லசைன் சோதனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

லசைன் சோதனை அல்லது சோடிய உருக்குச் சாரச் சோதனை (Lassaigne's test or Sodium fusion test) என்பது ஒரு கரிமச் சேர்மத்தில் கார்பன், ஐதரசன் தவிர ஏனைய ஆலசன்கள், நைட்ரசன் மற்றும் கந்தகம் போன்ற தனிமங்களின் இருப்பினைக் கண்டறிவதற்கான பண்பறி அடிப்படை பகுப்பாய்வு ஆகும். இச்சோதனையை பிரெஞ்சு வேதியியல் அறிஞர் ஜே. எல். லசைன் உருவாக்கினார். [1][2]

இந்தச் சோதனையானது சோதித்தறியப்பட வேண்டிய மாதிரியை தனித்த தூய்மையான, சோடியம் உலோகத்துடன் உருக்கித் தயாரிக்கப்படும் சாற்றினைக் கொண்டு நடத்தப்படுகிறது. சோடிய உலோகத்தை உருக்கி, கரிமச் சேர்மத்துடன் சேர்த்து தயாரிக்கப்பட்ட மாதிரியானது நீருக்குள் அமிழ்த்தப்படுகிறது. இந்தச் சாறானது நன்கு கொதிக்கவைக்கப்பட்டு, வடிகட்டிப் பிரித்தெடுக்கப்பட்டு கண்டறியப்பட வேண்டிய தனிமங்களுக்கான பண்பறி பரிசோதனைகளுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.[2]

கோட்பாடு[தொகு]

ஆலசன்கள், நைட்ரசன் மற்றும் கந்தகம் ஆகிய தனிமங்கள் கரிமச் சேர்மங்களில் சகப்பிணைப்பின் மூலம் பிணைக்கப்பட்டுள்ளன. இத்தனிமங்களைக் கண்டறிய இவை இவற்றின் அயனிச் சேர்மங்களாக மாற்றப்பட வேண்டியுள்ளது. இதற்காக சோடியம் உலோகமானது கரிமச் சேர்மத்துடன் உருக்கிச் சேர்க்கப்படுகிறது. இதன் காரணமாக உருவான அயனிச் சேர்மங்கள் நீர்க்கரைசலாக வடித்தெடுக்கப்பட்டு எளிய வேதிப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றன. சோடிய உலோகத்தை உருகச் செய்து அதனுடன் கரிமச் சேர்மத்தைச் சேர்த்துத் தயாரிக்கப்பட்ட சாறானது சோடிய உருக்குச் சாறு அல்லது லசைனின் சாறு என அழைக்கப்படுகிறது.

கரிமச் சேர்மத்தில் நைட்ரசன் இருந்தால், அது உருகிய சோடியத்துடன் வினைபட்டு சோடியம் சயனைடைத் தருகிறது.

Na + C + N→ NaCN

கரிமச் சேர்மத்தில் கந்தகம் இருந்தால், அது உருகிய சோடியத்துடன் வினைபட்டு சோடியம் சல்பைடைத் தருகிறது.

2Na + S → Na2S

கரிமச் சேர்மத்தில் ஆலசன்களின் ஏதேனும் ஒரு தனிமம் இருந்தால் அது உருகிய சோடியத்துடன் வினைபட்டு தொடர்புடைய சோடியம் ஆலைடைத் தருகிறது.

Na + X → NaX ( X = Cl, Br, I)

நைட்ரசனுக்கான சோதனை[தொகு]

சோடிய உருக்குச் சாறுடன் சிறிதளவு புதிதாகத் தயாரிக்கப்பட்ட ஃபெர்ரஸ் சல்பேட்டு கரைசலானது சேர்த்து சூடேற்றப்படுகிறது. இதன் காரணமாக சோடியம் ஃபெர்ரோ சயனைடு உருவாகிறது.

2NaCN + FeSO4→Na2SO4 + Fe(CN)2
Fe(CN)2+ 4NaCN → Na4[Fe(CN)6]

இவ்வாறு கிடைக்கப்பெறும் சோடியம் பெர்ரோ சயனைடுடன் சில துளிகள் ஃபெர்ரிக் குளோரைடு கரைசல் சேர்க்கப்பட்டு, நீர்த்த கந்தக அமிலம் கொண்டு கரைசல் அமிலத்தன்மையாக்கப்படுகிறது. கரைசலில் உள்ள ஃபெர்ரிக் அயனி சோடியம் பெர்ரோ சயனைடுடன் வினைபுரிந்து, பெர்ரிக் பெர்ரோ சயனைடு எனும் பிரஷ்யன் நீல நிறப்படிவினைத் தருகிறது. இதுவே கரிமச் சேர்மத்தில் உள்ள நைட்ரசனைக் கண்டறியும் சோதனையாகும்.

3Na4[Fe(CN)6] + 4 Fe+3→Fe4[Fe(CN)6]3 + 12Na+

ஒரு கரிமச் சேர்மமானது கந்தகம் மற்றும் நைட்ரசன் ஆகிய இரண்டு தனிமங்களையுமே கொண்டிருந்தால் இதே சோதனையின் இறுதிப்பொருளானது இரத்தச் சிவப்பு நிறத்தைத் தரும்.

கந்தகத்திற்கான சோதனை[தொகு]

சோடிய உருக்குச் சாறுடன் சோடியம் நைட்ரோ புரூசைடு சேர்க்கப்படும் போது ஊதா நிறமானது கிடைக்கிறது.

Na2S + Na2[Fe(CN)5NO] → Na4[Fe(CN)5NOS]

ஆலசன்களுக்கான சோதனை[தொகு]

சோடிய உருக்குச் சாறில் ஆலசன்கள் சோடியம் ஆலைடாக உள்ளது. சோடிய உருக்குச் சாறுடன் நீர்த்த நைட்ரிக் அமிலம் சேர்க்கப்பட்டு சாறானது அமிலத்தன்மை உடையதாக்கப்படுகிறது. பிறகு வெள்ளி நைட்ரேட்டு கரைசல் சேர்க்கப்படுகிறது. வீழ்படிவு உருவாதல் ஆலசன்கள் இருப்பினை உறுதி செய்கிறது. வீழ்படிவின் நிறமானது தொடர்புடைய ஆலசனைக் கண்டறிய உதவுகிறது.

Na X + AgNO3 → AgX↓ + NaNO3
சேர்மத்தில் உள்ள ஆலைடு வீழ்படிவின் நிறம் அமோனியம் ஐதராக்சைடில் கரையும் திறன்
குளோரைடு வெண்மை எளிதில் கரைகிறது
புரோமைடு வெளிர் மஞ்சள் குறைந்த அளவு கரைகிறது
அயோடைடு மஞ்சள் கரைவதில்லை

மேற்கோள்கள்[தொகு]

  1. Lassaigne (1843) "Mémoire sur un procédé simple pour constater la présence de l'azote dans des quantités minimes de matière organique" [Memoir on a simple procedure for confirming the presence of nitrogen in minimal quantities of organic matter], Comptes rendus,16 : 387-391.
  2. 2.0 2.1 Gower, R. P.; Rhodes, I. P. (1969). "A review of techniques in the Lassaigne sodium-fusion". Journal of Chemical Education 46 (9): 606. doi:10.1021/ed046p606. Bibcode: 1969JChEd..46..606G. https://archive.org/details/sim_journal-of-chemical-education_1969-09_46_9/page/606. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=லசைன்_சோதனை&oldid=3520653" இலிருந்து மீள்விக்கப்பட்டது