ராஜாம்பாள் (1951 திரைப்படம்)
| ராஜாம்பாள் | |
|---|---|
| இயக்கம் | ஆர். எம். கிருஷ்ணசுவாமி |
| தயாரிப்பு | அருணா பிலிம்ஸ் |
| கதை | ஜே. ஆர். ரெங்கராஜு |
| இசை | எஸ். பாலச்சந்தர் |
| நடிப்பு | ஆர். எஸ். மனோகர் மாதுரி தேவி பி. கே. சரஸ்வதி கே. சாரங்கபாணி எஸ். பாலச்சந்தர் ‘பிரண்டு’ ராமசாமி சி. ஆர். ராஜகுமாரி டி. பி. முத்துலட்சுமி |
| ஒளிப்பதிவு | - |
| விநியோகம் | - |
| வெளியீடு | 1951 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
ராஜாம்பாள் 1951 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். எம். கிருஷ்ணசுவாமியின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஆர். எஸ். மனோகர், மாதுரி தேவி, எஸ். பாலச்சந்தர் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
நாடக உலகில் புகழ்பெற்றிருந்த மனோகரின் முதலாவது திரைப்படம் இதுவாகும். அக்காலத்தில் புகழ்பெற்ற எழுத்தாளர் ஜே. ஆர். ரங்கராஜூவின் கதைக்கு திரைக்கதை, வசனம் எழுதியவர் ஏ. டி. கிருஷ்ணசுவாமி.[1] இதே கதை 1935 ஆம் ஆண்டில் ராஜாம்பாள் என்ற இதே பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்டது.[1]
பி. கே. சரஸ்வதி இத்திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். வீணை எஸ். பாலச்சந்தர் இதில் நடேசன் என்ற பாத்திரத்தில் வில்லனாக நடித்திருந்தார். இவரே இப்படத்துக்கு பின்னணி இசையையும் வழங்கியிருந்தார்.[1]
கதைச் சுருக்கம்
[தொகு]சாமிநாத சாஸ்திரியும் - நடேச தீக்ஷதரும் நெடு நாளைய நண்பர்கள் -சாஸ்திரியின் மகள் ராஜாம்பாளும், தீக்ஷதரின் மகன் கோபாலனும் காதலர்கள்.
காதல் வழிதான் கரடுமுரடாயிற்றே-சாஸ்திரிகளென்னமோ இவர்களது கல்யாணத்தை கட்டாயமாக நடத்தியே தீரவேண்டுமென்று திட்டம் போட்டாலும் அவரது மனைவி கனகவல்லியோ தன் சக்களத்தியின் மகள் இராஜாம்பாளைத் தத்தாரியான தன் தம்பி நடேசனுக்குத் தாரை வார்க்கவேண்டுமென்று ஒரு காலில் நிற்கிறாள்.
அவள் எவ்வளவு சொல்லியும் அவர் மசியவில்லை கடைசியில் அவளது உபத்திரவம் தாங்காமல் தன் சொத்தில் பாதியை அவள் தம்பிக்கே அர்ப்பணமாய் எமுதி வைக்கிறார்.
இன்னும் அவள் திருப்தி அடையவில்லை. தனனுடைய பழைய திட்டம் நிறைவேறக்காசுக்கு கலம் பொய் சொல்லும் கல்யாணத்தரகன் ராமண்ணாவின் மூலம் சோதிடர்களைச் சரிசெய்து, கோபாலனுக்கும், ராஜாம்பாளுக்கும் ஜாதகப் பொருத்தம் இல்லையென்று சாதிக்கச் சொல்லுகிறாள்.
அவளது தம்பி நடேசனோ படித்துப் பட்டம் பெற்றும் பயனற்ற படாடோபப் பேர்வழி. அப்போது அவன் பாலாம்பாள் என்னும் வேசியோடு உல்லாச வாழ்க்கை நடத்தி வந்தான். தன்னை உதாசீனம் செய்யும் இராஜாம்பாளைப் பழிக்குப் பழி வாங்கும் உத்தேசத்துடனாவது தன் அக்காளின் உதவியால் கல்யாணம் செய்துகொள்ள வேண்டுமென்பதே அவனது தீவிரமான "ப்ளான்".
அன்றொரு நாள் பிச்சைக்கார விடுதியின் உதவி நிதிக்காக ராஜாம்பாள் ஆடிய நடனத்தைக் கண்ட அவ்வூர் கிழ சப்மாஜிஸ்ட்ரேட் நீலமேக சாஸ்திரிக்கு வாலிபம் திரும்புகிறது. அவரும் எப்படியாவது அவளை மணம் செய்துகொள்ள வேண்டுமென்று அதற்காக மேற் சொன்ன அதே ராமண்ணாவின் உதவியை நாடுகிறார். ராமண்ணாவுக்கு அடிக்கிறது யோகம்! ஜாதகப் புரட்டு செய்ய ஒரே சமயத்தில் இரண்டிடங்களிலிருந்து இரட்டிப்பு சன்மானம் கிடைக்கிறது.
இதற்கிடையே இக்காதலர்களின் பழைய ஸ்நேகிதியும், செல்வமும், சீரும், செழிப்பும் மிக்க இளம்விதவையான லோகசுந்தரி கோபாலன்மேல்காதல் கொள்கிறாள். அவனோ அவளது எண்ணம் அறியாமல் சீர்திருத்தக்காரனது ஆவேசத்தோடு அவள் எவனாவது ஒருவனை மறுமணம் செய்துகொள்ள வேண்டுமென்று உபதேசம் செய்கிறான். அந்த எவனாவது ஒருவன் அவனே என்று அவள் அவனை அணைக்க வருகிறாள். அவளது காதலை அவன் மறுத்து விடுகிறான். அதுமுதல் தன் எண்ணம் ஈடேற அவள் தக்க சமயத்தை எதிர்பார்த்திருக்கிறாள். இக்கல்யாணத்தைத் தடுக்க நடேசன் செய்யும் முயற்சிகளுக்கு உடந்தையாய் இருக்கிறாள்.
இனிமேல் தான் சம்பவங்கள் வெகு வேகமாக செல்லுகின்றன. முன்னேற்பாட்டின்படி ஜோதிடர்கள் தங்கள் பங்கான தகிடுதத்தத்தைச் செய்து விடுகின்றனர். ஜாதகப் பொருத்தம் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, தன் மகளை கோபாலனுக்கே கொடுக்கப்போவ தாக உறுதி கூறுகிறார் சாஸ்திரி.
இவ்வாறாக தங்கள் முயற்சியில் தோல்வி கண்ட சப் மாஜிஸ்ட்ரேட்டும், ராமண்ணாவும் புது சூட்சிகளை யோசிக்கின்றனர். அதன்படி சில திருட்டு நகைகளை ராமண்ணா, சாஸ்திரியின் வீட்டில் ஒளித்துவைக்க ஸப் - இன்ஸ்பெக்டர் மணவாள நாயுடு அவரைக் கைது செய்கிறார். சிறையில் ஒன்று ஸப்மாஜிஸ்ட்ரேட்டின் இஷ்டத்திற்கு இணங்கவேண்டும், இல்லையேல் அவர் சிறை செல்வதோடு கூட, கொலைக் கேஸ் மூலம் கோபாலனையும் இழந்துவிடத் தயாராய் இருக்கவேண்டுமென்று தெரிந்து, வேறு வழியின்றி ராமண்ணாவின் யோசனைக்கு தலைசாய்க்கின்றார்.
இவை யாவற்றையும் அறிந்த இராஜாம்பாள், தனக்குள்ளாகவே ஒரு பழிவாங்கும் திட்டத்தைத் தயார்செய்து கொள்ளுகிறாள். யாதொரு தடையும் கூறாமல் அவள் நீலமேக சாஸ்திரியை கல்யாணம் செய்துகொள்ள ஒப்புக் கொண்டது எல்லோருக்கும் ஆச்சர்யமாயிருக்கிறது. பகிரங்கமாக அவள் கோபாலனிடம்கூட வெறுப்புடன் நடந்துகொண்டாள். எனினும், அந்தரங்கத்தில் இருவருக்கும இடையே ஒரு ரகஸிய ஏற்பாடு உருவாகி வந்தது.
கோபாலன் வீட்டு வேலைக்காரனான முருகனை வசப்படுத்திக்கொண்டு லோகசுந்தரி காதலர்களுக்கிடையே நடக்கும் கடிதப்போக்குவரத்துகளின் அந்தரங்கங்களை யெல்லாம் அறிந்து கொள்ளுகிறாள். கடைசிக் கடிதத்தில் அவர்கள் இருவரும் இரவு 2 மணிக்கு சந்திக்க வேண்டுமென்று கோபாலன் எழுதியிருந்ததை 12 மணி என்று மாற்றி எழுதி அனுப்பிவிடுகிறாள். அவ்விஷயங்களை எல்லாம் கடிதமூலம் அறிவித்து நடேசனையும் வர வழைக்கிறாள். இரவு 12 மணிக்கு தன் காதலனைக் காணவரும் இராஜாம்பாளைக் கடத்திச்செல்வதென்று இருவரும் திட்டம் போடுகின்றனர்.
லோகசுந்தரியைக் காணப்போகும் அவசரத்தில் மறதியாக அவள் கடிதத்தை பாலாம்பாள் வீட்டிலேயே விட்டுவிட்டுச் செல்கிறான் நடேசன். அக்கடிதத்தைப் படித்த பாலாம்பாள் பொறாமை மிகுந்தவளாய் அவனைப் பின் தொடர்கிறாள்.
இதற்குமுன் பாலாம்பாளை வைப்பாக வைத்திருந்த நரசிம்மலு நாயுடு என்பவன் தன் காதலியான பாலாம்பாள் நடேசன் பின்னால் போனதை அறிந்து கோபமுற்று அவளைப் பழிவாங்க அவளைப் பின் தொடர்கிறான்.
குறிப்பிட்ட இரவில், குறிப்பிட்ட நேரில், குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட காதலனைக் காணச் செல்லுகிறாள். தயாராய் இருந்த நடேசனும், லோகசுந்தரியும், அவளைக் கடத்திச் செல்ல முயற்சிக்கின்றனர். அதே சமயம் திருட்டுத்தனமாய் அங்கு நுழைந்த பாலாம்பாளை அவள் பின்வந்த நரசிம்மலு நாயுடு கத்தியால் குத்துகிறான். இந்த இடையூற்றைக் கண்ட நடேசனும் ஆத்திரத்தால் பாலாம்பாளை சுட்டுவிடுகிறான். இராஜாம்பாள் வீறிட்டு கத்துகிறாள். நடேசனும் லோகசுந்தரியும் பயந்து ஓடிவிடுகின்றனர். ராஜாம்பாளை அங்கு கண்ட நாயுடு மயக்கங் கொடுத்து அவளைத் தூக்கிச் செல்லுகிறான். ஓடும் அவசரத்தில் அங்கிருந்த விளக்கு கீழே விழுந்து, பாலாம்பாளின் ஆடையில் நெருப்புப் பற்றிக்கொள்கிறது.
கல்யாண வீட்டில் பெண்ணைக் காணோமென்று ஒரே களேபரம். சாமிநாத சாஸ்திரி தன் மகள் தனக்கு எழுதியுள்ள கடிதத்தைக் காண்கிறார். நீலமேக சாஸ்திரி அடியுண்ட வேங்கைபோல் உறுமுகிறார். இராஜாம்பாளின் கடிதத்தின் மூலம் அவள் போன இடத்தை அறிந்து போலீஸ் தேடிச் செல்லுகிறது. அப்போதுதான் கோபாலன் தன் காதலி என்று எண்ணி பாலாம்பாள் சவத்தின் மேல் விழுந்து நெருப்பை அணைக்க முயல்கிறான். அதைக்கண்ட போலீஸார் இராஜாம்பாளைக் கொலை செய்தவன் கோபாலனே என்று அவனைக் கைது செய்கின்றனர். இராஜாம்பாளின் கதி ஏன்ன? கோபாலன் குற்றவாளியா? என்பது மீதிக் கதை.
இசை
[தொகு]பாடல்களுக்கு எம். எசு. ஞானமணி இசையமைத்தார். பின்னணி இசையை எசு. பாலசந்தர் அமைத்தார்.[2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 ராண்டார் கை (3 சனவரி 2009). "Rajambal 1951". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/rajambal-1951/article654523.ece. பார்த்த நாள்: 23 செப்டம்பர் 2016.
- ↑ Guy, Randor (3 January 2009). "Rajambal 1951". தி இந்து. Archived from the original on 18 June 2017. Retrieved 18 June 2017.
- ↑ Neelamegam, G. (December 2014). Thiraikalanjiyam — Part 1 (in Tamil) (1st ed.). Chennai: Manivasagar Publishers. p. 25.
{{cite book}}: CS1 maint: unrecognized language (link)