உள்ளடக்கத்துக்குச் செல்

லதா வால்போல

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

லதா வால்போல (Latha Walpola) என்ற தனது மேடைப் பெயர் மூலம் பரவலாக அறியப்பட்ட தேசமான்ய கலாசூரி மதரகே ரீட்டா ஜெனிவியேவ் பெர்னாண்டோ (11 நவம்பர் 1934 – 27 திசம்பர் 2025), ஓர் இலங்கை பாடகி ஆவார்.[1][2] இலங்கையின் நைட்டிங்கேல் (இலங்கையின் குயில்) என்று அன்புடன் அழைக்கப்பட்ட வால்போல,[3][4] பின்னணிப் பாடகியாக எட்டு தசாப்தங்கள் நீடித்தார். இவர் சுமார் 600 திரைப்படங்களுக்காக 6,750 பாடல்களைப் பாடியுள்ளார்.[5][6][7][8]

ஆரம்பகால வாழ்க்கை

[தொகு]

இவர் 1934 நவம்பர் 11 அன்று பம்பலப்பிட்டியவில் ரீட்டா ஜெனிவியேவ் பெர்னாண்டோ என்ற பெயரில் பிறந்தார். ஐந்து உடன்பிறப்புகளைக் கொண்ட குடும்பத்தில் இவர் மூன்றாவது குழந்தையாகப் பிறந்தார்.[9][10][11] இவரது தந்தை ஜோசப் லினஸ் பெர்னாண்டோ கார்கில்ஸ் கடையில் பணிபுரிந்தார். இவரது தாயார் எலிசபெத் முரியல், ஒரு கான்வென்ட் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றினார். அவரே ரீட்டாவை ஒரு பாடகியாக மாற ஊக்குவித்தார்.[12][13] ஆரம்ப ஆண்டுகளில் பம்பலப்பிட்டியவில் உள்ள தவலகிரியா என்ற வீட்டில் வசித்து வந்த இவர், பின்னர் தனது தந்தையின் சகோதரர் ஒருவர் அந்த வீட்டை 35,000 ரூபாய்க்கு விற்ற பிறகு மவுண்ட் லாவினியாவிற்குக் குடிபெயர்ந்தார். இவர் தெஹிவளை-மவுண்ட் லாவினியாவில் உள்ள புனித அந்தோனியார் கான்வென்ட் பள்ளியில் கல்வி பயின்றார். அங்கு அவர் தேவாலயப் பாடகர் குழுவை வழிநடத்தினார். ருக்மணி தேவி, சித்ரா சோமபால ஆகியோரின் தீவிர ரசிகையாக இருந்த ரீட்டா, பல்வேறு பள்ளி இசை நிகழ்ச்சிகளில் அவர்களின் பிரபலமான பாடல்களைப் பாடியுள்ளார்.[14][15]

கலைப்பயணம்

[தொகு]

தனது 12-வது வயதில்,[8] 1946-ஆம் ஆண்டில், அண்டை வீட்டாரான வில்மன் சில்வாவின் வழிகாட்டுதலின் கீழ் ரேடியோ சிலோன் வானொலியின் பாடகர் குழுவில் இணைந்தார். வில்மனுடன் இணைந்து, வானொலி நாடக ஆசிரியர், இசைக்கலைஞரான சி. ஏ. பொன்சேகாவை இவர் சந்தித்தார்.[14] இவரது பாடும் திறனைக் கண்ட பொன்சேகா, பாடகரான தனது மகன் சி. டி. பொன்சேகாவுடன் இணைந்து தனது சரள கீ நிகழ்ச்சியில் பாடுமாறு அவரை ஊக்குவித்தார்.[1] தனது 14-ஆவது வயதில், சி. டி. பொன்சேகா மற்றும் இவரது சகோதரர் எர்வின் பொன்சேகா ஆகியோருடன் இணைந்து மாதமொருமுறை வானொலி நிகழ்ச்சிக்காகப் பாடத் தொடங்கினார். மேலும் 1947-இல் அதே நிகழ்ச்சிக்கான குழுப் பாடகர் அணியிலும் இணையும் வாய்ப்பைப் பெற்றார்.[7] இக்காலகட்டத்தில் வயலின் கலைஞர் வின்சென்ட் டி அல்விஸைச் சந்தித்தார்.[8] இவரே பின்னர் சுசில் பிரேமரத்ன, சி. டி. பெர்னாண்டோ, பி. எல். ஏ. சோமபால போன்ற பிரபல பாடகர்களுக்கு இவரை அறிமுகப்படுத்தினார். 1947-இல், சரத் விமலவீராவின் வரிகள் மற்றும் ரேடியோ சிலோன் நிலையத்தின் வயலின் கலைஞரான வின்சென்ட் டி அல்விஸின் இசையமைப்பில், கண்டுலு தெனெதே வெஹெனா என்ற தனது முதல் தனிப்பாடலை வால்போல பாடினார். பின்னர் சுசில் பிரேமரத்னவின் சரள கீ நிகழ்ச்சிக்காகப் பாடியதுடன், அவருடன் இணைந்து ரா ரூசே அந்தன லேசே, ரன்வான் ரன் கரலின் போன்ற பிரபலமான இருவர் பாடும் பாடல்களையும் பாடினார்.[1] அதே ஆண்டில், வானொலிக்காக லதா தனது முதல் தனிப்பாடலான நமோ மரியானி-யைப் பதிவு செய்தார்.[8] லதா பாடிய பாடல்களிலேயே அதிக முறை பாடப்பட்ட பாடலாக இது பதிவாகியுள்ளது. இது கொலம்பியா இசை நிறுவனத்திற்காகப் பதிவு செய்யப்பட்டதுடன், அந்த இசைத்தொகுப்பு பல மில்லியன் பிரதிகள் விற்பனையாகின.[16]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 3 "මාත් එක්ක අමනාප වුණේ එකම එක්කෙනයි... - ලතා වල්පොල". deshaya.lk. 11 November 2014.
  2. ↑ "ලතා වල්පොල: භාග්යවත් කෝකිලාව". mirrorarts.lk. 11 November 2014.
  3. ↑ Premadasa, T.K. (11 November 2014). "Latha Walpola – Nightingale of Sri Lanka Becomes Octogenerian". Asian Tribune. Archived from the original on 11 November 2014.
  4. ↑ "Sri Lanka's nightingale Latha Walpola completes 70 years in singing career". Daily FT. Retrieved 11 March 2017.
  5. ↑ "හෙළයේ ගීත කෝකිලාවිය කලාශූරී ලතා වල්පොල දිවි ගමනට සමුදෙයි". adaderana.lk. 11 November 2014.
  6. ↑ "Latha Walpola ලතා වල්පොල career". films.lk. 11 November 2014.
  7. 1 2 "ඔව්, මම දැන් රැජනක් ම තමයි! - ගීත කෝකිලාව ලතා වල්පොල". slleader.lk. 11 November 2014.
  8. 1 2 3 4 "චිරං ජයතු! ගී රැජිනියනි". sarasaviya.lk. 11 November 2014.
  9. ↑ Jayasiri, Sunil (21 March 2017). "National Honours – 2017". The Daily Mirror (Sri Lanka). http://www.dailymirror.lk/article/National-Honours--125878.html.
  10. ↑ "Latha Walpola". National Film Corporation of Sri Lanka. Archived from the original on 2 April 2015. Retrieved 8 March 2015.
  11. ↑ "Sri Lankan Nightingale". Sarasaviya. Retrieved 11 March 2017.
  12. ↑ "Sri Lankan Nightingale". Sarasaviya. Retrieved 11 March 2017.
  13. ↑ Premadasa, T.K. (12 November 2014). "OCTOGENARIAN NIGHTINGALE". Daily News Online. Archived from the original on 30 December 2014. Retrieved 23 February 2020.
  14. 1 2 "ආදරයේ රන් විමනේ මැණික් සඳක් පායලා..." deshaya.lk. 11 November 2014.
  15. ↑ Samarasinghe, Sarashi (6 June 2012). "අපේ කාලයේ ගායන ලොවේ විස්මිත පුරාවෘත්තය". Sarasaviya. Retrieved 1 August 2022.
  16. ↑ "හෙළ ගී ලතාවට 91යි". sarasaviya.lk. 11 November 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லதா_வால்போல&oldid=4662527" இலிருந்து மீள்விக்கப்பட்டது