உள்ளடக்கத்துக்குச் செல்

ரஞ்சனா குமாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரஞ்சனா குமாரி
2015-இல் பாரிஸில் நடைபெற்ற ஈரான் சுதந்திரப் பேரணியில் குமாரி உரையாற்றுகிறார்.
பிறப்புவாரணாசி, உத்தர பிரதேசம், இந்தியா
கல்வி
  • பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகம், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (அரசியல் அறிவியலில் எம்.ஏ., எம்.ஃபில்., பிஎச்.டி.)
பணிகல்வியாளர், செயல்பாட்டாளர்
அறியப்படுவதுபெண்களின் உரிமைகள்

ரஞ்சனா குமாரி (Ranjana Kumari) ஓர் இந்திய சமூகச் செயற்பாட்டாளர், எழுத்தாளர், கல்வியாளர் ஆவார். இவர் தில்லியில் உள்ள சமூக ஆய்வு மையத்தின் இயக்குநராகவும், பெண்கள் அமைப்புகளின் தேசிய அமைப்பான பெண்கள் ஆற்றல் இணைப்பின் தலைவராகவும் பணியாற்றி வருகிறார்.[1]

ஆரம்ப வாழ்க்கையும் கல்வியும்

[தொகு]

ரஞ்சனா குமாரி உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில், காசி வித்யாபீட வளாகத்தில் வளர்ந்தார்.[2] இவர் சந்திரவதி சர்மா, பனாரசி சேலைகள் தயாரிப்பாளரான ஜெயநாத் ஆகியோருக்குப் பிறந்தார். ஆறு பிள்ளைகளில் இரண்டாவது குழந்தையும், மூத்த மகளும் ஆவார்.[3] இவரது தாத்தா பண்டிட் விஸ்வநாத் சர்மா, காசி வித்யாபீடத்தின் நிறுவனர்களில் ஒருவராவார். தனது குடும்பம் மிகவும் காந்தியக் கொள்கைகளைப் பின்பற்றிய குடும்பம் என்று ரஞ்சனா குமாரி குறிப்பிட்டுள்ளார். இவரது சிறுவயது தோழிகளில் பெரும்பாலோர், பன்னிரண்டாம் வகுப்பைப் படித்து முடிப்பதற்குள், பெற்றோரின் ஏற்பாட்டில் திருமணம் செய்து கொண்டனர். மத்திய இந்து மகளிர் பள்ளியில் தொடக்கக் கல்வியை முடித்த பிறகு, மகளிர் கல்லூரியில் சேர வேண்டும் என்ற தனது பாட்டி மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களின் அழுத்தத்தை இவர் எதிர்த்தார். அதற்குப் பதிலாக பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அங்கு அரசியல் அறிவியல், உளவியல், பொருளாதாரம் ஆகிய பாடங்களைப் பயின்று, 1974 ஆம் ஆண்டு பட்டம் பெற்றார். பின்னர் தில்லிக்குச் சென்று, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டமும் முனைவர் பட்டமும் பெற்றார். இவரது முனைவர் பட்ட ஆய்வு, பஞ்சாயத்து ஆட்சிமுறையின் அதிகார அமைப்புகள் குறித்ததாக இருந்தது. இதில் குறிப்பாக பெண்களின் பங்கு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

பணியியல் வாழ்க்கை

[தொகு]

1976 ஆம் ஆண்டு அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்ற பிறகு, தனது தந்தையின் மறைவையடுத்து, ரஞ்சனா குமாரி நான்கு ஆண்டுகள் தில்லிப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். அந்தக் காலகட்டத்தில், சமூகச் செயற்பாட்டாளர் பிரமிளா தண்டவதேயுடன் இணைந்து வரதட்சணை கொலைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றார். அதன்பின் வரதட்சணை கொலைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளத் தொடங்கினார். 1983 ஆம் ஆண்டு, சமூகத்தில் புறக்கணிக்கப்பட்ட மக்களின் அதிகாரமளிப்பை நோக்கமாகக் கொண்டு, தில்லியைத் தலைமையிடமாகக் கொண்ட சமூக ஆய்வு மையம் என்ற இலாபநோக்கற்ற அமைப்பை நிறுவினார்.[4] இதன் மூலம் இவர் இந்தியாவில் குறிப்பிடத்தக்க பெண்கள் உரிமைச் செயற்பாட்டாளராக உருவெடுத்தார். [5] வரதட்சணை கொலைகள், 2014 ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் இரண்டு சிறுமிகள் கூட்டுப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம், இந்தியப் பெண்கள் மீது கொரோனா பெருந்தொற்றின் தாக்கம், பாலியல் வன்முறைக்கு ஆளானவர்களை இழிவுபடுத்துதல், பாலியல் வன்முறையின் பரவல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து இவர் கருத்து வெளியிட்டுள்ளார்.[6][7][8][9][10] பெண்களுக்கான இடஒதுக்கீட்டு சட்டத்திற்கு ஆதரவாக முன்னெடுத்த இயக்கத்திற்குப் பிறகு, 2011 ஆம் ஆண்டு அவளே ஆள்வாள்: அரசியல் வெளியில் பெண்களின் போராட்டம் என்ற நூலை வெளியிட்டார். அந்த நூலில், இந்தியப் பெண்கள் அரசியலில் குறைவாக பங்கேற்பதற்கான காரணிகளை ஆய்வு செய்தார்.[11]

2013 ஆம் ஆண்டு இந்தியாவில் வாடகைத் தாய்மை தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட இவர், 2014 ஆம் ஆண்டு அதற்கான சட்டப் பாதுகாப்புகளை உருவாக்குமாறு அரசுக்கு பரிந்துரைகளை அளித்தார். 2021 ஆம் ஆண்டு இதுகுறித்து இவர் கூறுகையில், நாங்கள் ஒருபோதும் தடை விதிக்க வேண்டும் என்று விரும்பவில்லை. ஆனால் குழந்தையைப் பெறுவதற்காகத் தங்கள் கருப்பையை வழங்கும் பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பு வேண்டும் என்பதையே விரும்பினோம். தடை விதிப்பது ஒருபோதும் தீர்வாக இருந்ததில்லை. போதைப்பொருளுக்கும் மதுவுக்கும் அது செயல்படவில்லை. மனித வாழ்க்கையுடன் இவ்வளவு நெருக்கமாகத் தொடர்புடைய ஒரு விஷயத்தில் அது எப்படி செயல்படும்? என்று தெரிவித்தார்.[12] 2013 ஆம் ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்ற ஒரு பில்லியன் எழுச்சி இயக்கத்தில் பங்கேற்ற இவர், 2012 ஆம் ஆண்டு நிர்பயா கூட்டுப் பாலியல் வன்முறை, கொலைச் சம்பவத்திற்குப் பிறகு ஏதோ ஒன்று என்றென்றும் மாறிவிட்டது. இங்குள்ள பெண்கள் இனி தங்களைத் தாங்களே பாதுகாத்துக்கொள்ள வேண்டுமென்ற மொழியைப் பயன்படுத்தவில்லை. இன்று அவர்கள், எங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த சமூகமே என்ன செய்கிறது? என்று கேட்கிறார்கள் என்று கூறினார்.[13] 2013 ஆம் ஆண்டு ஆகஸ்டில் மும்பையில் நடைபெற்ற கூட்டுப் பாலியல் வன்முறை சம்பவத்திற்குப் பிறகு, குற்றஞ்சாட்டப்பட்டவர்களை உடனடியாகக் கைது செய்யக் கோரி போராட்டங்களை நடத்த அழைப்பு விடுத்தார். இன்று யாரும் பாதுகாப்பாக இல்லை. ஏனெனில் குற்றவாளிகள் தண்டனையின்றி தப்பித்துச் செல்கின்றனர் என்று இவர் தெரிவித்தார்.[14]

2017 ஆம் ஆண்டு, இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்ததாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து, அரசின் நடவடிக்கைகளின் செயல்திறனை விமர்சித்தார். பெண்களின் பாதுகாப்புக்கும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் உள்ள தொடர்பை விளக்கி, காவல்துறையினருக்குப் பயிற்சி அளித்தல், சமூக ஊடகங்களைப் பயன்படுத்துதல், பெண்கள் பாதிக்கப்பட்டவர்களிடம் அதிக மனிதநேயத்துடன் அணுகும் வகையில் நீதித்துறையில் மாற்றங்கள் செய்தல் போன்ற பரிந்துரைகளை முன்வைத்தார். மேலும், பெண்கள் இப்போது தைரியமாகக் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர். ஆனால் வேலை, எதிர்காலம் மற்றும் வருமானத்திற்காக அவர்கள் ஆண்களைச் சார்ந்திருக்கும் வரை, அவர்கள் விருப்பத்தால் அல்ல, சூழ்நிலையால் மௌனமாகவே இருக்க வேண்டியிருக்கும் என்று கூறினார்.[15] 2018 ஆம் ஆண்டு இந்தியாவில் மீ டூ இயக்கம் குறித்து பேசிய இவர், பெண்கள் கூட்டாகக் குரல் எழுப்பி, தாங்கள் எதிர்கொண்ட அனுபவங்களைப் பொதுவெளியில் வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்வது இதுவே முதல் முறை. இது இந்தியாவில் மிகப்பெரிய இயக்கமாக உருவெடுக்கும் என்று தெரிவித்தார்.[16]

தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்கள்

[தொகு]
  • ரஞ்சனா குமாரி (1989)- மணப்பெண்களை எரிப்பதற்கல்ல: இந்தியாவில் வரதட்சணைக் கொலையின் பலியான பெண்கள். புதுதில்லி.
  • ரஞ்சனா குமாரி (1989)- கிராமப்புற இந்தியாவில் பெண்கள் தலைமையிலான குடும்பங்கள். புதுதில்லி: ரேடியன்ட் பதிப்பகம்.
  • பிரமிளா தண்டவதே, ரஞ்சனா குமாரி, ஜமிலா வர்கீஸ் (1989)- இந்தியாவில் கைம்பெண்கள், கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற பெண்கள். புதுதில்லி: ரேடியன்ட் பதிப்பகம்.
  • ரஞ்சனா குமாரி (1990)- கிராமப்புற இந்தியாவில் வளர்ந்து வரும் பருவம்: இளம்பெண்களின் சிக்கல்களும் தேவைகளும். புதுதில்லி: ரேடியன்ட் பதிப்பகம்.
  • ரஞ்சனா குமாரி (1994)- பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள்: இந்தியச் சூழலில் ஒரு ஆய்வு. ஹர்-ஆனந்த் பதிப்பகம்.
  • ரஞ்சனா குமாரி (1998)- பாலினம், வேலை, அதிகார உறவுகள்: அரியானாவை மையமாகக் கொண்ட ஒரு வழக்காய்வு. ஹர்-ஆனந்த் பதிப்பகம்.
  • ரஞ்சனா குமாரி (2011)- அவளே ஆள்வாள்: அரசியல் வெளியில் பெண்களின் போராட்டம். ஹர்-ஆனந்த் பதிப்பகம்.

விமர்சன வரவேற்பு

[தொகு]

மணப்பெண்களை எரிப்பதற்கல்ல: இந்தியாவில் வரதட்சணைக் கொலையின் பலியான பெண்கள் என்ற நூலைப் பற்றிய தனது விமர்சனத்தில், மைத்ரேயி சௌதுரி, பெண்களை விடுதலை செய்யக் கல்வி உதவுகிறது என்ற பரவலாக நிலவும் கருத்துக்கு மாறாக, பெண்களுக்கு கல்வியும் வேலைவாய்ப்பும் கிடைத்திருந்தாலும், அவர்கள் துன்புறுத்தல்களை எதிர்க்கும் ஆற்றலை அது அளிக்கவில்லை என்பதை இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது என்று குறிப்பிடுகிறார். மேலும், வரதட்சணை, சொத்துரிமை தொடர்புடைய பிற பிரச்சினைகளுக்கிடையிலான தொடர்பை விளக்கும் கருத்தியல் அமைப்பு இந்த ஆய்வில் இடம்பெறாதது வருத்தமளிக்கிறது. வரதட்சணையைத் தெளிவாகப் புரிந்துகொள்வதே அதனைச் சீர்செய்யும் எந்த நடவடிக்கைக்கும் அடிப்படையாகும் என்றும் அவர் கூறுகிறார்.[17]

கிராமப்புற இந்தியாவில் பெண்கள் தலைமையிலான குடும்பங்கள், கிராமப்புற இந்தியாவில் வளர்ந்து வரும் பருவம்: இளம்பெண்களின் சிக்கல்களும் தேவைகளும் ஆகிய நூல்களைப் பற்றிய தனது விமர்சனத்தில், அனந்த கிரி, ரஞ்சனா குமாரியும் இவரது ஆய்வுக் குழுவினரும் வட இந்தியாவை மையமாகக் கொண்டு ஆய்வுகளை மேற்கொண்டதாகவும், வறுமையின் பெண்மயமாக்கல் என விவரிக்கப்படும் சூழலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவளிக்கும் கொள்கை பரிந்துரைகளை முன்வைத்ததாகவும் குறிப்பிடுகிறார். மேலும், எண்ணிக்கைகளையும் மனித அனுபவங்களையும் இணைக்கும் இன்றைய சவாலுக்கு இந்தியச் சமூகவியலாளர்கள் போதுமான அளவில் பதிலளிக்கவில்லை என்பது வருத்தத்திற்குரியது. கொள்கை உருவாக்கத்திற்காக மேற்கொள்ளப்பட்ட இத்தகைய ஆய்வுகளில்கூட, மக்களின் நேரடியான குரல்களும், பிரச்சினைகள் பண்பாட்டு ரீதியாக எவ்வாறு உருவாக்கப்படுகின்றன என்பதற்கான விளக்கங்களும் இன்னும் அதிகமாக இடம்பெற்றிருக்க வேண்டும் என்றும் இவர் கூறுகிறார்.[18]

கிராமப்புற இந்தியாவில் வளர்ந்து வரும் பருவம்: இளம்பெண்களின் சிக்கல்களும் தேவைகளும் என்ற நூலைப் பற்றிய தனது விமர்சனத்தில், எட்டி ஜே. கிர்ட்னர், இந்திய இளம்பெண்கள் எதிர்கொள்ளும் துயரமான நிலையை எடுத்துரைக்கும், சிறப்பாக எழுதப்பட்ட சுவாரசியமான ஆய்வு இது. மூன்றாம் உலக நாடுகளின் பெண்களைப் பற்றிய வளர்ந்து வரும் ஆய்வுலகிற்கு இது சரியான நேரத்தில் வெளிவந்த மதிப்புமிக்க பங்களிப்பாகும் என்று பாராட்டுகிறார்.[19]

ரஞ்சனா குமாரியின் மணப்பெண்களை எரிப்பதற்கல்ல, கிராமப்புற இந்தியாவில் பெண்கள் தலைமையிலான குடும்பங்கள், பிரமிளா தண்டவதே, ரஞ்சனா குமாரி, ஜமிலா வர்கீஸ் ஆகியோரின் இந்தியாவில் கைம்பெண்கள், கைவிடப்பட்ட,ஆதரவற்ற பெண்கள் ஆகிய நூல்களைப் பற்றிய தனது விமர்சனத்தில், உர்சுலா சர்மா, ரஞ்சனா குமாரியின் இரண்டு ஆய்வறிக்கைகளும் வாதப்போக்கை விட நடைமுறைச் சிந்தனைகளுக்கே முக்கியத்துவம் அளிக்கின்றன; மேலும் கொள்கை வகுப்போருக்கான பயனுள்ள பரிந்துரைகளுடன் நிறைவடைகின்றன என்று குறிப்பிடுகிறார். அதோடு, ஆய்வுமுறைச் சிக்கல்களுக்கு ரஞ்சனா குமாரி கண்டுபிடித்த தீர்வுகளும், அவரது நேரடியான, நடைமுறைக்கு ஏற்ற எழுத்து நடையும் எனக்குப் பிடித்திருந்தன என்றும் கூறுகிறார்.

இந்தியாவில் கைம்பெண்கள், கைவிடப்பட்ட, ஆதரவற்ற பெண்கள் என்ற நூல் குறித்து, தில்லியில் செயல்படும் மகிளா தக்ஷதா சமிதி என்ற தன்னார்வ மகளிர் அமைப்பு நடத்திய கருத்தரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல் என்றும், இந்தியச் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டவர்களாக கருதப்படும் பெண்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டது என்றும் இவர் குறிப்பிடுகிறார். அந்நூலின் பத்திரிகைத் தன்மை கொண்ட எழுத்து நடையைப் பற்றி விவாதித்த பிறகு, இந்த மூன்று நூல்களும் குடும்பத்திற்குள் ஆதரவும் நிறைவான வாழ்க்கையும் கிடைக்காத இந்தியப் பெண்களுக்கு, குடும்பத்திற்கு வெளியேயும் மிகக் குறைந்த ஆதரவே கிடைக்கிறது என்பதை மிகவும் தெளிவாகக் காட்டுகின்றன. இத்தகைய பெண்கள் தன்னம்பிக்கையுடனும் சுயமரியாதையுடனும் வாழ்வதற்கு ஆதரவும் உதவியும் வழங்கும் நிறுவனங்களும் வலையமைப்புகளும் உருவாக்கப்பட வேண்டிய உண்மையான தேவை உள்ளது என்று இவர் கூறுகிறார்.[20]

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

1977 ஆம் ஆண்டு, அவசரநிலை முடிவடைந்த பிறகு, ரஞ்சனா குமாரி பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதியான சுதீந்திர பதோரியாவை திருமணம் செய்து கொண்டார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "Dr. Ranjana Kumari". Centre for Social Research (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2021-11-16.
  2. ↑ Devi K (2015-06-30). "Meet the Woman Extraordinaire – Dr. Ranjana Kumari". Sayfty. Retrieved 2021-11-18.
  3. ↑ Parul (2011-03-11). "True grit". India Today. Retrieved 2021-11-18.
  4. ↑ "India to reform laws on working women". The New York Times. FT.COM. 31 March 2005. https://archive.nytimes.com/www.nytimes.com/financialtimes/international/FT20050331_29144_255300.html.
  5. ↑ Kelly, Fran (8 March 2017). "Meet Indian Women's Rights Crusader Ranjana Kumari". Australian Broadcasting Corporation. https://www.abc.net.au/radionational/programs/breakfast/meet-indian-womens-rights-crusader-ranjana-kumari/8334554.
  6. ↑ Domínguez, Gabriel (10 September 2013). "'Dowry has turned into a commercial transaction'". Deutsche Welle. https://www.dw.com/en/dowry-has-turned-into-a-commercial-transaction/a-17077584.
  7. ↑ Sullivan, Tim (2 June 2014). "Gang rape reflects India's immense cultural divide". Associated Press. https://apnews.com/article/74cd8e7c2c3844a09c2b6ee7968eec20.
  8. ↑ Gahlot, Mandakini (16 June 2014). "Despite tougher laws, India can't shake rape culture". The Washington Post. USA Today. https://www.washingtonpost.com/national/religion/despite-tougher-laws-india-cant-shake-rape-culture/2014/06/16/d3c7c89c-f57e-11e3-930d-ca5db8eb8323_story.html.
  9. ↑ Ramesh, Mythreyee (17 June 2020). "Fired 1st Over COVID Must be Hired 1st: Why Economies Need Women". The Quint. https://www.thequint.com/voices/women/women-jobs-coronavirus-pandemic-ranjana-kumari#read-more.
  10. ↑ Yasir, Sameer (31 March 2021). "She Told Relatives She'd Been Raped. They Paraded Her and the Suspect.". The New York Times. https://www.nytimes.com/2021/03/31/world/asia/india-rape-paraded.html.
  11. ↑ "Women still missing from Indian politics". Zee News. Indo-Asian News Service. 5 March 2011. https://zeenews.india.com/news/nation/women-still-missing-from-indian-politics_691353.html.
  12. ↑ Bagri, Neha Thirani (30 June 2021). "A Controversial Ban on Commercial Surrogacy Could Leave Women in India With Even Fewer Choices". TIME Magazine. Retrieved 26 November 2021.
  13. ↑ Lakshmi, Rama (14 February 2013). "A day of protests and flash mobs for India's movement to halt violence against women". The Washington Post. https://www.washingtonpost.com/news/worldviews/wp/2013/02/14/a-day-of-protests-and-flash-mobs-for-indias-movement-to-halt-violence-against-women/.
  14. ↑ "Mumbai gangrape: Ranjana Kumari calls for instilling fear of law". Asian News International. 23 August 2013. http://link.gale.com/apps/doc/A340522879/STND?u=wikipedia&sid=ebsco&xid=cfcde671.
  15. ↑ "Interview: Five years after Nirbhaya, have things changed?". Governance Now. 16 December 2017. https://link.gale.com/apps/doc/A519286402/ITOF?u=wikipedia&sid=ebsco&xid=7fbed523.
  16. ↑ "Interview With Ranjana Kumari". Indian Currents. 22 October 2018. https://link.gale.com/apps/doc/A559159859/STND?u=wikipedia&sid=ebsco&xid=e84f14a6.
  17. ↑ Chaudhuri, Maitrayee (March 1990). "Reviewed Work: Brides are not for Burning: Dowry Victims in India by Ranjana Kumari". Sociological Bulletin 39 (1): 213–214. https://www.jstor.org/stable/23634555. பார்த்த நாள்: 25 November 2021.
  18. ↑ Giri, Anantha (March 1991). "Reviewed Works: Women-Headed Households in Rural India by Ranjana Kumari; Growing up in Rural India: Problems and Needs of Adolescent Girls by Ranjana Kumari". Sociological Bulletin (Sage Publications, Inc.) 40 (1): 194–197. https://www.jstor.org/stable/23620045. பார்த்த நாள்: 25 November 2021.
  19. ↑ Girdner, Eddie J. (Summer 1991). "Reviewed Work: Growing Up in Rural India: Problems and Needs of Adolescent Girls. by Ranjana Kumari, Renuka Singh, Anju Dubey". Pacific Affairs (Pacific Affairs, University of British Columbia) 64 (2): 270–271. doi:10.2307/2759988. https://www.jstor.org/stable/2759988. பார்த்த நாள்: 26 November 2021.
  20. ↑ Sharma, Ursula (February 1990). "Reviewed Works: Brides are not for Burning: Dowry Victims in India by Ranjana Kumari; Women-headed Households in Rural India by Ranjana Kumari; Widows, Abandoned and Destitute Women in India by Pramila Dandavate, Ranjana Kumari, Jamila Verghese". Sociology (Sage Publications, Inc.) 24 (1): 170–172. doi:10.1177/0038038590024001024. https://www.jstor.org/stable/42854643. பார்த்த நாள்: 25 November 2021.

வெளிப்புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரஞ்சனா_குமாரி&oldid=4581286" இலிருந்து மீள்விக்கப்பட்டது