யூலியன் ஆண்டு (வானியல்)
வானியலில், யூலியன் ஆண்டு (Julian year, குறியீடு: a அல்லது aj) என்பது 86400 SI நொடிகள் ஒவ்வொன்றும் சரியாக 365.25 நாட்கள் என வரையறுக்கப்பட்ட நேர அளவீட்டு அலகு ஆகும்.[1][2][3][4] யூலியன் ஆண்டின் நீளம் யூலியன் நாட்காட்டியில் உள்ள ஆண்டின் சராசரி நீளம் ஆகும், இது மேற்கத்திய சமூகங்களில் கிரெகொரியின் நாட்காட்டியை ஏற்றுக்கொள்ளும் வரை பயன்படுத்தப்பட்டது. இதன் மூலம் இவ்வலகிற்கு யூலியன் ஆண்டு எனப் பெயரிடப்பட்டது. ஆயினும்கூட, வானியல் யூலியன் ஆண்டுகள், தேதிகளைக் குறிப்பிடுவதற்குப் பதிலாகக் கால அளவை அளவிடுவதால், இந்த யூலியன் ஆண்டானது யூலியன் நாட்காட்டி அல்லது வேறு எந்த நாட்காட்டியில் உள்ள ஆண்டுகளுடன் பொருந்தாது. ஓர் ஆண்டை வரையறுக்கும் பல வழிகளுடன் இது ஒத்துப்போவதில்லை.
பயன்பாடு
[தொகு]யூலியன் ஆண்டு என்பது அனைத்துலக முறை அலகுகளின் (SI) அளவீட்டு அலகு அல்ல, ஆனால் இது உலகளாவிய வானியல் ஒன்றியத்தால் (IAU) வானியலில் பயன்படுத்த SI அல்லாத அலகு என அங்கீகரிக்கப்பட்டுள்ளது.[3] 1984 ஆம் ஆண்டிற்கு முன்னர், யூலியன் ஆண்டும், சராசரி பருவ ஆண்டும் வானியலாளர்களால் பயன்படுத்தப்பட்டன. 1898 ஆம் ஆண்டில், சைமன் நியூகோம்பு தனது சூரிய அட்டவணைகளில் யூலியன் நூற்றாண்டு (36,525 நாட்கள்), "சூரிய நூற்றாண்டு" (36,524.22 நாட்கள்) ஆகிய இரண்டையும் பயன்படுத்தினார். நியூகோம்பின் படி, இது 100 சராசரி பருவ ஆண்டுகளின் 365.24219879 நாட்களின் அண்ணளவான வடிவங்கள் ஆகும்.[5] இருப்பினும், சராசரி பருவ ஆண்டு அளவீட்டு அலகாகப் பொருந்தாது, ஏனெனில் இது நியூகாம்பின்படி 6.14×10−8 நாட்கள் என்ற சிறிய அளவில் ஆண்டுதோறும் மாறுபடும்.[5] மாறாக, யூலியன் ஆண்டு SI அலகுகளின் அடிப்படையில் வரையறுக்கப்படுகிறது, எனவே அந்த அலகுகளைப் போலவே துல்லியமானதும், நிலையானதும் ஆகும். இது விண்மீன்வழி ஆண்டு, பருவ ஆண்டு இரண்டையும் தோராயமாக ±0.008 நாட்களுக்கு கணக்கிடுகிறது. யூலியன் ஆண்டு தூரத்தை அளவிடுவதற்கான ஒரு அலகு என்பது ஒளியாண்டின் வரையறைக்கும் அடிப்படையாக அமைந்தது.[2]
வானியலிலும் அன்றாட வாழ்விலும் பயன்படுத்தப்படும் பல்வேறு வகையான ஆண்டுகளின் ஒப்பீடு கீழே தரப்பட்டுள்ளது. பொதுவான பயன்பாட்டில் உள்ளவை அட்டவணையின் மேல்பகுதியில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
| ஆண்டு வகை | ஆங்கிலத்தில் | கால அளவு (நாட்கள்) | விளக்கம் |
|---|---|---|---|
| சாதாரண ஆண்டு | Common Year | 365 | பிப்ரவரி 28 நாட்களைக் கொண்ட ஒரு சாதாரண நாட்காட்டி ஆண்டு. |
| நெட்டாண்டு (லீப் ஆண்டு) | Leap Year | 366 | பருவகாலங்களுடன் நாட்காட்டியை இணைக்க ஒரு கூடுதல் நாள் (பிப் 29) சேர்க்கப்படும் ஆண்டு. |
| கிரெகொரியின் ஆண்டு | Gregorian Year | 365.2425 | நவீன நாட்காட்டியின் சராசரி ஆண்டு நீளம். |
| சூரிய ஆண்டு | Solar Year | ~365.242 | பூமி சூரியனை ஒருமுறை சுற்றி வர ஆகும் பொதுவான காலம். (வெப்பமண்டல ஆண்டைக் குறிக்கும்.) |
| வெப்பமண்டல ஆண்டு | Tropical Year | 365.24219 | இரு அடுத்தடுத்த வசந்தகால சம இரவுப் பகல் நிலைகளுக்கு இடைப்பட்ட காலம் (பருவக்காலங்களின் அடிப்படை). |
| விண்மீன் ஆண்டு | Sidereal Year | 365.25636 | நிலையான விண்மீன்களைப் பொறுத்து பூமி சூரியனை ஒருமுறை சுற்றி வர ஆகும் காலம். |
| ஜூலியன் ஆண்டு | Julian Year | 365.25 | வானியலில் ஒளியாண்டு போன்றவற்றை கணக்கிடப் பயன்படும் நிலையான அலகு. |
| சந்திர ஆண்டு | Lunar Year | ~354.37 | 12 முழு நிலவுச் சுழற்சிகளைக் (Synodic months) கொண்ட காலம். (சூரிய ஆண்டை விட சுமார் 11 நாட்கள் குறைவு). |
| அண்மைநிலை ஆண்டு | Anomalistic Year | 365.25964 | பூமி சூரியனுக்கு மிக அருகில் வரும் நிலையிலிருந்து அடுத்த அதே நிலை வரையிலான காலம்(Perihelion). |
| கிரகண ஆண்டு | Eclipse / Draconic Year | 346.62007 | சூரியன் மீண்டும் அதே நிலவுக்கணுவை (Lunar node) வந்தடைய ஆகும் காலம். (கிரகண காலங்களை கணிக்க பயன்படும்). |
| சோதிக் ஆண்டு | Sothic Year | ~365.25 | சிரியசு (Sirius) விண்மீன் மீண்டும் தோன்றும் இடைவெளி (பண்டைய எகிப்து முறை). |
| பெஸலியன் ஆண்டு | Besselian Year | ~365.2422 | ஒரு குறிப்பிட்ட சூரிய தீர்க்கரேகையை அடிப்படையாகக் கொண்ட பழைய வானியல் அளவு. |
| காசியன் ஆண்டு | Gaussian Year | 365.25690 | காசியன் ஈர்ப்பு மாறிலியை அடிப்படையாகக் கொண்ட ஒரு தத்துவார்த்த ஆண்டு. |
| விண்மீன் மண்டல ஆண்டு | Galactic Year | ~22.5 - 25 கோடி ஆண்டுகள் | சூரிய குடும்பம் பால்வெளி மண்டலத்தின் மையத்தை ஒருமுறை சுற்றி வர ஆகும் காலம். (பிரபஞ்ச ஆண்டு / பால்வெளி ஆண்டு என்றும் அழைக்கப்படுகிறது). |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ P. Kenneth Seidelmann, ed., The explanatory supplement to the Astronomical Almanac, (Mill Valley, Cal.: University Science Books, 1992), pp. 8, 696, 698–9, 704, 716, 730.
- ↑ 2.0 2.1 "Measuring the Universe". உலகளாவிய வானியல் ஒன்றியம். Retrieved March 22, 2012.
- ↑ 3.0 3.1 International Astronomical Union. "Recommendations Concerning Units". Archived from the original on February 16, 2007. Retrieved February 18, 2007. Reprinted from the "IAU Style Manual" by G.A. Wilkinson, Comm. 5, in IAU Transactions XXB (1987).
- ↑ Harold Rabinowitz and Suzanne Vogel, The manual of scientific style (Burlington, MA: Academic Press, 2009) 369.
- ↑ 5.0 5.1 Simon Newcomb, Tables of the Four Inner Planets, vol. 6 of Astronomical Papers Prepared for the Use of the American Ephemeris and Nautical Almanac (Washington, DC: 1898), pp. 10–11.
வெளி இணைப்புகள்
[தொகு]- Michael Allison (@ Goddard Institute for Space Studies) (2001). "What is a "Year" (on Earth or Mars)?". pweb.jps.net. Archived from the original on 2011-07-24. Retrieved 2011-07-26.