ரிச்சாரியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ராதேலால் ஹெர்லால் ரிச்சாரியா (1909-1996) ஒரு இந்திய நெல் ஆராய்ச்சியாளரும் பொருளாதாரத் தாவரவியலாளரும் ஆவார். 1959 ஆம் ஆண்டு வரை பீகாரில் பல நெல் வகைகளை கண்டறிந்து சேகரித்த ரிச்சாரியா, 1959 முதல் கட்டாக்கில் நெல்வகைகளை சேகரம் செய்ய ஆரம்பித்தார். இந்தியாவில் மட்டுமல்லாது பிற ஆசிய நாடுகளைச் சார்ந்த நெல் வகைகளையும் அவர் சேகரித்தார். இந்த சேகரிப்பு முயற்சியில் அவர் 67 தைவானிய நெல்வகைகளை சேகரித்திருந்தார். இவற்றுள் இன்று முக்கியத்துவம் பெற்றுள்ள TN-1 (Taichung Native 1) எனப்படும் குட்டை நெல்வகையும் அடங்கும்.

கட்டாக்கில் அமைந்த மத்திய நெல் ஆராய்ச்சி மையம் (Central Rice Research Institute, CRRI) உலகின் முதன்மை நெல்வகைகள் ஆராய்ச்சி மையமாக ரிச்சாரியாவால் வளர்த்தெடுக்கப்பட்டது.

ஆனால் ராக்பெல்லர் மையம் பிலிப்பைன்ஸில் உள்ள சர்வதேச நெல் ஆராய்ச்சி மையத்தை (International Rice Research Institute, IRRI) முதன்மை நெல் ஆராய்ச்சி மையமாக முன்னிறுத்த விரும்பியது. எனவே CRRI மையத்தின் நெல்வகை சேகரிப்புகள் IRRI மையத்திடம் அளிக்கப்பட வேண்டுமென இந்திய அரசின் மூலம் வலியுறுத்தப்பட்டது. இந்த அழுத்தத்தை ரிச்சாரியா கடுமையாக எதிர்த்தார். ஆனால் 1966 இல் அவர் பதவி விலக மத்திய அரசின் இந்திய விவசாய ஆராய்ச்சி கழகம் (ICAR) உத்தரவிட்டது. ரிச்சாரியா தொடர்ந்த நீதிமன்ற வழக்கில் அவரை ‘ஒரு அறிவியலாளராகவே இந்திய விவசாய ஆராய்ச்சி கழகம் கருதவில்லை’ என கூறியது. ரிச்சாரியா வழக்கில் வெற்றி பெற்றாலும் CRRI இல் இருந்து விலகினார்.

மத்திய பிரதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்தில்[தொகு]

அதன் பின்னர் மத்திய பிரதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்தில் இணைந்தார். அங்கு அவர் பணியாற்றிய 1971 முதல் 1977 காலகட்டத்துக்குள் 17,000 நெல்வகைகளை அவர் சேகரித்தார். அங்கிருந்தும் அவர் செயல்பட இயலவில்லை. 1986 இல் மலேசியாவில் அறிவியலாளர் மாநாடு ஒன்றில் இந்த ஆராய்ச்சி மையத்திலிருந்தும் நெல்வகைகளை எடுக்க IRRI முயற்சி செய்வதாக அவர் தெரிவித்தார். பின்னர் இன்றைய சட்டீஸ்கர் மாநில ராய்ப்பூரில் உள்ள இந்திரா காந்தி விவசாய பல்கலைக்கழகத்தில் உள்ள நெல் வகை ஜெர்ம்பிளாசம் வங்கியில் 22,500 அரிசி வகைகள் அவரது வாழ்நாள் உழைப்பின் விளைவுகளே.

உயிரிப்பன்மை பாதுகாப்பில் ரிச்சாரியாவின் இந்த பங்கு வளரும் நாடுகளின் அறிவியலில் ஒரு முக்கிய விஷயமாகும். இந்திய பாரம்பரிய நெல்வகைகளில் அதிக விளைச்சல் தருபவை. பயிர்களை தாக்கும் பூச்சிகளுக்கு எதிரான திறனை இயற்கையாக கொண்டவை. தனிப்பட்ட மணங்களும் சுவைகளும் கொண்டவை. ரிச்சாரியா இந்த அரிசி வகைகளை காப்பாற்றி இவற்றில் ஆராய்ச்சி மேற்கொண்டு இவற்றின் மூலமே இந்தியா உணவுத் தன்னிறைவு பெற வேண்டும் என விரும்பினார். இறக்குமதி செய்யப்படும் அதிக விளைச்சல் தரும் நெல்வகைகள் நீடித்த நன்மையை விவசாயத்துக்கு அளிக்காது என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார். 1996 இல் ரிச்சாரியா காலமானார். ஆனால் சட்டீஸ்கர் பகுதியில் உயிரிபன்மை குறிப்பாக நெல்வகை பன்மையையும் அப்பன்மையை பேண வேண்டிய முக்கியத்துவத்தையும் பொது மக்கள் உணர்வுகளில் அவர் பதித்துவிட்டிருந்தார். அறிவியல் தொழில்நுட்பமும் மக்கள் தேவைகள் உரிமைகள் ஆகியவை சந்திக்கும் ஒரு முக்கிய ஆளுமையாக ரிச்சாரியா இன்று அறியப்படுகிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரிச்சாரியா&oldid=2089598" இருந்து மீள்விக்கப்பட்டது