யோமொன் மட்பாண்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முதனிலை யோமொன் மட்பாண்டம் கிமு 10000-8000
நடு யோமொன் கால மட்பாண்டம் கிமு 5000-4000
யோமொன் மட்கலம் கிமு 3000-2000

யோமொன் மட்பாண்டம் (縄文式土器 Jōmon-shiki Doki?) என்பது, சப்பானின் யோமொன் காலத்தில் செய்யப்பட்ட ஒருவகைப் பண்டைக்கால மட்பாண்டம் ஆகும். யோமொன் என்னும் சொல் (縄文)சப்பானிய மொழியில் "கயிற்றுக் கோலம்" எனப் பொருள்படும். இது மட்பாண்டம் செய்யும்போது கயிற்றை அழுத்தி அலங்காரம் செய்யப்படுவதைக் குறிக்கிறது. பண்டைய சப்பானின் யோமொன் காலத்தில் செய்யப்பட்ட இத்தகைய மட்கலங்களே சப்பானின் மிகப் பழைய மட்கலங்கள் எனப் பொதுவாகக் கருதப்படுகின்றது.

காலம்[தொகு]

தற்காலக் கியூசுவின் வடமேற்குக் கரையோரத்தில் உள்ள குகை ஒன்றில் கண்டெடுக்கப்பட்ட மட்பாண்டத் துண்டுகள் கிமு 12,700 காலப்பகுதியைச் சேர்ந்தவை என கதிர்வீச்சுக் காலக்கணிப்பு முறைமூலம் கண்டறியப்பட்டுள்ளது.[1] யோமொன் மட்பாண்டங்கள் இதற்கும் முந்திய காலத்தைச் சேர்ந்தவை எனப் பல ஆய்வாளர்கள் கருதுகின்றனர். பல்வேறுபட்ட நுட்பங்களின் துணையுடன் செய்யப்பட்ட காலக் கணிப்புக்கள் வேறுபட்ட காலங்களைக் காட்டுவதால், இது எக்காலத்தில் செய்யப்பட்டது எனக் கண்டறிவது கடினமானது.

பண்டைய சப்பானில் யோமொன் காலம் கிமு 300 வரை இருந்தது. யோமொன் காலம் ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது. முதனிலை யோமொன் கிமு 10,500-8,000 வரையும், மிகமுந்திய யோமொன் காலம் கிமு 8,000-5,000 வரையும், தொடக்க யோமொன் காலம் கிமு 5,000-2,500 வரையும், நடு யோமொன் கிமு 2,500-1,500 வரையும், பிந்திய யோமொன் கிமு 1,500-1,000 வரையும், இறுதி யோமொன் கிமு 1,000-300 வரையும் என இப்பிரிவுகள் உள்ளன.[2] சப்பானில் முதனிலை யோமோன் மட்பாண்டங்கள் காணப்பட்ட களங்கள் 80 வரை உள்ளன.[3] ஆனால், பெரும்பாலான யோமொன் மட்பாண்டங்கள் அதற்குப் பிற்பட்ட காலங்களைச் சேர்ந்தவை.

இயல்புகள்[தொகு]

பெரும்பாலான யோமொன் மட்பாண்டங்கள் வட்டமான அடிப்பகுதியைக் கொண்டவ என்பதுடன் இவை சிறிய அளவு கொண்டவை. இது இம்மட்கலங்கள் உணவுகளைச் சமைப்பதற்குப் பயன்பட்டவை என்பதைக் காட்டுகின்றன.[4] பிற்கால யோமொன் மட்பாண்டக் கலங்கள் கூடிய வேலைப்பாடுகள் கொண்டவை. சிறப்பாக நடு யோமொன் கால மட்கல விளிம்புகள் சிக்கலான முறையில் அலங்கரிக்கப்பட்டிருந்தன.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Rice, Prudence M. “On the Origins of Pottery.” Journal of Archaeological Method and Theory 6, no. 1 (1999): 1-54. Database on-line. Springerlink; accessed October 3, 2007.
  2. Hall, M. E. “Pottery Styles during the Early Jomon Period: Geochemical Perspectives on the Moroiso and Ukishima Pottery Styles.” Archaeometry 43, no. 1 (2001): 59-75. Database on-line. Academic Search Complete, EBSCOhost; accessed October 5, 2007.
  3. Kuzmin, Yaroslav V. “Chronology of the earliest pottery in East Asia: progress and pitfalls.” Antiquity 80, (2006): 362-371. Database on-line. EBSCOhost; accessed October 3, 2007.
  4. Pearson, Richard. “Debating Jomon Social Complexity.” Asian Perspectives 46, no.2 (2007): 361-388. Database on-line. Project Muse; accessed October 5, 2007.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=யோமொன்_மட்பாண்டம்&oldid=1942551" இலிருந்து மீள்விக்கப்பட்டது