ராஜேந்திர விக்ரம் ஷா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ராஜேந்திர விக்ரம் ஷா
நேபாள மன்னர்
King Rajendra Bikram Shah Deva.jpg
ஆட்சி20 நவம்பர் 1816 – 12 மே 1847
முன்னிருந்தவர்கீர்வான் யுத்த விக்ரம் ஷா
பின்வந்தவர்சுரேந்திர விக்ரம் ஷா
துணைவர்சாம்ராஜ்ஜிய லெட்சுமி தேவி
இராச்சிய லெட்சுமி தேவி
வாரிசு(கள்)சுரேந்திர விக்ரம் ஷா
உபேந்திர விக்ரம் ஷா
ரணேந்திர விக்ரம் ஷா
பிரேந்திர விக்ரம் ஷா
அரச குடும்பம்ஷா வம்சம்
அரச குலமஷா வம்சம்
தந்தைகீர்வான் யுத்த விக்ரம் ஷா
தாய்கோக்காவின் ராஜ்ஜிய லெட்சுமி தேவி
பிறப்பு3 டிசம்பர் 1813
வசந்தபூர் அரண்மனை, நேபாளம்
இறப்பு10 சூலை 1881 (அகவை, 67)[1]
பக்தபூர், நேபாளம்
சமயம்இந்து சமயம்

ராஜேந்திர விக்ரம் ஷா (Rajendra Bikram Shah) (நேபாளி: राजेन्द्र विक्रम शाह) (1813–1881) நேபாள இராச்சியத்தை 1816 முதல் 1847 முடிய ஆண்டவர். இவரது ஆட்சிக் காலத்தின் முடிவில் ராண வம்சத்தினர், நேபாள இராச்சியத்தின் அதிகாரம் மிக்க பரம்பரை பிரதம அமைச்சர்களாகவும், தலைமைப் படைத்தலைவர்களாகவும் உருவானர்கள். 1846ல் ஜங் பகதூர் ராணா நேபாளத்தின் தலைமை அமைச்சராக பொறுப்பேற்ற அடுத்த ஆண்டில் மே, 1847ல் மன்னர் ராஜேந்திர விக்ரம் ஷாவை பதவிலிருந்து வலுக்கட்டாயமாக விலக்கி, இளவரசர் சுரேந்திர விக்ரம் ஷாவை நேபாள இராச்சியத்தின் மன்னராக முடி சூட்டினர்.

இளமை வாழ்க்கை[தொகு]

நேபாள மன்னர் கீர்வான் யுத்த விக்ரம் ஷா இறந்த் போது, மூன்று வயதான ராஜேந்திர விக்ரம் ஷா மன்னராக முடிசூட்டப்பட்டார். அவரது பெரியம்மாவான, ராணி திரிபுரசுந்தரி ராஜேந்திர ஷாவின் அரசப் பிரதிநிதியாக இருந்து, தலைமை அமைச்சர் பீம்சென் தபாவின் ஆலோசனையின் படி நேபாள இராச்சியத்தை நிர்வகித்தார். 1832ல் ராணி திரிபுரசுந்தரி இறந்தபின் தலைமை அமைச்சர் பீம்சென் தபா அதிகாரத்தின் கீழ் நேபாள இராச்சியம் இயங்கியது.

ஆட்சிக் காலம்[தொகு]

1832ல் பருவ வயது அடைந்த ராஜேந்திர விக்ரம் ஷா, இராச்சியத்தை தன்னிச்சையாக ஆள வேண்டி, 1837ல் முதலமைச்சர் பீம்சென் தபாவின் பதவியை பறித்ததுடன், படைத்தலைவரான அவரது அண்ணன் மகன் மதாபர் சிங் தபாவின் பதவியைப் பறித்து, ராணா ஜங் பாண்டேவை பிரதம அமைச்சர் பதவியில் அமர்த்தினார்.

முதலமைச்சர் பீம்சென் தபாவின் உறவினரான ராணி திரிபுரசுந்தரி மறைவுக்கு காரணமாக இருந்தவர் என பீம்சென் தபா மீது குற்றம் சாட்டப்பட்டு விசாரணை நடத்தினர். முடிவில் பீம்சென் தபாவின் அனைத்து சொத்துக்களைப் பறித்ததுடன், சிறையிலும் அடைத்தனர். 1839ல் பீம்சென் தபா சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.

உறுதியற்ற, திறமையற்ற, சூழ்ச்சி நிறைந்த மன்னர் ராஜேந்திரன் 1839 முதல் 1841 முடிய ஆட்சி நிர்வாகத்திலிருந்து விலகி இருந்தார். அச்சமயத்தில் ராஜேந்திர விக்ரம் ஷாவின் முதல் மனைவியும் நேபாள பட்டத்து ராணியுமான சாம்ராஜ்ஜிய லெட்சுமி தேவி, மன்னரின் அரசப் பிரதிநிதியாக நாட்டை நிர்வகித்தார். சாம்ராஜ்ஜிய லெட்சுமி 1841ல் இறந்துவிட, நேபாள பிரதம அமைச்சர் பதே ஜங் ஷாவுடன் இணைந்து, இளைய ராணி ராஜ்ஜிய லெட்சுமி தேவி, மன்னரின் அரசப் பிரதிநிதியாக நேபாள இராச்சியத்தை நிர்வகித்தார்.

கோத் படுகொலைகள்[தொகு]

நேபாள ராணி ராஜ்ஜிய லெட்சுமி நிர்வாகத்தின் கீழிருந்த இராச்சியத்தின் அரசவை பிரபுக்களிடையே அதிகாரங்கள் குறித்து அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டது. ராணி ராஜ்ஜிய லெட்சுமி தனது மகனும், பட்டத்து இளவரசரான சுரேந்திர விக்ரம் ஷாவை, ஜங் பகதூர் ராணா உதவியுடன் அரியணை ஏற்ற திட்டமிட்டார்.

இதனை பயன்படுத்திக் கொண்ட ராணா வம்சத்தின் ஜங் பகதூர் ராணாவும், அவரது சகோதர்களும் இணைந்து, 19 செப்டம்பர் 1846 அன்று காத்மாண்டு நகர சதுக்கத்தின் கோத் அரண்மனையில் இருந்த நேபாளப் பிரதம அமைச்சர் பதே ஜங் ஷா, மன்னர் ராஜேந்திராவின் மெய்க்காவலர்கள் உள்ளிட்ட நாற்பது பேரை படுகொலை செய்தனர்.

1847 முதல் நேபாள மன்னர்களை கைப்பொம்மையாகக் கொண்டு, ராணா வம்சத்தினர், நேபாள இராச்சியத்தின் சர்வாதிகாரிகளாக கிபி 1951 முடிய ஆண்டனர்.

ராணாக்களின் எழுச்சி[தொகு]

கோத் படுகொலைக்களுக்குப் பின்னர், ஜங் பகதூர் ராணா நேபாள இராச்சியத்தின் பிரதம அமைச்சராக பதவியேற்றார். மன்னர் ராஜேந்திர ஷா, இளவரசன் சுரேந்திர விக்ரம் ஷா மற்றும் ராணி ராஜ்ஜிய லெட்சுமி தேவி ஆகியோர், ஜங் பகதூர் ராணா பிடியின் கீழ் வந்தனர்.

தனக்கு உதவுவதாகக் கூறி ஏமாற்றிய ஜங் பகதூர் ராணாவைக் கொல்ல, ராணி ராஜ்ஜிய லெட்சுமி சதி செய்த போது, அவரையும், அவரது இரண்டு மகன்களையும், ஜங் பகதூர் ராணா நாடு கடத்தினார். அவர்களுடன் இணைந்து மன்னர் ராஜேந்திர விக்ரம் ஷாவும், புனிதத் தலமான வாரணாசிக்கு தீர்த்த யாத்திரைக்குப் புறப்பட்டார்.

பிந்தைய வாழ்க்கை[தொகு]

1847ல் ராஜேந்திர விக்ரம் ஷா, ஜங் பகதூர் ஷாவை ஒழித்துக் கட்ட சதித் திட்டம் தீட்டியதை அறிந்த ஜங் பக்தூர் ஷா, அவரை கைது செய்து, பக்தபூரிலும், பின்னர் பக்தபூர் அரண்மனையிலும் தங்க வைத்தார்.

மேலும் தன் அனுமதியின்றி மன்னர் ராஜேந்திர விக்ரம் ஷாவை யாரும் சந்திக்கக் கூடாது என அறிவித்தார். இளவரசர் சுரேந்திர விக்ரம் ஷா மட்டும் மாதம் ஒரு முறை மன்னர் ராஜேந்திர விக்ரம் ஷாவை சந்திக்க அனுமதி கிடைத்தது. மேலும் அரண்மனையில் மன்னர் யாருடனும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விவகாரங்கள் குறித்து பேச அனுமதிக்கப்படவில்லை. 10 சூலை 1881ல் ராஜேந்திர விக்ரம் ஷா தனது 67வது வயதில் பக்தபூர் அரண்மனையில் காலமானார்.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

ராஜேந்திர விக்ரம் ஷா
பிறப்பு: 3 டிசம்பர் 1813 இறப்பு: 17 மே 1881
ஆட்சியின்போதிருந்த பட்டம்
முன்னர்
கீர்வான் யுத்த விக்ரம் ஷா
நேபாள மன்னர்
1816–1847
பின்னர்
சுரேந்திர விக்ரம் ஷா
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜேந்திர_விக்ரம்_ஷா&oldid=3361813" இருந்து மீள்விக்கப்பட்டது