யாழ்ப்பாணத்தில் வாந்திபேதி (1866 - 1867)
யாழ்ப்பாணத்தில் வாந்திபேதி (1866-1867) என்பது, 1866 ஆம் ஆண்டில் தொடங்கி 1867 மார்ச் மாதம் வரை யாழ்ப்பாணத்தில் பெரும் உயிர்ச்சேதங்களை விளைவித்த வாந்திபேதி நோய்ப் பரவலைக் குறிக்கும். யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள ஏறத்தாழ எல்லா ஊர்களிலும் பரவி ஆயிரக்கணக்கான பெரியவர்களையும், குழந்தைகளையும் இந்நோய் காவு கொண்டது. இந்தியாவின், தமிழ்நாட்டில் இருந்து இலங்கையின் மலைநாட்டுப் பகுதிகளில் இருந்த கோப்பித் தோட்டங்களில் வேலை செய்வதற்காக அழைத்து வரப்பட்ட தொழிலாளர்கள் ஊடாகவே இது யாழ்ப்பாணத்தில் பரவியதாகக் கண்டறியப்பட்டது. அதேவேளை யாழ்ப்பாணத்தின் பௌதீகச் சூழல், மக்களின் வாழ்க்கை முறை என்பன நோய் பரவுவதற்கு வாய்ப்பாக இருந்ததாகவும் சொல்லப்பட்டது.
1866 முற்பகுதி
[தொகு]1866 ஆம் ஆண்டு சனவரி 31ம் தேதி இந்தியாவுக்குச் சென்று ஊர்காவற்றுறை ஊடாகத் திரும்பிய ஒருவர் பெப்ரவரி முதலாம் தேதி வாந்திபேதியினால் இறந்தார். தொடர்ந்து ஊர்காவற்றுறைப் பகுதியில் தொற்று ஏற்பட்டது. பெப்ரவரி மாதம் முழுவதும் ஏறத்தாழ ஒவ்வொரு நாளும் இப்பகுதியில் இறப்புகள் ஏற்பட்டன. தொடர்ந்து மார்ச் மாதத்திலும் ஊர்காவற்றுறைக்கு அண்மையில் உள்ள கரம்பொனிலும், வலிகாமம் பகுதியைச் சேர்ந்த கொக்குவில், வட்டுக்கோட்டை ஆகிய ஊர்களிலும் வாந்திபேதியால் சிலர் இறந்தனர். மே மாதத்திலும் சிலர் வாந்திபேதி ஏற்பட்டு இறந்தனர். இதன் பின்னர் அந்த ஆண்டு நவம்பர் மாதம் வரை யாழ்ப்பாணத்தில் எந்த ஊரிலும் வாந்திபேதித் தொற்றுக் காணப்படவில்லை. மேற் குறிப்பிட்ட காலப்பகுதியில் ஏற்பட்ட தொற்று பலரால் தனித்தனியாக யாழ்ப்பாணத்துக்கு வெளியேயுள்ள பகுதிகளில் இருந்து குறிப்பாக, தமிழ்நாடு, இலங்கையின் மலைநாட்டுப் பகுதிகள் போன்ற இடங்களில் இருந்து கொண்டுவரப்பட்டவை. இக்காலப்பகுதியில், நோய்த்தொற்று ஏற்பட்ட இடங்களில் இருந்து அயலூர்களுக்கு நோய் பெரிய அளவில் பரவவில்லை.
1866 நவம்பர் - 1867 மார்ச் காலப்பகுதி
[தொகு]1866 நவம்பரில் மீண்டும் வாந்திபேதி நோய் யாழ்ப்பாணத்தில் தலை தூக்கியது. இந்தத் தடவை நோய் யாழ்ப்பாணக் குடாநாட்டிலும், அதை அண்டிய பகுதிகளிலும் பெரிய அளவில் பரவி 1867 மார்ச் வரை பெரும் அழிவை ஏற்படுத்தியது.
தொற்றின் மூலம்
[தொகு]இந்த வாந்திபேதித் தொற்றுக்கான காரணங்கள் குறித்தும் அதைத் தடுப்பதற்கான வழிமுறைகள் குறைத்தும் ஆராய நியமிக்கப்பட்ட ஆணைக்குழு இந்த நோயின் மூலம் பற்றி ஆராய்ந்தது. ஒவ்வொரு ஊரிலும் நோய் அறிமுகப்படுத்தப்பட்ட விதத்தை ஆராய்ந்ததில், கண்டியிலிருந்து யாழ்ப்பாணம் வரும் மத்திய வீதியூடாக வந்தவர்களே குடா நாட்டுக்குள் நோயைக் கொண்டுவந்தது தெளிவாகியது. அக்காலத்தில் மன்னாரில் இருந்த துணை அரச அதிபர் துவைனம் அவர்களின் சாட்சியத்தை வைத்தும், யாழ்ப்பாண அரசாங்க அதிபர் குடியேற்றநாட்டுச் செயலருக்கு அனுப்பிய கடிதத்தை அடிப்படையாகக்கொண்டும், இந்தியாவில் இருந்து மன்னாருக்கு ஊடாக அழைத்துவரப்பட்டு, மத்திய வீதியூடாக மலைநாட்டுப் பகுதிகளுக்குக் கொண்டுசெல்லப்பட்ட தொழிலாளர்களூடாகவே மத்திய வீதி வழியாக யாழ்ப்பாணம் வருபவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டதாகக் கண்டறியப்பட்டது.:[1]
பரவுவதற்கான வாய்ப்புக்கள்
[தொகு]யாழ்ப்பாணத்து நகரங்களிலும், ஊர்களிலும் காற்றோட்டக் குறைவு நோய் பரவுவதற்கு ஒரு முக்கியமான காரணமாக எடுத்துக்காட்டப்பட்டது. ஊர்களின் குடியிருப்புப் பகுதிகளில் காணப்படும் ஒடுக்கமான வழைந்து நெளிந்து செல்லும் ஒழுங்கைகள், வீட்டு வளவுகளைச் சுற்றி அமைக்கப்படும் உயரமான வேலிகள், தாழ்வான கூரைகளுடன் கூடிய சாளரங்கள் அற்ற வீடுகள், பல இடங்களில் வீடுகள் அடர்ந்த பனந்தோப்புகளிடையே இருத்தல் போன்றவை இவ்வாறான காற்றோட்டக் குறைவுக்கான காரணங்களாகச் சொல்லப்பட்டன. இவை தவிரக் குடியிருப்புக்களில் வீடுகளை நெருக்கமாக அமைத்தல், வீடுகளுக்குள் நெருக்கமாக மக்கள் வாழ்தல், சுகாதாரமான கழிப்பறைகளைப் பயன்படுத்தாமை போன்றவையும்; இடுகாடுகளை முறையாகப் பேணாமை, நோயினால் இறந்தவர்களைப் புதைக்கும்போது போதிய ஆழத்தில் புதைக்காமை போன்றவையும் நோய் பரவ வாய்ப்புக்களை உருவாக்குவதாக எடுத்துக்காட்டப்பட்டது.
தொற்றுத் தாக்கமும் உயிர்ச் சேதமும்
[தொகு]யாழ்ப்பாணக் குடாநாட்டிலும் பூனகரிப் பகுதியிலும் இருந்த 226 ஊர்களில் 164 ஊர்களில் நோய் பரவியது. தப்பிய 62 ஊர்களில், 55 ஊர்கள் குடாநாட்டின் மக்கள் தொகை மிகக் குறைவான பச்சிலைப்பள்ளிப் பிரிவையும் குடாநாட்டுக்கு வெளியேயுள்ள கரைச்சி, பூனகரிப் பகுதியையும் சேர்ந்தவை. எனவே குடாநாட்டிற்குள், மக்கள்தொகைச் செறிவு கூடிய பகுதிகளான வலிகாமம், வடமராட்சி, தென்மராட்சிப் பிரிவுகளில் 7 ஊர்கள் மட்டுமே நோய்த்தொற்று ஏற்படாமல் தப்பியவை.
நவம்பரில் வாந்திபேதித் தொற்றுத் தொடங்கியதில் இருந்து 16,298 பேர் நோயால் பீடிக்கப்பட்டனர். இவர்களுள் 10,210 பேர் (68.8%) இறந்துபோயினர். 1866 நவம்பர் முதல் 1867 மார்ச் வரை ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கில் மக்கள் இறந்தனர். இறப்புக்களின் மாதாந்த எண்ணிக்கை வருமாறு:[2]
- 1866 நவம்பர் - 1,304
- 1866 டிசம்பர் - 2,271
- 1867 சனவரி - 3,287
- 1867 பெப்ரவரி - 1,767
- 1867 மார்ச் - 775
இக்காலப் பகுதியில், அதிகபட்சமாக 2 சனவரி 1967ல் ஒரே நாளில் 213 பேர் நோயினால் தாக்கப்பட்டனர். 30 டிசம்பர் 1866ல் கூடிய அளவாக 160 பேர் இறந்தனர்.
ஆணைக்குழுவின் ஆய்வுகள்
[தொகு]1866-67 வாந்திபேதித் தொற்றுக் குறித்து விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஆணைக்குழு தொற்றின் மூலம், பரவலுக்குச் சாதகமான நிலைமைகள், மருத்துவ வசதிகள், நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் போன்ற அம்சங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்தது. ஆய்வின் முடிவில் பல்வேறு பரிந்துரைகளுடன் கூடிய அறிக்கையையும் இக்குழு சமர்ப்பித்தது. இதில், நோய் யாழ்ப்பாணத்துக்குள் வருவதைத் தடுத்தல், பொதுவாக ஊர்களில் சுகாதார வசதிகளைச் செய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தல், மருத்துவ வசதிகள், யாழ்ப்பாண நகரின் மேம்பாட்டுக்கான சுகாதார வசதிகளும் பிற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் ஆகிய அம்சங்களில் பல்வேறு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. துறைமுகங்களில் தொற்றுநோய்களுக்கான ஒதுக்கிடங்களை அமைத்தல், மத்திய வீதியில் மருத்துவ நிலையங்களை அமைத்தல் ஆகிய பரிந்துரைகள் வெளியில் இருந்து நோய் பரவுவதைத் தடுப்பதற்கான பரிந்துரைகள்.
அதேவேளை, வேலிகளும், பூவரசுக் கதியால்களும் காற்றோட்டத்தைத் தடைசெய்வதாகவும், வேலியடைக்கப் பயன்படும் ஓலைகளும் கிடுகுகளும் உக்குவதால் சுகாதாரத்துக்குக் கேடு விளைவதாகவும் சுட்டிக்காட்டி பூவரசுக் கதியால்களையும், வேலிகளையும் தடை செய்யவேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டது. மக்கள் செறிவாக வாழ்வதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் தேவை எனவும், வீடுகளும், கழிப்பிட வசதிகளும் மேம்படுத்தப்படவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டது. வடிகால் வசதியை மேம்படுத்தல், குளங்களையும், கால்வாய்களையும் சுத்தம் செய்தல், நல்ல நீர் கிடைக்கும் வகையில் பொதுக் கிணறுகளைத் தோண்டுதல் என்பனவும் பரிந்துரைகளில் அடங்கியிருந்தன. யாழ்ப்பாண நகரத்தைப் பொறுத்தவரை, கரையூர், சோனக தெரு போன்ற மக்கள் நெருக்கமாக வாழும் பகுதிகளில் தெருக்களை மேம்படுத்தி காற்றோட்டத்துக்கு வசதி செய்யவேண்டும், திறந்த வாய்க்கால்கள் மூடப்படவேண்டும், மலக்குழி முறைக்குப் பதிலாக அகற்றப்படக்கூடிய வாளி மலகூடங்கள் அமைக்கப்பட வேண்டும், நகரின் சில பகுதிகளில் காணப்படும் சதுப்பு நிலங்கள் நிரப்பப்பட வேண்டும் போன்ற கூடுதல் பரிந்துரைகளும் உள்ளடக்கப்பட்டிருந்தன.[3]
இதற்கு முன் யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட வாந்திபேதி நோய்த்தொற்றுக்கள் தொடர்பான புள்ளிவிபரங்களையும் ஆய்வு செய்த ஆணைக்குழு 1845, 1855 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்ட தொற்றும் 1866ம் ஆண்டைப்போலவே கடுமையானதாக இருந்ததையும் இறந்தவர்களின் நூற்றுவீதம் ஏறத்தாழ ஒரேயளவாக இருந்ததையும் சுட்டிக்காட்டி ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை இவ்வாறு நடந்துள்ளது என்ற தனது கவனிப்பையும் பதிவு செய்தது.