ராவுத்த குமாரசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ராவுத்த குமாரசாமி என்பவர் தமிழக நாட்டுப்புற தெய்வங்களில் ஒருவராவார். இவருக்கான கோயில் தமிழ்நாட்டின் கொங்கு நாட்டின், சிவகிரியை அடுத்துள்ள காகம் என்னும் சிற்றூரில் உள்ளது. ராவுத்த குமாரசாமியை கொங்கு வேளாளரில் கண்ணன் கூட்டத்தினர் காவல் தெய்வமாகவும், குலதெய்வமாகவும் வழிபடப்பட்டுவருகின்றனர். ராவுத்த குமாரசாமி என்பவர் ஒரு தமிழ் ராவுத்த முசுலீம் என்றும், இவர் ஒரு காலத்தில் கண்ணன் கூட்டத்தாரின் மூதாதையர்கள் ஓரு பெரும் சங்கடத்தில் இருந்தபோது, அவர்களைப் பாதுகாத்து, அவர்களின் குலம் தழைக்க உதவியவர். இதனாலேயே இவரை காவல் தெய்வமாகவும், குலசாமியாகவும் இம்மக்கள் வணங்குகின்றனர் எனப்படுகிறது.

கோயில் வரலாறு[தொகு]

சில ஆண்டுகளுக்கு முன்புவரை வயல்வெளியில் கூரைக்கடியில் சுதையில் அமைக்கப்பட்ட ராவுத்தசாமி சிலைகளுக்கு ஆகம முறைப்படி கோயில் கட்ட கண்ணன் கூட்டத்தார் விரும்பினர். ஸ்தபதியின் அறிவுரைப்படி ராவுத்தசாமிகளுக்கு வேங்கை மரத்தால் சிலைகள் செய்யப்பட்டன. இதோடு மூன்றாவது மூர்த்தியாக குமாரசாமியான முருகனின் கற்சிலை அபிஷேக மூர்த்தியாக இடம்பெற வேண்டும் என்ற ஸ்தபதியின் ஆலோசனைப்படி, கருவறையில் ராவுத்தர்களுடன் குமாரசாமியான முருகனும் வீற்றிருக்கின்றார்.

கோயில் அமைப்பு[தொகு]

ராவுத்தரின் கோயிலானது சிறு மினாராக்கள், விமானம் என்று வித்தியாசமான அமைப்பைக் கொண்டுள்ளது. கோயிலில் வாளை உயர்த்திப் பிடித்து அமர்ந்தவாறும், வாயில் சுருட்டுடன் கைலி உடுத்தி ஒருக்களித்துப் படுத்தவாறும், குதிரையின் மேல் அமர்ந்தவண்ணம் என வெவ்வேறு நிலைகளில் ராவுத்தர் சிலைகள் காணப்படுகின்றன. கருவறையில் குமாரசாமியான முருகனுக்குப் பின்னால், பீடத்தில் வாளை உயர்த்திப் பிடித்தவண்ணம், ஒரு கால் தொங்கவிட்டு அமர்ந்த நிலையில் இரு ராவுத்தர்கள் உள்ளனர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. கோம்பை எஸ்.அன்வர் (2018 சூன் 21). "ராவுத்த குமாரசாமி: தமிழ் சகோதரத்துவத்தின் இன்னொரு அடையாளம்!". கட்டுரை. தி இந்து தமிழ். பார்த்த நாள் 24 சூன் 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராவுத்த_குமாரசாமி&oldid=2546041" இருந்து மீள்விக்கப்பட்டது