யான்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

யான்பு அல் பஹ்ர் (ஆங்கிலம்: Yanbu' al Bahr அரபி: ينبع البحر‎) என்பது மேற்கு சவுதி அரேபியாவில் மதீனா மாகாணத்தில் அமைந்துள்ள முக்கிய துறைமுகப் பட்டினமாகும். இது ஜித்தாவில் இருந்து வடமேற்கில் சுமார் 300 கிலோமீட்டர் தொலைவில் அமையப் பெற்றுள்ளது. 2020 ஆம் ஆண்டின் சனத்தொகை கணக்கெடுப்பின்படி இங்கு 222,360 மக்கள் வாழ்கிறார்கள். எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் பெட்ரோ கெமிக்கல் துறையில் பணிபுரியும் வெளிநாட்டு குடியிருப்பாளர்கள் பலர் இங்கு வசிக்கின்றனர்.

யான்பு நகரம் மூன்று முதன்மை பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை ஒன்றுக்கொன்று பதினைந்து நிமிடங்கள் (மகிழுந்தில் பயணித்தால்) தூரத்தில் அமைந்துள்ளன. ஜித்தாவிற்கு பிறகு செங்கடலின் இரண்டாவது பெரிய சவுதி அரேபிய நகரம் யான்பு ஆகும்.

நிலவியல்[தொகு]

யான்பு அல் பஹ்ர்[தொகு]

யான்புவின் மிகவும் வடக்கு பகுதி. யான்பு அல்-பஹார் என்றும் அழைக்கப்படுகிறது. யான்பு அல்-பஹ்ரின் நகரப் பகுதி (இது அல்-பாலாத் என்றும் அழைக்கப்படுகிறது) பெரும்பாலான மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. இங்குள்ள பெரும்பாலான உணவகங்கள் இப்பகுதியில் வசிக்கும் பல்வேறுபட்ட இனக்குழுக்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்கின்றன. இப்பகுதியில் சில சர்வதேச சங்கிலி உணவகங்களும், சில காபி கடைகளும் உள்ளன. ஒரு பல்கடை அங்காடி மற்றும் பல்வேறு வணிக மையங்களும் அமைந்துள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் யான்புவின் புறநகரில் ஒரு மலர் திருவிழா நடைபெறுகிறது. இது சவுதி அரேபியா மற்றும் அண்டை நாடுகளைச் சுற்றி பல பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.[1]

யான்பு அல் நக்கால்[தொகு]

யான்பு அல் நக்கால் (தி பாம்ஸ்) நகரத்திலிருந்து 47 கிலோமீட்டர் தொலைவில் (கூகிள் வரைப்படத்தின்படி) உள்ள தனிப்பகுதியாகும். இது ஜாப்ரியா, சுவைக், ரைஹான், மேஷரிஃப், ஐன்-அஜ்லான், மேட்சோஸ், அல்னெஜில் மற்றும் தலாத் நாசா போன்ற 20 க்கும் மேற்பட்ட கிராமங்களைக் கொண்டுள்ளது. இங்கு பெரும்பாலும் பண்ணைகள் காணப்படுகின்றன. இங்கு வசிக்கும் குடியிருப்பாளர்களில் பெரும்பாலோர் உள்ளூர் பழங்குடியினரான ஜோஹைனா (அல்ஜோஹானி), ஹார்ப் (அல்ஹார்பி), மற்றும் சிலர் அஷ்ரப்பைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். சில வெளிநாட்டு பிரஜைகளும் இங்கு வசிக்கின்றனர். யான்பு அல் நக்காலில் குறிப்பிடத்தக்க கிராமம் ஜாப்ரியா ஆகும். ஜாப்ரியாவில் நகரத்திற்கான உள்ளாட்சி அலுவலகம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ஒரு பொது மருத்துவமனை, ஒரு வங்கி, மூன்று ஏடிஎம் இயந்திரங்கள், நான்கு சேவை நிரப்பும் நிலையங்கள், ஒரு தீயணைப்பு நிலையம், இரண்டு குறிப்பிடத்தக்க பல்பொருள அங்காடிகள், பல பொழுதுபோக்கு வசதிகள் உள்ளன.

யான்பு அல் சினியா[தொகு]

1975 ஆம் ஆண்டில் அரச ஆணையால் நிறுவப்பட்ட தொழிற்துறை நகரம் யான்பு அல்-சினியா (அதாவது "தொழில்துறை யான்பு") ஆகும். இது யான்பு நகரத்தின் தெற்கு பகுதி.

யான்புவின் இந்த பகுதி செங்கடலில் வளர்ச்சியடையாத கடலோர பாலைவன நிலத்தின் ஒரு பகுதியாகும். இது ஒரு தொழிற்துறை நகரமாக மாற்றப்பட்டுள்ளது.

யான்பு அல்-சினியாவின் குடியிருப்பு பிரிவு ராயல் கமிஷன் தலைமையகத்திற்கு அருகில் உள்ளது. பல சர்வதேச சங்கிலி மற்றும் உள்ளூர் உணவகங்கள், இரண்டு வணிக வளாகங்கள், பல்வேறு வணிக மையங்கள், பல்வேறு அளவிலான பல்பொருள் அங்காடிகள், மருத்துவமனைகள், வங்கிகள் மற்றும் காபி கடைகள் போன்ற வசதிகள் இங்கு கிடைக்கின்றன.

காலநிலை[தொகு]

யான்பு கோப்பனின் காலநிலை வகைப்பாட்டின்படி வெப்பமான பாலைவன காலநிலையைக் கொண்டுள்ளது.

பொருளாதாரம்[தொகு]

யான்புவில் முக்கிய பெட்ரோலிய கப்பல் முனையம் மற்றும் மூன்று எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், பல பெற்றோ இரசாயன ஆலைகள் அமைந்துள்ளன. யான்பு நாட்டின் இரண்டாவது துறைமுகமாகும். இந்நகரம் புனித நகரமான மதீனாவிற்கு கிழக்கே 160 கிமீ (99 மைல்) தூரத்தில் அமைந்துள்ளதோடு மதீனாவின் பிரதான துறைமுகமாக திகழ்கிறது. இயற்கை துறைமுகம் இருபுறமும் பரந்த பவளப்பாறைகளால் பாதுகாக்கப்படுகிறது. மூன்று பெரிய எண்ணெய் குழாய்கள் பாலைவனத்தின் குறுக்கே கிழக்கில் உள்ள எண்ணெய் வயல்களில் இருந்து யான்புவில் உள்ள செங்கடலில் முடிவடைகின்றன.

மே 6, 2019 அன்று நாட்பெட்-பெட்ரோ கெமிக்கல் ஆலையில் ஏற்பட்ட வெடிப்புக்குப் பின்னர் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு தொழிலாளி இறந்தோடு 11 பேர் காயமடைந்தனர்.[2]

சுற்றுலா[தொகு]

யான்பு நகரம் தொழிற்துறை நடவடிக்கைகளுக்கு பெயர் பெற்றது என்றாலும், தற்போது இந்நகரம் ஒரு சுற்றுலா தலமாக வளர்ந்து வருகிறது. இந்த கடற்கரை பொழுதுபோக்கிற்காக பயன்படுத்தப்படுகிறது. இது "சீனா மூலிகை பூங்கா" என்று அழைக்கப்படும் சுமார் 4 கிமீ² அளவு கொண்ட பெரிய கடற்கரையைக் கொண்டுள்ளது.[3]

2020 ஆம் ஆண்டில், சவூதி அரேபியாவின் சுற்றுலா அமைச்சகம் யான்புவில் உள்ள டி.இ. லாரன்ஸின் வீட்டை புதுப்பிக்க முடிவு செய்தது.[4]

போக்குவரத்து[தொகு]

விமான நிலையம்[தொகு]

யான்பு விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக 2009 ஆம் ஆண்டில் மேம்படுத்தப்பட்டது. இது சவுதி அரேபியாவிற்குள் தம்மாம், ஜித்தா மற்றும் ரியாத்துக்கு மட்டுமே விமான சேவைகளை வழங்குகிறது. சர்வதேச அளவில் விமானங்களை அலெக்சாந்திரியா, கெய்ரோ இஸ்தான்புல், துபாய் மற்றும் ஷார்ஜா உள்ள ஐக்கிய அரபு அமீரக பிரதேசங்களுக்கு வழங்குகிறது.

அனைத்து சர்வதேச இடங்களும் வெளிநாட்டு விமான நிறுவனங்களால் சேவை செய்யப்படுகின்றன. உள்நாட்டு விமான சேவைகளாகிய சவுதியா மற்றும் ஃப்ளினாஸ் மேலே பட்டியலிடப்பட்ட உள்நாட்டு இடங்களுக்கு மட்டுமே சேவை செய்கின்றன.

நெடுஞ்சாலைகள்[தொகு]

யான்பு வழியாக நெடுஞ்சாலையொன்று வழியாக செல்கிறது. இந்த நெடுஞ்சாலை யான்புவை ஜித்தாவையும், ராஜ்யத்தின் வடக்கு பகுதிகளையும் தெற்கேயும், அண்டை நாடுகளான சிரியா, ஜோர்தான் போன்றவற்றை வடக்கேயும் இணைக்கிறது.

துறைமுகம்[தொகு]

யான்பு துறைமுகம் செங்கடலின் பழமையான கடல் துறைமுகங்களில் ஒன்றாகும். இந்த துறைமுகம் புனித நகரங்களான மக்கா, மதீனாவுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், இது பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் அமைந்திருக்கிறது.[5]

உசாத்துணைகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=யான்பு&oldid=3073382" இருந்து மீள்விக்கப்பட்டது