ராமானுசன் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராமானுஜன்
இயக்கம்ஞான ராஜசேகரன்
தயாரிப்புஸ்ரீவத்சன் நடாத்தூர்
சுஷாந்த் தேசாய்
சரண்யன் நடாத்தூர்
சிந்து ராஜசேகரன்
கதைஞான ராஜசேகரன்
இசைரமேஷ் விநாயகம்
நடிப்புஅபிநய் வட்டி
அப்பாஸ்
சுஹாசினி மணிரத்னம்
கெவின் மெக்கௌன்
பாமா
மைக்கேல் லைபர்
ஒளிப்பதிவுசன்னி ஜோசப்
படத்தொகுப்புபி. லெனின்
வெளியீடுசூலை 11, 2014
மொழிதமிழ்
ஆங்கிலம்

ராமானுஜன், உலகப் புகழ்பெற்ற இந்தியக் கணிதவியலாளர் ஸ்ரீனிவாச ராமானுஜனின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம். 2014 ஆம் ஆண்டு வெளிவந்தது  ஞான ராஜசேகரன் எழுதி இயக்கிய இப்படம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் படமாக்கப்பட்டது. ஸ்ரீவத்சன் நடதூர், சுஷாந்த் தேசாய், ஷரண்யன் நடதூர், சிந்து ராஜசேகரன் ஆகியோரால் உருவாக்கப்பட்ட இண்டிபென்டென்ட் இந்தியன் புரொடக்சன் ஹவுஸ் கேம்பர் சினிமா நிறுவனம் இந்த படத்தைத் தயாரித்தது.  இந்திய, பிரிட்டிஷ், நாடுகளைச் சேர்ந்த  திரையுலக, மற்றும் மேடை  நடிகர்களைக் கொண்டு எடுக்கப்பட்டது. இதில் மூத்த தமிழ் திரைப்பட நடிகர்களான ஜெமினி கணேசன் மற்றும் சாவித்திரியின் பேரனான அபினய் தமிழில் கதாநாயகனாக அறிமுகப்படுத்தப்பட்டார் ..[1]

சுஹாசினி மணிரத்னம், பாமா, அப்பாஸ், நிழல்கள் ரவி, கெவின் மெக்குவன், மைக்கேல் லீபர் மற்றும் பலர் துணைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம், 1900களின் முற்பகுதியில் வாழ்ந்த ராமானுஜனின் வாழ்க்கை வரலாற்றைப் பின்தொடர்ந்து, கும்பகோணம், நாமக்கல், சென்னை, லண்டன் மற்றும் கேம்பிரிட்ஜ் ஆகிய ஐந்து இடங்களில் படமாக்கப்பட்டது.

இசை மற்றும் பின்னணி இசை ரமேஷ் விநாயகம் அமைத்துள்ளார். ஒளிப்பதிவு - சன்னி ஜோசப், படத்தொகுப்பு - பி. லெனின்.

2013 ஆம் ஆண்டு சிறந்த திரைப்படத்திற்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது இப்படத்திற்காக கிடைத்தது.ஆனால் படம் ஒரு வருடம் கழித்தே வெளியானது. இப்படம் 11 ஜூலை 2014 அன்று இந்தியா,ஐக்கிய இராச்சியம் மற்றும் உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது. தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியானது.

கதைச் சுருக்கம்[தொகு]

1900 களின் முற்பகுதியில் நடந்த கணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜர் இளம் தமிழ் பிராமணராக இருந்த காலம் முதல் இங்கிலாந்தில் அவரது ஆண்டுகள், அவர் முதலாம் உலகப் போரின் போது கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்த காலம் வரையிலான வாழ்க்கையை இப் படம் சித்தரிக்கிறது. தாயார் கோமளத்தம்மாள், அவரது மனைவி ஜானகி மற்றும் அவரது ஆதரவாளர் பேராசிரியர் ஜி.எச்.ஹார்டி. இவர்களுடனான அந்த புகழ்பெற்ற கணிதமேதையின் வாழ்க்கை விரிவடைகிறது.ராமானுஜன் அவர்களை இந்தியச் சமூகம் எப்படிப் பார்த்தது என்பதையும் இந்தத் திரைப்படம் காட்டுகிறது.[2]

நடிகர்கள்[தொகு]

• ஸ்ரீனிவாச ராமானுஜனாக, அபினய் வாடி[3]

• கோமளத்தம்மாளாக, சுஹாசினி மணிரத்னம் (சீனிவாச ராமானுஜனின் தாய்[4] )

• பாமா, ஜானகியாக (சீனிவாச ராமானுஜனின் மனைவி[5] )

• கெவின் மெகோவன், ஜி. எச். ஹார்டியாக

• பிரசாந்த சந்திர மஹாலனோபிஸாக, அப்பாஸ்

• இளம் சீனிவாச ராமானுஜனாக, அன்மோல்

• ஜான் எடென்சர் லிட்டில்வுட் ஆக, மைக்கேல் லீபர்

• ரிச்சர்ட் வால்ஷ் பிரான்சிஸ், வசந்தமாக

• திவான் பகதூர் ஆர். ராமச்சந்திர ராவ் (I. C. S) ஆக, சரத் பாபு.

• பேராசிரியர் சிங்காரவேலு முதலியாராக, ராதா ரவி

• பேராசிரியர் கிருஷ்ண சாஸ்திரியாக, மதன் பாப்

• எஸ்.நாராயண ஐயராக, ஒய்.ஜி.மகேந்திரன்

• கிருஷ்ணா ராவாக, மனோபாலா

• ஸ்ரீநிவாச ராகவனாக, நிழல்கள் ரவி

• அனந்துவாக, சதீஷ்குமார்

• சத்தியப்ரியா ராயராக, தலைவாசல் விஜய்

• கிருஷ்ணனாக, மணிபாரதி

• டெல்லி கணேஷ்

• சேசு ஐயராக, ராஜா கிருஷ்ணமூர்த்தி

• T. P. கஜேந்திரன் T. ,நம்பெருமாள் செட்டியாக

• மோகன் வி. ராம்

• க்ளவுடியா ஸ்வான், மிஸ். போர்னாக

• டாக்டர் சார்லஸாக மைக் பாரிஷ்

• சட்டர்ஜியாக, ஹர்ஷ் நாயக்

• லிஸி பார்ன், திருமதி கெர்ட்ரூட் ஹார்டியாக

தயாரிப்பு[தொகு]

நடிப்பு[தொகு]

இயக்குநர் ஞான ராஜசேகரன், ராமானுஜனைப் போன்ற உடலமைப்பும் முகமும் உள்ள ஒரு நடிகரைத் தேடி, மூத்த தமிழ் நடிகர் ஜெமினி கணேசனின் பேரனான அபினயைத் தேர்ந்தெடுத்து நாயகனாக ஒப்பந்தம் செய்தார். எடென்சர் லிட்டில்வுட் கதாபாத்திரத்தில் மைக்கேல் லீபர் ஒப்பந்தம் செய்யப்பட்டார். லீபர், ராமானுஜனைப் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று ஒப்புக்கொண்டார், அவர் படத்தில் கையெழுத்திட்டவுடன்  லிட்டில்வுட் உடன் தனிப்பட்ட முறையில் பணிபுரிந்த பெலா பொலோபாஸ் என்பவரை சந்தித்து ராமானுஜரைப் பற்றி அறிந்தார். முதலில் அவர் தமிழ் வரிகளை பேச மிக சிரமப்பட்டார், நாளாக தமிழைப் பெரிதும் விரும்பினார். "தமிழ் கற்பது எளிதானது என்று நான் சொன்னால் நான் பொய் சொன்னவனாவேன். ஆனால் அதை நான் புரிந்துகொண்டவுடன் பாராட்ட தொடங்கினேன்.தமிழ் ஒரு அழகான மொழி. தமிழ் வரிகளைக் கற்க பல்வேறு வழிகள் இருந்தன; சிலர் ஒலி நாடாக்கள், டெலிபிராம்டர், ஃபிளாஷ் அட்டைகள் அல்லது வார்த்தை பலகைகளைப் பயன்படுத்தினர்.நான் ஒவ்வொரு வார்த்தைகளின் அர்த்தத்தைக் கற்றுக்கொண்டேன், உரையாடல்களை அப்படியே மனப்பாடம் செய்தேன்"[1] என்றார். அதேபோல், ஜி.எச்.ஹார்டி வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட கெவின் மெகோவனும் , ராமானுஜரைப் பற்றி அறியாதவராகவே இருந்தார்.  இத்திரைப்படத்தில் பாமா, சுஹாசினி மணிரத்னம், அப்பாஸ் மற்றும் ரிச்சர்ட் வால்ஷ் உள்ளிட்ட மேலும் பலர் நடித்துள்ளனர்.[7][8] மலையாள இயக்குநர்கள் அடூர் கோபாலகிருஷ்ணன் மற்றும் ஷாஜி என். கருண் ஆகியோருடன் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து அந்தப் படைப்புகளால் பிரபலமடைந்த சன்னி ஜோசப் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

"எங்களிடம் ராமானுஜன் மற்றும் அவரது குடும்பத்தினரின் புகைப்படங்கள் மிகக் குறைவாகவே இருந்தன. ஆகவே, நாங்கள் அந்தக் காலத்து ஐயங்கார் மற்றும் பிற சாதிகளின் சமூக அமைப்பைப் பற்றி கிடைத்த தகவல்களை சார்ந்து, ராமானுஜருடைய கும்பகோணம் நாட்கள், சென்னை வாழ்க்கை பிறகு லண்டன், என்ற   மூன்று கட்டங்களை மனதில் வைத்து ஆடைகளை வடிவமைக்க வேண்டியிருந்தது."

- சகுந்தலா, ராமானுஜனுக்கான தோற்றத்தை வடிவமைத்தவர்.[6]

படப்பிடிப்பு[தொகு]

ராமானுஜனின் வாழ்வின் ஐந்து முக்கிய இடங்களான கும்பகோணம், நாமக்கல், சென்னை, லண்டன், கேம்பிரிட்ஜ் ஆகிய இடங்களில் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது.[9] முதல் இரண்டு படப்பிடிப்புகள் இந்தியாவில் படமாக்கப்பட்டது, மூன்றாவது இங்கிலாந்தில் படமாக்கப்பட்டது, அங்கு அவர்கள் படப்பிடிப்புக்கு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் அனுமதியைப் பெற்றனர்.[10] பல மொழிகளில் ஸ்கிரிப்டை உருவாக்கும் பணியை சிந்து ராஜசேகரன் மேற்கொண்டார். அவர் சொன்னபடி  "ராணியின் ஆங்கிலத்தில் பேசும் கனமான ஆங்கிலேயர்களை படத்தில் பார்க்க முடியாது. நடிகர்கள் இயல்பாகப் பேசுவார்கள்: தமிழ், ஆங்கிலம், இந்திய ஆங்கிலம், ஏன் தமிங்லீஷ் கூட பேசுவார்கள்:. மொழிகள் எல்லையில்லாத ஒரு உலகில் வாழ்வது எவ்வளவு மகிழ்ச்சியானது, இது வெற்றிபெற்ற ஒரு பரிசோதனை முயற்சியும் கூட ..."[11]

இசை[தொகு]

"எனது இசை ராமானுஜனின் மர்மமான, புரிந்துகொள்ள முடியாத, மாயமான, புதிய, இன்னும் புதிய, உலகம் அதிசயிக்கும் கணிதக் கோட்பாடுகளை அள்ளித்தரும், அந்த வெற்றியில் பேரின்பம் கொள்ளும், மனதை அதன் உலகில் வெளிக்கொணருகிறது, இந்த இசை ராமானுஜனின் வாழ்க்கையின் நம்பிக்கைக்கும் விரக்திக்கும்  இடையில் தவித்த அவரின் துயரங்களைப் பிரதிபலிக்கிறது. அந்த மேதையுடன் சேர்ந்தே வந்த தனிமையை சொல்லுகிறது ".

- விநாயகம், ராமானுஜனுக்கு இசையமைப்பது பற்றி[12]

படத்தின் ஒலிப்பதிவு மற்றும் இசையை ரமேஷ் விநாயகம் இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு இசையமைத்ததை பெருமையாகவும், "புதிய பாதையில் பயணிக்க எனக்கு கிடைத்த வாய்ப்பு" என்றும் விநாயகம் குறிப்பிட்டார், மேலும் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரால் தனக்கு தேவையான படைப்பு சுதந்திரம் வழங்கப்பட்டது என்றும் கூறினார்.[13]  படத்தின் ஒரு பாதி கிளாசிக்கல் இசையும் மற்றொரு பாதி ஐரோப்பிய இசையும் அமைக்க வேண்டியதாயிருந்தது..[14] நவீன கருவிகள் எதுவும் இல்லை, பழைய காலத்தை உயிர்ப்பிக்க முன் காலத்திய இசைக்கருவிகள் பயன்படுத்தப்பட்டன,[13] நான்கு ஆர்கெஸ்ட்ரா பகுதிகள் ஜெர்மனியில் பதிவு செய்யப்பட்டன,அங்கு அவர் ஸ்டட்கார்ட்டின் ஜெர்மன் பாப்ஸ் இசைக்குழுவுடன் பணிபுரிந்தார், இந்தக் குழு சமகால மற்றும் பாரம்பரிய பாணிகளில் இசையமைப்பவர்கள்.

ஒரு கணித மேதையைப் பற்றிய படம் என்பதால், பாடல்கள் கணிதச் சொற்களுடன் தொடர்பு கொண்டதாக இருக்கும்.கவிஞர் வாலி "நாராயண நாராயணா" எழுதியுள்ளார், இது "முடிவின்மை மற்றும் ஒன்றுமில்லாதது" என்ற எண்ணத்தை உள்ளடக்கியதாகக் கூறப்படுகிறது, திருமழிசை ஆழ்வார் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய மற்றொரு பாடல் "எண்கள் முழுமையானது என்பதை வலியுறுத்துகிறது".[15] குரல் இல்லா வெறும் இசைத் தடங்களில் ஒன்றான "ஒன் டு ஜீரோ" எண்களை அடிப்படையாகக் கொண்டு அமைந்ததால் அதை ஒரு இசைபுரட்சி என சொல்லலாம், விநாயகம் விளக்கியதாவது,"ஒன்று ஒரு ஸ்வரம்,இரண்டு இரண்டு ஸ்வரங்கள்,என போகும்,பூஜ்ஜியம் வந்தால் அமைதி..[15] இசை ஆரம்பித்த பிறகு, எந்த நேரத்திலும், எந்த இரண்டு இசைத் துடிப்புகளுக்கு மத்தியில் இந்த மூன்று தளங்களும்,ஒன்றுக்கொன்று குறுக்காகச் செல்லும்".[14] ] "நாராயணா" பாடலைப் பாடியவர் வாணி ஜெயராம், "நான் வழக்கமாகப் பாடுவதை விட சுருதி குறைவாக இருந்த ஒரு பாடலை தனக்குக் கொடுத்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது, ஆனால் ராமானுஜன் காலத்தில் இந்த சுருதியில்  மட்டுமே பாடினார்கள் என்பதை பின்னால் தெரிந்து கொண்டேன்".[14]

ராமானுஜன் படத்தின் ஒலிப்பதிவு ஆல்பம் 13 ஜூன் 2014 அன்று சென்னையில் உள்ள சூர்யன் FM வானொலி நிலையத்தில் வெளியிடப்பட்டது.[16][17] நான்கு பாடல்கள் மற்றும் நான்கு குரலில்லா இசைத்தடங்கள் என  எட்டு பாடல்களைக் கொண்டது.  விமர்சகர்களால் இந்த ஆல்பம் வெகுவும் பாராட்டப்பட்டது. இந்தியா க்ளிட்ஸ் தனது மதிப்பாய்வில் இப்படி எழுதியது, "ரமேஷ் விநாயகம் கடந்த காலங்களில் தனது அற்புதமான ஆல்பங்களால் பெரும் பெயர் பெற்றிருந்தார்.இந்த ஆல்பத்தின் மூலம் தனது பெயரை மீண்டும் ஒருமுறை நிலைநிறுத்தியுள்ளார்.பல வருடங்களாக அவர் எதிர்பார்த்துக்கொண்டிருந்த பெரும் வாய்ப்பாக இது இருக்கும் ". மியூசிக்அலவுடு.காம் இதற்கு 10க்கு 9 மதிப்பெண்கள் .அளித்தது, "ரமேஷ் விநாயகம் மிக திறமையாக கர்நாடக மற்றும் மேற்கத்திய கிளாசிக்கல் பாணிகளை சேர்த்து எக்காலத்தினும் சிறந்த, காலகட்டத் திரைப்பட இசையை அமைத்ததற்கான, பெருமையைப் பெறுகிறார்" என்று எழுதியது .[18] பிஹைண்ட்வுட்ஸ்.காம் இதற்கு 5 நட்சத்திரங்களுக்கு 3 நட்சத்திரங்களை அளித்து, "ராமானுஜன் கேட்போரை கிளாசிக்கல் இசையின் மூலம் கடந்த காலத்திற்கே கொண்டு செல்கிறது." என்று எழுதியது.[19] பிரபல மலையாள திரைப்பட இசையமைப்பாளர் எம். ஜெயச்சந்திரன், ராமானுஜனில் விநாயகத்தின் இசைக்காக அவரைப் பாராட்டினார்.[20] 2014 ஆம் ஆண்டின் சிறந்த தமிழ் இசை ஆல்பமாக ராமானுஜனை டெக்கான் மியூசிக்[21] மற்றும் மில்லி பிளாக்[22] அறிவித்தது.

வரிசை

எண்.

பாடல் தலைப்பு வரிகள் பாடலாசிரியர் பாடகர்(கள்) நீளம்
1. "நாராயணா" வாலி கார்த்திக் சுரேஷ், வாணி ஜெயராம் 4:33
2. "துளி துளியாய்" (பதிப்பு 1) நா. முத்துக்குமார் ரமேஷ் விநாயகம், வினயா 4:58
3. "விண்கடந்த" திருமழிசை ஆழ்வார் பி.உன்னிகிருஷ்ணன் 3:38
4. "துளி துளியாய்" (பதிப்பு 2) நா. முத்துக்குமார் ரமேஷ் விநாயகம், கௌசிகி சக்ரபர்த்தி 4:58
5. "மிஸ்டிக் மைண்ட்" (தீம்) - இசை மட்டும் 3:00
6. "ராமானுஜன்" (தீம்) - இசை மட்டும் 3:16
7. "ஆங்கில குறிப்புகள்" (தீம்) - இசை மட்டும் 6:58
8. "ஒன் டு ஜீரோ" - இசை மட்டும் 3:16

வெளியீடு[தொகு]

படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் 16 ஜூன் 2014 அன்று வெளியிடப்பட்டது.[23] 9 ஜூலை 2014 அன்று, ராமானுஜனின் தயாரிப்பாளர்கள் ராஷ்டிரபதி பவனில் ஒரு சிறப்புத் திரையிடலை ஏற்பாடு செய்தனர், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் அழைப்பைப் பெற்றனர்.[23] இப்படம் இந்தியாவிலும் ஐக்கிய ராஜ்ஜியத்திலும் ஒரே நேரத்தில் 11 ஜூலை 2014 அன்று தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் வெளியிடப்பட்டது. பிறகு, தயாரிப்பாளர்கள் படத்தின் VCD மற்றும் DVD வடிவங்களை 2014 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் வெளியிட்டனர், அதில் படமாக்கல், திரைக்குப் பின்னால், படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சிகள், ஆகியவை இடம்பெற்றிருந்தன.[24]

வரவேற்பு[தொகு]

இந்த படம் விமர்சகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றது, அவர்கள் பொதுவாக நடிப்பைப் பாராட்டினர், ஆனால் எழுத்தை விமர்சித்தார்கள். டெக்கான் க்ரோனிகல் ராமானுஜனை "ஒரு அற்புதமான சித்திரம், நல்ல காட்சியமைப்பு கொண்ட நவீன காலத்திற்கான படம்" எனப் பாராட்டி, "அவசியம் பார்க்க வேண்டிய படம், தவற விடக்கூடாது" என் எழுதியது.இதற்கு 3.5/5 நட்சத்திரங்களைக் கொடுத்தது.[25] ரெடிஃப்பின் எஸ். சரஸ்வதி, "ராமானுஜன் ஒரு அற்புதமான படம், அவசியம் பார்க்க வேண்டிய படம்" என்று எழுதி, படத்திற்கு 4/5 கொடுத்தார்.[26] தி ஹிந்துஸ்தான் டைம்ஸின் கௌதமன் பாஸ்கரன் இப்படத்திற்கு 3/5 நட்சத்திரங்களை அளித்து இப்படி எழுதினார்,"ஒரு பழமையான குடும்பத்தில் பிறந்த, ஒரு தலைசிறந்த மனிதன் எதிர் கொண்ட போராட்டங்களையும் வலிகளையும், ஒரு கணிதமேதைக்கு அவன் கணித வித்தை தந்த கேலி, வெறுப்பு, தாழ்மையை இப்படம் கூர்மையாக சொல்லுகிறது. படத்தின் திரைக்கதையை எழுதிய ராஜசேகரன், நேரியல் பாணியில்,  சிறுவன் ராமானுஜன் பூஜ்ஜியத்தின் முக்கியத்துவத்தை தனது பள்ளி ஆசிரியரிடம் சொல்லி அவரைக் கிண்டல் செய்வதில் துவங்கி, எண்களுடனான  தேடலில் அவன் முழுகுவதும் விளைவுகளால் ஏற்படும் விரக்தியும், பிரகாசிப்பதும் என  நம்மை அழைத்துச் செல்கிறார்".[27] சிஃபி எழுதியது, "வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படங்கள்,பயோபிக்களை உருவாக்குவது உண்மையில் மிகவும் சவாலானது, ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் வெளிக்கொணர்வதில், இயக்குனர் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளார். ஞான ராஜசேகரன் ராமானுஜத்தின் வாழ்க்கை வரலாற்றை நன்கு ஆராய்ந்து, செய்துள்ளார்... இது நிச்சயமாக தவறாமல் பார்க்க வேண்டிய படம்".[28] ஐஏஎன்எஸ் அதற்கு 3/5 கொடுத்து எழுதியது, "ஞான ராஜசேகரனுக்கு நிச்சயமாக ஒரு எழுச்சியூட்டும் கதையை விவரிக்கும் கலை தெரியும் அதில் வெற்றியும்  பெறுகிறார், ஆனால் அவரது படைப்பு உள்ளுக்குள் ஆழமாக எதிரொலிக்கவில்லை. இதற்கு காரணம் இயக்குனர்  பார்வையாளர்களை கவர்ந்திழுக்கும் திரைக்கதையை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை புறக்கணித்து, ராமானுஜனின் வாழ்க்கையிலிருந்து பல முக்கியமான நடப்புகளை திரையில் அப்படியே மீண்டும் உருவாக்க முயற்சித்தது ".[29] மூவிக்ரோவின் பரத் விஜயகுமார் 3/5 நட்சத்திரங்களை மதிப்பிட்டு, "ராமானுஜன் ஒரு உன்னதமான முயற்சி, வாழ்நாள் முழுவதும் தன கணிதத்தோடு உண்மையான அன்புடன் முழுவதாய் ஒன்றி வாழ்ந்த அந்த கணித மேதையின் வாழ்க்கை மற்றும் காலத்தைப் பற்றிய ஒரு அற்புதமான வேலைப்பாடு" [30]

இதற்கு நேர்மாறாக, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் இப்படி எழுதியது, "புகழ் பெற்றவர்களின் வாழ்க்கையை செல்லுலாய்டில் கொண்டு வர வேண்டும் என்ற இயக்குனரின் விடாமுயற்சி பாராட்டத்தக்கது. ஆனால் ஒரு திரைப்படம் அதன் கருவைப் பற்றியது மட்டுமல்ல, அது எவ்வாறு திரையில் காட்டப்படுகிறது என்பதும் அவசியமாகிறது.இந்த கணித மேதையின் வாழ்க்கை மற்றும் பயணம், ஏமாற்றமளிக்கிறது.சுவாரஸ்யம் அளிக்கவில்லை".[31] தி இந்துவின் பரத்வாஜ் ரங்கன் எழுதினார், "படம் ஏறக்குறைய மூன்று மணி நேரம் ஓடுகிறது, அது ஏன் தேவைப்பட்டது என்பது புதிராக இருக்கிறது. ராமானுஜனின் வாழ்க்கை நிகழ்வுகளை ஒரு நேராக நெறிப்படுத்த எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. எழுத்தும் ராமானுஜனை சுவாரஸ்யமாக்கத் தவறிவிட்டது. அந்த மேதை நிச்சயமாக ஒரு மிகச் சிறந்த திரைப்படத்திற்குத் தகுதியானவர்" [32] டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் எம். சுகந்த் 2.5/5 கொடுத்து எழுதினார், "வியக்க வைக்கும் திறமை கொண்ட ஒரு மனிதனைப் பற்றிய ஒரு திரைப்படம் எடுப்பது கற்பனைக்கு எட்டாதது. படம் சற்றே மெதுவாக நகர்கிறது. நடை, சில நேரம்,  தற்கால தொலைக்காட்சித் தொடர்களில் நீங்கள் காணும் மெலோடிராமா வகைக்குள் நழுவுகிறது.".[33] டெய்லி இந்தியா 2.5/5 அளித்து, "ஒட்டுமொத்தத்தில், ராமானுஜன் ஒரு நேர்த்தியான திரைப்படம், வாழ்க்கை வரலாற்று வகைகளில் மிகவும் அரிதான திரைப்படம். எடிட்டிங் மற்றும் ஒளிப்பதிவு பாராட்டத்தக்கது. மூத்த தமிழ் திரைப்பட நடிகர் ஜெமினி கணேசனின் பேரன் அபினய் தனது பங்கை சிறப்பாக செய்துள்ளார். தன பாத்திரத்தை மனதில் ஏற்றி நடித்துள்ளார் .".[34] Indiaglitz 2.25/5 கொடுத்து எழுதியது,  "ஒரு மேதையின் வாழ்க்கையை காட்ட ஒரு நேர்மையான முயற்சி, படம் சில இடங்களில் வேகத்தடைகளுக்குள் சிக்கிக் கொள்கிறது.".[35]

விருதுகள்[தொகு]

ராமானுஜன் 2013 ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படத்திற்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருதை வென்றது.[36]

மேலும் பார்க்கவும்[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. "Therein lies the genius". The Hindu. http://www.thehindu.com/features/cinema/therein-lies-the-genius/article5947251.ece?utm_source=RSS_Feed&utm_medium=RSS&utm_campaign=RSS_Syndication. பார்த்த நாள்: 26 April 2014. 
  2. KrishnamacharI, Suganthy.. ""Travails of a genius".". The Hindu. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராமானுசன்_(திரைப்படம்)&oldid=3850397" இலிருந்து மீள்விக்கப்பட்டது