ராம்கோ சிமெண்ட் நிறுவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராம்கோ சிமெண்ட் லிமிடெட் நிறுவனம்
வகைதனியார் நிறுவனம்
நிறுவுகை1961
நிறுவனர்(கள்)பி.ஏ.சி. ராமசாமி ராஜா
தலைமையகம்சென்னை, தமிழ்நாடு, இந்தியா
முதன்மை நபர்கள்பி.ஆர். வெங்கட்ராம ராஜா, நிர்வாக இயக்குநர்
ஏ.வீ. தர்ம கிருஷ்ணன், தலைமை நிர்வாக அதிகாரி
தொழில்துறைகட்டுமானப் பொருட்கள்
உற்பத்திகள்பைஞ்சுதை
வருமானம் US$3.7 billion (2014–15)[1]
இணையத்தளம்www.ramcocements.in

மெட்ராஸ் சிமெண்ட் லிமிடெட் நிறுவனம் என முன்னதாக அழைக்கப்பட்டு தற்போது 'ராம்கோ சிமெண்ட் லிமிடெட் நிறுவனம்' என மாற்றப்பட்ட இந்நிறுவனம் இந்தியா நாட்டின் தமிழ்நாடு மாநிலத்தின் தலைநகரமாம் சென்னையை தலைமையிடமாக கொன்டு 1961-ஆம் ஆண்டு பி.ஏ.சி. ராமசாமி ராஜா அவர்களால் ஆரம்பிக்கப்பட்டதாகும். இந்திய பைஞ்சுதை உற்பத்தியாளர்களிடையே மொத்தத் தயாரிப்பில் ஐந்தாவது இடம் பிடித்துள்ள இந்நிறுவனம் பைஞ்சுதை மட்டுமல்லாது உடனடியாக கட்டக்கூடிய ஆயத்த கலவை கள்காரைகள் மற்றும் உலர்ந்த கட்டிட கலவைகளையும் தயாரித்து வருகிறது. மேலும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் காற்றாலைகளையும் நிறுவி மின் உற்பத்தியிலும் ஈடுபட்டுள்ளனர். இந்நிறுவனத்தின் பெரும்பான்மையான தயாரிப்பு பைஞ்சுதை (சிமெண்ட்) ஆகும். உள்நாட்டில் தமிழகம், மேற்கு வங்காளம், ஆந்திரா மற்றும் கர்நாடகம் மாநிலங்களில் இயங்கும் இந்நிறுவனத்திற்கு சொந்தமான எட்டிற்கும் மேற்பட்ட பைஞ்சுதை மற்றும் கலவை ஆலைகளில் இருந்து 16 மில்லியன் டன் வருடத்திற்கு தயாரிக்கப்பட்டு விற்பனை செய்கின்றனர். ராம்கோ சூப்பர் கிரேடு எனப்படும் வணிகப்பெயரில் விற்பனை செய்யப்படும் பைஞ்சுதை வகை இந்நிறுவனத்தின் குறிப்பிடக்கூடிய தயாரிப்பாகும்.[2]

நிறுவன வரலாறு[தொகு]

1950-ஆம் ஆண்டுகளில் மத்திய தொழில்துறை மந்திரியாக இருந்த திரு. மனுபாய் ஷா அவர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க ஏற்கனவே இராஜபாளையம் ஊரில் பஞ்சாலைகள் நடத்திவந்தவரும், ராஜபாளையம் நகராட்சித் தலைவருமான திரு. ராமசாமி ராஜா அவர்களால் 1961-ஆம் ஆண்டு 1 கோடி ரூபாய் முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்நிறுவனமாகும். இந்திய தொழில்துறை வரலாற்றில் முதன்முறையாக தமிழக அரசாங்கம் இந்நிறுவனத்தில் 10 லட்சம் ரூபாய் தொழில் தொடங்க முதலீடு செய்தது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் உள்ள விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராமசாமி ராஜா நகரில் அமையப்பட்ட தனது முதலாவது பைஞ்சுதை ஆலையில் 200 டன்னுடன் 1962-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிறுவனம் ஆரம்பத்தில் ஈரமிக்க செயல்பாட்டை பயன்படுத்தி பைஞ்சுதை (சிமெண்ட்) தயாரித்தது. பின்னர் 1970களில் உலர் தயாரிப்பு முறைக்கு மாறியது. இரண்டு தயாரிப்பு வசதி கொண்ட இந்த ஆலையிலிருந்து வருடத்திற்கு 15 லட்சம் டன் பைஞ்சுதை உற்பத்தி செய்யப்படுகிறது.

இரண்டாவது தயாரிப்பு ஆலையாக ஆந்திர மாநிலம் விஜயவாடா நகரில் உள்ள ஜெயந்திபுரம் ஆலையில் 1987-ஆம் ஆண்டு முதல் உற்பத்தியில் ஈடுபட்டது. இவ்வாலையில் இருந்து பல்வேறு நவீன முறைகளில் கிட்டத்தட்ட 36 லட்சம் டன் வரை வருடத்திற்கு பைஞ்சுதை தயாரிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டின் ஆலத்தியூர் என்னும் இடத்தில் மூன்றாவதாக 1997-ஆம் ஆண்டு தயாரிப்பு ஆலை அமைக்கப்பட்டு 2001-ஆம் ஆண்டு இரண்டடுக்காக விரிவாக்கம் செய்யப்பட்டது. வருடத்திற்கு சராசரியாக 31 லட்சம் உற்பத்தி செய்யும் இந்த ஆலை, இந்தியாவில் மிகச்சிறந்த மற்றும் நவீன தயாரிப்பு ஆலைகளில் ஒன்றாகும்.

2009-ஆம் ஆண்டு தமிழகத்தில் அரியலூர் மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட இரண்டு தயாரிப்பு நிலையங்கள் கொண்ட ஆலையில் சுமார் 4 மில்லியன் டன் சிமெண்ட் உற்பத்தி செய்யப்படுகிறது.

ராமசாமி ராஜாவின் மகனான ராமசுப்பிரமணி ராஜாவின் மேலாண்மைப்படி இந்நிறுவனம் இந்திய அளவில் ஐந்தாவது பைஞ்சுதை தயாரிப்பு நிறுவனமாக வளர்ந்தது. தற்போது அவரது மறைவிற்கு [3] பின்பாக மூன்றாவது தலைமுறையாக 2017-ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் வெங்கட்ராம ராஜா தலைமையில் இந்நிறுவனம் நடைபோடுகிறது.

துணைத் தொழில்கள்[தொகு]

பைஞ்சுதை (சிமெண்ட்) தயாரிப்பில் மட்டுமல்லாது உடனடியாக கட்டக்கூடிய ஆயத்த கலவை கற்காரைகள் மற்றும் உலர்ந்த கட்டிட கலவைகளையும் இந்நிறுவனம் தயாரித்து வருகிறது. மேலும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் காற்றாலைகளையும் நிறுவி மின் உற்பத்தியிலும் ஈடுபட்டுள்ளனர்.

காற்றாலைகள்[தொகு]

1993-ஆம் ஆண்டு தமிழகத்தில் முப்பந்தல் என்னும் ஊரில் தனது முதலாவது காற்றாலையை அமைத்த இந்நிறுவனம் தொடர்ந்து 1995-ஆம் ஆண்டு கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பூலவாடியில் இரண்டாவதாகவும் 2005-ஆம் ஆண்டு ஊத்துமலையில் மூன்றாவதாகவும் காற்றாலை அமைத்துள்ளது. மொத்தமாக 125 மில்லியன் வாட் வரையில் இந்த காற்றாலைகள் மூலமாக மின் உற்பத்திச் செய்யப்படுகிறது.

பிற ஆலைகள்[தொகு]

2000-ஆவது ஆண்டு கர்நாடக மாநிலத்தில் இயங்கி வந்த ஆண்டுக்கு 3 லட்சம் டன் உற்பத்தி செய்துவந்த கோகுல் சிமெண்ட்ஸ் நிறுவனத்தை ராம்கோ சிமெண்ட் நிறுவனம் கையகப்படுத்தியது.

தமிழ்நாட்டிலுள்ள சேலம் செங்கல்பட்டு மாவட்டங்களிலும் மேற்கு வங்காளம் மாநிலத்திலுள்ள கோலாகட் என்னும் இடத்திலும் மற்றும் ஆந்திரா மாநிலத்தில் விசாகப்பட்டினம் மாவட்டத்திலுமாக நான்கு கட்டுமான கலவை ஆலைகளை இயக்கி வருகிறது. அதன்மூலம் ஆண்டுக்கு 40 லட்சம் டன் அளவிற்கு தயாரிப்பு நடைபெறுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "BSE Plus". BSE. பார்க்கப்பட்ட நாள் 2015-10-09.
  2. நிறுவனத்தைப் பற்றி, archived from the original on 2019-11-01, பார்க்கப்பட்ட நாள் 2019-10-17
  3. ராம்கோ குரூப் சேர்மன் ராமசுப்பிரமணிய ராஜா காலமானார்