யாழ்ப்பாணத்துச் சாசனங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

யாழ்ப்பாணத்துச் சாசனங்கள் என்னும் இக்கட்டுரை யாழ்ப்பாணப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட சாசனங்கள் பற்றியது. இலங்கையின் பிற பகுதிகளோடு ஒப்பிடும்போது, யாழ்ப்பாணத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சாசனங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவே. எனினும், இச்சாசனங்கள் தமிழ், சிங்களம், சமசுக்கிருதம் ஆகிய மொழிகளில் உள்ளன. பிராமி, தமிழ், சிங்களம், கிரந்தம் ஆகிய வரிவடிவங்களில் எழுதப்பட்டுள்ளன.

வகைகள்[தொகு]

இங்கே சாசனம் என்பது, கல்வெட்டுக்கள், எழுத்துப் பொறிப்புக்களுடன் கூடிய உலோக ஏடுகள், மட்பாண்ட ஓடுகள் போன்றவற்றை ஒருங்கே குறிக்கிறது.

மட்பாண்ட ஓடுகள்[தொகு]

மட்பாண்டங்களில் கீறல்களாக எழுதப்பட்ட சாசனங்களே யாழ்ப்பாணத்தில் கிடைத்த சாசனங்களுள் காலத்தால் முந்தியவை. ஓரிரு சொற்களுடன் கூடிய சுருக்கமான தகவல்களே இவற்றில் உள்ளன. இவை பிராமி எழுத்துக்களிலேயே எழுதப்பட்டு உள்ளன.

உலோக ஏடுகள்[தொகு]

20 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் யாழ் மாவட்டத்தில் உள்ள வல்லிபுரப் பகுதியில் பொன்னேடு ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இது கிபி மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. சிங்கள மொழியில் எழுதப்பட்ட இச்சாசனம் புத்த விகாரை ஒன்று கட்டப்பட்டது குறித்த தகவலைத் தருகிறது. இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரே பொன்னேட்டுச் சாசனம் இதுவாகும்.

கல்வெட்டுகள்[தொகு]

இதுவரை யாழ்ப்பாணத்தில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகளுள் மிகப் பழையது கந்தரோடையில் கண்டெடுக்கப்பட்ட ஒரு கல்வெட்டு ஆகும். கி. பி. நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த இதுவும், பாகத மொழியிலேயே உள்ளது. நான்காம் கசபன் என்னும் மன்னனால் பொறிப்பிக்கப்பட்டது. காலவரிசையில் அடுத்ததாகச் சில தமிழ்ச் சாசனங்கள் உள்ளன. ஊர்காவற்றுறைக் கோட்டையில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு சாசனங்கள் இலங்கையில் சோழர் ஆண்ட காலத்தைச் சேர்ந்தவை. இவை உண்மையில் மாதோட்டப் பகுதியில் இருந்து ஐரோப்பியர் ஆட்சிக்காலத்தில் ஊர்காவற்றுறைக் கோட்டைக்குக் கொண்டுவரப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.[1] அடுத்தது நயினாதீவுக் கல்வெட்டு. தமிழ்க் கல்வெட்டான இது, முதலாம் பராக்கிரமபாகுவின் காலத்தைச் சேர்ந்தது. இது 12 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியை அல்லது 13 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சேர்ந்ததாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. யாழ்ப்பாணத்துக் கடற் பகுதியில் சேதமடையும் கப்பல்களில் இருக்கும் பொருட்களைப் பிரித்துக்கொள்ளும் நடைமுறைகள் பற்றி இக்கல்வெட்டு விளக்குகிறது.[2] இது முதலில் ஊர்காவற்றுறையில் பொறிக்கப்பட்டு பின்னர் நயினாதீவுக்குக் கொண்டுசெல்லப்பட்டு இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

இன்னொன்று 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் யாழ்ப்பாணம் பிரதான வீதிக் கல்வெட்டு. இது உணவு விடுதியொன்றின் படிக்கட்டாகப் பயன்பட்ட நிலையில் யாழ்ப்பாணத்தின் ஐரோப்பியர் நகரத்தில் பிரதான வீதியில் கண்டெடுக்கப்பட்டது. இது 1448 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்து அரசன் கனகசூரிய சிங்கையாரியனைத் தோற்கடித்த கோட்டையரசன் ஆறாம் பராக்கிரமபாகுவின் பிரதிநிதியாகச் சப்புமால் குமாரயா எனப்படும் சண்பகப் பெருமாள் 17 ஆண்டுகள் யாழ்ப்பாணத்தை ஆட்சிசெய்த காலத்தில் பொறிக்கப்பட்டது எனக் கருதப்படுகிறது. இது அக்காலத் தலைநகரான நல்லூரில் ஏதாவது ஒரு கட்டிடத்தில் இருந்து போர்த்துக்கேயர் காலத்தில் ஐரோப்பியர் நகரத்தில் கட்டிடங்களைக் கட்டுவதற்காகப் பெயர்த்து வரப்பட்டதாகத் தெரிகிறது. இன்னொரு கல்வெட்டு தற்போது உரும்பிராயில் உள்ள கருணாகப் பிள்ளையார் கோயிலில் உள்ளது.

குறிப்புக்கள்[தொகு]

  1. பத்மநாதன், சி., 2006, பக். 72,73.
  2. இந்திரபாலா, க., 1989, பக். 41-44.

உசாத்துணைகள்[தொகு]

  • இந்திரபாலா, கா., யாழ்ப்பாணத்துக் கல்வெட்டுக்கள், சிந்தனை, மலர் II(4), 1989.
  • பத்மநாதன், சி., இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள், இந்துசமயக் கலாச்சார அலுவல்கள் திணைக்களம், கொழும்பு, 2006.