உள்ளடக்கத்துக்குச் செல்

ரோமர் மரத் தவளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மெய்க்கருவுயிரி
உரோமர் மரத் தவளை
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வகுப்பு:
நீர்நில வாழ்வன
வரிசை:
தவளை
குடும்பம்:
இராக்கோபோரிடே
பேரினம்:
லியுசலசு
இனம்:
L. ரோமேரி
இருசொற் பெயரீடு
Liuixalus ரோமேரி
(சிமித், 1953)
வேறு பெயர்கள்

Philautus romeri சிமித், 1953
Chirixalus romeri (சிமித், 1953)
Chiromantis romeri (சிமித், 1953)
Aquixalus romeri (சிமித், 1953)

உரோமர் மரத் தவளை (Romer's tree frog) என்பது லியுசலசு ரோமெரி (Liuixalus romeri)[1] எனும் சிற்றினத்தினை சார்ந்த தவளையாகும். இத்தவளை இனம் ஆங்காங்கில் மட்டுமே காணப்படக்கூடியது. இதன் உடல் நீளம் சராசரியாக 1.5 முதல் 2.5செ.மீ. வரையுள்ளதாகும். இப்பகுதியில் காணப்படும் தவளைகளில் மிகச்சிறிய தவளை இதுவாகும். இத்தவளை ராகோபோரிடே குடும்பத்தைச் சார்ந்ததாகும்.

விளக்கம்

[தொகு]

பெண் தவளை ஆணை விடச் சற்று பெரியது. உடல் பழுப்பு நிறமாகவும், அடிப்பகுதியானது வெண்மை நிறமாகவும் காணப்படும். ஆங்கில எழுத்தான எக்ஸ் போன்ற இரண்டு வளைந்த கருப்பு கோடுகள் முதுகுப் பகுதியில் காணப்படும். சில நேரங்களில், இக்கோடுகள் மையப்பகுதியில் சந்திப்பதில்லை. இந்த எக்ஸ் போன்ற அடையாளத்தின் அடியில் மற்றொரு தலைகீழான ஆங்கில எழுத்தான வி போன்ற குறியீடு உள்ளது. தோல் நன்றாக மிளகுத்தூள் தூவப்பட்டது போலக் காணப்படும். ஒர் தனித்துவமான மடிப்பு கண்ணிலிருந்து முன்கரம் வரை நீண்டு காணப்படும்.

ரோமர் மரத் தவளை பழுப்பு நிறப் புள்ளிகள் கொண்ட முக்கோணம் போன்ற தலை முன்பகுதியினை கொண்டது. கண்களுக்கு இடையில் ஓர் இருண்ட பட்டை உள்ளது. இது கண் இமைகள் வரை நீண்டுள்ளது. பின் கால்கள் நீளமாகவும், மெல்லியதாகவும், ஒழுங்கற்ற பழுப்பு அல்லது கருப்பு நிறமுடைய குறுக்கு-பட்டைகளுடன் காணப்படும். அனைத்து கால் விரல்களிலும் சிறிய விரல் பட்டைகள் உள்ளன. இவை தவளைகள் மரக் கிளைகள் அல்லது இலைகளில் தொங்க உதவுகின்றன.

சூழலியல் மற்றும் நடத்தை

[தொகு]

இத்தவளையின் வாழ்விடம் சிறிய நீரோடைகள் அல்லது இனப்பெருக்கத்திற்கு ஏற்ற நீர் ஆதாரங்களுடன் கூடிய மரங்கள் நிறைந்த பகுதிகளாகும். இந்த தவளை புதர்களில் உள்ள உதிர்ந்த இலைகளில் புதைந்து காணப்படும். சில வேளைகளில் திறந்தவெளிப் பகுதிகளிலும் காணப்படும். ஆங்காங்கில் லாண்டவு தீவு, லாம்மா தீவு, போ டோய் தீவு மற்றும் செக் லேப் கோக் ஆகிய நான்கு தீவுகளிலிருந்து மட்டுமே இந்த தவளைகள் வாழ்வது பதிவு செய்யப்பட்டுள்ளது.

இத்தவளையின் முட்டைகள், தலைப்பிரட்டை அறிமுகப்படுத்தப்பட்ட கொசு மீன்களால் உண்ணப்படுவதால், இத்தவளைகள் இம்மீன்கள் இல்லாத ஓடைகளிலே காணப்படுகிறது. ஆழம் குறைந்த நீரோடைகளில் மார்ச் முதல் செப்டம்பர் வரை இத்தவளை இனப்பெருக்கம் செய்கிறது. இனப்பெருக்க காலங்களில் ஆண் தவளை இனப்பெருக்க அழைப்பு ஒன்றினை தன்னுடைய குரல் வழியே தெரிவிக்கின்றது. பெண் தவளை நீரில் மூழ்கிக் காணப்படும், தாவர குப்பைகள், கற்கள் அல்லது தாவரங்கள் மீது 120 முட்டைகள் வரை இடுகின்றது. இந்த முட்டைகளை ஒரு வித பசையினால் ஒட்டிவைக்கின்றது. தலைப்பிரட்டைகள் பழுப்பு நிறத்தில் காணப்படும். இவை உருமாற்றத்திற்குப் பின் முழுமையாக வளர்ச்சியடைய 4 முதல் 6 வாரங்கள் எடுத்துக்கொள்கின்றன.

ரோமர் வனத் தவளைகளின் உணவாக கறையான்கள், சிறிய பூச்சிகள், சிள்வண்டு, சிலந்திகள் உள்ளது. இத்தவளை இனம் இரவாடி வகையினைச் சார்ந்ததாக உள்ளது. காடுகளில் வாழும் இத்தவளைகள் சுமார் மூன்று ஆண்டுகள் உயிர் வாழக்கூடியது. எனவே பெண் தவளைகள் இரண்டு இனப்பெருக்க காலம் மட்டுமே இனப்பெருக்கம் செய்யவல்லது.

கண்டுபிடிப்பு மற்றும் பாதுகாப்பு

[தொகு]

1952 ஆம் ஆண்டு லாமாத் தீவில் உள்ள குகை ஒன்றில் ஜான் டி ரோமர் என்பவரால் இத்தவளை இனம் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே இத் தவளைக்கு ரோமரின் பெயரே இடப்பட்டது. 1953ஆம் ஆண்டு இக்குகையில் ஏற்பட்ட சரிவு காரணமாக இத்தவளை இனம் அழிந்துவிட்டதாகக் கருதப்பட்டது. ஆனால் 1984ஆம் ஆண்டு இத்தீவில் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது.

1992ஆம் ஆண்டு செக் லேப் கோக்கில் ஆங்காங் சர்வதேச விமான நிலையத்தை நிர்மாணிப்பதற்கு முன்னர் சுமார் 200க்கும் மேற்பட்ட ரோமர் மரத் தவளைகள் அப்பகுதியிலிருந்து மீட்கப்பட்டன. மீட்கப்பட்ட தவளைகள், செயற்கையான வளரிடத்தில் வெற்றிகரமாக இனப்பெருக்கம் செய்யப்பட்டு, பின்னர் அவை ஆங்காங் தீவு மற்றும் புதிய பிரதேசங்களில்தேர்ந்தெடுக்கப்பட்ட எட்டு இடங்களில் விடப்பட்டன. இவற்றில் ஏழு இடங்களில் இடப்பட்ட தவளைகள் எவ்வித பிரச்சனையும் இன்றி வாழத்தொடங்கின.

அழிவிற்கு உள்ளாகும் சிற்றினமாக ரோமர் மரத் தவளை இனம் உள்ளதால், ஆங்காங்கின் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படுகிறது (காட்டு விலங்குகள் பாதுகாப்பு சட்டம், தலைப்பு. 170). லாண்டாவில் உள்ள நொங்கோங் பிங்கின் பகுதி, தவளையின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் பகுதியாக உள்ளதால், 1999ஆம் ஆண்டு, இப்பகுதி அறிவியல் சிறப்புப் பகுதியாக அறிவிக்கப்பட்டது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Li, Che, Bain, Zhao, and Zhang, 2008, Mol. Phylogenet. Evol., 48: 311. The frog was previously classified under other genera: initially Philautus (Smith, 1953) and later Chirixalus (Bossuyt & Dubois, 2001).

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோமர்_மரத்_தவளை&oldid=3968289" இலிருந்து மீள்விக்கப்பட்டது