லண்டன் வன்முறைகள் 2011

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2011 லண்டன் வன்முறைகள்
Carpetright store after Tottenham riots.jpg
டொட்டன்ஹாம் நகரில் எரியும் கட்டடங்களைத் தீயணைப்புப் படையினர் அணைக்கின்றனர்
நாள்ஆகத்து 6, 2011 (2011-08-06) – இன்று வரை
இடம்லண்டன், மான்செஸ்டர், மேர்சிசைட், மேற்கு மிட்லண்ட்ஸ், மேற்கு யோர்க்சயர், பிறிஸ்டல், மற்றும் பல.
உயிரிழப்புகள், காயம், கைதுகள்
5 பொதுமக்கள் இறப்பு
16+ பொதுமக்கள் காயம்
186 காவல்துறையினர் காயம்[1][2][3][4]
1,100+ பேர் கைது
லண்டனில் 1930 ஆம் ஆண்டுக் கட்டடம் ஒன்று தீக்கிரையானது.
லண்டன் வன்முறைகள் 2011

லண்டன் வன்முறைகள் (2011 London riots) பிரித்தானியாவில் லண்டன் மற்றும் இங்கிலாந்தின் பல முக்கிய நகரங்களில் 2011 ஆகத்து 6 முதல் 10 வரை இடம்பெற்றன. பிரித்தானியாவின் பிரதமர், துணைப் பிரதமர், நிதி அமைச்சர், உள்துறை அமைச்சர், லண்டன் மேயர் என அரசாங்கத்தின் முக்கியத்தர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் விடுமுறையைக் கழிக்கச் சென்ற நிலையில் லண்டனில் வரலாறு காணாத இக்கலகம் இடம்பெற்றது. கறுப்பின மக்கள் செறிவாக வாழ்கின்ற டோட்டன்ஹாமில் ஆரம்பித்த கலகம் லண்டன் உட்படப் பல நகரங்களுக்கும் பரவியது.

பின்னணி[தொகு]

வடக்கு லண்டன், டோட்டன்ஹாம் பகுதியில் கறுப்பின இளைஞர் ஒருவர் காவல் துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன், இங்கு சிக்கல் ஆரம்பித்தது. ஆகத்து 4 ல் மார்க் டக்கன் என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையான 29 வயதுடைய கலப்பின இளைஞர் ஒருவரைப் பொலீஸார் சுட்டுக்கொன்றனர். அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஆகத்து 6 திகதி புரோட்வோட்டர் பாமில் இருந்து டோட்டன்ஹாம் காவல் நிலையம் வரை அமைதி ஊர்வலம் ஒன்று நடத்தப்பட்டது. காவல் நிலையம் முன் திரண்டு நீதி கேட்டு போராட்டம் நடத்தினர். அவர்களை காவல்துறையினர் பலப்பிரயோகம் செய்து கலைத்தபோது, கலவரம் பரவியது. சிறியளவிலான ஆர்ப்பாட்டமே இவ்வாறு பாரிய கலவரமாக அங்குள்ள பல நகரங்களுக்கும் வியாபித்தது.

தொடரும் கலவரங்கள்[தொகு]

லிவர்பூல் பகுதியில் எரியூட்டப்பட்ட வாகனங்கள்
தீயை அணைப்பதற்கான போராட்டம்
பாதிப்புக்குள்ளான இடங்களில் ஒன்று

ஆகத்து 6 2011 டோட்டன்ஹாமில் ஆரம்பித்த கலகம் லண்டனின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவியது. லண்டனின் பல இடங்களில் கலவரங்களும் வன்முறையும் சூறையாடல்களும் நடந்துள்ளன. வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. குரோய்டான் நகரில் 140 ஆண்டு பழமையான டிபார்ட்மென்டல் ஸ்டோரை கலவரக்காரர்கள் தீக்கிரையாக்கினர். பர்மிங்ஹாம், லிவர்ப்பூல், மான்செஸ்டர், நாட்டிங்ஹம், பிரிஸ்டல் ஆகிய இடங்களிலும் வீதிக் கலவரங்கள் வெடித்தன.

கலவரத்துடன் தொடர்புடைய முதலாவது மரணம்[தொகு]

தெற்கு லண்டனில் ஆகத்து 8 அன்று நடந்த வன்செயல்களின் போது சுடப்பட்ட ஒருவர் உயிரிழந்தார். கலவரத்துடன் தொடர்புடைய முதலாவது மரணமாக இது கூறப்படுகிறது. பர்மிங்ஹாமில் வின்சன் கிறீன் என்ற இடத்தில் வீதிக் கலவரங்களில் ஈடுபட்டவர்களிடம் இருந்து தமது குடும்பத்தினரையும் சுற்றுப் புறத்தையும் காப்பதற்காகப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மூன்று பாக்கித்தானிய இளைஞர்கள் மீது ஆகத்து 9 அன்று வன்முறைக் கும்பல் ஒன்று வாகனம் ஒன்றை ஏற்றிக் கொன்றனர்.[5]

தகவல் பரிமாற்றம்[தொகு]

இங்கிலாந்தில் வன்முறைகள் இடம்பெற்று வரும் நிலையில் அங்கு வன்முறையாளர்கள் தங்கள் தகவல் பரிமாற்றத்திற்கு பிளக்பெரி மெசஞ்சர் சேவை மற்றும் பேஸ்புக், டுவிட்டர் வலையமைப்புகளை பாவிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வன்முறைகளில் ஈடுபட்டுள்ளோர் தங்களிடையே தகவல்களைப் பரிமாற்றுவதற்கு இவ்வசதிகள் பெரும் பங்களிப்பு செய்வதாக தெரிவிக்கப்பட்டது.

இவற்றின் ஊடாகவே எங்கு அடுத்து வன்முறை நிகழப்போகின்றது? எங்கே ஒன்று கூடுவது, எவற்றைத் தாக்குதவது மற்றும் கொள்ளையடிப்பது தொடர்பில் தகவல்கள் பரிமாற்றப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.

பிரித்தானிய இளைஞர்களில் 37% பிளக்பெரி கையடக்கத்தொலைபேசிகளையே பயன்படுத்தி வருகின்றனர். இக் கையடக்கத்தொலைபேசிகளுக்கான பிரத்தியேக தகவல் பரிமாற்ற சேவையே பிளக்பெரி மெசஞ்சர் ஆகும். இதன்மூலம் பலருக்கு ஒரே நேரத்தில் வேகமாகவும், துரிதமாகவும், இலவசமாகவும் தகவல்களை அனுப்பமுடியும். மேலும் இதன் சிறப்பம்சம் அதன் பாதுகாப்பு பொதுவாக பிளக்பெரி மெசஞ்சர் சேவையின் மூலம் தகவல்களை அனுப்பும் போது அவற்றின் மென்பொருள் குறியீட்டுச்சொற்களை (என்கிறிப்ஷன்) பரிசீலிக்க முடியாது. மேலும் பிளக்பெரி மெசஞ்சர் பாவனையாளர்கள் பின்(இரகசிய) இலக்கமொன்றினை பரிமாறிக் கொள்ள வேண்டும் .இது அவர்களின் தகவல் பரிமாற்றத்தை இரகசியமாக வைத்திருக்க உதவுகின்றது. இதனை நன்கு அறிந்துவைத்துள்ள கலகக்காரர்கள் இவற்றைப் பயன்படுத்துவது தெரியவந்துள்ளது. இது அங்குள்ள பாதுகாப்புப் பிரிவினருக்கு பெரும் தலையிடியைக் கொடுத்துள்ளது.

நாடு திரும்பிய பிரதமர்[தொகு]

எரியூட்டப்பட்ட வாகனத்தில் வரவேற்பு வாசகம்
6, 7ம் திகதிகளில் கலவரம் இடம்பெற்ற பகுதிகள்
லண்டன் வன்முறைகள் 2011 is located in இங்கிலாந்து
லண்டன் வன்முறைகள் 2011
லண்டன் வன்முறைகள் 2011
லண்டன் வன்முறைகள் 2011
லண்டன் வன்முறைகள் 2011
லண்டன் வன்முறைகள் 2011
லண்டன் வன்முறைகள் 2011
லண்டன் வன்முறைகள் 2011
லண்டன் வன்முறைகள் 2011
லண்டன் வன்முறைகள் 2011
ஆகத்து 8 ஆம் நாளில் கலவரங்கள் இடம்பெற்ற பகுதிகள்
லண்டன் காவல் படையினர்

பிரித்தானியப் பிரதமர் டேவிட் கேமரன் தனது இத்தாலி விடுமுறை சுற்றுப்பயணத்தை ரத்து செய்து விட்டு, ஆகத்து 9 ம் திகதி நாடு திரும்பினார். சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவது தொடர்பாக, நாடாளுமன்றத்தின் அவசரக் கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை நடத்தினார். இது குறித்து டேவிட் கேமரன் கூறுகையில், "பிரிட்டனில் மேலும் கலவரங்கள் நடக்காமல் தடுக்க எல்லா முயற்சிகளையும் பொலிசார் எடுப்பார்களென்றும், தேவைப்படும் பட்சத்தில் கலவரக்காரர்களைக் கட்டுப்படுத்த அவர்கள் மீது தண்ணீரை பீய்ச்சியடித்து தாக்குதல் நடத்த பொலிசார் தயங்கமாட்டார்கள்" எனவும் பிரதமர் உறுதியளித்தார்.

காவல் துறையினரின் விடுமுறைகள் ரத்து[தொகு]

அதே நேரம் காவல் துறையினரின் அனைவரது விடுமுறைகளும் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

சந்தர்ப்பவாத குற்றவாளிகள்[தொகு]

சூறையாடல்களில் ஈடுபடுவோரை காவல் துறையினரின் சந்தர்ப்பவாத குற்றவாளிகள் என்று வருணிக்கின்றனர்.

கலவரக்காரர்களின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டன[தொகு]

கலவரங்கள், சூறையாடல்கள் மற்றும் சொத்து சேதங்களில் ஈடுபட்டவர்கள் என்று தெரிவிக்கப்படும் ஆட்கள் சிலரின் படங்களை நாட்டின் நாளேடுகள் பலவும் வெளியிட்டு வருகின்றன. இந்தப் படங்களைப் பார்த்து அதில் காணப்படுவோர் யாரையும் அடையாளம் தெரிந்தால் பொலிசில் தெரிவிக்குமாறு இந்தப் பத்திரிகைகள் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளன. இந்தப் படங்களை எல்லாம் பார்த்தால் கலவரங்களில் ஈடுபட்டவர்கள் பெரும்பாலும் இளைஞர்களாகவே தோன்றுகின்றனர். இந்தக் சூறையாடல்களில் பத்து வயதுப் பிள்ளைகள் கூட ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கிழக்கு லண்டனிலும் சரி, வேறு பல இடங்களிலும் சரி, இந்த அட்டூழியங்களில் விடலை வயதுப் பெண்கள் பலரும் ஈடுபட்டிருந்தனர்.

அவசரகால அமைச்சரவைக் கூட்டம்[தொகு]

பிரதமர் டேவிட் கேமரன் ஆகத்து 10ம் திகதி அவசரகால அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி ஆலோசித்தார். பின் காவல்துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன்பின் கலவரக்காரர்களை அடக்க ரப்பர் குண்டுகள், தண்ணீர் பீரங்கித் தாக்குதல் போன்றவற்றுக்கு அனுமதி அளித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில்,""கலவரக்காரர்களைத் திருப்பித் தாக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. திருப்பித் தாக்கும் நடவடிக்கை துவக்கப்பட்டு விட்டது. அவர்களை அடக்க உறுதியான நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. கடைகளுக்குள் புகுந்து கொள்ளையடித்தவர்கள், அங்குள்ள சி.சி.டி.வி, கேமராக்களில் பதிவான காட்சிகள் மூலம் அடையாளம் கண்டறியப்பட்டு கைது செய்யப்படுவர். சட்டத்தின் கடுமையான தண்டனை அவர்களுக்குக் காத்திருக்கிறது. என்றார்.

ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது[தொகு]

லண்டனை சுற்றி 16 ஆயிரம் காவல்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால் அங்கு சற்று அமைதி நிலவியதாகத் தெரிவிக்கப் படுகின்றது. ஆங்காங்கே ஒரு சிலர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.வெஸ்ட் மிடிலாண்ட் மற்றும் மான்செஸ்டர் நகரங்களில் கலகக்காரர்கள் இன்னும் ஒடுக்கப்படாததால் அங்கு கலவரங்கள் தொடர்கின்றன. மான்செஸ்டர் நகரின் மையப்பகுதியில் உள்ள மகளிர் ஆடையகம் ஒன்று முழுவதும் தீவைத்து கொளுத்தப்பட்டுள்ளது.

கலவரத்துடன் தொடர்புடைய 3 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். ஆயிரத்து 200-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர். கண்காணிப்பு கேமிராவில் பதிவு செய்யப்பட்ட காட்சியினை வைத்து 68 வயது முதியவர் ஒருவரை , 16 வயது சிறுவன் அடித்து கொன்றதாக அவன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.[6]

பல ஆயிரம் கோடிக்கு பொருட்சேதம்[தொகு]

இங்கிலாந்தில் நடைபெறும் கலவரத்தால் பல்வேறு வீடுகள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள், அலுவலகங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. அத்துடன் கொள்ளையும் அடிக்கப்பட்டுள்ளன. இதனால் பல ஆயிரம் கோடிக்கு பொருட்சேதம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. எற்கனவே காப்பீடு செய்தவர்கள் காப்பீட்டு நிறுவனங்களிடம் இழப்பீடு கேட்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக காப்பீட்டு நிறுவனங்கள் ரூ.1,460 கோடி தர வேண்டியிருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 'கலவரத்தால் ஏற்பட்ட இழப்பு குறித்து காப்பீட்டு நிறுவனங்கள் மதிப்பீடு செய்து வருகின்றன. ரூ.1,000 கோடிக்கு மேல் இழப்பீடு தர வேண்டியிருக்கும்' என காப்பீட்டு நிறுவனங்கள் சங்கத்தின் பொது காப்பீடு பிரிவு தலைவர் நிக் ஸ்டர்லிங் தெரிவித்துள்ளார்.

லண்டன் ஒலிம்பிக்[தொகு]

லண்டன் ஒலிம்பிக் போட்டிகளுக்கு இன்னும் ஒரு வருடம் இருக்கிறது. ஒலிம்பிக் விவரணங்கள் லண்டனின் மதிப்பையும், பெருமையையும் மெருகுடன் விளம்பரப்படுத்திவரும் நிலையில், இவ்வாறான சம்பவங்கள் அதனை கெடுத்துவிடக்கூடாது என்பதில் அதிகாரிகள் கவனம் செலுத்தி வருகின்றனர்.

அமைதி நிலவியது[தொகு]

கலவரங்களால் பாதிக்கப்பட்டிருந்த பிரித்தானிய நகரங்கள் பலவற்றில் ஆகத்து 11 முதல் அமைதி நிலவியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கலவரங்கள் இடம்பெற்ற நகரங்களின் வீதியெங்கும் ஆயிரக்கணக்கான மேலதிக பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர். ஆகத்து 11 இரவிலிருந்து பாரிய சம்பவங்கள் எதுவும் இடம்பெறாத போதும் தொடர்ந்தும் பதற்றம் நிலவி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. லண்டனின் பெரும்பாலான பகுதிகள் அமைதிக்குத் திரும்பியுள்ள அதேவேளை ஏனைய நகரங்களிலும் கலவரங்கள் மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் என்பன ஓய்ந்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Violence, rioting and looting breaks out across England". பிபிசி. 9 ஆகத்து 2011. http://www.bbc.co.uk/news/uk-england-14457535. பார்த்த நாள்: 9 ஆகத்து 2011. 
  2. "Chapeltown shooting: Police tackle 'pockets of disorder'". பிபிசி. 9 ஆகத்து 2011. http://www.bbc.co.uk/news/uk-england-leeds-14449656. பார்த்த நாள்: 9 August 2011. 
  3. "Cars set alight during disturbances in Medway towns". பிபிசி. 9 ஆகத்து 2011. http://www.bbc.co.uk/news/uk-england-kent-14455844. பார்த்த நாள்: 9 ஆகத்து 2011. 
  4. "Unrest spreads to Leeds and Birmingham". சேனல் 4. 9 ஆகத்து 2011. http://www.channel4.com/news/unrest-spreads-to-leeds-and-birmingham. பார்த்த நாள்: 9 ஆகத்து 2011. 
  5. கலவரத்தில் பலியானோரின் இறுதிச்சடங்கில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு பரணிடப்பட்டது 2012-01-12 at the வந்தவழி இயந்திரம், தினக்குரல், ஆகத்து 20, 2011
  6. லண்டன் கலவரம்: 16 வயது சிறுவன் மீது கொலை வழக்குப்பதிவு , தினமலர், ஆகத்து 17, 2011

மூலம்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லண்டன்_வன்முறைகள்_2011&oldid=3372110" இருந்து மீள்விக்கப்பட்டது