உள்ளடக்கத்துக்குச் செல்

யூரிப்பிடீசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யூரிப்பிடீஸ்
யூரிப்பிடீசின் மார்பளவு சிலை
பிறப்புஅண். கிமு 480
சலாமிஸ்
இறப்புஅண். கிமு 406 (சுமார் 74 வயதில்)
மக்கெடோனியா
பணிநாடக ஆசிரியர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்
பெற்றோர்மனெசர்கஸ்
கிளிட்டோ
வாழ்க்கைத்
துணை
மெலிட்
சோரின்

யூரிப்பிடீஸ் (Euripides, பண்டைக் கிரேக்கம்Εὐριπίδης Eurīpídēs அண். கிமு  480 – அண். கிமு 406 ) என்பவர் பாரம்பரிய ஏதென்சின் ஒரு துன்பியல் நாடகவியாளர் ஆவார். எசுக்கிலசு மற்றும் சாஃபக்கிளீசு ஆகியோருடன் சேர்ந்து, நாடகங்கள் சில தப்பிப்பிழைத்துள்ள மூன்று பண்டைய கிரேக்க துன்பியல் நாடக ஆசிரியர்களில் இவரும் ஒருவர். சில பண்டைய அறிஞர்கள் இவர் தொண்ணூற்றைந்து நாடகங்களை இயற்றியதாக கூறுகின்றனர். ஆனால் பத்தாம் நூற்றாண்டு கலைக்கலஞ்சியமான சூடா தொண்ணூற்று இரண்டு என்று கூறுகிறது. இவரது நாடகங்களில், பதினெட்டு அல்லது பத்தொன்பது என கூடியோ குறைந்தோ முழுமையாக எஞ்சியுள்ளன ( ரீசஸ் நாடகம் இவருடையதுதான என்பது சந்தேகத்திற்குரியது). [1] இவருடைய மற்ற நாடகங்களில் பல துண்டுகளாக கிடைத்துள்ளன. எசுகிலசு மற்றும் சாஃபக்கிளீசு ஆகியோரின் நாடகங்களை விட இவரது பல நாடகங்கள் பல அப்படியே தப்பிப்பிழைத்துள்ளன, அதற்குக் காரணம் இவருடைய புகழ் குறையாததே. [2] [3] எலனியக் காலத்தில் ஓமர், டெமோஸ்தனிஸ் , மெனாண்டர் ஆகியோருடன் சேர்ந்து பண்டைய இலக்கியக் கல்வியின் அடித்தளமாக இவரும் கருதப்பட்டார் . [4]

இவர் சாக்கிரட்டீசுடனும், புரோட்டோகோராசுடனும் நெருங்கிப் பழகினார். இதனாலோ என்னவோ இவர் எதையும் அறிவுக் கண்கொண்டு பார்க்கத் தொடங்கினார். இவர் தன் நாடகங்களின் வழியாக சமயத்தையும், கடவுள்களையும், அப்போது நிலவிவந்த கொள்களைகளையும், நம்பிக்கைகளையும் நகைச்சுவையோடு எள்ளிநகையாடினார். மனிதரை மனிதர் சுரண்டுதல், பெண்ணை ஆண் அடக்கி ஆளுதல் போன்றவற்றையும் தன் நாடகங்கள் வழியாக கண்டித்துவந்தார். அதனால் இவரை இளைஞர்கள் விரும்பவும், முதியோர் வெறுக்கவும் செய்தனர். முதியோர் கையிலே ஆட்சி அதிகாரம் அப்போது இருந்த காரணத்தினால் சமய விரோதி என்று ஒரு வழக்கும் பணம் சம்பந்தமான ஒரு வழக்கும் இவர்மீது தொடுக்கப்பட்டன. அப்போது இவருக்கு சுமார் எழுபது வயது இருக்கும். இவருக்கு எதிரான இரு வழக்குகளும் தோல்வியடைந்தன. என்றாலும் ஏதென்சில் இவர்மீது வெறுப்பு வளர்ந்தது. அச்சமயம் மக்கெடோனியாவை ஆண்டு கொண்டிருந்த மன்னர் ஆர்க்கிலேயஸ் இவரை தன் அரசவைக்கு அழைத்தார். அதை உடனடியாக ஏற்று மாசிடோனியா சென்று சேர்ந்தார். அங்கு சில நாடகங்களை எழுதினார்.

வாழ்க்கை[தொகு]

இவர் கிமு 480 இல் சலாமிஸ் தீவில் பிறந்தார். இவரது பெற்றோர்கள் ஏதென்சுக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தில் வசித்த சில்லறை விற்பனையாளரான மனெசர்கஸ் (தந்தை) மற்றும் கிளிட்டோ (தாய்) ஆகியோராவர். இவர்களது மகன் "வெற்றியின் ணிமகுடங்களை" சூடும் விதியைப் பெற்றவனாக ஆரக்கிள் கூறியதால், சிறுவனான இவருக்கு தடகளப் போட்டிக்குப் பயிற்சியளிக்க வேண்டும் என்று மனெசர்கஸ் விரும்பினார். ஆனால் கடைசியில் இவர் மேடை நாடகத் துறைக்கு வந்தார் (இவரது ஐந்து நாடகங்கள் போட்டியில் வென்றன, அவற்றிலும் ஒன்று இவரின் மரணத்திற்குப் பின் ஆகும்). இவர் அப்பல்லோ ஜோஸ்டீரியசின் சடங்குகளில் நடனக் கலைஞராகவும், சுடர் ஏந்தியவராகவும் சிறிது காலம் பணியாற்றினார். இவரது கல்வி தடகளத்துடன் நிற்ககவில்லை, புரோடிகஸ் மற்றும் அனாக்சகோரசு ஆகியோரின் கீழ் ஓவியம் மற்றும் மெய்யியலையும் பயின்றார். இவருக்கு வாழ்வில் துன்பத்தை அளித்த இரண்டு திருமணங்கள் நடந்தன. இவரது மனைவிகள் இருவரும் — மெலிட் மற்றும் சோரின் (பிந்தையவர் மூன்று மகன்களைப் பெற்றார்) — இவருக்கு விசுவாசமற்றவர்களாக இருந்தனர். இறுதியில் இவர் ஒரு தனிமனிதனாக ஆனார். சலாமிஸ் தீவில் உள்ள ஒரு குகையில் தனக்கென ஒரு வீட்டை உருவாக்கிக்கொண்டார் ( யூரிபிடிஸ் குகை, இவரது மரணத்திற்குப் பிறகு நாடக ஆசிரியரின் நினைவிடமாக மாறியது ).

குறிப்புகள்[தொகு]

  1. Walton (1997, viii, xix)
  2. B. Knox,'Euripides' in The Cambridge History of Classical Literature I: Greek Literature, P. Easterling and B. Knox (ed.s), Cambridge University Press (1985), p. 316
  3. Moses Hadas, Ten Plays by Euripides, Bantam Classic (2006), Introduction, p. ix
  4. L.P.E.Parker, Euripides: Alcestis, Oxford University Press (2007), Introduction p. lx
"https://ta.wikipedia.org/w/index.php?title=யூரிப்பிடீசு&oldid=3435843" இலிருந்து மீள்விக்கப்பட்டது