லின் மர்குலிஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லின் மர்குலிஸ்

லின் மர்குலிஸ் (Lynn Margulis, மார்ச் 5, 1938 - நவம்பர் 22, 2011) ஒரு பரிணாம அறிவியலாளரும் பேராசிரியரும் ஆவார். தனது 14 ஆவது வயதில் பல்கலைக்கழகத்தில் நுழைந்த இப்பெண் அறிவியலாளர் அடுத்த இருபதாண்டுகளில் முக்கிய அறிவியல் பங்களிப்புகளை அளித்தவர். நுண்ணுயிரியலாளராக ஆராய்ச்சியில் ஈடுபட்ட லின் மர்குலிஸ் ‘கையா’ (Gaia) கருதுகோளின் இணை-உருவாக்குனர் ஆவார். இவருடைய முக்கியமான அறிவியல் பங்களிப்பு உயிரணுக்களுக்குள் இருக்கும் சில நுண் அமைப்புகள் (இழைமணிபோன்றவை) எப்படிப் பரிணாமத்தில் உருவாகியிருக்கும் என்பது குறித்தது. இவை மெய்க்கருவுயிரி உயிர்களின் அணுக்களுள் கூட்டாக இணைந்து வாழும் நிலைக்கருவிலி நுண்ணுயிரிகளாக தொடங்கி பின் செல்களின் உள் உறுப்பு அமைப்புகளாக மாறியிருக்கும் என இவர் கண்டறிந்தார். இது உள்-கூட்டுவாழ்வு (endo-symbiosis) என அறியப்படுகிறது. இதுவே மைட்டோகாண்ட்ரியா, க்ளோரோப்ளாஸ்ட் போன்ற அமைப்புகள் குறித்த ஏற்கப்பட்ட அறிவியல் பார்வையாக இன்று உள்ளது. 1966 இல் மர்குலிஸ் இந்த கருதுகோளை முன்வைத்த போது நிறுவன அறிவியலாளர்கள் அதை எதிர்த்தார்கள். ஆனால் 1980களில் செல்லில் உள்ள நியூக்ளியர் டி.என்.ஏயும் இழைமணி, பசுங்கனிகம் ஆகியவற்றில் உள்ள டி.என்.ஏவும் வேறுபட்டிருப்பது லின் மர்குலிஸின் கருதுகோளுக்கு சிறப்பாக வலு சேர்த்தது. ஜேம்ஸ் லவ்லாக்குடன் இணைந்து லின் மர்குலிஸ் ’கையா’ கருதுகோளை முன்வைத்தார். மிகவும் முக்கியமான சூழலியல் பார்வையாக அது இன்று விளங்குகிறது. நிலவியலில் புவியின் உருவாக்கத்திலும் அதன் செயல்பாட்டிலும் நுண்ணுயிரிகளின் பங்கு குறித்து பொதுவாக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. இப்பார்வையை மாற்ற லின்மர்குலிஸ் பாடுபட்டார். ரஷிய நிலவியலாளர் வெர்னாட்ஸ்கி உயிரி செயல்பாடுகளையும், நிலவியல் பரிணாமத்தையும் இணைத்துப் பார்க்கும் ஒரு அறிவியல் பார்வையின் முன்னோடி என்பதை மேற்கில் முதலில் கூறியவர் லின் மர்குலிசே. பல பொது அறிவியல் நூல்களை இவர் எழுதியுள்ளார். இதன் மூலம் அறிவியலை பொதுமக்களுக்கு கொண்டு சென்றார். 50 ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படும் டார்வின்-வேலஸ் பதக்கம் 2008 இல் லின்னயன் மையத்தால் இவருக்கு வழங்கப்பட்டது. 2011 நவம்பர் 22 இல் இவர் காலமானார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=லின்_மர்குலிஸ்&oldid=2896359" இலிருந்து மீள்விக்கப்பட்டது