உள்ளடக்கத்துக்குச் செல்

ராஜ சேவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராஜசேவை
திரைப்பட பதாகை
இயக்கம்கே. காமேஸ்வர ராவ்
தயாரிப்புஸ்வாதிஸ்ரி பிக்சர்ஸ்
இசைடி. வி. ராஜு
நடிப்புஎன். டி. ராமராவ்
எஸ். வி. ரங்கராவ்
டி. ஆர். ராமச்சந்திரன்
டி. எஸ். பாலையா
பி. எஸ். வீரப்பா
பி. கண்ணாம்பா
கிரிஜா
சௌகார் ஜானகி
வெளியீடுஅக்டோபர் 2, 1959
ஓட்டம்.
நீளம்16568 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ராஜசேவை 1959 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். கே. காமேஸ்வர ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் என். டி. ராமராவ், எஸ். வி. ரங்கராவ் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1] இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் ஒரே சமயத்தில் எடுக்கப்பட்டு. தெலுங்கில் ரேச்சுக்க-பகடிச்சுக்க என்ற பெயரில் வெளிவந்தது.[1]

கதைச் சுருக்கம்

[தொகு]

அருந் தவப் புதல்வனின் பிறந்தநாள் வைபவத்தை விஜயபுரி காவலன் விஜயவர்மனும், பத்தினி சுமதியும் கொண்டாடும் சுபதினத்தில் மன்னனிடமிருந்து அவசர அழைப்பு வருகிறது. தேவி பூஜைக்குத் திரும்பிவிடுவதாக மனைவியிடம் கூறி அரச சபைக்குப் புறப்படுகிறான் விஜயவர்மன்.

மக்கட்பேறில்லாத மன்னன் மகிபாலன், சகோதரன் விக்ரமனின் மைந்தன் உத்தமகுமாரை அபிமான புத்திரனாக வளர்த்து வருகிறான். அண்ணனின் அறியாமையைப் பயன் படுத்திக்கொண்ட விக்ரமன் ஆட்சியின் அதிகாரத்தை கைப்பற்றிக் கொள்கிறான். வேட்டைக்குச் சென்ற விக்ரமன் எல்லைப்புற மலைவாசிகளின் தலைவன் பொம்மண்ணாவின் மகள் கௌரியின் கற்பைக் கெடுத்து மணந்து கொள்ளுவதாக வாக்களித்து ஏமாற்றுகிறான். இதனால் மலைநாட்டார் எதிர்ப்பு ஏற்படும் என்று பயந்து சிற்றரசர்களின் சகாயத்தை நாடி சபை கூட்டுகிறான். அதே சபையில் பொம்மண்ணா கர்ப்பவதியான தன் மகள் கௌரியை அழைத்துக்கொண்டு வருகிறான். விக்ரமனால் நிராகரிக்கப்பட்ட கௌரி அந்தச் சபையிலேயே தற்கொலை செய்து கொள்ளுகிறாள். இதைக் கண்டு ஆவேசங்கொண்ட பொம்மண்ணா, அரச குடும்பத்தையே அழித்து விடுவதாக சபதம் செய்து மகளின் சவத்தைத் தூக்கிக்கொண்டு புறப்படுகிறான். பொம்மண்ணாவைக் கைது செய்ய உத்தரவிடுகிறான் விக்ரமன். இதை அநியாயம் என்று எதிர்க்கிறான் விஜயவர்மன். பொம்மண்ணா தப்பிச் செல்கிறான். இதற்கு உடந்தையாக இருந்ததாக விஜயவர்மன் சிறையிலடைக்கப்பட்டு, அவன் அரண்மனையும் தீக்கிறை யாக்கப்படுகிறது. தோவாலயத்திற்குச் சென்ற சுமதிவிபரம் தெரிந்து குழந்தையுடன் நாட்டைவிட்டு வெளியேறுகிறாள்.

தன் பொருட்டு சிறை புகுந்த விஜயவர்மனை சிறையினின்றும் வெளியேற்றிச் செல்கிறான் பொம்மண்ணா. விஜயவர்மனைத் தேடிப் பின் தொடர்கிறான் சேனாதிபதி வீரவர்மன். பொம்மண்ணாவின் நாடகத்தில் ஏமாந்த வீரவர்மன், விஜயவர்மன் இறந்துவிட்டதாக எண்ணி, அடையாளத்திற்கு அவன் தலைப்பாகையும், கத்தியும் எடுத்துக்கொண்டு நாடு திரும்ப, வழியில் ஒரு பாழடைந்த மலைக் கோயிலுக்கருகில் களைப்பாற வீரர்களுடன் தங்குகிறான். இதற்கு முன் வேறொரு பக்கம் குழந்தையுடன் உறங்கிக் கொண்டிருக்கிறாள் சுமதி. வீரர்களின் ஆர்ப்பாட்டத்தில் வெளியில் வந்த குழந்தையைக் கண்ட வீரர்கள், ஆண்டவன் அருளுடன் அனுப்பிய பிள்ளை என்று வீரவர்மனிடம் ஒப்படைக்கிறார்கள். குழந்தையின் அழு குரல் கேட்டு விழித்த சுமதி, உண்மை அறிந்து, பிள்ளையின் நலங் கருதி வீரவர்மன் இல்லத்தில் பெற்ற பிள்ளைக்கே தாதியாக, வருகிறாள். மறைந்த மாவீரன் விஜயவர்மனின் ஞாபகமாக குழந்தைக்கு விஜயகுமார் எனப் பெயரிடுகிறான் வீரவர்மன். கணவனின் மறைவு கேட்டு மனமுடைந்த சுமதி தீர விசாரித்து முடிவுசெய்யத் தீர்மானிக்கிறாள். மலைக் குகையில் விஜயவர்மன் முக மூடியுடன் சுக்ரதாராவாக மாறுகிறான்.

வெகு காலத்திற்குப் பின் மன்னனுக்கு பெண் குழந்தை ஒன்று பிறக்கிறது. அது தன் பிள்ளையின் பிற்கால வாழ்விற்கு பாதகமாக இருக்குமென நினைத்து, அதற்கு ஒரு முடிவு கட்ட முயற்சிக்கிறான் விக்ரமன். அந்த ஆபத்திலிருந்து, மன்னன் மகளைக் காப்பாற்றி. மகாராணியாக்கும்வரை நித்திரை செய்யப் போவதில்லை என்று மலைவாசிகளுடன் சபதம் செய்கிறான் சுக்ரதாரா. அந்த சுக்ரதாராவை சித்ரவதை செய்யாமல் நித்திரை செய்யப் போவதில்லையென அண்ணன் முன் சபதம் செய்கிறான் விக்ரமன்.

வருடங்கள் பல உருள்கின்றன. வீர்வர்மனிடம் விஜயகுமாரும், சுக்ரதாராவிடம் ராஜகுமாரியும், மன்னனிடம் உத்தம குமாரும், வளர்ந்து வாலிபப் பருவம் அடைகின்றனர்.

அவதாரம் என்னும் நண்பனுடன் விஜயகுமார் போர்ப் பயிற்சி சாலையில் நடக்கும் பயிற்சிகளுக்கு ஊக்கமளித்துக் கொண்டிருக்கிறான். அங்கு வந்த உத்தம குமாருக்கும், அவதாரத்துக்கும் ஏற்பட்ட சச்சரவில் கலந்து கொண்ட விஜயகுமார் மன்னன்முன் கொண்டுபோகப் படுகிறான். அப்படிப்பட்ட வீரனாக இருந்தால், விஜய தசமியன்று ஆஸ்தான மல்லனிடம் வெற்றி கண்டு, மன்னரின் வெகுமதியைப் பெறவேண்டுமென கட்டளையிடுகிறான் விக்ரமன், அப்போது உத்தம குமாரை இளவரசனாகப் பிரகடனம் செய்வதாகக் கூறுகிறான் மன்னன். இச்செய்தி அறிந்த சுக்ரதாரா உத்தம குமாரை சிறை கொண்டு செல்கிறான். சுக்ரதாராவையும். உத்தம குமாரையும் ஆறு மாதத்திற்குள் கொண்டு வராவிட்டால், தலை போய் விடுமென்று வீரவர்மனுக்கு உத்திரவிடுகிறான் விக்கிரமன். வீரவர்மனுக்கு நல்வாக்குக் கூறி உத்தம குமாரை மீட்கவும், சுக்ரதாராவைக் கண்டு பிடிக்கவும், அவதாரத்துடன் வெளியேறுகிறான் விஜயகுமார்.

பல இடங்களைச்சுற்றிய விஜயகுமாரும், அவதாரமும், கடைசியில் காட்டிலுள்ள ஒரு பாட்டியின் வீட்டை அடைகிறார்கள். மறுநாள் சுக்ரதாராவுக்காகச் சென்ற விஜயகுமார், வழியில் ஆபத்தில் சிக்கிய அபலைப் பெண் ணைக் காப்பாற்றி அவள் மீது காதல் கொள்கிறான். அவளே சுக்ரதாராவிடம் வளரும் ராஜகுமாரி.

மன்னன் கொடுத்த கெடு பதினைந்து நாட்களில் பூர்த்தயாகிறது என்றுணர்ந்த அவதாரம், அதிர்வேட்டுக்கு எதிர்வேட்டு ஒன்று போடாவிட்டால் வந்த காரியம் பலிதமாகாது என்று, விஜயகுமாருக்கு வக்ரதாரா எனப் பெயரிட்டு, அதை பாட்டியிடம் தெரிவிக்கிறான். அப்போது இதைக் கேட்டுக்கொண்டு வந்த பொம்மண்ணா, சுக்ரதாராவின் சாமர்த்தியத்தைக் காட்ட எண்ணி ஏமாற்றமடைகிறான். அந்தக் கோபத்தில் விஜயகுமாரை பொம்மண்ணாவும், அவதாரத்தை அவன் ஆட்களும், கைதுசெய்து சுக்ரதாரா குகைக்கு கொண்டு போகிறார்கள். அங்கு வீரப் போட்டியில் வெற்றி கண்ட விஜயகுமாருக்கு வேண்டிய வசதிகளும், இக்கட்டான நிலையிலுள்ள அவதாரத்துக்கு சிறைவாசமும் கிடைக்கின்றன. வக்ரதாராவைக் கண்டு பிடிக்க எல்லைபுற வீரர்களுக்கு உத்திரவிடச் செல்கிறான் சுக்ரதாரா. காளி பூஜையில் மெய்மறந்து மலைவாசிகள் ஒன்றுபட்டு இருக்கிறார்கள். இந்த சந்தர்ப்பத்தை எதிர்பார்த்த வக்ரதாரா மாறு வேஷத்துடன் சென்று சிறையிலுள்ள அவதாரம், உத்தம குமாரை விடுவித்து, ராஜ குமாரியுடன் தன் நாட்டிற்கு அனுப்பிவிட்டு, சுக்ரதாராவை அவன் எல்லையிலேயே சந்திக்க நிருபம் ஒன்று அனுப்புகிறான். இதுகண்டு ஆத்திரம் கொண்ட சுக்ரதாரா வக்ரதாராவை எதிர்த்து வருகிறான். இருவருக்கும் ஏற்பட்ட போராட்டத்தில் வக்ரதாரா வீழ்ச்சி அடையும் சமயம், அவன் கழுத்தில் கண்ட ரக்ஷையினால் திகைப்புற்ற சுக்ரதாரா, வக்ரதாராவால் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்படுகிறான்.

சிறையிலடைபட்ட சுக்ரதாரா என்னவாகிறான்? சுக்ரதாரா, வக்ரதாரா, தந்தையும் மகனும் என்பது எப்படி வெளியாகிறது? தாதியே தன் தாய் என்று எப்படித் தெரிந்துகொள்ளுகிறான் விஜயகுமார்? வஞ்சகனான விக்ரமன் சூழ்ச்சிகளின் விளைவு என்ன? காணாமல் போன ராஜகுமாரியை மன்னன் திரும்ப அடைவது எப்படி? வெள்ளித்திரை விளக்கம் கூறும்.

நடிகர்கள்

[தொகு]

நடிகர்கள்

[தொகு]

நடிகைகள்

[தொகு]
சிறப்புத் தோற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "1959 – ராஜசேவை – சுவாதி ஸ்ரீபிக்சர்ஸ் – (த-தெ)". Lakshman Sruthi (in Tamil). Archived from the original on 4 September 2017. Retrieved 19 September 2020.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜ_சேவை&oldid=4270627" இலிருந்து மீள்விக்கப்பட்டது