லியோனித் இரகோசொவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லியோனித் இரகோசொவ்
Леонид Иванович Рогозов
பிறப்பு(1934-03-14)மார்ச்சு 14, 1934
சிட்டா ஒப்லாஸ்து, சோவியத் ஒன்றியம்
இறப்புசெப்டம்பர் 21, 2000(2000-09-21) (அகவை 66)
சென் பீட்டர்ஸ்பேர்க், உருசியா
தேசியம்சோவியத் ஒன்றியம், உருசியா
பணிமருத்துவர்
அறியப்படுவதுகுடல் முளை அறுவை சிகிச்சையை தனக்குத்தானே செய்துகொண்டவர்.

லியோனித் இவானொவிச் இரகோசொவ் (ஆங்கிலம்: Leonid Ivanovich Rogozov, உருசியம்: Леонид Иванович Рогозов; மார்ச் 14, 1934 – செப்டம்பர் 21, 2000) என்பவர் ஒரு உருசிய பொது மருத்துவரும், அறுவை மருத்துவரும் ஆவர். இவர் 1960 முதல் 1961 வரை அண்டார்க்டிக்கா பகுதியில் கடலிலிருந்து 75 கிமீ தூரத்தில் அமைந்திருந்த நொவொலசரேஸ்கயா என்ற உருசிய ஆய்வுகூடத்தில் மருத்துவராகப் பணியாற்றினார். அப்போது அவர் குடல்வாலழற்சி நோயினால் அவதிப்பட்டார். அப்பகுதியிலிருந்து மருத்துவமனை செல்ல போதிய வசதி இல்லாததால் அவரே தனக்கு அறுவை சிகிச்சை செய்துகொண்டார்.[1][2]

இளமை[தொகு]

லியோனிது ரகோசொவ் கிழக்கு சைபீரியாவில் சிட்டா வட்டத்தில் உள்ள ஒரு ஒதுக்குப்புறக் கிராமத்தில் பிறந்தார். இக்கிராமம் உருசியாவின் சீனா மற்றும் மங்கோலியாவிற்கும்]] இடையேயான எல்லைப்பகுதியில் அமைந்துள்ள மாஞ்சூலி என்ற ஊருக்கு அருகில் உள்ளது. இவரது தந்தை 1943 ஆம் ஆண்டில் இரண்டாம் உலகப் போரின் போது இறந்தார். 1953 ஆம் ஆண்டில் கிராஸ்னயார்ஸ்க்கில் மினூசின்ஸ்க் நகரில் பள்ளிப் படிப்பை முடித்துக் கொண்டு லெனின்கிராத் மருத்துவக் கல்வி நிலையத்தில் இணைந்து மருத்துவராகப் பட்டம் பெற்று 1959 ஆம் ஆண்டில் வெளியேறினார். மருத்துவராகப் பணியாற்றிய காலத்தில் அறுவை மருத்துவத்தில் சிறப்புப் பயிற்சி பெற்றார். 1960 செப்டம்பரில், தனது 26வது அகவையில், தனது பயிற்சியை இடைநிறுத்தி விட்டு சோவியத்தின் ஆறாவது அண்டார்க்டிக்க ஆய்வுகூடத்தில் மருத்துவராகப் பணியில் சேர்ந்தார்.

அண்டார்க்டிக் சேவை[தொகு]

1961ம் ஆண்டு நிறுவப்பட்ட சோவியத் நொவொலசரேஸ்கயா ஆய்வு நிலையத்தில் 1960 செப்டம்பர் முதல் 1962 அக்டோபர் வரை 13 ஆய்வாளர்களுடன் பணியாற்றினார். இவர் அண்டார்க்டிக் பகுதியில் சேவை செய்தபோது இவருக்கு அடி வயிற்றின் உட்பகுதியைச் சுற்றி இருக்கும் சவ்வின் அழற்சியின் காரணமாக வலி இருந்தது. இவர் சேவையில் இருந்த இடத்திலிருந்து மீர்னிய் நிலையம் என்ற இன்னொரு சோவியத் ஆய்வு நிலையம் 1,600 கிமீ தூரத்தில் இருந்தது. ஆகையினால் தனக்குத்தானே அறுவை சிகிச்சை செய்துகோள்ள முடிவு செய்தார். தனக்கு உதவியாக வானியல் அறிஞர், வாகன ஓட்டுனர் இருவருடன் தன்னால் பார்க்க இயலாத தன் உடற்பகுதியைப் பார்க்க கண்ணாடி ஒன்றையும் வைத்து ஏப்ரல் 30ம் தேதி அன்று இவர் குடல் வால் அறுவை சிகிச்சை செய்தார்.

அறுவை சிகிச்சைக்குப்பின் இரண்டு நாட்களில் குணமடைந்தார். அவரின் மேல் அவரே போட்ட தையல்களை 7 நாட்கள் கழித்து அகற்றினார்.[1] இவருக்கு 1961ம் ஆண்டுக்கான ’ஆர்டர் ஆஃப் த ரெட் பேனர்’ (Order of the Red Banner of Labour) என்ற விருதை சோவியத் அரசு வழங்கி சிறப்பித்தது.

இறுதிக் காலம்[தொகு]

1962ம் ஆண்டு தனது ஓய்வுக்காலங்களில் தாய்நாட்டில் மேலாண் இயக்குநராகப் பணியாற்றினார். தனது 66ம் வதில் நுரையீரல் புற்றுநோய் காரணமாக உருசியாவில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் 2000ம் ஆண்டு இறந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 L.I. Rogozov (1964). "Self-operation". Soviet Antarctic Expedition Information Bulletin: 223–224. http://corpus.leeds.ac.uk/serge/rogozov-1964.pdf. 
  2. Rogozov, V.; Bermel, N.; Rogozov, LI. (2009). "Auto-appendectomy in the Antarctic: case report.". BMJ 339: b4965. doi:10.1136/bmj.b4965. பப்மெட்:20008968. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லியோனித்_இரகோசொவ்&oldid=3227468" இலிருந்து மீள்விக்கப்பட்டது