ரூபமதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ரூபமதி ராஜஸ்தானில் உள்ள கிஷன்காட் மன்னனான விக்கிரமசிம்மனின் மகள்.[1] இவர் சாருமதி என்றும் அழைக்கப்பட்டார். இவரது கதை இந்திய வரலாற்றில் ராக்கிக்கு இருந்த மதிப்பைக் காட்டக் கூடியது.

முகலாயப் பேரரசின் கடைசி மன்னர்களின் ஒருவன் தன் ஆட்சிக்காலத்தில் ராஜபுத்திரப் பெண்ணான ரூபமதியின் அழகைப் பற்றிக் கேள்விப்பட்டு அவளைத் தன் அந்தப்புரத்திற்கு அனுப்பச் சொல்லி ஆணையிட்டான். ஆணை பெற்ற தூதுவன், அந்த முகலாய மன்னனின் படத்துடன் வந்து ரூபமதியிடம் அதைக் காட்டினான். ஏளனமாக அதைத் தரையில் இட்டு மிதித்த ரூபமதி, ஒரு முகலாய சக்ரவர்த்தியை ஒரு ராஜபுத்திரப் பெண் இப்படித்தான் நடத்துவாள் என்று கூறினாள். இதன் விளைவாக ராஜபுதனத்தில் சுல்தானின் படையெடுப்பு நிகழ்ந்தது.

பட்டு நூலால் செய்யப்பட்ட வேலைப்பாடு மிக்க கையில் கட்டிக்கொள்ளக்கூடிய ராக்கியை பெண்கள் ஆண்களுக்கு அனுப்புவார்கள். அப்படி அனுப்பும்போது, அந்த ஆண் அவளது சகோதரன் ஆகிவிடுகிறான். சுல்தானின் படையெடுப்பை சமாளிக்க சிந்தித்த ரூபமதி ஏராளம் ராக்கிகளை பல்வேறு ராஜபுதன மன்னர்களுக்கு ’வந்து உதவுங்கள்’ என்ற செய்தியோடு அனுப்பினாள். ராஜபுத்திர வீரர்கள் ஒன்று திரண்டதால், சுல்தானின் படை திரும்ப நேர்ந்தது.

மேற்கோள்கள்[தொகு]

  1. இந்தியப் பெண்மணிகள்; சுவாமி விவேகானந்தர்; ஸ்ரீராமகிருஷ்ண மடம்; பக்கம் 97,98

உதவி நூல்[தொகு]

இந்தியப் பெண்மணிகள்; சுவாமி விவேகானந்தர்; ஸ்ரீராமகிருஷ்ண மடம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரூபமதி&oldid=2718403" இலிருந்து மீள்விக்கப்பட்டது