உள்ளடக்கத்துக்குச் செல்

லலிதா நடராஜா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லலிதா
பிறப்பு(1959-08-05)ஆகத்து 5, 1959
துன்னாலை, யாழ்ப்பாணம் மாவட்டம், இலங்கை
இறப்புமே 18, 2009(2009-05-18) (அகவை 49)
முல்லைத்தீவு, இலங்கை
தேசியம்இலங்கை
மற்ற பெயர்கள்ஜனனி
சுடர்மகள்
இனம்தமிழ்
பணிபுலிகளின் மூத்த பெண் போராளி, செஞ்சோலைச் சிறுவர் இல்லப் பொறுப்பாளர்
அறியப்படுவதுதமிழ்ப் பெண் போராளி, செஞ்சோலைச் சிறுவர் இல்லப் பொறுப்பாளர்
சமயம்இந்து
வாழ்க்கைத்
துணை
இல்லை
பிள்ளைகள்இல்லை

ஜனனி என்ற இயக்கப் பெயரைக் கொண்ட லலிதா நடராஜா (05 ஓகஸ்ட் 1959 - மே 2009 ) தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த பெண் போராளி[1] ஆவார். இவர் புலிகளின் செஞ்சோலை மகளிர் இல்லத்தின் பொறுப்பாளராகப் பணியாற்றியவர்.[2] செஞ்சோலை ஆரம்பித்த நாளிலிருந்து இறுதிவரை அதற்காற்றிய நீண்ட பங்களிப்பினால்‌ இவர் விடுதலைப்புலிகள் அமைப்பின் வரலாற்றில்‌ ஒரு குறிப்பிடத்தக்கவர் ஆவார்.[3] இவர் 1984-ஆம் ஆண்டில் புலிகள் இயக்கத்தில் இணைந்து ஜனனி என்ற இயக்கப் பெயரைப் பெற்றார். இவருக்கு சுடர்மகள் என்றும் ஒரு இயக்கப் பெயர் இருந்தது.

குடும்ப விபரம்

[தொகு]

லலிதா 1959 ஓகஸ்ட் 05 அன்று துன்னாலையில் சக்கடத்தார் ஆறுமுகம் நடராஜா, மகேஸ்வரி நடராஜா இணையரின் ஐந்து பெண்குழந்தைகளில் ஐந்தாவது பெண்குழந்தையாகப் பிறந்தார். இவரது அக்கா ராஜி தில்லைநாதன் ஒரு எழுத்தாளர்.

கல்வி

[தொகு]

லலிதா நடராஜா தனது ஆரம்பக்கல்வியை வடமாராட்சி இந்து மகளிர் கல்லூரியில் ஆரம்பித்து அங்கேயே க.பொ.த உயர்தரம் வரை கற்றார். தொடர்ந்து 1981-இல் விவசாயபீடம் பட்டப்படிப்பை ஆரம்பித்தார். ஆறு மாதங்கள் செய்முறைப்பயிற்சியுடன் கூடிய கற்கைநெறியை மகா இலுப்பல்லம அநுராதபுரத்திலும் பின்னர் 1983 வரை பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் கற்றார். 1983-இல் நடைபெற்ற இனக்கலவரத்துடன் ஊர்திரும்பிய இவர், 1984-இல் இலங்கை அரசுக்கெதிரான சாகும்வரை உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டார். அதனைத் தொடர்ந்து விடுதலைப் புலிகளின் அமைப்பில் இணைந்தார்.

எழுத்துப் பணி

[தொகு]

கவிதைகள், கட்டுரைகள் என்று எழுதுவதில் ஆர்வமுள்ள இவர் 1975 இல், தனது பதினைந்தாவது வயதில் பொன் சிவகுமாரனின் முதலாவது நினைவு தினத்துக்கு மூன்று பக்கங்களில் கவிதை எழுதி ஆசிரியர்களதும் மாணவர்களதும் கவனத்தைப் பெற்றார். இதுவே இவரது குறிப்பிடத்தக்க முதலாவது கவிதையாகவும் அமைந்தது.

இவர் செஞ்சோலைக்குப் பொறுப்பாக இருந்த காலத்தில், ‘செஞ்சோலை - ஓரெண்ணக்கரு’ என்ற ஆவணத்தைத் தயாரித்து வெளியிட்டார்[3]

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைதல்

[தொகு]

1984 இல், இலங்கை, தெற்குப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தமிழ் மாணவர்கள் தமக்கு அங்கு பாதுகாப்பு இல்லையென்பதால் வடக்கில் யாழ் பல்கலைக்கழகத்திலேயே கல்வியைத் தொடரும் வசதிகளைச் செய்து தரவேண்டும் என்று இலங்கை அரசிடம் வேண்டுகோள் விடுத்தனர். இதனை இலங்கை அரசு ஏற்றுக் கொள்ளாத காரணத்தினால் மாணவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டார்கள். அதன் போது, 1 செப்டெம்பர் 1984 அன்று, ஒன்பது தெற்குப் பல்கலைக்கழகத் தமிழ் மாணவர்கள் சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்கள். அந்த ஒன்பது மாணவர்களுள் பிரபாகரனின் மனைவி மதிவதனி உட்பட லலிதா நடராஜாவும் ஒருவர் ஆவார். உண்ணாவிரதம் தொடங்கிய ஏழாவது நாள் மாணவர்கள் மிகவும் சோர்வு நிலைக்குச் சென்றிருந்தார்கள். இலங்கை இராணுவம் அவர்களைக் கைது செய்ய முயற்சித்துக் கொண்டிருந்தது. இதன் காரணமாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு அந்த மாணவர்களைப் பாதுகாப்பாக வேறு இடத்துக்கு அழைத்துச் செல்லத் தீர்மானித்தது. அதன் படி, ஏழாவது நாள் இரவு விக்டர் தலைமையிலான தமிழீழ விடுதலைப்புலிகளின் படைப் பிரிவொன்றின் பாதுகாப்புடன் மதிவதனி, ஜெயா, வினோஜா ஆகிய மாணவியருடன் லலிதா நடராஜாவும் அச்சுவேலிப் பகுதியில் அமைந்திருந்த புலிகளின் பாசறை ஒன்றிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அனைவருக்கும் உணவளிக்கப்பட்டு உண்ணாவிரதம் முடித்து வைக்கப்பட்டது. அதன் பின்னர் இவர் மற்றைய மூன்று மாணவியருடன் அன்ரன் பாலசிங்கமும் அடேல் பாலசிங்கமும் தங்கியிருந்த சென்னை திருவான்மியூர் வீட்டிற்கு படகு மூலம் அனுப்பி வைக்கப்பட்டார்.[4]

போர்க்களத்தில்

[தொகு]

ஜனனி விடுதலைப் புலிகள் அமைப்பின் பெண் போராளிகளின் முதல் தொகுதியைச் சேர்ந்தவர். இவர் ஆறு வருடங்கள் போர்க்களத்தில் தீவிரமாகப் போராடியவர்.

  • 1987 ஆம் ஆண்டு யாழ்ப்பாணக் குடாநாட்டின் வடமராட்சிப் பகுதியில் தொடண்டாமானாற்றில் இராணுவத்தால் மேற்கொள்ப்பட்ட ஒப்பரேசன் லிபரேசன் நடவடிக்கையின் போது இவரும் ஒருவராக நின்று போராடினார்.[5]
  • 1987 ஆம் ஆண்டு ஒக்டோபர் 10 இல், யாழ்ப்பாணத்திற்கு அருகில் கோப்பாயில் இந்திய அமைதிப்படைக்கு எதிரான விடுதலைப்புலிகள் அமைப்பின் படை நடவடிக்கையின்போது 15 பேர் கொண்ட மகளிர் படைப்பிரிவில் இவரும் ஒருவராக நின்று போராடினார். இந்த மோதலின் போது இவரது சக போராளி மாலதி இறந்தார். [5]

செஞ்சோலை

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=லலிதா_நடராஜா&oldid=4260317" இலிருந்து மீள்விக்கப்பட்டது