உள்ளடக்கத்துக்குச் செல்

றுப்உல் காலீ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரேபியத் தீவக்குறையில் ரப் அல் காலி பாலைவனத்தின் அமைவிடம்.
ரப் அல் காலி பாலைவனத்திலுள்ள மணல் மேடுகள்.

றுப்உல் காலீ அல்லது காலிக் கால் (அரபு மொழி: الربع الخالي‎) என்பது உலகத்தின் மிகப் பெரிய பாலைவனங்களுள் ஒன்று. இது சவூதி அரேபியா, ஓமான், ஐக்கிய அரபு அமீரகம், யெமன் ஆகிய நாடுகளின் பகுதிகளை உள்ளடக்கியதாக அரேபியத் தீவக்குறையின் தெற்கு நோக்கிய மூன்றில் ஒரு பகுதியை மூடியுள்ளது. நெடுங்கோடுகள் 44°30′ −56°30′E இற்கும், அகலக்கோடுகள் 16°30′ −23°00′N இற்கும் இடையில் அமைந்துள்ள இப்பாலைவனம் 650,000 சதுர கிலோமீட்டர்கள் (250,000 சதுர மைல்கள்) பரப்பளவைத் தன்னுள் அடக்கியுள்ளது. இது நெதர்லாந்து, பெல்சியம், பிரான்சு ஆகிய மூன் று நாடுகளும் சேர்ந்த நிலப்பகுதியின் பரப்பளவிலும் கூடுதலானதாகும். அமெரிக்காவின் டெக்சாசு மாநிலத்தின் பரப்பளவுக்கு இப்பாலைவனம் ஏறத்தாழச் சமமானது.

அண்மைக்காலம் வரை அதிகம் ஆய்வுக்கு உட்படுத்தப்படாத இப்பாலைவனம் 1,000 கிலோமீட்டர்கள் (620 மைல்) நீளமும், 500 கிலோமீட்டர்கள் (310 மைல்) அகலமும் கொண்டது. இப்பகுதிகளில் வாழும் பது எனப்படும் நாடோடி மக்கள் கூட இப்பாலைவனத்தின் விளிம்புப் பகுதிகளிலேயே வாழ்கின்றனர். தற்காலத்தில், புவியிடங்காட்டு முறைமைகளைப் பயன்படுத்திச் பாலைவனத்தினுள் சுற்றுப் பயணங்களை ஒழுங்கு செய்யும் நிறுவனங்கள் உள்ளன. பேட்ரம் தாமசு, சென். சான் பில்பி என்போர் முறையே 1931 ஆம் ஆண்டிலும், 1932 ஆம் ஆண்டிலும் செய்த பயணங்களே இப் பகுதியில் மேல்நாட்டினர் செய்த முதல் பயணங்கள் ஆகும். 1946 ஆம் ஆண்டுக்கும், 1950 ஆம் ஆண்டுக்கும் இடையில் வில்பிரட் தீசிசர் என்பார், இப் பகுதியைப் பலமுறை கடந்துள்ளார்.

கோடை காலத்தில் நண்பகல் வெப்பநிலை 55 °C (131 °F) வரை செல்லும். மணல் மேடுகள் ஈபெல் கோபுரத்திலும் மேலான உயரங்கள் - 330 மீட்டர்கள் - கொண்டவையாகக் காணப்படுகின்றன. இவ்வாறன சூழ்நிலைகளைக் கொண்ட இப்பாலைவனம் புவியிலுள்ள மிகக் கடுமையான சூழல்களுள் ஒன்றாகக் கருதப்படுகின்றது. எனினும் பிற இடங்களைப் போலவே இங்கும் இச்சூழலுக்குரிய உயிரினங்கள் வாழ்கின்றன. எட்டுக்காலிகள், கொறித்துண்ணிகள், தாவரங்கள் என்பன இப்பாலைவனம் எங்கும் பரவலாகக் காணப்படுகின்றன

"https://ta.wikipedia.org/w/index.php?title=றுப்உல்_காலீ&oldid=2742810" இலிருந்து மீள்விக்கப்பட்டது