ரூபாயின் வரலாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மௌரியப் பேரரசு கால வெள்ளிக்காசு ரூப்யரூபா எனப்பட்டது; யானை, சக்கரச் சின்னங்களைத் தாங்கியிருந்தது. கி.மு 3வது நூற்றாண்டு.[1]

பணதின் பழங்கதை கி.மு ஆறாம் நூற்றாண்டில் தொடங்குகின்றது. உலகில் நாணயங்களை வெளியிடுவதில் தொன்மை இந்தியா முன்னணி வகிக்கின்றது.[2] இந்தியாவைத் தவிர சீனர்களும் (வென்) லிடியர்களும் (இசுடேட்டர்) நாணயங்களை வெளியிட்ட முன்னணி நாடுகளாகும்.

ரூபியா என்றச் சொல் சமசுகிருத சொல்லான ரூபா என்பதிலிருந்து வந்துள்ளது; இதற்கு "வார்க்கப்பட்ட வெள்ளி, வெள்ளிக் காசு",[3] எனப் பொருள்படும். மேலும் ரூபம் என்ற பெயர்ச்சொல் "வடிவம், படிமம்" என்றும் பொருள் கொள்ளும். ரூபா என்ற இச்சொல் திராவிட மொழிகளிலிருந்து வந்ததாகவும் அறியப்படுகின்றது.[சான்று தேவை]

முதலாம் மௌரியப் பேரரசர் சந்திரகுப்த மௌரியரின் (கி.மு. 340–290) பிரதமர் சாணக்கியர் எழுதிய பொருளியல் நூல், அர்த்த சாத்திரத்தில் வெள்ளிக்காசுகள் ரூப்யரூபா எனப்படுகின்றன; தங்கக்காசுகள் சுவர்ணரூபா என்றும் செப்புக் காசுகள் தாமரரூபா எனவும் ஈயக் காசுகள் சீசரூபா எனவும் குறிக்கப்பட்டுள்ளன. இங்கு ரூபா என்பது வடிவம் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.[1]

Silver coins with raised writing
சேர் சா சூரி வெளியிட்ட ரூபாய் ,கி.பி. 1540–1545

1540 முதல் 1545 வரை ஆண்ட சேர் சா சூரி புதிய குடியியல், படைத்துறை நிர்வாக அமைப்புக்களை உருவாக்கினார்; இவர் 178 தானிய எடையுள்ள வெள்ளிக் காசுகளை தர நிர்ணயம் செய்தார். இவை ரூபையா எனப்பட்டன.[3][4] இந்த வெள்ளிக்காசு முகலாயப் பேரரசு, மராட்டிய அரசாட்சியிலும் பிரித்தானிய இந்தியாவிலும் செலாவணியாக இருந்து வந்தது.[5] முதன்முதல் தாள்வடிவ ரூபாயாக 1770 - 1832இல் புழக்கத்திலிருந்த பாங்க் ஆஃப் இந்தோசுத்தானையும் வாரன் ஹேஸ்டிங்ஸ் நிறுவிய 1773 முதல் 75 வரை இருந்த ஜெனரல் பாங்க் ஆஃப் பெங்கால் அன்ட் பீகாரையும் 1784 முதல் 1791 வரை இருந்த பெங்கால் பாங்க் வங்கித்தாள்களை குறிப்பிடலாம்.

19ஆவது நூற்றாண்டின் பெரும்பகுதியிலும் இந்திய ரூபாய் வெள்ளியால் ஆனதாக இருந்தது. உலகப் பொருளாதாரம் தங்கத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தமையால் இது ரூபாயின் மதிப்பில் பெரும் ஏற்றத்தாழ்வுகளை உண்டாக்கியது. பிரித்தானியர் ஆட்சியிலும் பின்னர் விடுதலை இந்தியாவின் முதல் பத்தாண்டுகளிலும்இந்திய ரூபாய் 16 அணாக்களாகப் பிரிக்கப்பட்டது. ஒவ்வொரு அணாவும் 4 பைசாக்களாகவோ அல்லது 12 பைக்களாகவோ பிரிக்கப்பட்டது. எனவே ஒரு ரூபாய் 16 அணாக்களாகவும், 64 பைசாக்களாகவும் 192 பைக்களாகவும் இருந்தது. 1957இல், தசமமயமாக்கலை அடுத்து ரூபாய் 100 புதிய பைசாக்களாக (நயே பைசா) பிரிக்கப்பட்டது. புழக்கத்திலிருந்த பைசாக்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்ட புதிய என்ற முன்னொட்டு வேண்டியிருந்தது. சில ஆண்டுகளுக்குப் பிறகு புதிய அல்லது நயே என்ற முன்னொட்டு விடப்பட்டது.

இருபதாம் நூற்றாண்டின் துவக்க மற்றும் மத்திய காலங்களில் பிரித்தானியர் இந்தியாவிலிருந்து ஆண்ட பல பகுதிகளில் இந்திய ரூபாய் அலுவல்முறை நாணயமாக இருந்தது; இவற்றில் கிழக்கு ஆபிரிக்கா, அராபியத் தீபகற்பம், பாரசீக வளைகுடா போன்றவை அடங்கும்.

துவக்க காலம்[தொகு]

கி.மு ஆறாம் நூற்றாண்டிலேயே இந்தியாவில் நாணயங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மௌரியர் பேரரசில் இது ரூப்யரூபா என அறியப்பட்டது.

இடைக்காலங்களில் ஓர் நிரந்தரமான நிதி முறைமை கடைபிடிக்கப்படவில்லை என டா டாங்கு சி யு ஜி' பதிந்துள்ளார்'.[6]

1540இல் ஆட்சிக்கு வந்த சேர் சா சூரியே வெள்ளிக் காசுகளை தரநிர்ணயம் செய்தவராக அறியப்படுகின்றார். இவர் வெளியிட்ட வெள்ளிக்காசுகளின் அடிப்படை முகலாயப் பேரரசு, மராட்டிய அரசாட்சியிலும் பிரித்தானிய இந்தியாவிலும் கடை பிடிக்கப்பட்டது.

பிரித்தானியர் காலத்தில் நாணயவியல்[தொகு]

மேற்கு இந்தியா, தென்னிந்தியா, மற்றும் கிழக்கு மாகாணங்களில் (வங்காளம், கொல்கத்தா) குடியேறிய பிரித்தானியர் உள்ளூர் பண்பாடுகளுக்கேற்ப தனித்தனி நாணயங்களை தங்கள் வணிகத்திற்காக வெளியிட்டனர்.

ஒரு ரூபாய், விக்டோரியா அரசி தொடர், 1862
அரை அணா (3 பைசா) நாணயம்; ஓரணா = 6 பைசா, ஜியார்ஜ் VI தொடர், 1945

கிழக்கிந்தியக் கம்பனியின் நாணயங்களில் ஒரு பக்கத்தில் இந்துக் கடவுளரைப் பதிப்பித்த கள்ள நாணயங்கள் நிறையக் கிடைக்கின்றன. உண்மையான நாணயங்களில் கிழக்கிந்தியக் கம்பனியின் மரபுச்சின்னங்கள் (coat of arms) மட்டுமே பதிக்கப்பட்டுள்ளன.

வங்காளத்தில் முகலாயர் பாணியிலும் சென்னையில் தென்னிந்தியர் பாணியிலும் நாணயங்கள் உருவாக்கப்பட்டன. மேற்கு இந்தியாவில் முகலாயர் மற்றும் ஆங்கிலேயர் பாணி நாணயங்கள் வெளியாயின. 1717இல் தான் பேரரசர் பரூக்சியார் அனுமதி பெற்று ஆங்கிலேயர் மும்பை நாணயச்சாலையில் முகலாயர் நாணயங்களை பதப்பித்தனர். பிரித்தானிய தங்கக்காசுகள் கரோலினா எனவும் வெள்ளிக் காசுகள் அஞ்செலினா என்றும் செப்புக் காசுகள் கூப்பரூன் எனவும் வெள்ளீயக் காசுகள் டின்னி எனவும் அழைக்கப்பட்டன. 1830களில் ஆங்கிலேயர் இந்தியாவின் முதன்மை அதிகாரமாக விளங்கினர். 1835ஆம் ஆண்டு வெளியான நாணயவியல் சட்டம் இந்தியா முழுமைக்குமான சீரான நாணயவியலை கொணர்ந்தது. இந்தப் புதிய நாணயங்களில் வில்லியம் IV உருவப்பொம்மை ஒரு பக்கத்திலும் மறுபக்கத்தில் நாணயத்தின் மதிப்பு ஆங்கிலத்திலும் பெர்சிய மொழியிலும் பொறிக்கப்பட்டிருந்தன. 1840க்குப் பிறகு வெளியான நாணயங்களில் விக்டோரியா அரசியார் தலைப்படம் இருந்தது. பிரித்தானிய அரசின் முதல் நாணயம் 1862ஆம் ஆண்டில் வெளியானது.

பிரித்தானிய இந்திய ஒரு ரூபாய், 1917

1911இல் சிம்மாசனம் ஏறிய ஜோர்ஜ் V காலத்து ரூபாய் "பன்றி ரூபாய்" என கிண்டலுக்கு உள்ளானது; இந்திய யானை பொறித்த அரசர் சின்னம் தரமற்ற பொறிப்பினால் பன்றி போல காட்சியளித்தமையே இதற்கு காரணம். முஸ்லிம் மக்கள் இதனால் மிகவும் கொதித்தெழுந்தமையால் விரைவாக இந்த நாணயத்தின் வடிவமைப்பை மாற்ற வேண்டியதாயிற்று.

முதலாம் உலகப்போரின் போது ஏற்பட்ட வெள்ளித் தட்டுப்பாட்டால் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் மற்றும் அரை ரூபாய் தாளில் அச்சடிக்கப்பட்டன. சிறு மதிப்புள்ள மற்ற வெள்ளி நாணயங்கள் செப்பு-நிக்கல் கலவையில் பதிப்பிக்கப்பட்டன. இரண்டாம் உலகப்போரும் நாணயங்கள் பதிப்பித்தலில் பல சோதனை முயற்சிகளை ஊக்குவித்தது; சீர்தர ரூபாய்க்கு மாற்றாக "நான்கிணைய வெள்ளி கலப்புலோகம்" பயன்படுத்தப்பட்டன. இவை 1940இல் வெளியாயின. 1947இல் இவை தூய நிக்கல் நாணயங்களால் மாற்றப்பட்டன.

விடுதலைக்குப் பிறகு பிரித்தானிய நாணயங்கள் சிலகாலத்திற்கு புழக்கத்தில் இருந்தன. ஒரு ரூபாய்க்கு 64 பைசாகள் என்றும் 192 பைசாக்கள் என்றும் அதே நாணய முறை கடைபிடிக்கப்பட்டு வந்தது.

15 ஆகத்து 1950இல் அணா தொடர் வெளியிடப்பட்டது; இதுவே இந்தியக் குடியரசின் முதல் நாணயங்களாகும். அரசரின் படத்திற்கு மாற்றாக அசோகரின் மூன்று சிங்கங்கள் உடைய நாட்டுச் சின்னம் பயன்படுத்தப்பட்டது. ஒரு ரூபாய் நாணயத்தில் தானியக் கதிர் இடம் பெற்றது. நாணயவியல் ரூபாய், அணா, பைசாவாக தொடர்ந்தது. 1955 இந்திய நாணயவியல் (சட்டத்திருத்தம்) சட்டம் இயற்றப்பட்டது. இது ஏப்ரல் 1, 1957இல் செயற்பாட்டிற்கு வந்தது. இது "தசமமயமாக்கல் தொடர்" எனப்பட்டது. ரூபாய் 100 பைசாக்களாகப் பிரிக்கப்பட்டது. ஏற்கெனவே பயன்படுத்தப்பட்டு வந்த பைசாவிலிருந்து வேறுபடுத்த இந்த புதிய பைசா "நயே பைசா" என அழைக்கப்பட்டது. 1, 2, 5, 10, 20 மற்றும் 50 நயேபைசாக்கள் மதிப்பில் நாணயங்கள் வெளியிடப்பட்டன. அணா தொடர் நாணயங்களும் நயேபைசா தொடர் நாணயங்களும் சில காலத்திற்கு ஒருசேர வழக்கத்தில் இருந்தன. 1968 முதல் புதிய நாணயங்கள் பைசா என்றே அழைக்கப்படலாயிற்று.

அறுபதுகளில் நிலவிய உயர்ந்த பணவீக்கத்தால் சிறு மதிப்புள்ள நாணயங்கள் அலுமினியத்தில் பதிக்கப்பட்டன; அதுவரை அவை வெங்கலம், நிக்கல்-பித்தளை, செப்பு-நிக்கல், அலுமினியம்-வெண்கலத்தில் பதிப்பிக்கப்பட்டு வந்தன. ஆறுமுகம் கொண்ட 3 பைசாவில் இந்த மாற்றம் முதலில் நிகழ்ந்தது. 1968இல் அறிமுகப்படுத்தப்பட்ட 20 பைசா நாணயம் பரவலாக பயன்படுத்தப்படவில்லை.

படிப்படியாக, உற்பத்தி செலவு கூடியதால் 1, 2 மற்றும் 3 பைசா நாணயங்கள் 1970களிலிருந்து வெளியிடாமல் போயின. எஃகாலான 10, 25 மற்றும் 50 பைசா நாணயங்கள் 1988இலும் ஒரு ரூபாய் நாணயம் 1992இலும் அறிமுகப்படுத்தப்பட்டன. 1990களில் ரூ 1, ரூ 2, ரூ 5 மதிப்புள்ளவை தாள்களுக்கு மாற்றாக நாணயங்களாக பதிப்பிக்கப்படலாயிற்று.

மதிப்பின் வரலாறு[தொகு]

அமெரிக்க டாலருக்கு எதிர் இந்திய ரூபாயின் மதிப்பு

இந்திய ரூபாய் 1926 முதல் 1966 வரை பிரித்தானிய இசுடெர்லிங் நாணயத்துடன், 1 GBP = 13.33 INR என்ற நிலையில் பிணைக்கப்பட்டிருந்தது. 1966இல் இது அமெரிக்க டாலருக்கு மாற்றப்பட்டது. அப்போது ஒரு அமெரிக்க டாலருக்கு 7.8 ரூபாய் இணையாக இருந்தது.[7]

ஆண்டு நாணயமாற்று விகிதம்
(ஒரு டாலருக்கான இந்திய ரூபாய்)
1948 3.30
1949 3.67
1950 - 1966 4.76[8]
1966 7.50[8]
1975 8.39[8]
1980 7.86[9]
1985 12.38[9]
1990 17.01[9]
1995 32.427
2000 43.50[9]
2005 (சன) 43.47[9]
2006 (சன) 45.19[9]
2007 (சன) 39.42[9]
2008 (அக்) 48.88
2009 (அக்) 46.37
2010 (22 சனவரி) 46.21
2011 (ஏப்) 44.17
2011 (21 செப்.) 48.24
2011 (17 நவ.) 55.3950
2012 (22 சூன்) 57.15[10]
2013 (15 மே) 54.73[11]
2013 (12 செப்) 62.92[12]
2014 (15 மே) 59.44[13]
2014 (12 செப்) 60.95[14]
2015 (15 ஏப்) 62.30[15]
2015 (15 மே) 64.22
2015 (19 செப்) 65.87
2015(27 செப்) 66.16
2022(18 ஆக) 79.65

மேற்சான்றுகள்[தொகு]

 1. 1.0 1.1 Redy. "AIndia.htm". Worldcoincatalog.com. பார்க்கப்பட்ட நாள் 2013-06-20.
 2. Subodh Kapoor (January 2002). The Indian encyclopaedia: biographical, historical, religious ..., Volume 6. Cosmo Publications. p. 1599. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7755-257-0.
 3. 3.0 3.1 etymonline.com (20 September 2008). "Etymology of rupee". பார்க்கப்பட்ட நாள் 2008-09-20.
 4. Mughal Coinage பரணிடப்பட்டது 2002-10-05 at the வந்தவழி இயந்திரம் at RBI Monetary Museum. Retrieved on 4 May 2008.
 5. "Coinage - Pre-Colonial India Coinage". Rbi.org.in. பார்க்கப்பட்ட நாள் 2013-06-20.
 6. Trübner’s Oriental Series DA TANG XIYU JI Great Tang Dynasty Records of the Western World, translated by Samuel Beal TWO VOLUMES Kegan, Paul, Trench, Teubner & Co. London • 1906 [First Edition ‐ London • 1884]
 7. Johri, Devika. "Devaluation of the Rupee: Tale of Two Years, 1966 and 1991" (PDF). Centre for Civil Society. Archived from the original (PDF) on 26 ஜூன் 2013. பார்க்கப்பட்ட நாள் 19 August 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
 8. 8.0 8.1 8.2 Journey of Indian rupee since independence - The Times of India. Timesofindia.indiatimes.com. Retrieved on 2013-12-01.
 9. 9.0 9.1 9.2 9.3 9.4 9.5 9.6 Indian Rupee Value from 1980 | Chipkidz. Chipkidz.wordpress.com (2009-08-10). Retrieved on 2013-12-01.
 10. "USD to INR Rates on 6/22/2012". Exchange Rates. 2012-06-22. பார்க்கப்பட்ட நாள் 2013-06-20.
 11. "USD to INR Rates on 5/15/2013". Exchange Rates. 2013-05-15. பார்க்கப்பட்ட நாள் 2013-06-20.
 12. Rupee rises to 62.92 per dollar, on track for 6th straight gain - NDTVProfit.com. Profit.ndtv.com. Retrieved on 2013-12-01.
 13. "USD to INR Rates on 15-May-2014". Exchange Rates. 15 May 2014. பார்க்கப்பட்ட நாள் 15 April 2015.
 14. "USD to INR Rates on 12-Sep-2014". Exchange Rates. 12 September 2014. பார்க்கப்பட்ட நாள் 15 April 2015.
 15. "USD to INR Rates on 15-Apr-2015". Exchange Rates. 15 April 2015. பார்க்கப்பட்ட நாள் 15 April 2015.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரூபாயின்_வரலாறு&oldid=3958444" இலிருந்து மீள்விக்கப்பட்டது