யோகான் வான் அங்கெல்பீக்
யோகான் வான் அங்கெல்பீக் | |
---|---|
இலங்கை ஒல்லாந்தப் பறங்கியர் ஒன்றியத்தின் 1916 ஆம் ஆண்டு ஆய்விதழில் வெளியான வான் அங்கெல்பீக்கின் படம். | |
ஒல்லாந்த இந்தியாவின் ஆளுனர் | |
பதவியில் 1787–1794 | |
36வது இலங்கையின் ஆளுனர் | |
பதவியில் 15 யூலை 1794 – 16 பெப்ரவரி 1796 | |
முன்னையவர் | வில்லெம் யேக்கப் வான் டெர் கிராப் |
பின்னவர் | பதவி இல்லாமல் ஆனது இலங்கையின் பிரித்தானிய ஆளுனர் பதவியால் மாற்றீடு செய்யப்பட்டது |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1727 விட்மண்ட் |
இறப்பு | 2 செப்டெம்பர் 1799 கொழும்பு, இலங்கை |
யோகான் சேகாட் வான் அங்கெல்பீக் (Johan Gerard van Angelbeek) (1727, விட்மன்ட் - 2 செப்டெம்பர் 1799, கொழும்பு)[1] ஒரு ஒல்லாந்த குடியேற்றவாத அலுவலர். இவர் இலங்கையில் ஒல்லாந்தர் ஆட்சியின் கடைசி ஆண்டுகளில் அதன் ஆளுனராக இருந்து ஒல்லாந்தப் படைகளை வழிநடத்தியவர். இவர் காலத்திலேயே பிரித்தானியர் இலங்கையில் ஒல்லாந்த ஆள்புலங்களை கைப்பற்றினர்.
வான் ஆங்கெல்பீக் 1727 இல் கிழக்கு பிரிசியாவில் பிறந்தார். 1754 இல் இவர் இந்தியாவுக்கும், பத்தேவியாவுக்குக் பயணம் செய்துவிட்டு 1755 இல் நெதர்லாந்துக்குத் திரும்பினார். 1756 இல் ஒல்லாந்தக் கிழக்கிந்தியக் கம்பனி இணைந்து இந்தியப் பெருங்கடல் பகுதிக்குத் திரும்பி பத்தேவியாவிலும், வங்காளத்திலும் பணியாற்றினார். 1764 இல் ஒல்லாந்த இலங்கையின் தலைநகரான கொழும்பில் ஒரு அலுவலர் பதவியைப் பெற்றுக்கொண்டார். 1767 ஆம் ஆண்டில் இந்தியாவில் உள்ள தூத்துக்குடித் துறைமுகத்தில் கூப்மன் ஆகப் பதவியேற்ற ஆங்கெல்பீக், 1770 இல் துறைமுகத்தின் மூத்த அலுவலராகி, 1783 வரை அப்பதவியில் இருந்தார்.[2]
1783 ஆம் ஆண்டு இவர் மலபாரின் ஆளுனராக நியமனம் பெற்றுப் பின்னர் 1787 இல் ஒல்லாந்த இந்தியாவின் ஆளுனர் ஆனார். 1794 இல் பிரெஞ்சுப் புரட்சிப் போர்க் காலத்தில் வான் ஆங்கெல்பீக் இலங்கையில் ஒல்லாந்தரின் கீழிருந்த பகுதிகளுக்கு ஆளுனர் ஆனதுடன், அடுத்த ஆண்டு பிரித்தானியர் இலங்கையின் ஒல்லாந்தர் பகுதிகளில் படையெடுப்பு நடத்தியபோது, ஒல்லாந்தரின் கட்டளைத்தளபதியாகவும் இருந்தார். ஒல்லாந்தைப் பிரான்சுக்கு ஆதரவான கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி இருந்தபோது, இலங்கையின் ஒல்ல்லாந்தர் பகுதிகள் பிரான்சின் கையில் சிக்காதிருக்க அவற்றைத் தற்காலிகமாகப் பிரித்தானியரின் பொறுப்பில் விடவேண்டும் என்ற அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள மறுத்ததால், பிரித்தானியர் படைபலம் கொண்டு இலங்கையில் ஒல்லாந்தரின் கீழிருந்த பகுதிகளைக் கைப்பற்றினர். உண்மையில் பெரும்பாலான கோட்டைகள் தாக்குதல் எதுவும் இன்றியே சரணடைந்தன. இறுதியாக 1796 இல் கொழும்பும் வீழ்ச்சியடைந்தது. பிரித்தானியர் கொழும்பைக் கைப்பற்றிய பின்னரும் அவர் கொழும்பிலேயே 1999 இல் இறக்கும்வரை வாழ்ந்தார்.
யக்கோமினா லீவர் என்பவரை மணம் முடித்த இவருக்கு இரண்டு பிள்ளைகள். இவரது மகன் கிறித்தியனும், மருமகன் வில்லெம் யேக்கப் வான் டெர் கிராபும் ஒல்லாந்தரின் இந்தியப் பெருங்கடல் குடியேற்ற நாடுகளில் முக்கியமான நிர்வாகப் பொறுப்புக்களில் இருந்தனர்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Angelbeek, Johan Gerard van in the Nieuw Nederlandsch Biografisch Woordenboek
- ↑ 2.0 2.1 Van Angelbeek, Johan Gerard பரணிடப்பட்டது 2015-04-12 at the வந்தவழி இயந்திரம், Under a Tropical Sun, Macquarie University, Retrieved 9 May 2012