யாழ்ப்பாணத்தின் மீதான ஒல்லாந்தர் படையெடுப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யாழ்ப்பாணத்தின் மீதான ஒல்லாந்தர் படையெடுப்பு
போர்த்துக்கேயர் - ஒல்லாந்தர் போர்கள் பகுதி

பல்டேயசு பாதிரியாரின் நூலில் கண்டபடி, யாழ்ப்பாணக் குடிமக்கள் படையெடுத்து வந்த ஒல்லாந்தரை வரவேற்கும் காட்சி
நாள் 1658
இடம் யாழ்ப்பாணம்
போர்த்துக்கேயர் இலங்கையில் இருந்து முற்றாக வெளியேற்றப்பட்டனர்.
நிலப்பகுதி
மாற்றங்கள்
யாழ்ப்பாணம் ஒல்லாந்தர் வசமானது.
பிரிவினர்
போர்த்துக்கேய அரசு ஒல்லாந்த கிழக்கிந்தியக் கம்பனி
தளபதிகள், தலைவர்கள்
- -
பலம்
- -

யாழ்ப்பாணத்தின் மீதான ஒல்லாந்தர் படையெடுப்பு என்பது, 1658 இல் போர்த்துக்கேயரின் கட்டுப்பாட்டில் இருந்த யாழ்ப்பாண இராச்சியத்தின் மீது ஒல்லாந்தர் மேற்கொண்ட படையெடுப்பைக் குறிக்கும். இப்படையெடுப்பின் மூலம் ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றித் தங்கள் ஆட்சியின் கீழ்க் கொண்டுவந்தனர். இதன் விளைவாக 1796 இல் பிரித்தானியர் கைப்பற்றும் வரை யாழ்ப்பாணம் 148 ஆண்டுகள் ஒல்லாந்தரின் கட்டுப்பாட்டில் இருந்தது.

பின்னணி[தொகு]

17 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்துக்கு முன் இந்தியப் பெருங்கடற் பகுதியில் பெரும் கடல் வலிமையுடன் விளங்கிய போர்த்துக்கேயர், 1505 இல் முதன் முதல் இலங்கைக்கு வந்தனர். அதன் பின்னர் படிப்படியாகத் தமது செல்வாக்கை வளர்த்துக்கொண்ட அவர்கள் முதலில் தீவின் தென்மேற்குப் பகுதியில் இருந்த கோட்டே இராச்சியத்தையும் பின்னர் 1619ல் வட பகுதியில் இருந்த யாழ்ப்பாண இராச்சியத்தையும் கைப்பற்றித் தீவின் கரையோரப் பகுதிகளை போர்த்துக்கேயப் பேரரசின் ஒரு பகுதியாக்கினர். தீவின் நடுப்பகுதியில் இருந்த கண்டி இராச்சியத்துடனும் தொடர்ந்து போரிட்டு வந்தனர். 17 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தை அண்டி அக்காலத்தில் ஐரோப்பாவின் கடல் வல்லரசுகளாக விளங்கிய போர்த்துக்கல், எசுப்பானியா ஆகிய கத்தோலிக்க நாடுகளுக்குப் போட்டியாக ஒல்லாந்து, இங்கிலாந்து, பிரான்சு ஆகிய நாடுகள் வளர்ச்சியடைந்தன. இவை கத்தோலிக்கத்துக்கு எதிரான புரட்டத்தாந்த கிறித்தவத்தைப் பின்பற்றும் நாடுகளாக இருந்தன. இந்த நாடுகளிலும், இந்துப் பெருங்கடற் பகுதியில் வணிகம் செய்து பொருளீட்டும் நோக்குடன் வணிக நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன.[1] இலங்கையை அண்டிய கடற்பகுதிகளுக்கும் ஒல்லாந்தக் கப்பல்கள் வரத்தொடங்கின. போர்த்துக்கேயருடன் போரில் ஈடுபட்டிருந்த கண்டி அரசன், அவர்களை நாட்டில் இருந்து விரட்ட ஒல்லாந்தரின் உதவியை நாடினான்.[2] இதைத் தொடர்ந்து இலங்கையில் ஒல்லாந்தரின் தலையீடு தொடங்கியது. 1643ல் கண்டி அரசன் சார்பில் காலியைக் கைப்பற்றிய ஒல்லாந்தர் அதைத் தாங்களே வைத்துக்கொண்டனர். 1656 இல் கொழும்பையும் நீண்ட முற்றுகைக்குப் பின்னர் போர்த்துக்கேயரிடமிருந்து கைப்பற்றிக் கொண்டனர். இலங்கையில் தெற்கு, தென்மேற்குக் கரையோரப் பகுதிகள் ஒல்லாந்தர் கைக்குச் சென்றன.

இதுவரை ஒல்லாந்தர் கைப்பற்றிய பகுதிகள் வணிக முக்கியத்துவம் கொண்டவை. இலங்கைத் தீவில் போர்த்துக்கேயரிடம் எஞ்சியிருந்தவை மன்னாரும், யாழ்ப்பாணமுமே. இவை முத்துக்குளிப்பு, யானை ஏற்றுமதி ஆகியவை தவிரப் பெரிய அளவு வணிகக் கவர்ச்சி இல்லாதவை. ஆனாலும், போர்த்துக்கேயரை முற்றாகத் தீவிலிருந்து விரட்டுவது, புரட்டத்தாந்த மதத்தைப் பரப்புவது ஆகிய நோக்கங்கள் மன்னார், யாழ்ப்பாணம் ஆகியவற்றையும் கைப்பற்ற வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தின.[3]

படையெடுப்பு[தொகு]

1658 இன் தொடக்கத்தில் கொழும்பில் இருந்து சென்ற ஒல்லாந்தப் படைகள் மன்னாரைக் கைப்பற்றின. அங்கிருந்து தரை வழியாக அணிவகுத்துச் சென்ற படைகள் பூநகரிக்கு ஊடாக யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குள் நுழைந்தன. ஒல்லாந்தரின் படையில் 1100 வீரர்கள் இருந்தனர். இத்துடன் மேலும் 1100 பேர் கொண்ட ஒல்லாந்தப் படையொன்று கொழும்பில் இருந்து அனுப்பப்பட்டது. 1658 மார்ச் 7 ஆம் தேதி கிளாலிப் பகுதியில் போர்த்துக்கேயருக்கும், ஒல்லாந்தருக்கும் முதற் சண்டை இடம்பெற்றது. இதில் 40 ஒல்லாந்தப் படை வீரர்கள் இறந்தனர்.[4] எனினும் ஒல்லாந்தரின் தாக்குதல்களைச் சமாளிக்க முடியாத போர்த்துக்கேயர் பின்வாங்கி நகரின் நுழைவாயில் பகுதிக்குச் சென்றுவிட்டனர். இதற்குள், யாழ்ப்பாண நகரத்திலும், பிற பகுதிகளிலும் இருந்த போர்த்துக்கேயரும், அவர்களது குடும்பத்தினரும் கோட்டைக்குள் சென்றுவிட்டனர். கிளாலியில் இருந்து பெரிய எதிர்ப்பு எதுவும் இன்றி யாழ்ப்பாண நகர நுழைவாயில் வரை சென்ற ஒல்லாந்தப் படைகளுக்குப் போர்த்துக்கேயப் படையினர் ஓரளவு எதிர்ப்புக் காட்டினாலும் ஒல்லாந்தரின் தாக்குதல்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல் கோட்டையை அண்டிய பகுதிக்குச் சென்று அங்கிருந்து போராடினர். எனினும், விரைவிலேயே போர்த்துக்கேயப் படையினர் கோட்டைக்குள் புகுந்துகொள்ள வேண்டியதாயிற்று.[5] ஒல்லாந்தர் கோட்டையை முற்றுகை இட்டனர். இந்த நேரம் கோட்டைக்குள் 3500 பேர் வரை இருந்தனர். கோட்டையைச் சுற்றிய பகுதிகள் அனைத்தும் ஒல்லாந்தரின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டன. கோட்டைக்கு மேற்குப் பக்கமாக இருந்த யேசு சபையினரின் துறவிமடம், தேவாலயம் என்பனவும், கிழக்குப் பக்கத்தில் இருந்த டொமினிக்கத் துறவிமடம், தேவாலயம் ஆகியனவும் ஒல்லாந்தரால் கைப்பற்றப்பட்டன. இந்தியப் பெருங்கடலில் இருந்து யாழ்ப்பாணத்துக்கான நுழைவழியான ஊர்காவற்றுறைக்கும், காரைதீவுக்கும் இடையில் அமைந்த ஒடுங்கிய கடல் வழியின் நடுவில் கடலுக்குள் அமைக்கப்பட்டிருந்த கடற் கோட்டையையும் ஒல்லாந்தர் முற்றுகையிட்டுத் தாக்கினர். சில நாட்கள் தாக்குப்பிடித்த இக்கோட்டை தொடர்ந்து போராட முடியாமல் சரணடைந்தது.

யாழ்ப்பாணக் கோட்டை தொடர்ந்தும் கடுமையான முற்றுகைக்கு உட்பட்டிருந்தது. போர்த்துக்கேயர் கோவாவில் இருந்து உதவியை எதிர்பார்த்தனர். ஆனால் உதவிகள் வரக்கூடிய எல்லா வழிகளையும் ஒல்லாந்தர் அடைத்துவிட்டனர். மூன்று மாதங்களாக முற்றுகை தொடர்ந்தது. கோட்டைக்குள் இருந்தவர்கள் உணவுப் பற்றாக்குறையாலும், வெளியில் இருந்து ஒல்லாந்தர் ஏவிய பீரங்கிக் குண்டுகளாலும், நோயாலும் பெரிதும் அல்லலுற்றனர்.[6] இறுதியாக, ஒல்லாந்தர் முன்மொழிந்த உடன்படிக்கையை ஏற்றுக்கொண்டு 1658 யூன் 24 ஆம் தேதி யாழ்ப்பாணக் கோட்டை ஒல்லாந்தரிடம் சரணடைந்தது.

சரணடைவு உடன்படிக்கை[தொகு]

இணங்கப்பட்ட சரணடைவு உடன்படிக்கையின்படி போர்த்துக்கேயப் படையினர், தமது ஆயுதங்களுடனும் கொடிகளுடனும், முரசுகள் முழங்க வெளியேறலாம். ஐரோப்பாவுக்கு அனுப்புவதற்காக ஒரு பீரங்கியைத் தம்முடன் எடுத்துச் செல்லலாம். உயர் அலுவலர்கள் மதிப்புடன் நடத்தப்பட்டு இலங்கைக்கு வெளியில் உள்ள ஏதாவதொரு போர்த்துக்கேயக் கோட்டைக்கு அனுப்பப்படுவர். மதகுருக்கள் கோரமண்டலக் கரைக்கு அனுப்பப்படுவர். பொன், வெள்ளி போன்ற பெறுமதியான அசையக்கூடிய பொருட்கள் அனைத்தும் வெற்றி பெற்றவர்களுக்கு உரியது. போர்த்துக்கேயப் பொதுமக்கள் கிழக்கிந்தியப் பகுதியில் விரும்பிய இடத்துக்கு அனுப்பிவைக்கப்படுவர்.[7]

விளைவு[தொகு]

இப்போரில் ஒல்லாந்தர் தரப்பில் பெரிய அளவில் இழப்புக்கள் இல்லை. போர்த்துக்கேயர் தரப்பில் பல்வேறு காரணங்களால் 2170 போர் வரை இறந்தனர். இவர்களில் 800 போர்த்துக்கேயரும், 200 படைவீரரும், 600 கூலிப்படைகளும், 300 அடிமைகளும் இருந்தனர்.[8] ரெபெய்ரோவின் குறிப்புக்களின்படி சரணடைவு உடன்படிக்கையில் இணங்கிக்கொண்டதற்குப் புறம்பாக ஒல்லாந்தர் போர்த்துக்கேயரை மோசமாகவே நடத்தியதாகத் தெரிகிறது. வெளியே வந்தவர்கள் எல்லோரது ஆடைகளையும் களைந்து சோதனை செய்ததாகவும், பெண்களைக்கூட அவர்கள் அழுகுரல்களையும் மயங்கி விழுவதையும் பொருட்படுத்தாமல் அவ்வாறே சோதனை செய்ததாகவும், பெறுமதி குறைவான தனிப்பட்ட தேவைக்கான பொருட்களைக்கூட எடுத்துக்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.[9]

ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியமை, இலங்கையில் போர்த்துக்கேயரின் ஏறத்தாழ ஒன்றரை நூற்றாண்டுக்காலத் தலையீடுகளுக்கும், ஆட்சிக்கும் முற்றுப்புள்ளியாக அமைந்ததுடன், இன்னொரு ஐரோப்பியக் குடியேற்றவாத வல்லரசான ஒல்லாந்தரின் ஆட்சி அடுத்த ஒன்றைரை நூற்றாண்டுகள் நடைபெறுவதை உறுதிப்படுத்தியது எனலாம்.

மேற்கோள்கள்[தொகு]

  1. குணசிங்கம், முருகர்., இலங்கையில் தமிழர் ஒரு முழுமையான வரலாறு, எம். வி. வெளியீடு தென்னாசியவியல் மையம் - சிட்னி, 2008. பக். 211, 212.
  2. குணசிங்கம், முருகர்., 2008. பக். 215.
  3. குணசிங்கம், முருகர்., 2008. பக். 217, 218.
  4. குணசிங்கம், முருகர்., 2008. பக். 218.
  5. Ribeiro, Joao., The Histiric Tragedy of the Island of Ceilao (Translated from Portuguese by P. E. Pieris), Asian Educational Services, New Delhi, 1999 (First Published 1909), p. 213.
  6. Ribeiro, Joao., 1999, p. 213, 214.
  7. Baldaeus, Philip., A Description of the Great and Most Famous Isle of Ceylon, Translated from High-Dutch, Asian Educational Services, New Delhi, 1998 (First Published: 1672), p. 798
  8. குணசிங்கம், முருகர்., 2008. பக். 219.
  9. Ribeiro, Joao., 1999, p. 214, 215.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]