ரிங்லெட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரிங்லெட்
Ringlet
நாடு மலேசியா
உருவாக்கம்1885
நேர வலயம்MST (ஒசநே+8)
 • கோடை (பசேநே)பயன்பாடு இல்லை (ஒசநே)

ரிங்லெட் (Ringlet, சீனம்: 冷力), மலேசியா, பகாங் மாநிலத்தில் உள்ள ஒரு சிறிய மலைப்பகுதி நகரம். 1200 மீட்டர் உயரத்தில் இருக்கிறது.[1] இதற்கு அருகாமையில் தானா ராத்தா, பிரிஞ்சாங் நகரங்கள் உள்ளன.

இந்த நகரங்கள் அனைத்தும் மலேசியாவில் புகழ்பெற்ற கேமரன் மலையில் உள்ளன. ரிங்லெட் நகரத்தில் இருந்து தாப்பா நகரம் 45 கி.மீ. தொலைவிலும், ஈப்போ மாநகரம் 60 கி.மீ. தொலைவிலும் உள்ளன.[2] கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதிக்கு எஸ்.கே. தேவமணி என்பவர் மக்களவை உறுப்பினராக இருக்கின்றார்.

கேமரன் மலையில் கணிசமான அளவுக்கு இந்தியர்கள் வாழ்கின்றனர். இவர்களில் பலர் விவசாயத் துறையில் ஈடுபட்டு, பண வசதியுடன் இருக்கின்றனர். ஒரு சிலர் விவசாயத்துறை முதலாளிகளாக மாறி, மற்ற இனங்களுக்கு முன்மாதிரியான செல்வந்தர்களாகவும் வாழ்கின்றனர்.

தாப்பாவில் இருந்து கேமரன் மலைக்குச் செல்லும் பிரதான சாலையில் 45வது கி.மீட்டரில் ரிங்லெட் நகரம் அமைந்து உள்ளது.[3] அங்கிருந்து 10 கி.மீ. தள்ளி தானா ராத்தா நகரம் இருக்கிறது. இங்கு பெரும்பாலும் சீனர்களே அதிகம். அவர்கள் விவசாயிகளாகவும், பகுதி நேர வியாபாரிகளாகவும் இருக்கின்றனர்.

வரலாறு[தொகு]

1885 ஆம் ஆண்டு வில்லியம் கேமரன் எனும் பிரித்தானிய நில ஆய்வாளரின் நினைவாக “கேமரன் ஹைலடண்ஸ்” என்று கேமரன் மலைப் பகுதிக்கு பெயர் உருவாக்கப்பட்டது.[4] பிரித்தானியர்களின் ஆட்சிக் காலத்தில், அவர்களின் ஓய்வுத் தளமாக இந்த கேமரன் மலை விளங்கியது. 1925-ஆண்டுக்குப் பிறகே கேமரன் மலை, விவசாயத்தில் பிரசித்தி பெறத் தொடங்கியது.

ரிங்லெட் எனும் பெயர் வருவதற்கு இரு காரணங்களைச் சொல்கிறார்கள். தாப்பாவில் இருந்து கேமரன் மலைக்குச் செல்லும் பாதை வளைந்து வளைந்து செல்லும். பல ஊசிமுனை வளைவுகளும் உள்ளன.

ரிங்லெட் வண்ணத்துப் பூச்சி[தொகு]

ஆங்கிலத்தில் ‘ரிங்’ என்றல் வளையம். கேமரன் மலைக்குச் செல்லும் பாதையும் வளையம் வளையமாக இருந்ததால், கேமரன் மலையின் முதல் நகரத்திற்கு ரிங்லெட் என்று பெயர் வைக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள்.

அடுத்து, ’ரிங்லெட்’ எனும் ஒரு வகையான வண்ணத்துப் பூச்சி இந்தப் பகுதிகளில் அதிமாக இருந்ததால், அந்த இடத்திற்கு ’ரிங்லெட்’ என்று பெயர் வந்து இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால், இரண்டு காரணங்களுக்கும் அதற்கு சரியான சான்றுகள் இல்லை.

தேயிலைத் தோட்டம்[தொகு]

கேமரன் மலையில் பல தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. அவற்றுள் மிகப் பெரியது போ தேயிலைத் தோட்டம் ஆகும். இந்தத் தோட்டத்திற்கு இரு துணைத் தோட்டங்களும் உள்ளன. அவற்றுள் ‘பேர்லி’ தோட்டம் மிக அருகாமையில் உள்ளது. 20 கி.மீ. தள்ளி சுங்கை பாலாஸ் தோட்டம் உள்ளது.

ரிங்லெட் நகரில் இருந்து நான்கு கிலோ மீட்டர்களுக்கு அபால் ஹாபு எனும் ஒரு சிறு நகரம் இருக்கிறது. இங்கு இருந்து 8 கிலோ மீட்டர்களில் போ பிரதான தேயிலைத் தோட்டம் இருக்கிறது. இந்தத் தோட்டம் சுற்றுப் பயணிகளைக் கவரும் இடமாக இருந்து வருகிறது.

போ தேயிலைத் தோட்டம், மலேசியாவில் அதிகமான தேயிலையை உற்பத்தி செய்கிறது. 1929இல் ஜே.ஏ.ரஸ்சல் எனும் பிரித்தானியர் இந்தத் தோட்டத்தை தோற்றுவித்தார்.[5] அப்போதைய மலாயாவில் ரப்பர் தலையாய உற்பத்திப் பொருளாக இருந்தது. அடுத்த இடத்தில் ஈயம் இருந்தது. 1930களில் தேயிலையும் மலாயாவின் உற்பத்திப் பொருளாக உருவகம் பெற்றது.

மலேசியாவில் போ தேயிலை[தொகு]

கனிமப் பொருட்கள் கலந்த நல்ல மண், மிகுதியான மழை, கேமரன் மலையின் குளிர்ச்சியான தட்ப வெப்ப நிலை ஆகிய மூன்று காரணங்களே, தேயிலை உற்பத்திக்கு பிரகாசமான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்தன.

ஒரே ஒரு நீராவி இயந்திரம், விரல்விட்டு எண்ணக்கூடிய சில தொழிலாளர்கள் மட்டுமே அப்போது ஜே.ஏ.ரஸ்சலுக்குத் துணையாக இருந்தவர்கள். அத்துடன், தேயிலை மூட்டைகளை ஏற்றி இறக்க சில கோவேறு கழுதைகளையும் பயன்படுத்திக் கொண்டனர். அப்படி உருவாக்கப்பட்ட இந்த போ தேயிலைத் தோட்டம்தான், இப்போது உலக அளவில் பிரசித்தி பெற்று விளங்குகிறது. மலேசியாவில் போ தேயிலையைப் பயன்படுத்தாதவர்கள் இருப்பார்களா என்பது ஒரு சந்தேகமே.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Located at an elevation of 1,200 metres above sea-level". Archived from the original on 2012-09-05. பார்க்கப்பட்ட நாள் 2013-01-31.
  2. The Cameron Highlands is one of Malaysia’s most extensive hill stations. It covers an area of 712 square kilometres.[தொடர்பிழந்த இணைப்பு]
  3. Ringlet is the first township along the Cameron Highlands stretch, about 45km uphill using the trunk road from Tapah and 10km before Tanah Rata.
  4. "Cameron Highlands was named after William Cameron, a British government surveyor who stumbled across a plateau in 1885". Archived from the original on 2013-02-18. பார்க்கப்பட்ட நாள் 2013-01-31.
  5. "The story of BOH begins in 1890 when seven-year-old J.A. Russell arrived in Kuala Lumpur, Malaya with his father". Archived from the original on 2013-01-06. பார்க்கப்பட்ட நாள் 2013-02-01.
  6. "Having always enjoyed a relatively visual presence in the market, it was really during the 1970s that BOH broke through as a force in the field of consumer communications". Archived from the original on 2013-01-01. பார்க்கப்பட்ட நாள் 2013-02-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரிங்லெட்&oldid=3569790" இலிருந்து மீள்விக்கப்பட்டது