யாப்பிலக்கண நூல்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

யாப்பிலக்கண நூல்கள் என்பவை செய்யுள்களின் இலக்கணம் பற்றிக் கூறுகின்ற நூல்களாகும்.

தொல்காப்பியம்[தொகு]

தமிழ்ச் செய்யுள்களின் இலக்கணம் பற்றிய, இன்று கிடைக்கக்கூடிய நூல்களுள் காலத்தால் முந்தியது தொல்காப்பியமாகும். இது தோன்றிய காலம் ஐயத்துக்கு இடமின்றி நிறுவப்படவில்லை. எனினும் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் தோன்றியிருக்கக் கூடும் என்பது பல அறிஞர்களின் கருத்து. இந்நூலில் வரும் குறிப்புகள் மூலம் இந்நூலுக்கு முதல்நூலாக அகத்தியம் என்னும் நூல் இருந்திருப்பதாகத் தெரிய வருகின்றது. மூன்று அதிகாரங்களைக் கொண்ட இந்நூலின் மூன்றாவது அதிகாரமான பொருளதிகாரத்தின் ஒரு பகுதியாகவே யாப்பிலக்கணம் அமைகின்றது.

மறைந்துபோன நூல்கள்[தொகு]

தொல்காப்பியக் காலத்துக்குப் பின் தமிழ் இலக்கியம் பல மாற்றங்களுக்கு உட்பட்டிருக்கிறது. தமிழ் இலக்கிய வரலாற்றையும், பல்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்ட ஆக்கங்களையும் பார்க்கும்போது செய்யுள் இலக்கியத்திலும் பல மாற்றங்களை அவதானிக்க முடிகின்றது. சங்ககால இலக்கியச் செய்யுள் அமைப்புக்கும், சங்கம் மருவிய மற்றும் பிற்காலச் செய்யுள் அமைப்புகளுக்கும் இடையே பல வேறுபாடுகள் உள்ளதுடன் புதுமைகளும் புகுந்துள்ளன. இதனால் பல புலவர்கள் யாப்பிலக்கண நூல்கள் எழுதியுள்ளது வேறு ஆதாரங்கள் மூலம் தெரியவந்தாலும், இவற்றுள் பெரும்பான்மையானவை இன்று மறைந்து விட்டன.

அவிநயனம்[தொகு]

இவற்றுள் அவிநயனார் என்பவர் எழுதிய அவிநயனம் என்ற நூலும் ஒன்றாகும். இந்த நூல் இப்பொழுது இல்லை. எனினும், யாப்பருங்கலக் காரிகை எனும் பிற்கால யாப்பிலக்கண நூலில் இதுபற்றிய குறிப்பு உள்ளது. இதுதவிர யாப்பருங்கல விருத்தியுரை, நன்னூல் விருத்தியுரை, நேமிநாத உரை, தக்கயாகப்பரணி உரை ஆகிய நூல்களிலும் இதுபற்றிய குறிப்புகள் உள்ளதுடன், அவற்றுட் சில நூல்கள் அவிநயனத்திலிருந்து மேற்கோள்கள் காட்டியுள்ளதாகவும் கூறப்படுகின்றது. (1) இந்நூலுக்கு உரையொன்றும் எழுதப்பட்டிருந்ததாகவும், அந் நூலை எழுதியவர் தண்டலங்கிழவன் இராச பவித்திரப் பல்லவதரையன் என்றும், மயிலைநாதர் என்பவர் குறிப்பிட்டுள்ளார்.

பிற நூல்கள்[தொகு]

இது தவிர காக்கைப்பாடினியார், நத்ததத்தனார், பல்காயனார், பல்காப்பினார், மயேச்சுரனார் போன்ற புலவர்களும் யாப்பிலக்கண நூல்கள் எழுதியுள்ளதாகத் தெரியவருகிறது. இவையும் எதுவும் இன்று கிடைத்தில.

வழக்கிலுள்ள நூல்கள்[தொகு]

தொல்காப்பியம் தவிர யாப்பிலக்கணம் கூறும் நூல்களில் இன்று கிடைக்கக் கூடியதாகவுள்ள நூல்கள், யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை என்பனவாகும். இவ்விரு நூல்களையும் எழுதியவர் அமிர்தசாகரர் என்பவராவார்.

உசாத்துணை நூல் குறிப்பு[தொகு]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=யாப்பிலக்கண_நூல்கள்&oldid=3435298" இலிருந்து மீள்விக்கப்பட்டது