ரோகிணி (வேங்கையின் மைந்தன்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ரோகிணி, அகிலனின் வேங்கையின் மைந்தன் புதினத்தின் இரு கதாநாயகியருள் ஒருத்தி. இவள், ஈழத்து அரசன் ஐந்தாம் மகிந்தனின் மகளாக இக்கதையின் ஆசிரியரால் உருவாக்கப்பட்டுள்ள கதாபாத்திரம். இராஜேந்திர சோழன், பாண்டிய நாட்டு முடியை மீட்டு வென்ற ஈழத்துப் போரில் ஈழத்து அரசனையும் அவனது குடும்பத்தையும் சிறைப்பிடித்து சோழநாட்டிற்கு அழைத்து வந்ததாக வரலாறு கூறுகிறது. இப்புதினத்தில் அப்போரிலும் அதற்குப் பின்னும் இச்சோழமன்னரின் பல வெற்றிகளில் முக்கிய பங்குபெறும் கொடும்பாளூர் குல இளவல் இளங்கோ நாயகனாகவும் அவனிடம் தன் மனதைப் பறிகொடுத்த ஈழத்து இளவரசியாக ரோகிணியும் காட்டப்பட்டுள்ளனர்.

தங்கள் எதிரி நாட்டு இளவரசனான இளங்கோவிடம் அன்பு தோன்றிய ஆரம்பக் கட்டத்திலிருந்து கதையின் சில இறுதி அத்தியாயங்களுக்கு முன்வரை, ரோகிணி இருவகையான குணங்களை வெளிப்படுத்தும் பெண்ணாக உள்ளாள். தன் பிறந்த நாடு மற்றும் குடும்பத்தினரிடம் கொண்ட அளவற்ற பாசத்தை உதறமுடியாமலும் தன்னையறியாமலே இளங்கோவின் வசப்பட்டுவிட்ட தன் மனதை மீட்க முடியாமலும் மனப்போராட்டங்களுக்கு உள்ளாகிறாள். இதனால் ஒரு சமயம் இளங்கோவிடம் பாடி ஆடி மகிழும் இவள் அவன் ஈழநாட்டின் மீதான போர்ச் செயல்களில் ஈடுபடும்போது கோபங்கொண்டு தன் வார்த்தைகளாலும் செயல்களாலும் அவனைக் காயப்படுத்துகிறாள். இப்போராட்டத்திலிருந்து அவள் மீளும்விதம் கதையின் முக்கிய முடிச்சுகளுடன் இணைக்கப்பட்டுச் சுவையாகக் சொல்லப்பட்டுள்ளது. வாசிப்போரின் மனதைக் கவரும் கதாபாத்திரங்களில் ரோகிணியும் ஒன்றாகும்.