த அவர் ஒரு காலகட்டத்தில் பால்மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். பிறகு புனேயிலிருந்து தமிழகத்திற்குத் திரும்பிவந்து சிறிதுகாலம் ஒரு கிராம வங்கியில் வேலை பார்த்தார்.

பெயர் மாற்றம்[தொகு]

சரவணன் என்ற பெயரை ’லிவிங் ஸ்மைல் வித்யா’ என சட்டப்படி மாற்ற விண்ணப்பித்து நீண்டநாட்கள் போராட்டத்திற்குப் பின் அரசிதழில் புதுப்பெயரைப் பதிவு செய்வதில் வெற்றிபெற்றார்[1][2]. ஒலிக்கும் போது மகிழ்வைத் தரவேண்டும் என்பதற்காகத்தான் இப்பெயரைத் தேர்ந்தெடுத்ததாகக் கூறுகிறார் இவர்[3]

கலைத்துறையில்[தொகு]

அவரது விருப்பம் நாடகம் மற்றும் திரைத்துறையாக இருந்ததால் வங்கி வேலையை விட்டுவிட்டு மீண்டும் சென்னை சென்றார். கோலிவுட்டில் துணை இயக்குனராகப் பணியாற்றிய இவர் நாடங்களிலும் நடித்துள்ளார்[3]. திருநங்கைகளின் வாழ்க்கை நிகழ்வுகளைப் பிரதிபலிக்கும் கருவறைப் பூக்கள் என்ற தமிழ்த் திரைப்படத்தில் நடித்துள்ளார்.[4][5] இவர் அஃறிணைகள் என்ற ஆவணப்படத்தில் நடித்துள்ளார்[6].

படைப்பு[தொகு]

தனது வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக எழுதியிருக்கிறார். ஆங்கிலம் மற்றும் சில இந்திய மொழிகளில் வெளிவந்த இந்நூல் தமிழிலில் கிழக்குப் பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது. இவர் கவிதைகளும் எழுதியுள்ளார்.[7]

விருதும் உதவித்தொகையும்[தொகு]

நாடகங்களில் இவரது நடிப்புத் திறமைக்காக இவருக்கு பிரித்தானிய கவுன்சிலின் விருதும், சார்லஸ் வாலஸ் இந்திய அறக்கட்டளையின் உதவித்தொகையும் கிடைத்துள்ளன. இதன்மூலம் இவருக்கு, ஜனவரி, 2014 முதல் லண்டன் பன்னாட்டு நடிப்புக் கலைப்பள்ளியில் (London International School of Performing Arts) ஆறுமாதகாலப் பயிற்சியைப் பெறும் வாய்ப்புக் கிடைத்துள்ளது.[1]

நாடக துறையில்[தொகு]

தற்போது பன்மை எனும் நாடகக் குழுவினை நடத்தி வருகிறார். இதில் திருநம்பியான ஜீ இம்மான் செம்மலர் மற்றும் ஏஞ்சல் கிளாடி ஆகியோருடன் இணைந்து குழுவினை நடத்தி வருகிறார். இந்த குழுவின் மூலம் Colour of Trans 2.0 எனும் நாடகத்தை நடத்திவருகிறார்கள். இந்த நாடகமானது சென்னை, பெங்களூரு, திருவனந்தபுரம், கோழிக்கோடு, திருச்சூர் மற்றும் ஹைதராபாத் என பல ஊர்களில் நடத்தப்பட்டு வருகிறது[8].

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Transcending odds she is set to study theatre in london". The Hindu. http://www.thehindu.com/news/national/tamil-nadu/transcending-odds-she-is-set-to-study-theatre-in-london/article5463278.ece. பார்த்த நாள்: டிசம்பர் 16, 2013. 
  2. [1]
  3. 3.0 3.1 "Vidya scripts her path". The Hindu. http://www.thehindu.com/news/cities/bangalore/vidya-scripts-her-path/article2517305.ece. பார்த்த நாள்: அக்டோபர் 7, 2011. 
  4. http://www.nthwall.com/ta/movie/Karuvarai-Pookkal-2011/8321901067[தொடர்பிழந்த இணைப்பு]
  5. http://www.youtube.com/watch?v=iLdcxAYePfc
  6. http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=11261:2010-11-03-10-19-50&catid=1195:10&Itemid=153
  7. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-01-12. பார்க்கப்பட்ட நாள் 2013-12-17.
  8. [http://www.thehindu.com/features/metroplus/society/color-of-trans-20-by-panmai-theatre-group/article7470275.ece Color of Trans 2.0 by Panmai theatre group தி இந்து ஆங்கில நாளிதழ், ஜூலை 27, 2015]
"https://ta.wikipedia.org/w/index.php?title=லிவிங்_ஸ்மைல்_வித்யா&oldid=3925659" இலிருந்து மீள்விக்கப்பட்டது