ரா. கணபதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ரா. கணபதி
பிறப்புசெப்டம்பர் 1, 1935(1935-09-01)
இறப்பு20 பெப்ரவரி 2012(2012-02-20) (அகவை 76)
தேசியம்இந்தியன்

ரா. கணபதி ( Ra Ganapati) (செப்டம்பர்1, 1935 – பிப்ரவரி 20, 2012) தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆன்மிக எழுத்தாளரும் தமிழறிஞரும் ஆவார்.

குடும்பம்[தொகு]

ரா. கணபதியின் தந்தையாருக்கு சொந்த ஊர் சிதம்பரம். பெயர் சி. வி. இராமச்சந்திர ஐயர். இவர் கணிதத்தில் ஹானர்ஸ் பட்டம் பெற்றவர், வேத விஞ்ஞானி, மற்றும் வர்த்தக வரித்துறை அதிகாரியாக பிரித்தானிய மற்றும் சுதந்திரத்திற்குப் பிந்தைய அரசாங்கங்களில் பணிபுரிந்தவர். தாய் ஜெயலட்சுமி கடலூரைச் சேர்ந்த வக்கீல் குடும்பத்திலிருந்து வந்தவர். கணபதியின் சகோதரி திரிபுரசுந்தரி சுப்பிரமணியன் ஆவார்.

கல்வி & தொழில்[தொகு]

கணபதி, சென்னையிலுள்ள இந்து உயர்நிலைப் பள்ளியிலும், பின்னர் பிரசிடென்சி கல்லூரியிலும் படித்தார். இவர் ஆங்கில இலக்கியத்தில் ஹானர்ஸ் பட்டம் பெற்றார். மெயில் பத்திரிகையில் செய்தியாளராகப் பணியாற்றி இருக்கிறார். கல்கி ஆசிரியக் குழுவில் பணியாற்றியவர். இசை அரசியான எம். எஸ். சுப்புலட்சுமியின் பரிந்துரைக் கடிதம் இவரின் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. "கல்கி" இதழின் ஆசிரியர், சதாசிவம், இக் கடிதத்தைப் படித்து, கணபதியை "கல்கி" குழுவில் இணைத்துக் கொண்டார். மேலும், இராஜாஜியின் "ஸ்வராஜ்ய" இதழில் தலையங்கம் எழுதியுள்ளார். "கன்யா" என்கிற புனைபெயரில் கல்கி இதழுக்கு, தலையங்கம் மற்றும் இசை விமர்சனங்கள் எழுதியுள்ளார். இவர், சமயம், கோவில்கள் மற்றும் புராணத் தொடர்களை எழுதியுள்ளார். இவற்றில் காஞ்சி மகா சுவாமிகள், அரியக்குடி இராமானுஜ ஐயங்காருக்கு விளக்கவுரை எழுதிய முத்துசுவாமி தீக்‌ஷிதரின் "ஸ்ரீ சுப்ரமண்ய நமஸ்தே", காற்றினிலே வரும் கீதம், ஜய ஜய சங்கர போன்றவை குறிப்பிடத்தக்கவை.

பணிகள்[தொகு]

இவரது முதல் பெரிய தொடர் "ஜய ஜய சங்கர" "கல்கி" இதழில் 1962இல் வெளிவந்தது.[1] இத் தொடரில் வரும் ஆதி சங்கரர் மற்றும் அவரின் தத்துவமான அத்வைத வேதாந்தம் தொடர்பாக எழும் சந்தேகங்களுக்கு விடை தேடி மக்கள் கணபதியைக் காண வருவார்கள். அச்சமயத்தில் இளைஞரான இவர் எவ்வாறு கடினமான தத்துவங்களை மக்களுக்கு புரியும் வகையில் எழுதுகிறார் என்று வியந்து போவார்கள். "கல்கி" இதழில் பத்தாண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்த பிறகு, மற்ற துறவிகளான இராமகிருஷ்ணர், சுவாமி விவேகானந்தர், சாரதா தேவி மற்றும் மீரா போன்றோரின் வாழ்க்கை வரலாற்றினை எழுதினார்.

25 வருடங்களுக்குப் பின்னர், 'கல்கி' குழுமத்திலிருந்து வெளியேறி பல நூல்களை எழுதியுள்ளார். இவர் காஞ்சி சங்கர மடத்தின் பக்தராகத் திகழ்ந்தவர். காஞ்சிப் பெரியவர் சொல்லச் சொல்ல அவருடைய கருத்துகள் மற்றும் உபந்நியாசங்களைத் தொகுத்து "தெய்வத்தின் குரல்” என்ற தலைப்பில் நூல் எழுதியுள்ளார். இது 7 பாகங்களாக வெளிவந்தது. மேலும் 'சத்ய சாய் பாபா', 'சுவாமி விவேகானந்தர்', 'ரமண மகரிஷி' மற்றும் 'யோகி ராம்சுரத்குமார்' போன்ற துறவிகள் குறித்து நூல்கள் எழுதியுள்ளார்.[2]

எழுதிய நூல்கள்[தொகு]

 • தெய்வத்தின் குரல் (7 பாகங்கள்)
 • காமகோடி ராமகோடி
 • காமாக்ஷி கடாக்ஷி
 • அம்மா - ஸ்ரீ சாரதாதேவியாரின் வாழ்க்கை வரலாறு
 • காற்றினிலே வரும் கீதம்
 • அறிவுக் கனலே அருட்புனலே - ராமகிருஷ்ணர் மற்றும் சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு
 • நவராத்திரி நாயகி
 • அன்பு வேணுமா அன்பு
 • சுவாமி விவேகானந்தர் வாழ்க்கை வரலாறு

இறப்பு[தொகு]

ரா. கணபதி, பிப்ரவரி 20, 2012 மகா சிவராத்திரி அன்று காலமானார்.

மேலும் பார்க்க[தொகு]

காஞ்சி சங்கர மடம்

மேற்கோள்கள்[தொகு]

 1. Charukesi. "Voice of Paramacharya". The Hindu. பார்த்த நாள் 2013-08-08.
 2. http://divyavidyatrust.org/index.html

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரா._கணபதி&oldid=2701474" இருந்து மீள்விக்கப்பட்டது