ராஜா பெண்டகாரா

ராஜா பெண்டகாரா ஆங்கிலம்: Raja Bendahara; மலாய்: Raja Bendahara Pahang; சாவி: راج بندهار) என்பது பகாங் சுல்தானகத்தில் ஒரு மன்னரைக் குறிக்கும் மலாய் பட்டப் பெயராகும். 1770-ஆம் ஆண்டில் இருந்து 1881-ஆம் ஆண்டு வரை பயன்பாட்டில் இருந்த இந்தப் பட்டப் பெயர், அரசன் (Raja); மற்றும் பெண்டகாரா (Bendahara) எனும் சமசுகிருதச் சொற்களின் கலவையாகும்.
17-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து ஜொகூர் பேரரசின் பெண்டகாராக்கள்; பகாங் இராச்சியத்தை ஜொகூர் சுல்தானகத்தின் ஒரு நிலமானியப் பகுதியாக ஆட்சி செய்தனர். 18-ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஆட்சி முறைமையில் மாற்றம் ஏற்பட்டது. பகாங் இராச்சியப் பகுதியை ஆட்சி செய்த பெண்டகாராக்கள் முழுமையான ஆட்சியாளராக உருவெடுத்தனர்.
ஜொகூர் சுல்தானின் அதிகாரப் பரவலாக்கத்திற்குப் பின்னர், ஜொகூர் பேரரசு துண்டாடப்பட்டது. அதைத் தொடர்ந்து பகாங் சுல்தானகத்தில் பொறுப்பில் இருந்த பெண்டகாரா என்பவர் ராஜா என்ற பட்டத்தைப் பெற்றார்.[1] [2]
தோற்றம்
[தொகு]மலாய் இராச்சியங்களின் அரசவையில் பெண்டகாரா பதவி மிக முக்கியமான; மிக உயர்ந்த நிர்வாகப் பதவியாகக் கருதப்பட்டது. பெண்டகாரா என்பவர் அனைத்து அமைச்சர்களுக்கும் தலைவராகப் பணியாற்றினார். அரச அறிவுரைஞராகக் கருதப்பட்ட ஒரு பெண்டகாரா, ஒரு சுல்தானால் நியமிக்கப்பட்டார். ஒரு சுல்தான் மட்டுமே ஒரு பெண்டகாராவைப் பதவி நீக்கம் செய்ய முடியும். பெண்டகாரா பதவி பரம்பரை பரம்பரையாகத் தொடர்ந்தது. பெண்டகாரா அரசமரபைச் சேர்ந்த ஆண் சந்ததியினர் வழிமுறையில் இருந்து வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
17-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பெண்டகாரா பதவி என்பது ஓர் அரசப் பதவியாக மாற்றம் கண்டது. மலாக்கா அரச மரபைச் சேர்ந்த ஜொகூர் மன்னராட்சியின் கடைசி ஆட்சியாளரான ஜொகூர் சுல்தான் இரண்டாம் முகமது சா (Mahmud Shah II of Johor) ஆண் வாரிசு இல்லாமல் இறந்தபோது இந்த மாற்றம் தொடங்கியது. அப்போதைய ஜொகூர் மன்னரின் பெண்டகாராவான துன் அப்துல் ஜாலீல் என்பவர் ஜொகூர் மன்னராட்சியில் அடுத்த சுல்தான் ஆனார். பின்னர் அவர் ஜொகூர் சுல்தான் நான்காம் அப்துல் ஜாலில் சா (Abdul Jalil Shah IV of Johor) என்ற பட்டத்தைப் பெற்றார்.
மாநில தன்னாட்சி
[தொகு]ஜொகூர் சுல்தான் நான்காம் அப்துல் ஜாலில் சா ஆட்சிக் காலத்தில், கிழக்கு மாநிலமான பகாங், பெண்டகாரா குடும்பத்தின் சிறப்பு மாநிலமாக நிறுவப்பட்டது. அந்தச் சிறப்பு மாநிலம், ஜொகூர் பேரரசின் அடுத்தடுத்த பெண்டகாராக்களால் நேரடியாக ஆளப்பட்டது. துன் அப்துல் மஜித் (Tun Abdul Majid of Pahang) ஆட்சிக் காலத்தில்; சிறப்பு மாநிலம் என்பது சிறப்பு மாநில தன்னாட்சி என தகுதி உயர்வு கண்டது. பின்னர் அந்த நிலை தற்காலைக நிலம் எனும் தானா பெகாங்கான் (Tanah Pegangan) என்பதிலிருந்து வழங்கப்பட்ட நிலம் எனும் தானா குர்னியா Tanah Kurnia) என மாற்றம் கண்டது.[3]
இதைத் தொடர்ந்து பகாங்கை ஆட்சி செய்த ஜொகூர் பெண்டகாரா, பகாங்கின் ராஜா (Raja) என்ற பட்டத்தைப் பெற்றார். அதன் பின்னர் அவர் ராஜா பெண்டகாரா என்று நிரந்தரமாக அழைக்கப்பட்டார்.[4]
பகாங் பெண்டகாரா பட்டியல்
[தொகு]| பெயர் | மலாய் பெயர் |
ஆட்சி பதவி | ஆட்சி காலம் |
|---|---|---|---|
| பகாங் துன் அப்துல் மஜீது | Tun Abdul Majid of Pahang | Sri Paduka Dato' Bendahara Paduka Raja | 1770–1802 |
| பகாங் துன் முகமது | Tun Muhammad of Pahang | Sri Paduka Dato' Bendahara Sri Maharaja | 1802–1803 |
| பகாங் துன் கோரிசு | Tun Koris of Pahang | Sri Paduka Dato’ Bendahara Paduka Raja | 1803–1806 |
| பகாங் துன் அலி | Tun Ali of Pahang | Sri Paduka Dato’ Bendahara Sewa Raja | 1806–1847 |
| பகாங் துன் முத்தாகிர் | Tun Mutahir of Pahang | Sri Paduka Dato’ Bendahara Sri Maharaja | 1847–1863 |
| பகாங் சுல்தான் முவாசாம் சா | Sultan Ahmad al-Muadzam Shah | Sri Paduka Dato’ Bendahara Sewa Raja | 1863–1881 |
மேற்கோள்
[தொகு]- ↑ Linehan 1973, ப. 51-52
- ↑ Ahmad Sarji Abdul Hamid 2011, ப. 82
- ↑ (Tun) Suzana (Tun) Othman 2002, ப. 75
- ↑ Linehan 1973, ப. 51-52
நூல்கள்
[தொகு]- Ahmad Sarji Abdul Hamid (2011), The Encyclopedia of Malaysia, vol. 16 - The Rulers of Malaysia, Editions Didier Millet, ISBN 978-981-3018-54-9
- Linehan, William (1973), History of Pahang, Malaysian Branch Of The Royal Asiatic Society, Kuala Lumpur, ISBN 978-0710-101-37-2
- (Tun) Suzana (Tun) Othman (2002), Institusi Bendahara: Permata Melayu yang Hilang: Dinasti Bendahara Johor-Pahang (The Bendahara Institution: The Lost Malay Jewel: The Dynasty of Bendahara of Johor-Pahang), Pustaka BSM Enterprise, ISBN 983-40566-6-4